Tuesday 25 October 2011

திருகோணமலை நினைவுகள்




திருகோணமலை நினைவுகள்..


கடலுக்குள் நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு வித்தியாசமான நிலப்பரப்பே திருகோணமலை நகரம். இந்த இயற்கையான புவியியல் அமைப்பே உலகின் தலைசிறந்த இயற்கை துறைமுகத்தையும் அளித்தது. அத்துடன் வீதியில் எங்கிருந்தும் இரு அந்தத்திலும் கடலைப்பார்க்க கூடியதான நேரிய கடல்முக வீதியையும் (Sea view road) அமைக்க உதவியது.



  • கோணேசர் ஆலயம் - அதுவரை பாடப்புத்தகத்தில் மட்டுமே பார்த்த ஆலயத்தை நேரில் கண்டது மகிழ்ச்சியே. இயற்கையாக அமைந்த செங்குத்தான மலைநுனியில் அமைந்த சிறிய ஆலயம். உண்மையான கோயில் கடலுக்குள் இருக்கின்றதென்று சொன்னார்கள். கோயிலுக்கு அப்புறம் இருந்த செங்குத்தான மலைச்சரிவின் கீழேயிருந்த கடலில் மீனவர்கள் புறப்படமுன்பு வள்ளத்திலிருந்தவாறே பாறையில் கற்பூரம் கொளுத்தி வழிபட்டுச்செல்வார்கள். பிரடெரிக்கோட்டைக்குள் இராணுவப்பாதுகாப்புடன் கோணேசர் பாதுகாப்பாகவே இருக்கிறார்..!


  • கோணேசர் உலா - ஒருவித இயந்திரத்தனத்துடன் இயங்கிக்கொண்டிருக்கும் நகரம் கோணேசர் உலாவுடன் புத்துணர்ச்சி பெறும். வீதிகள் எல்லாம் அலங்கரிக்கப்பட்டு கோணேசர் இரவில் ஒவ்வொரு வீதியாக வலம்வருவது அழகான காட்சி. வீதிகளுடன் மக்களும் அலங்கரிக்கப்பட்டே காட்சிதருவர். இக்கால வேளைகளில் நடந்தே திருமலை நகரத்தை ஒரு சுற்றுச் சுற்ற முடிந்தது.


  • தீர்த்தம் - கோணேசர் ஆலயத்தீர்த்தத்தின் பெயர் 'பாபநாசம்' என்று படித்திருக்கிறேன். சரி பாவங்களை நாசமாக்கிக்கொள்வோம் என தீர்த்தத்திற்கு போனபோது, கோட்டைக்குள் இருந்த ஒரு கூடைப்பந்தாட்டத்திடலில் நூற்றுக்கணக்கானவர்கள் குழுமியிருக்க கடற்படையின் தீயணைப்பு படைவீரர் ஒருவர் தண்ணீரை தீயணைக்கும் குழாய் மூலம் எல்லோர் மீதும் விசிறியடித்தார். திடீரென அடித்த சாரல் த்ரில் ஆக இருந்தாலும் பின்னர் தான் அறிந்து கொண்டேன் - பாபநாசம் என்பது ஒரு கிணறாம். அதில் கோணேசரிற்கு தீர்த்தம் ஆனதும் மக்கள் மீது நீரை விசிறுகிறார்களாம்.


  • தெப்பத்திருவிழா - கோணேசர் உற்சவத்தின் கடைசிநாள் நிகழ்வு என நினைக்கிறேன். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தெப்பத்தில் கோணேசர் கடலுக்குள் வீற்றிருப்பார். இரவில்: இருளில்: கடலில் இறைவனைக்காண்பது வித்தியாசமான அனுபவம். தெப்பத்தில் அமைக்கப்பட்டிருந்த படிகளில் பக்தர்களின்! முண்டியடிப்பு இருந்ததனால் என்னுடன் வந்தவர்களுக்கு எனது வீரத்தைக்காட்ட படியில்லாத பக்கத்தால் சற்றே தம் பிடித்து பாய்ந்து ஏறவேண்டியிருந்தது!


  • திருகோணமலை நூலகம் - நகரசபையின் நூலகம். கடற்கரைக்கு முன்பாக கணிசமான நூல்களுடன் இரவல் வழங்கும் பகுதி அமைந்திருக்கிறது. ஓஷோவின் 'காமத்திலிருந்து கடவுள்' முதல் ராஜீவ் கொலை வரையான பலவகை நூல்களைக்கொண்டு காணப்படுகிறது. பிரஞ்சு எழுத்தாளர் 'மாப்பசான்' இன் மிக யதார்த்தமான எமுத்துக்களை வாசிக்கமுடிந்ததும் இந்நூலகத்தினாலேயே. 12' x 15' அடி அறைத்தனிமையையும் ஹர்த்தால் ஊரடங்கு நேரங்களிலான மகாத்தனிமையையும் போக்க உதவியது இந்த நூலகமே.


  • கடற்கரை - நகரத்தின் அகோர வெப்பத்திற்கு மாலையில் இதமளிக்கும் இடம். வழக்கமான நண்பர்கள் சந்திப்பின் பின் கடலில் கால் நனைய ஓரமாக சிறிதுதூரம் நடந்து வருவது இன்பமான அனுபவம். பெரும்பாலும் வெறிச்சென்று காணப்படும் கடற்கரை மாலை ஐந்து மணியின்பின் ஜே ஜே என்று சனக்கூட்டமாக காணப்படும்.


  • பட்டங்கள் - நகரத்தில் மின்குமிழ்களுடன் இரவில் பறக்கும் பட்டங்கள் வியப்பானவை. பட்டத்தின் வாலில் கூட மின்விளக்குகள் நீளத்திற்கு காணப்படும். ஆடலோட்ட மின்சாரத்தில் நூலுடனேயே வயரையும் இணைத்து ஏற்றுகிறார்கள். கடற்கரை காற்று இருப்பதால் பட்டமேற்றுவதில் சிரமமில்லை.


  • உவர்மலை - Orrs hill என அழைக்கப்படும் இவ்விடத்தின் மலைப்பாங்கான தரைத்தோற்றம் அலாதியானது. உவர்மலை மத்தியவீதியில் குடியிருப்பவர்களுக்கு சிரமமில்லை. மற்றவாகள் பாடுதான் பெரும்பாடு. வீட்டிலிருந்து புறப்படுவது இலகு. வரும்போது மலையேறித்தான் வரவேண்டும். எண்பதுகளின் இறுதிப்பகுதியில் கூட காடாக இருந்த இடமாம். பின்னர் மாகாண சபை வரவோடு குடியிருப்புப்பகுதி ஆகிவிட்டது.


  • உட்துறைமுகவீதி - இரவில் ஒருபக்கம் கடலுடனும் தூரத்து பிறிமா ஆலையின் மின் விளக்குகளுடனும் ஓர்ஸ் ஹில் விளக்குகளுடனும் ரம்மியமாக காட்சி தரும். அதிகாலை வேளையில் நண்பர்களுடன் கடற்காற்றுடன் உடற்பயிற்சிக்காக ஓடுவது இனிய அனுபவம். மதியவேளையில் கடல்அலை வீதியின் கொங்கிறீற் கட்டில் மோதி நடுவீதி வரை நீர்த்துளிகள் சிதறும்.


  • மாசிமகம் - 2004 இல் நடைபெற்ற மாசிமகத்திருவிழா மறக்க முடியாதது. திருகோணமலை பத்ரகாளியம்மனுடன் கோணேசரும் வருகைதந்து பத்தாம் நம்பர் கடற்கரையில் வீற்றிருக்க ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் கடலில் மூழ்கி எழுந்தது ஒரு மினி கும்பமேளா..! அவ்வாறான உற்சவம் பன்னிரண்டு வருடங்களிற்கு ஒருமுறைதான் வருமாம்.


  • கும்ப ஆட்டம் - இது நவராத்திரிக்காலங்களில் பரவலாக இடம்பெறும். திருகோணமலை நகரத்தையடுத்துள்ள அயற்கிராம கோயில்களில் இருந்து தலையில் அடுக்கான கும்பங்களுடன் மேளதாள தாரை தப்பட்டை முழங்க ஒவ்வொரு வீதியாக வலம்வருவார்கள். இவவர்களுடன் பெரும் கோஷ்டியே ஊர்வலமாக வந்து முக்கிய சந்திகளில் ஆட்டம் இடம்பெறும். இவர்கள் பெரும்பாலும் மாந்திரீகத்துடன் சம்பந்தமானவர்கள் என்றும் சொல்வார்கள். இதில் கும்ப மறிப்பு என்பதும் நிகழும். அதாவது கும்பத்துடன் வரும் ஒருவரை மாந்ரீக பலத்தால் தடுத்து நிறுத்துவது. வீதியில் எலுமிச்சம் பழம் குங்குமம் முதலான பூசைப்பொருட்களுடன் பெரும்தொனியில் கடகடென்று புரியாத மந்திரங்கள் எல்லாம் சொல்லி தேசிக்காயை நறுக்குவார்கள். பார்க்கும்போது கொஞ்சம் திகிலாக இருந்தாலும் நான் பார்த்த 'மறிப்புக்களில்' ஒருவேளை நான் பார்த்துக்கொணடிருந்ததாலோ என்னமோ எதுவுமே வெற்றியளிக்கவில்லை.


  • குட்டிக் குட்டி கோயில்கள் - திருமலை நகரத்தில் சந்து பொந்துகளிலெல்லாம் சின்னஞ்சின்னதாக கோயில்கள் இருக்கின்றன. பெரும்பாலும் இவை தனியாரின் கோவில்களாக இருக்கும். நவராத்திரிக்காலங்களிலேயே இக்கோயில்களில் விசேட பூசைகள் நடக்கும். இப்படியான கோயில்களின் நள்ளிரவுப்பூசைகளில் கலந்து கொள்வது ஒரு த்ரில் ஆன அனுபவம். பெரும்பாலும் கலையாடுவார்கள். மந்திரித்து உருவேற்றுவார்கள். குறிசொல்வார்கள். உருவேறியவர்கள் வினோதமான சத்தத்தில் கூக்குரல் இடுவார்கள். சூழல் பக்தியும் பயமும் கலந்த ஒன்றாக இருக்கும். இதெல்லாம் இருந்துமா இந்நாட்டில் இனப்பிரச்சனை ஒன்றிருக்கிறது..? பிரச்சனை ஆனவர்களையெல்லாம் இப்படி கட்டிப்போட்டாலே போதுமே என்று கொஞசம் அவநம்பிக்கையாகவே இருந்தது.


  • சல்லித்திருவிழா - 2004 இல் நடைபெற்ற சல்லித்திருவிழா 1995 .ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாபெரும் இடப்பெயர்வையே ஞாபகப்படுத்தியது. நிலாவெளி உப்புவெளி வீதி நிறைய்ய சனக்கூட்டம். வாகனங்கள் அங்குலம் அங்குலமாக நகரவேண்டியிருந்தது. சல்லியில் பிலாப்பழத்துடன் புட்டு பெருமளவில் விற்பனை செய்யப்பட்டது ஆச்சரியமாக இருந்தது. அழகான கிராமியச்சூழலில் ஆலயம். நல்லூரைப்போன்றே கடைகளும் ஏராளம். சல்லியை தொடர்ந்து வரும் பாலம்போட்ட ஆறு (பாலம்பட்டாறு) உற்சவமும் பிரபலமானதே. ஆனாலும் சல்லி போக்குவரத்து அனுபவத்தினால் அதை தவிர்த்திருந்தேன்.


  • வெந்நீரூற்று - இலங்கையிலுள்ள அதிசயங்களில் ஒன்று. ஆனால் ஒரு காட்டுப்புறமான இடமொன்றில் கொஞ்சம் ஒதுங்கியே இருக்கின்றது. ஏழு ஊற்றுக்களும் வெவ்வேறு வெப்பநிலைகளில் காணப்படுவது ஆச்சரியமானதே.


  • கந்தளாய் குளம் - இயற்கையான தரைத்தோற்றஅமைவைக்கொண்டு கட்டப்பட்ட அலைகள் தோன்றக்சகூடிய பெரிய்ய குளம். ஒருபக்க அணைக்கட்டின் மேலாகவே கொழும்பு வீதி செல்கிறது. அணைக்கட்டின் இப்புறம் பள்ளத்தில் கிராமங்கள் குட்டி குட்டியாக வயல்கள். அணைக்கட்டு உடைந்தால் இக்கிராமங்களிற்கு அது ஒரு சுனாமியே. எண்பதுகளில் அப்படி ஒரு அனர்த்தம் நடந்ததாக சொல்கிறார்கள். திருகோணமலை நகரின் குடிநீரின் பெரும்பகுதியை இக்குளமே பூர்த்தி செய்கிறது.


  • தம்பலகாமம் - இயற்கை எழிலுடனான கிராமம். தம்பலகாமம் என்ற பெயர் பலகையுடனான வீதியில் நேரே சென்றபோது இரயில் பாதையை அடுத்து கொஞ்சம் தூரத்தில் தயிர் சந்தைப்படுத்தும் இடமொன்றுள்ளது. இரவு இரயிலில் கொழும்புக்கான தயிர்சட்டிகள் பெரும்தொகையாக அனுப்பப்படும். இதையும்தாண்டி நேரே செல்லம்போது வருவதும் ஒரு கோணேசர் ஆலயம். கோபுரத்தில் இராட்சத தேன் கூடுகள் காணப்பட்டன. தனிமையான சூழலில் அழகான ஆலயம்.


  • சுனாமி.. - இயற்கை தான் எவ்வளவு பெரிய ஆள் என்பதை நிரூபித்தது. ஞாயிற்றுக்கிழமை தானே என்று கொஞ்சம் அசந்து தூங்கி கண்விழித்தபோது வெளியில் ஒரே அல்லோல கல்லோலம். வாகனங்கள் பறந்தன. மக்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். பஸ்நிலையத்திற்குள் கடல்வந்து விட்டது என்றார்கள். எனக்கு பிரமிப்பாக இருந்தது. நீர் உடைத்துக்கொண்டு வருமளவிற்கு அணைக்கட்டு ஏதும் இருந்ததா என்ன? குழப்பத்துடன் உட்துறைமுக வீதிக்கு சென்றபோது வாயடைத்துப்போனேன். கடலைக்காணவில்லை. பிறிமா நிறுவனத்தின் பெரிய கப்பலொன்று தண்ணீரில்லாமல் சரிந்து படுத்திருந்தது. மீன்பிடி வள்ளங்கள் ஆங்காங்கே தரையில் காணப்பட்டன. பார்த்துக்கொண்டிருக்கும்போதே வெள்ளி விளிம்பு போல கடல்நீர் ஓடிவந்தது. சட்டென்று நிலமைபுரிந்தது. மயான வீதியூடாக ஓடியவர்களுடன் நானும் ஓடினேன். கணநேரத்தில் எமக்குப்பின்னால் மதில்களையெல்லாம் மோதிக்கொண்டு நீர். மாகாணதிட்டமிடல் அலுவலகத்தின் மதில் விழுந்துபோய் இருந்தது. நிலாவெளி வீதியில் வரிசையாக சற்று முன்னர் உயிருடன் இருந்தவர்களையெல்லாம் பிணங்களாக கிடத்தியிருந்தார்கள். வீதி நெடுகிலும் பிணங்கள். சுனாமியின் பின்னர் வெகுநாட்கள் வரையிலும் நகரக்கடற்கரையில் செருப்புகளும் அந்நியமான மரப்பாகங்களும் ஒதுங்கியவண்ணம் இருந்தது.


  • புத்தர் சிலை - திருகோணமலை நகரம் எப்படிப்பரபரப்பானதோ அதுபோலவே சிறுசம்பவம் என்றாலும் உடனே வெறிச் என்று அடங்கிவிடும். புத்தர் சிலை விவகாரத்தை அடுத்து தொடர் ஹர்த்தாலும் தொடர் ஊரடங்கும் என்போல தனிய இருப்பவர்களை கடுமையாக பாதித்தது. கடைகள் உணவுக்கடைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டதாலும் என்னிடமிருந்த பிஸ்கட் கையிருப்புகள் தீர்ந்து போனதாலும் வீட்டிற்கு செல்லவேண்டியிருந்தது. நண்பரொருவர் அதிகாலையில் மட்டும் கொழும்பிற்கு ஒரு பஸ் செல்வதாக சொன்னார். அடுத்த நாள் அதிகாலை நண்பருடன் சனசந்தடி இல்லாத வீதிகளால் நடந்து போய் மிகக்கொஞ்சம் பேரே இருந்த அந்த பஸ்ஸிலேறி ஹபறணையில் இறங்கி தம்புள்ள சென்று அங்கிருந்து வவுனியா சென்று புறப்படும் நிலையிலிருந்த ஓமந்தை பஸ்ஸை அடைந்தால் பஸ்ஸில் நிரம்பி வழிந்தார்கள் அடுத்த பஸ்ஸில் போகலாம் என நின்றபோது அதுதான் கடைசி பஸ் என்று ஒருவர் பீதியை கிளப்பிவிட ஏற்கனவே நிரம்பிவழிந்த பஸ்ஸில் மிதிபலகையில் ஒருகாலைமட்டுமே ஊன்றி தொங்கிக்கொண்டு அசோக்லேடனின் அலுமினியச்சட்டம் வலுவானதாக இருக்கவேண்டுமே என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தபோது என்னைவிட மோசமான நிலையில் தொங்கிக்கொண்டிருந்த நண்பர் சொன்னார்.. - எவ்வளவோ குண்டுவீச்சிலும் ஷெல்வீச்சிலுமிருந்து காப்பாற்றிய உயிர் இப்போது கேவலம் இந்த அலுமினியச்சட்டத்தில் தங்கியிருக்கிறது என்றார். எனக்கென்றால் உயிர் இப்படியானதிலை எல்லாம் தங்கியிருப்பதில்லை என்று படுகிறது. என்னவென்றே தெரியாத ஒன்றுக்கு உயிர் என்று பெயரிட்டிருக்கிறோம் அவ்வளவே. நல்லவேளையாக இதைநான் நண்பரிடம் அப்போது சொல்லவில்லை. சொல்லியிருந்தால் நண்பர் இருந்த நிலையில் அப்போதே என்னை இழுத்து விழுத்தியிருப்பார்..!    ஆ.கோகுலன்

கிழக்கின் தனித்துவமான கலாசாரப் பாரம்பரியம்-கும்பம்



கிழக்கில் கண்னகி இலக்கிய விழா




கிழக்கிலங்கையின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் கண்ணகி இலக்கியங்களை வெளிக்கொணரும் முகமாக இலங்கையில் முதன் முதாலாக கண்ணுக்கு இலக்கிய விழா இரு நாட்களாக நடைபெற்றது
பேராசிரியர் சி மௌனகுரு தலைமையில் ஊர்வலத்துடன் ஆரம்பமான இந்த நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதம அதிதியாகவும் பேராசிரியர்களான சபா.ஜெயராச திஸ்ஸ காரியவசம் மற்றும் அருட் சகோதரர் கலாநிதி மத்தியு அவர்களும் இன்னும் பல அதிதிகளும் இலக்கியவான்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

கோட்டமுனை மைதானத்தில் இருந்து பாரம்பரிய இசை நடனங்களுடன் ஆரம்பமான கண்ணகி இலக்கிய விழா ஊர்வலம் மகாஜனக் கல்லூரி மண்டபத்தை அடைந்ததும் நிகழ்வுகள் ஆரம்பமாகின

பட்டயமும் பிரகடனம் செய்யப்பட்டு அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது








Monday 24 October 2011

அண்ணன் தங்கத்துரை





05.07.1997 ஆம் நாள் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வு முடிவுற்றதும் வீடு நோக்கி திரும்புகையில் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டார்.அன்றைய தினம் மேற்படி கல்லூரியில் சமகாலத்தில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் கைக்குண்டு தாக்குதலில் மேற்படி கல்லூரி அதிபர் உட்பட ஐவர் உயிர் இழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

17.01.1936 இல் மூதூர் பிரதேசத்தில் உள்ள கிளிவெட்டி கிராமத்தில் பிறந்த அ. தங்கத் துரை தனது ஆரம்ப கல்வியை திஃ கிளிவெட்டி அ. த. க. பாடசாலையிலும் இடை நிலைக் கல்வியை மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும் உயர் தரக் கல்வியை யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும் கற்றார். பின்னர் 1979 – 1980 இல் கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை கற்று சட்டத்தரணியானார்.

நீர்ப்பாசன திணைக்களத்தில் லிகிதராக (எழுதுநர்) அரச நியமனம் பெற்ற அ. தங்கத்துரை சோமபுரம், இரத்தினபுரி, கொழும்பு முதலான இடங்களில் பணிபுரிந்துள்ளார்.கொழும்பில் நீர்ப்பாசன திணைக்களத்தில் பிரதம லிகிதராக கடமையாற்றிய சமயம் இலங்கையின் சிங்கள மொழிச் சட்டத்திற்கமைவாக 1970 இல் அமரர் அ. தங்கத்துரை அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற அ. தங்கத்துரை அவர்கள் அப்போது மூதூர் தொகுதி தமிழ் பிரமுகர்களும் மக்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்கி 1970 ஆம் ஆண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மூதூர் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். மூதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக 1970 இல் 34 வயதில் தெரிவு செய்யப்பட்ட அ. தங்கத்துரை அப்போது வயதில் குறைந்த பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் திகழ்ந்தார்.

பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்கள் பணியே மகேசன் பணி என்னும் தாரக மந்திரத்தை மனதில் கொண்டு மூதூர் தொகுதி மக்களுக்கு அன்றைய காலகட்டத்தில் அளப்பரிய சேவையாற்றினார்.புன்னகை ததும்பிய சிரித்த முகத்துடன் எவரையும் வரவேற்று அவர்களுடன் மனம் விட்டு பேசி அவர்களின் துயர் துன்பங்களை அறிந்து சேவை செய்யும் இயல்புடைய அரசியல்வாதியாக அ. தங்கத்துரை விளங்கினார். இவர் எச்சந்தர்ப்பத்திலும் எவருடனும் கோபம் கொண்டு பேசியது கிடையாது. எதிரியையும் நேசித்து நன்மை புரிந்தவர் இவர்.

அமரர் அ. தங்கத்துரை அவர்கள் 1970 – 1977 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராகவிருந்தபோது மூதூர் தொகுதியின் அபிவிருத்திக்காக பல வகைகளில் சேவையாற்றியுள்ளார். வீதி அபிவிருத்தி, பாலங்கள் நிர்மாணம், நீர்ப்பாசனத் துறை சார்ந்த அபிவிருத்தி, சமூகப் பொருளாதாரத் துறை சார்ந்த அபிவிருத்தி, கல்வித் துறை சார்ந்த அபிவிருத்தி முதலானவற்றை அப்போது மூதூர் தொகுதியில் மேற்கொண்டார்.
மூதூர் தொகுதியில் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கு அரச திணைக்களங்களிலும் கூட்டுத்தாபனங்களிலும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதில் அ. தங்கத்துரை தனது பதவிக் காலத்தில் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டார்.தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பேசவும் எழுதவும் அ. தங்கத்துரைக்கு ஆற்றல் இருந்தமையால் அரசதுறை சார்ந்த எக்காரியத்தையும் இவரால் இலகுவாக செய்ய முடிந்தது. இதனால் பொது மக்களுடைய பல்வேறு அரசதுறை சார்ந்த காரியங்களை இவரால் நிறைவேற்றிக் கொடுக்கக் கூடியதாகவிருந்தது.

அமரர் அ. தங்கத்துரை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி தலைவராகவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மலையக தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் கழகத்தின் தலைவராகவும் 1970 – 1977 காலப் பகுதியில் பதவி வகித்துள்ளார்.இலங்கை அரசின் தேர்தல் தொகுதி நிர்ணய நடவடிக்கையினால் இரட்டை அங்கத்துவப் பாராளுமன்ற தேர்தல் தொகுதியாகவிருந்த மூதூர் தேர்தல் தொகுதி 1977 இல் ஒற்றை அங்கத்தவர் தேர்தல் தொகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இதேவேளையில் திருகோணமலை மாவட்ட சிங்கள மக்களின் நலன் கருதி அன்றைய 1970 – 1977 அரசினால் சிங்கள மக்களுக்காக புதிய சேருவில தேர்தல் தொகுதி திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது.இதன் நிமித்தம் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தேர்தல் தொகுதி தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தேர்தல் தொகுதியாகவும் மூதூர் தேர்தல் தொகுதி முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் சேருவில தேர்தல் தொகுதி சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் அன்றைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசினால் உருவாக்கப்பட்டது.

இதனால் அமரர் தங்கத்துரையை 1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மூதூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட முடியாத நிலையேற்பட்டது.இந்நிலையில் 1970 இல் திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த அமரர் பா. நேமிநாதன் அவர்கள் 1977 இல் திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிடுவதை தவிர்த்து அமரர் அருணாசலம் தங்கத்துரை அவர்களை திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிடச் செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றன.

பொதுமக்களினதும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உயர்மட்டக் குழுவினர் சிலரதும் மேற்படி முயற்சி கைகூடாததால் அமரர் அ. தங்கத்துரை அவர்கள் 1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடவில்லை. இருந்தும் அதே ஆண்டில் மூதூர் தொகுதி தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட முஸ்லிம் வேட்பாளர் எஸ். எம். மக்கீனுக்கு ஆதரவாக அ. தங்கத்துரை தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினராகவும் ஆதரவாளராகவும் இவர் செயற்பட்டார். இந்நிலையில் 1978 ஆம் ஆண்டு அவரது சொந்த ஊரான கிளிவெட்டி கிராமத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தில் இவரையும் பொலிசார் தொடர்புபடுத்தி சந்தேகத்தின் பேரில் இவரைக் கைது செய்ததால் இவர் திருகோணமலை மட்டக்களப்பு சிறைச்சாலைகளில் (8) எட்டு மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து விடுதலையானார்.
1981 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் இவர் வேட்பாளராகப் போடியிட்டு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் அமோக ஆதரவைப் பெற்று அதிக வாக்குகளை பெற்று திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்ட அ. தங்கத்துரை மக்கள் தொண்டனாக திருகோணமலை மாவட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு சேவை செய்தார். திருகோணமலை மாவட்ட சமூகப் பொருளாதார, கல்வி கலாசார அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.இந்நிலையில் 1983 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இவர் தனது திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவர் பதவியை துறந்த இவர் திருகோணமலை மாவட்ட மக்களுடன் மக்கள் தொண்டனாக திருகோணமலையிலே வாழ்ந்தார்.1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு திருகோணமலை மாவட்டத்தில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட இவர் மாவட்ட மக்களுக்கு அளப்பரிய சேவைகளையாற்றி வந்தார்.இந்நிலையில் தான் 1997 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஐந்தாம் திகதி (05.07.1997) திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய கட்டடத் திறப்பு விழாவினை தொடர்ந்து பயங்கரவாதியினால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
அமரர் தங்கத்துரை மரணித்த போதும் அவர் திருகோணமலை மாவட்டத்திற்கும் மாவட்ட மக்களுக்கும் செய்த சேவைகள் மக்கள் மனதைவிட்டு நீங்கவில்லை. அன்னாரது சேவைகள் மக்கள் மனதில் நிரந்தரமாக பதிந்துள்ளன
கோ.திரவியராசா

கொட்டியாரம் இலக்கிய மரபு

அனாமிகா' பதிப்பகத்தின் பதினைந்தாவது வெளியீடாக விளைந்த 'கொட்டியாரம் இலக்கிய மரபு' எனும் தொகுப்பு நூல் ஒரு வரலாற்றின் தடங்களை, தமிழின் பண்பாடு மற்றும் கலாசாரங்களை வெளிக்கொணரும் ஓர் ஆவணப்படுத்தலின் ஆரம்பமாக வெளிவந்துள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைகலாசார பீடாதிபதி பாலசுகுமார் அவர்களின் மற்றொரு அடயாளப் பொக்கிசமான 'கொட்டியாரம்' தொகுப்பாக அமைந்த இந்நூலில் பிரமிளா சுகுமார் அவர்களின் அற்புதமான பதிப்புரையே செல்வச்சிறப்பு மிக்க எழில்கொஞ்சும் எல்லா வளமும் கொண்ட அந்த கொட்டியாரப்பூமியின் மண்ணின் மணத்தைச் சொல்லும் அழகு அருமை.
எல்லோருக்கும் கிட்டாது என நினைக்கிறேன். தோட்டங்கள், பண்படுத்திய நிலம், விளைந்த நெல்மணிகள் என்றும் மருதம், நெய்தல், முல்லை மூன்றும் குழைந்து எழுந்த அந்த புன்னிலம் 'கள்ளம் கபடமில்லாம நல்ல மக்கள், மரியாதை, பண்பு, உபசரிப்பு என்று எல்லா பழக்கங்களும் என்னுள் வந்து செறிய' என்ற வசனமே அத்தனை நெருசல்களில் அகப்பட்ட மனதை இலகுவாக்கி மண்ணின் பெருமையை பறைசாற்றும்.

அடுத்து முன்னுரையை பாலசுகுமார் அவர்கள் அழகாக தொகுத்து இருக்கிறார். தாய்நிலத்தின் தொன்மையையும் அதனோடு இணைந்த அத்தனை ஊர்களையும் அவற்றின் சிறப்புக்களையும் சொல்லும் அழகில் நமக்கு அந்த நிலத்தை சென்றுவந்த ஒர் உணர்வு பீறிட்டு எழும். அந்த அழகும் வளமும் நிறைந்த நித்திலத்தை வாசிப்பில் நுகரமுடியாது உணர்வின் உரசல்களில் தான் அந்த கனம் தெரியும். ஆனாலும் முன்னுரையே முழுசாக விளைந்த நெல்மணியாகிறது.

கொட்டியாரம் வரலாற்று அறிமுகம் என்று ஆரம்பிக்கும் வரலாற்று ஆய்வில் கிறிஸ்துவுக்கு முன்னைய மற்றும் பிந்திய காலப்பகுதியில் சான்றுகளை விளக்கி கொட்டியாரத்தின் புராதனத்தை அதன் தொன்மையை வெளிக்கொணர கல்வெட்டுக்கள், இலக்கியங்கள், செப்பேடுகள், பழைய கட்டட சிற்ப மற்றும் இடிபாடுகள் என்று அத்தனை விடயங்களினூடு சான்றுகளை அடுக்கிக்கொண்ட கட்டுரை அற்புதமான ஆய்வாகவும் அதனிறுதியில் சொல்லியிருக்கும் ' கொட்டியாரத்தின் வரலாறு தனியொரு நூலாக வருகிறபொழுது மேலும் விரிவான விளக்கங்களைப் பெறமுடியும். இது ஒரு அறிமுகக்குறிப்பே' என்று சொல்லும் போதே இந்நூலின் தொடர்ச்சியானதன்மையை வெளிக்காட்டிநிற்கிறது.

கொழும்புப் பல்கலைக்கழக பொருளியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் எழுதிய 'கொட்டியாரப்பற்றுப் பிரதேசத்தின் பொருளாதார வளவாய்ப்புக்கள்' என்ற ஆய்வுக கட்டுரையில் இம்மானிலத்தின் செல்வச்செழிப்பான பொருளாதாரத்தை, பொருளாதார அபிவிருத்தியை எவ்வாறு மக்கள் மேற்கொள்கின்றனர் என்பதை தௌ்ளத்தெளிவாகக் காட்டுகிறது.

அடுத்து மண்சார்ந்த மக்கள் என்ற சொற்றொடரே மக்களின் காலக்கண்ணாடியாக இருக்கும் இலக்கியங்களின் அத்தனை வெளிப்பாடுகளையும் மக்கள் எவ்வாறு எவ்வகையான இலக்கியங்களை மேற்கொண்டனர் என்பதை மண்மொழி இலக்கியங்கள், மரபுசார் சிற்றிலக்கியங்கள், தொல்சீர் இலக்கியங்கள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் நாடகம் என்னும் பகுப்புக்களாகப் பிரித்து அழகாக எளிமையாக சிறப்பாக முற்குறிப்போடு சொல்லியிருக்கும் பாங்கு இந்நூலின் மற்றொரு சிறப்பு. 'மண்மொழி இலக்கியங்களில்' கிழக்குமாகாணத்துக்கே தனித்துவமான நாட்டார் இலக்கியக்கூறுகள் பலவற்றின் சிலவற்றை இப்பகுப்பில் காணலாம். உழவு, கொம்பு, வசந்தன், கும்மி, கும்ப விழா போன்றவற்றில் இடம்பெறும் பாடல்களில் சிலவற்றை அச்சுருவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

இதேபோல் பள்ளு, குறவஞ்சி, உலா போன்ற மண்சார் மரபிலக்கியங்களில் காணப்படும் குளிர்த்தி, காவியம், தாலாட்டு, அகவல், மான்மியம், ஊஞ்சல் போன்றவை மரபுசார் சிற்றிலக்கியங்களின் சில கொட்டியார மண்ணின் மைந்தர்களால் பாடப்பட்ட காவியங்கள், அம்மன் பாடல்கள் என்பன இப்பகுப்பில் அடங்குகின்றன. இங்கே யுத்த சூழ்நிலைகளால் அழிந்துபோனவைகள் போக மீதியில் பொறுக்கி எடுக்கப்பட்டவைகளின் சிலவற்றை இங்குகாணலாம். ' காலம் அழித்ததுபோக மீதியாக இருப்பற்றை தேடிப்பாதுகாக்க வேண்டும். அதற்கான முயற்சியில் இளம் சந்ததியினர் ஈடுபடவேண்டும்' என்று சொல்லும்போதே இளம் சமுதாயத்துக்கு விடப்பட்டுள்ள இந்த இலக்கியச் சங்கிலித் தொடரை தொடர்பறா நிலையில் பேணவேண்டும் என்பதை காட்டிநிற்கிறது.

அடுத்து இடம்பெறும் தொல்சீர் இலக்கியங்கள் என்ற பகுப்பில் தமிழில் வழியான காவியமரபு பற்றிக்குறிப்பிட்டு அங்கே கொட்டியாரத்தில் வருடந்தோறும் நடைபெறும் ஆடிஅமாவாசை விழாவில் படித்து பயன்சொல்லும் திருக்கரைசைப் புராணத்தின் சில அழகான பாடல்களை அச்சுருவேற்றம் செய்தமை அற்புதம்.

நாவல்கள் என்ற பகுப்பில் முழுமையாக எந்த நாவலும் இடம் பெறாமல் சில நாவல்களின் சுவைமிகு குறிப்பிட்ட பகுதிகளை இணைக்கபட்டுள்ளது. கலாநிதி வ.அ.இராசரெத்தினத்தின் வாழ்வின் கண்ணாடியான நாவல்களில் இப்பிரதேசத்து சிறப்பையும் வரலாற்றையும் எடுத்தியம்பக்கூடியதாக இருப்பதனால் அவரது நாவல்களின் ஒரு சில பகுதிகளை இப்புத்தகத்தின் வாயிலாக நாம் காணலாம். அடுத்து சிறுகதைகள் என்ற பகுப்பு. இங்கே ஈழத்து சிறுகதைகளின் ஆரம்ப படையல்களைத் தந்த இலங்கையர்கோன் கொட்டியாரப்பிரதேசத்தில் அரச அதிகாரியாக கடமைபுரிந்தவர் என்பது குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடயம் என்பது அவரது சிறுகதைகளில் மண்ணின் நடத்தைசார் பாதிப்புகளை எடுத்துக்காட்டியதை கொட்டியாரத்தின் சிறப்பை நுகரலாம். அத்தோடு சிறுகதைகளுக்கு மேற்கோள் காட்டும் வண்ணம் 'ஈழத்து சிறுகதை மன்னன்' கலாநிதி வ.அ. இராசரெத்தினம் அவர்களதும், மூதூர் அ.ச. பாய்வா மற்றும் கேணிப்பித்தன் அவர்களதுமான சில சிறுகதைகளை கொண்ட இப்புத்தகம் மெருகேறி வாசிக்கத்தூண்டும் ஒரு இலக்கியப்படைப்பாக நிற்கும்.

'கவிதைகள்' என்கிற பகுப்பில் மரபு மற்றும் புதுக்கவிதைகளை ஆக்கிய அத்தனை கொட்டியாரப்படைப்பாளிகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டும் முனைப்பில் அப்படைப்பாளிகளின் சில சிறப்பான கவிதைகளை காலத்தின் வடுக்களில் கொட்டியாரம் பட்ட அவஸ்தைகளையும் சமூகத்தின் அத்தனை காலப்பகுதிகளிலும் அடைந்த துயரங்களையும் கண்முன்னே கொண்டு வந்து கண்களில் கண்ணீரை உதிர்க்கும் மனதையும் நெஞ்சில் கனத்தையும் காட்டிநிற்கும் கவிதைகளுக்கு ஒரு வணக்கம்.

கடைசியில் பண்பாட்டுக்கலைகளின் வளர்ச்சியில் ஒரு தமிழ்க்கிராமத்து மண்ணின் வெளிப்பாடாக எழுந்த 'கூத்து' அக்கொட்டியாரப்பூமியிலும் அண்ணாவிமார்களால் பயிற்றப்பட்டு அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக எழுந்த நாடகக்கலைகளை கொட்டியாரப் பிரதேசமும் கட்டிக்காத்து பல இசைக்கழகங்களால் மேடையேற்றப்பட்டன என்பதை நிரூபிக்கும் வண்ணம் அப்பிரதேசத்தில் எழுந்த நாடகங்களில் சிலவற்றை இத்தொகுப்பில் இணைத்து ஒரு பண்பட்ட கலாசாரத்தின் தமிழின் இன்ப இலக்கியங்ளை வெளிக்கொணர்ந்து மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்ட இந்த தொகுப்பு நூல் இன்னும் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு தமிழ் இலக்கிய வாண்மையைக் கொண்டுசெல்லக்கூடிய தன்மையைக் காட்டி நிற்கிறது.