சாருமதி என்றொரு மானுடன் - லெனின் மதிவானம் | |
நமது காலத்தைய மகத்தான கவிஞர்களில் ஒருவரான சாருமதி (இயற்பெயர் க. யோகநாதன்) 28.09.1998 அன்று இறந்தார் என்ற செய்தி ஈழத்து இலக்கிய உலகினையே கவலைக் கடலில் மூழ்கச் செய்தது. கண்ணீர் சிந்தாத இலக்கிய நெஞ்சங்களே இல்லை. ஆனால் வருட காலங்கள் உருண்டோடி விட்டன சாருமதியின் காலத்தில் வாழ்ந்தவர்கள் அவர் வரித்திருந்த மக்கள் இலக்கியத்தில் நாட்டம் கொண்டவர்கள் என்ற வகையில் சாருமதியின் பங்களிப்பினை தமிழ் கூறும் நல்லுகத்திற்கு அறிமுகம் செய்ய வேண்டியது சமகால தேவையாகும். ஒருவருடைய வாழ்க்கை அவருடைய குடும்ப மட்டத்திற்கு மேலாக சமூக வாழ்க்கையின் யாதேனும் ஒன்றின் மட்டத்திலே நிலக்கப்படுகின்ற தேவை ஏற்பட்டு விட்டதென்றால் அம் மனிதன் வாழ்க்கை ஏதோ ஒருவகையிலும் அளவிலும் சமூக பயன்பாடு மிக்கதாகின்றது. அவர்களின் சிந்தனையில் கொள்ள வேண்டியவற்றை தம் தேவைகளுக்கேற்ப கொள்ள முயற்ச்சிகிறார்கள். இதனால் அத்தகையோரின் வாழ்வும் பணியும் இன்றைய நிகழ்வாகின்றது. கவிஞர் சாருமதி அவர்களும் இவ்வாறுதான் இன்றைய நிகழ்வாகின்றார். இறந்த மனிதனின் வாழ்வும் நினைவுகளும் இன்றைய பிரச்சனைகளோடு இயைபுடையதாகின்ற போது அவர்கள் பற்றிய தேடல், ஆய்வுகள், மதிப்பீடுகள் என்பன முக்கியத்துவம் உடையதாகின்றது. அவ்வகையில் சாருமதியின் பங்களிப்பினை புரிந்துக் கொள்வதற்கும் அவர் பொறுத்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் அவரது கொள்கையை நடைமுறையை பட்டைத் தீட்ட முனைந்த சமூக பின்புலம் குறித்த தெளிவு அவசியமானதொன்றாகும். இப்பின்புலத்தில் க. யோகநாதன், சாருமதியாக பரிணாமம் அடைந்த கதை வரலாற்றினை நோக்குவோம். யோகநாதன் சாருமதியான சமூக பின்புலம்:- 70 களின் இறுதியிலும் 80 களின் தொடக்கத்திலும் தோழர் கிருஷ்ண குட்டி, சுபத்திரன் முதலானோர் தலைமையிலான மக்கள் இயக்கமானது புதியதோர் பரிணாமத்தை எட்டியிருந்தது. இவ்வியக்கம் மக்கள் மத்தியில் வேர்கொண்டு கிளை பரப்பிய போது பல்வேறு ஆளுமைகளை - புத்திஜீவிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் விவசாயிகள் என தன் நோக்கி வேகமாக ஆகிர்ஷித்திருந்தது. அவ்வாறு ஈர்க்கப்பட்ட ஆளுமை சுவடுகளில் ஒருவர் தான் கவிஞர் சாருமதி. தானுண்டு, தனது குடும்பமுண்டு என்ற நிலையில் வாழ்த்து அந்திம காலத்தில் தமது குடும்ப பெருமைகளை முன்னெடுக்கும் வாரிசாகவும் வளர வேண்டும் என்ற தமது குடும்பத்தாரின் எதிர்ப்பர்ப்புகளுக்கும் முழக்கு போட்டு விட்டு, அவர்களின் எதிர்ப்பினையும் கடந்து ஓர் மக்கள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு செயற்படத் தொடங்கியவர் சாருமதி. இந்தியாவில் தோன்றி வளர்ந்த நகசல் பாரி இயக்கத்தின் தலைவரான சாருமஜிம்த்தாரானால் ஆதரிக்கப்பட்ட யோகநாதன் சாருமதி என தமது பெயரை மாற்றியமைத்துக் கொண்டார். இந்திய நக்கல் பாரி இயக்கத்தின் போக்கினையும் நோக்கினையும் எந்தளவு உணர்ந்திருந்தார் என்பதோ அல்லது அத்தகைய சிந்தனை போர்களை எந்தளவு தமது சூழலில் பிரயோகித்தார் என்பதும் வினாவிற்குரியதாகும். அவரது எழுத்துக்களில் அத்தகைய சிந்தனை வெளிப்படாது என்பதை கவனத்திற் கொள்ளத் தக்கதாகும். 1970 களில் மட்டகளப்பு பிரதேசத்தில் முகிழ்ந்த புதிய அரசியல் முனைப்புகிளின் பின்னணியில் தனது பாத்திரத்தைத் தீர்க்கமாய் தெளிவாய் வகுத்துக் கொண்டவர். சாருமதி வாழ்வில் பல சமரசங்களையும் கைவிட்டு சிதைந்த சிதைவுறுகின்ற மனித குலத்தின் கம்பீரத்தையும் யௌவனத்தையும் தேக்கி தர முற்பட்டது இவரது வாழ்வு. காலப்போக்கில் பல தோழர்களின் பிரிவு குறிப்பாக தோழர்கள் கிருஷ்ணகுட்டி, சுபத்திரன் ஆகியோரின் மறைவு, இலங்கையில் மட்டுமன்று உலகலாவிய ரீதியிலே இடதுசாரி இயக்கங்களின் தளர்ச்சி, வடகிழக்கில் ஏற்பட்ட மிதவாத அரசியலின் மேலாதிக்கம், ஆயுத அச்சுறுத்தல் இவற்றுடன் தனக்கு கிடைத்த அரசின் சம்பளம் என்பனவற்றுடன் தமது நடவடிக்கைகளுக்கு முழக்கு போட்டிருக்கலாம். மக்கள் இயக்க நடவடிக்கைகளையும் தத்துவார்த்த போராட்டங்களையும் முன்னெடுத்த பலர் இம்மாற்றங்களோடு தடம்புரண்டு போக சாருமதி சற்றே அந்நியப்பட்டு மக்கள் நலன் சார்ந்த பதாகையை அவ்வவ் காலக்கட்டங்களில் முன்னெடுத்து வந்துள்ளார். இ;வ்விடத்தில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அம்சம் யாதெனில் குறித்ததோர் காலகட்ட ஆர்பரிப்பில் மக்கள் இயக்கங்களுடன் தன்னை இணைத்திருந்த கவிஞர் அத்தகைய சூழல் இல்லாத காலக்கட்டங்களிலும் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் செயற்பட்டு வந்துள்ளார். என்பது அவரது மிக முக்கியமான சமூக பங்களிப்பாகும். அந்தவகையில் ஓர் காலக்கட்டத்தின் இடைவெளியை நிரப்பியவர் சாருமதி என்பதில் இரு நிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை இத்தகைய பின்ணனியில் தான் சாருமதியின் இலக்கிய சிந்தனைகளும் கோட்பாடுகளும் செழுமைப்படுத்தப்பட்டன. சாருமதியின் சமூக பங்களிப்பு குறித்த கட்டுரையினை ஆய்வு வசதி கருதி பின்வருமாறு வகுத்துக் கூற விழைகின்றேன். கவிஞர் சஞ்சிகை ஆசிரியர் வெளியீட்டாளர் ஆசிரியர் பிற முயற்சிகள். கவிஞர் சாருமதி பல கனதியான கவிதைகளை இலக்கிய உலகிற்குத் தந்துள்ளார். இவரது கவிதைகள் குமரன் தாயகம் தீர்த்திக்கரை, நந்தலாலா, வயல், பூவரசு ஆகிய இதழ்களை அலங்கரிப்பதில் சிறப்பான பங்களிப்பினைச் செய்துள்ளது. “கருத்துக்கள் வானத்திலிருந்து வருகின்றனவையல்ல. அவை மக்கள் மத்தியிலிருந்தே வருகின்றன” என்ற மக்கள் இலக்கிய கோட்பாட்;டை வரித்துக் கொண்ட கவிஞர் மக்களையே வரலாற்றின் பிரமக்களாகக் கொண்டு தமது கவிதைகளை தீட்ட முனைந்துள்ளார். தமது கவிதையின் தார்மிகம் குறித்தும் அதன் பிறப்பு குறித்து அவரது உணர்வுகள் இவ்வாறு பிரவாகம் கொள்கின்றன. அடிமைகளாய் நாங்கள கவிதைக்கு அடியெடுத்து பாடவில்லை விடுதலையின் கீதங்களை விண்ணதிரும் கலைக்கோஷங்களாய் நிலையெடுத்துப் பாடுகின்றோம் ஆயிரம் விலைக் கொடுத்தாலும் நாங்கள் கவியை விற்று பிழைக்க மாட்டோம் அழுகுரலில் பாட மாட்டோம் ஆழதழுது ஓயமாட்டோம் மலைபோல் துன்பங்களை முதுகினில் ராகத்தை விடாது இசைத்திடுவோம். அடிகளுக்கு அஞ்ச மாட்டோம் அப்பாவித் தனங்களினால் எடுபிடியாய் ஆனோரும் எம் வர்க்கம் ஆயிருந்தால் அவர்களிடையேயும் பாட்டாளிவர்க்க அரசியலை கொண்டு செல்வோம். துப்பாக்கிக் குண்டுகளால் துடி துடித்து இறந்தாலும் உழைக்கும் வர்க்கத்தின் விடுதலையை இறுதி மூச்சிலும் கோஷிப்போம் நடைமுறைக்கே முதலிடம் தாம் கொடுத்து பாட்டிசைப்போம் இயந்திரத்தே இல்லாத சில்லும் பல்லுமாக இலக்கியங்கள் படைக்க மாட்டோம் கார்க்கியின் வார்த்தைகளில் கூறுவதாயின் உலகிலுள்ள படைப்புகிலே மேலான படைப்பு மனிதனாவான். அதனால் தான் மனிதமன் என்ற சொல் அவருக்கு கம்பீரமாக ஒலிக்கின்றது அத்தகைய மனித குலத்தின் கம்பீரத்தை அதன் நாகரிகத்தை மேற்குறித்த வரிகள் எமக்கு அழகுற படம்பிடித்துக் காட்டுகின்றன. சாருமதியில் காணக்கிட்டும் மனித நேயம் என்பது இக்கவிஞனின் நுண் உணர்வு மிக்க பரந்த இதயத்தை எமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றது. குறிப்பிட்ட வர்க்கத்தின் போர் முகமாய் எழுகின்ற இவரது கவிதைகள் மிகுந்த நிசர்சனங்களாய் விளங்குகின்றன. இனம், மதம், மொழி, சாதி வேறுபாடுகளை கடந்து புதியதோர் நாகரிகத்திற்க்காய் அவரது வரிகள் இவ்வாறு நகர்கின்றன. ஒன்றாய் தொழில் புரிந்தோம் ஓர் அலுவலகமே சென்றோம் என்றாலும் எம்மிடையே எத்தொடர்பும் இருந்ததில்லை பண்டா நீ சிங்களவன் பரம்பரை இனவெறியன் என்றாலும் நான் குறைவோ என் குரலும் தமிழ் ஈழம் .......... சி}ங்களப் பெருமையில் சிந்தித்து வாழ்ந்த நீ நஞ்சுடன் கலந்தாயென நாளிதழ் சொன்னது ....... என்றைக்கும் நானும் உன் போல் நஞ்சிடம் தஞ்சம் புக வேண்டி வருமோ! வறுமையும் வாழ்க்கையும் உனக்கும் எனக்கும் ஒன்றென்பதை என்னால் இப்போது தான் இனம் கான முடிகின்றது ...... தனிச் சிங்களப் பெருமைகள் உனது தற்கொலையை தடுக்க முடியாமல் போன போதுதான் எனது “தமிழ் கனவுகள்” தகரத் தொடங்கின என்றாவது ஒரு நாளில் எமது ஆத்மாக்கள் ஒன்றாகியே தீர வேண்டும். இனக்குரோதம், வகுப்புவாத வெறி இவற்றின் மத்தியிலும் ஆங்காங்கு உழைக்கும் மக்களின் உணர்வு வர்க்க அடிப்படையில் தோய்ந்ததாக இருக்க முடியும் என்பதை சாருமதியின் மேற்குறித்த வரிகள் வெளிக்கொணர்கின்றன. குறித்தோர் காலச் சூழலில் உழைக்கும் மக்களின் போர்குணத்தை தீவிரமாகப் பாடிய கவிஞர் இனவாதம் இனக் குரோதம் என்பன கேவலமானதோர் அரசியலின் பின்னனியில் மோசமானதோர் நிலையினை எட்டியபோது அத்தகைய முரண்பாடுகளிலிருந்து அந்நியப் படாமலும் தெலைதூர தீவுகளுக்குள் ஒதுங்கி விடாமலும் அதே சமயம் இயங்கியல் பார்வையிலிருந்து அந்நியப்பட்டாலும் தமது சரித்திர தூரிகையை இவ்வாறு நகர்த்தி செல்கின்றார். “தெருவில் பிணங்கள் தூக்கி வீசப்பட்டிருந்தன அவைகளின் உதிரத் தொடர்புகள் துடித்துக் கதறி ஓர் இனத்தின் கோலத்தை தம் ஓலத்தில் உரித்தாக்கி கொண்டன.” இனவொருக்கு முறை என்பது வர்க்க விடுதலைக்கு அப்பாற்பட்டது என எதிர்க்கொண்டது என எதிர் கொண்ட வரட்டு மார்க்ஸிசவாதிகளிலிருந்தும் அதே சமயம் வர்க்க விடுதலை சாத்தியமற்றது இனவிடுதலைப் போராட்டமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு எனக் கொண்டு தடம் புரண்ட இடதுசாரிகளின் ஊறைகளிலிருந்தும் அந்நியப்பட்டு இனவொருக்கு முறையினை மார்க்ஸிய நிலை நின்று எதிர்கொண்டமை சாருமதியின் இயங்கியல் பார்வைக்கு வளம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. சாருமதியின் இந்நோக்கும் போக்குமானது காலநகர்வோடு பரந்து விசாலிக்கின்றது. மக்களை ஒட்டியதாய் கிளைப்பரப்புகின்றது. இவரது சுனி ஒரு கலக்காரி எனும் கவிதை லோகாபா பழங்குடியைச் சேர்ந்த சுனில் கொத்தாவின் தற்கொலைக் குறித்து பாடுகின்றது. வங்காளப் பல்கலைக்கழகமொன்றில் ஆ.யு கற்கைநெறியை தொடர்ந்த மாணவியான இவர் இங்கு இடம்பெற்ற சாதி, பால் ரீதியாக இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு எதிராகத் தற்கொலை செய்துக் கொண்டார். இந்நிகழ்வு குறித்து சாருமதியின் வரிகள் இவ்வாறு அமைகின்றன. மாதவியும் மனிதப் பிறவிதானே கானல் வரி பாடி மேசையென்று செல்லி விலகி போன கோவலன் மட்டுமென்ன கற்புக்கு அரசனா.....? ....... இந்தியாவின் இந்து சனாதனம் அசிங்கங்களின் குப்பைத் தொட்டி சுனி அதையே கண்டனம் செய்தாள் தன்னைத் தானே கொன்று போட்டதாய்...! ஆயிரம் ஆண்டுகளாய் சொல்லித்தும் போன இந்நிய பண்பாட்டையும் இந்து கடமையான சனாதனத்தின் பயன்பாடுகளையும் தயவு தாட்சண்யமின்றி விமர்சிக்கினறார். கார்க்கியின் வார்த்தைகளில் கூறுவதாயின் பொதுவில் சராசரி புத்திஜீவிகளின் அரசியல் கடமையான சமூக முரண்பாடுகளை சமரசம் செய்தல், நியாயப்படுத்தல். அழகுப்படுத்தல் எனும் புண்மைகளைத் தாண்டி இக்கவிஞனின் கவிதைகள் தனக்கே உரித்தான ஒளிப்பிழம்பை ஏற்றி துணிவுடன் நடக்கிறது. பெண்ணியம் குறித்து கதைத்த போது அதனை வெறுமனே பெண்ணியத்துடன் மட்டும் நிறுத்தி விடுவதாக அவரது வரிகள் அமையவில்லை. அவ்வுணர்வுகள் சமூகவிடுதலையுடன் ஒட்டியதாய் வேர்கொண்டு கிளைப் பரப்புகின்றது. விண்வெளி இராச்சியம் வருக இங்கு வீழ்ந்தோரெல்லாம் மீண்டு எழுக எந்த மனிதர்கட்கும் சிலுவை இல்லை என்றுதான் மொழிக. எங்கும் இராமர்கள் திரிக ஆயின் எந்த சீதையும் நெருப்பில் வெந்துபடாது இருக்க வேண்டிய விளைகளை சொரிக ........... சிந்திய குருதியில் குளிதது வானில் சீக்கிரம் உதயம் நிகழ்க. இவ்வரிகளில் கலைத்துவம் சற்றே குறைப்பட்டிருப்பினும் பெண்ணியம் கூறும் பலரும் வாழ்விலிருந்து அந்நியப்பட்ட வழியினைக் காட்டி நிற்க, இவர் வாழ்வை நிராகரிக்காமல் விரக்தியில் மூழ்காமல் அதேசமயம் பெண்னை எந்த சமரசத்திற்கும் உட்படுத்தாமல் தமது சரித்திர தூரிகை கொண்டு புதியதோர் சித்திரத்தை இவ்வாறு தீட்ட முனைந்துள்ளார். பெண்விடுதலை சமூக விடுதலையுடன் ஒட்டிப்பார்க்கின்ற கவிஞர் அதனை மரபு, பண்பாடு என்பவற்றுடன் கூடிய வடிவத்தினை கொண்டே ஆக்கியிருப்பது கவிதைக்கு மேலும் வலிமை சேர்க்கின்றது. சமூகத்தின் பன்மைகளைச் சாடுகின்றபோது ஆந்தைக் கூட்டங்களுக்கும் இருளின் ஆத்மாக்களுக்கும் எதிராய் இவர் கவித்தீ உமிழ்வது அதியமானதொன்றல்ல. மக்களின் நளனிலிரு அந்நியமுறாமல் தீட்டப்பட்டிருக்கும் இவரது கவிதைகளில் காணக்கிட்டும் வாழ்க்கை மீதான காதல், நம்பிக்கை, நேர்மை என்பன திடுக்கிட்டவைக்கும் அளவிற்கு வளம் சேர்;ப்பதாக அமைகின்றது. சித்தாந்த தெளிவும், சிருஷ்டிகர திறனும் ஒருங்கிணைந்துள்ளமையே இதற்கான அடிப்படை எனலாம். இவையனைத்தும் சமூக மாற்றங்களின் வரலாற்று ரீதியான நியதியை குறித்து நிற்கின்றன. சாருமதியின் கவிதைகள் யாவும் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவர வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. இவை இலங்கை தமிழ் கவிதை வளர்ச்சிக்கு புதிய ரத்தத்தை பாய்ச்சும். முயற்சியாக அமையும். சஞ்சிகை ஆசிரியர் சாருமதி 90 களின் ஆரம்பத்தில் ‘ வயல்’ என்ற இதழை நடத்தி வந்தார். மக்கள் இலக்கிய செல்நெறியை சிதையாதவகையில் முன்னெடுப்பதிலும் மற்றும் இளம் படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக் கொடுகின்ற பணியினை இச் சஞ்சிகை சிறப்பாகவே ஆற்றி வந்துள்ளது.6 இதழ்களே வெளிவந்த போதும் மக்கள் இலக்கியத்திற்கு ஆரோக்கியமான பங்களிப்பினை நல்கியுள்ளது. சஞ்சிகையின் அட்டைப்படத்தில் இலக்கிய கர்த்தாக்களின் படங்களைக் கொண்டு அலங்கரிக்கின்ற மரபினை தமிழகத்தில் ‘சாந்தி’ சரவஸ்தி போன்ற இதழ்கள் தோற்றுவித்தன. சாருமதியை ஆசிரியராக கொண்டு வெளிவந்த வயல் சஞ்சிகையும் இப்போக்கினை பின்பற்றியிருந்தன. குறிப்பிட்ட ஓர் காலம் வெம்மை சூழ் கொண்டபோது குறிப்பிட்டவர்க்கத்தின் போர் முகமாய் அர்ப்பரித்து நின்ற தோழர்கள் கிருஷ்ணகுட்டி, சுபத்திரன் ஆகியோரின் படங்களை அட்டைப்படங்களாக வெளிக்கொணர்வதில் முனைப்புக் காட்டிய வயல் சஞ்சிகை தமது இலக்கிய தளத்தினையும் தெளிவாக இனம் காட்டி நின்றது. பூவரசு போன்ற இலக்கிய வட்டங்களுடன் இணைந்து பூவரசு சஞ்சிகையை வெளியிடுவதிலும் சாருமதியின் பங்களிப்பு முக்கியமானது. பூவரசின் தாரக மந்திரம் இவ்வாறு அமைந்திருந்தது. “கோடையினை வென்றே குடையாகிப் பூமிக்கு பாலூட்டும் பூவரசுகள்” 2 வது இதழின் அட்டைப்படம் இத்தாரகமந்திரத்தை நிறைவூட்டுவதாக அமைந்துள்ளது. மட்டகளப்பு பிரதேசம் சார்ந்த கலை இலக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்ததில் பூவரசிற்கு முக்கிய இடமுண்டு. ஆசிரியர் சாருமதி மட்டக்களப்பு பிரதேசத்தில் ஆசிரியராக கடமையாற்றியமையால் அமர்ந்த கருத்துக்களை முன்னெடுத்து செல்வதில் கூடிய கரிசனைக் காட்டினார். பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்று பழமை பேணுவதே இலக்கிய கல்வியெனப் போதித்து வந்த பண்டிதர்களிடையே சாருமதியின் சமூகம் சார்ந்த பார்வை மாணவர்களிடையே புதிய சிந்தனைகள் தோன்றுவதற்கு ஏதுவாக அமைந்தது. மாணவர்களுக்கு கலை இலக்கியம் சம்பந்தமான குறிப்புகள் புத்தகங்கள் என்பவற்றினை கொடுத்து உதவியதுடன் பின்னேரங்களில் மாணவர்கள் நண்பர்களுடன் கூடி கலந்துரையாடலை மேற்கொள்வதும் இவரது முக்கிய செயற்பாடுகளின் ஒன்றாக அமைந்திருந்தது. தாம் ஏற்றுக் கொண்ட கொள்கையினை வெறும் கல்வி நாகரிக போக்காக கொண்டு தலைவீங்கி திரிகின்ற உளநோயாளராக அல்லாமல் அவற்றினை மாறிவருகின்ற உலக சூழ்நிலைக்கு ஏற்ப பிரயோகிக்கவும் அதனை புதிய தலைமுறைக்கு தேக்கி தரவும் முனைகின்ற செயற்பாடுகளை முன்னெடுத்ததில் சாருமதிக்கு முக்கிய இடமுண்டு. வெளியீட்டாளர்:- ஒரு தொகுப்பு பெருமளவுக்குக் கவிதை எழுதிய சாருமதி தனக்கு ஒரு தொகுப்பை போட்டுக் கொள்ளாமல் சுபத்திரன் கவிதைகளை தொகுத்து வெளியிட்டமை அவரது தன்முனைப்பற்ற நாகரிகத்தினைக் காட்டுவதுடன் இன்றைய மக்கள் இலக்கியத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பாகவும் அமைந்துள்ளது. 1960 களில் வடக்கில் இடம்பெற்ற தீண்டாமையை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டமானது அதன் அடுத்தக்கட்ட பரிணாமமான இனவிடுதலை போராட்டத்தையும் இணைத்து முன்னெடுத்தியிருக்குமாயின் ஆனால் இப்போராட்டத்திற்கு சேரன் போன்ற தவறான கவிஞர்கள் கிடைத்தமையினால் இன்று மஹாகவி உரித்திரமூர்த்தி போன்றோர் மறுக்கண்டு பிடிப்பு செய்யப்படுகின்றார். இன்று மஹாகவி உருத்திரமூர்த்தியை அளவுக்கு மீறி தூக்கி பிடிப்பதன் நோக்கம் பசுபதி சுபத்திரன் போன் மக்கள் இலக்கிய கவிஞர்களை இருட்டியடிப்பு செய்வதாகவே அமைந்துள்ளது. மக்கள் இலக்கிய கோட்பாட்டை தகர்த்துவவதில் பல நண்பர்களும் எதிரிகளாக மாறியுள்ள இன்றைய சூழலில் சுபாத்திரனின் கவிதைகளை தொகுத்து வெளியீட்டமை காலத்தின் தேவையை நாகரிமானதோர் தளத்தில் நின்று பூர்த்தி செய்வதாக அமைந்திருந்தது. பிற முயற்சிகள்:- சாருமதி அவ்வப்போது எழுதிய கட்டுரைகள், ஆற்றிய சொற்பொழிவுகள் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் என்பன தொகுக்கப்பட்டு வெளியிடப்படல் அவசியமான ஒன்றாகும். இவை சாருமதி குறித்து முழுமையாக புரிந்துக் கொள்வதற்கு உதவும். சாருமதியின் கட்டுரைகள் அவ்வப்போது வயல்பூவரசு சஞ்சிகைகளில் தலைக்காட்டும். பழந்தமிழ் இலக்கிய பரிட்சயமும் நவீன இலக்கிய நோக்கும் சாருமதியில் ஆழமாகவே வேரூண்றியிருந்தது. 1990 களின் ஆரம்பத்தில் மட்டகளப்பிலே இலக்கிய மேதினம் ஒன்றினை நடத்தினார். திருமதி சித்திரலேகா மௌனகுரு பெண்னியம் தொடர்பாகவும் ந. இரவிந்திரன் அவர்கள் சமகால இலக்கிய செல்நெறி தொடர்பாகவும் உரையாற்றினார்கள் இலக்கிய மே தினம் குறித்து சாருமதியின் கூற்று இவ்வாறு வெளியீட்டிருந்தது “மேதினம் என்பது உழைக்கும் மக்களின் விடுதலைக்குரிய நாளாகும். உழைக்கும் மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டத்தை இலக்கிய ரீதியாக முன்னெடுக்கும் எம் போன்றோராலும் இத்தினத்தை மறந்து நிற்க முடியாது. இவ்வாறு சிறப்புமிக்கதோர் இலக்கிய மேதினத்தை இலங்கை இலக்கிய வரலாற்றில் அறிமுகப்படுத்தியமை பெருமை சாருமதியை சாரும் சாருமதி மக்கள் ஐக்கிய முன்னஸிக் கோட்பாட்டினை வலியுறுத்தியதுடன் அதனையே நடைமுறையிலும் கடைப்பிடித்து வந்தார். இவர் யாழ் பல்கலைகழகத்தில் மாணவராக இருந்த கால முதல் இறக்கும் வரை இந்த நடைமுறையை பின்பற்றி வந்தார். என்பதற்கொருவர் தேசம் தழுவியவகையில் இலக்கிய நண்பர்களை கொண்டிருந்தமை இதற்குதக்க எடுத்துக்காட்டாகும். குறிப்பாக தேசிய கலை இலக்கிய பேரவை, நந்தாலா இலக்கிய வட்டம், புதிய சிந்தனைக் கலை இலக்கிய பேரவை முதலிய அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தார். சமூக செயற்பாட்டுத்தளத்திலான பலவீனங்கள்:- கவிஞர் என்றவகையில் சமூக மாற்ற போராட்டங்களுக்கு காத்திரமான பங்களிப்பினை நல்கிய சாருமதி சமூக செயற்பாட்டு தளங்களில் பல தவறுகளுக்கு உள்ளானவராகவும் காணப்படுகின்றார். சஞ்சிகையாளர் பதிப்பாளர் என்கின்றவகையில் அச்சகத்துறையின்; பால் எத்தகைய சக்திகளை சாருமதி அணித்திரட்டியிருந்தார் என்பது குறித்த ஒரு விமர்சன பார்வையை முன்வைத்தல் இவ்விடத்தில் அவசியமானதாகின்றது. ஒரு இலக்கிய அமைப்பையோ சமூக - பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்த தக்க அணியையோ காத்திரமான வகையில் அவரால் கட்டியெழுப்ப முடியவில்லை என்பதே உண்மையாகும். சரியான கோட்பாட்டுத் தெளிவும் உறுதியான அமைப்பாக்க நடைமுறைகளில்லாமையும் இதற்கான அடிப்படை காரணமாகும். அவர் இறுதிவரை இயங்கிய அமைப்புகள் என்பவை உதிரிகளின் கூட்டு என்கின்ற அளவில் செயற்பட்டனவேயன்றிச் சமூகமாற்ற சக்திக்கான ஸ்தாபனக் கட்டமைப்புகளாகத் துலங்கவில்லை. அவர் சுபத்திரனுடன் செயற்பட்ட அவரது ஆரம்பக்காலங்கள் சுபத்திரன் சண்முகதாசன் தலைமையிலான கம்பூனிஸ்ட் கட்சி மீது விரக்திப்பட்டுக் கவிதைகள் படைத்துக் கொண்டிருந்த துரதிஷடமானதொரு காலமாகும். உட்கட்சி போராட்டத்தைச் சரியான முறையில் முன்வைக்கவும் முடியாமல் வெளியேறி சுதந்திரமாக கட்சி கட்டமைப்பை உருவாக்கவும் முடியாமல் விரக்தியின் ஓலங்களாக அந்தக் கவிதைள் அமைந்தன. சுபத்திரன் கவிதைகளை அற்புதமாக தொகுத்தளித்த சாருமதி இக் கவிதைகளை தனிப்பகுதியாக வகைப்படுத்தியிருந்தமையையும் அவதானிக்க முடியும். அதன் மீது தீர்க்கமான சமூகவியல் அணுகுமுறையுடனான விமர்சனத்தை சாருமதியால் முன்வைக்க முடியவில்லை. இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்து நோக்குதலும் முக்கியமானதொன்றாகும். சாருமதி உருவாகிய தமது செயற்பாடுகளை முன்னெடுத்த மட்டகளப்பு சமூக அமைப்பினை ஏனைய யாழ்ப்பாண மலையக சமூக அமைப்புகளுடன் ஒப்பிட்டு நோக்குகின்ற போது சமூக முரண்பாடுகள் கூர்மையாடைந்த ஒன்றாக காணப்படவில்லை. அத்துடன் சாருமதியின் காலம் என்பதும் உழைக்கும் மக்கள் சார்பான இயக்கங்கள் தளர்ச்சியடைந்திருந்த காலகட்டமாகும். சுபத்திரன் அவர்களின் தற்கொலை சம்பவம் கூட இந்த பின்னணியில் வைத்து நோக்கப்பட வேண்டியதொன்றாகும். இக்காலத்துச் சூழலில் வைத்துதான் சாருமதியின் தவறுகளும் நோக்கப்பட வேண்டும். சாருமதியின் பலவீனத்தை விட அவரது சமூக பங்களிப்புக்கான நடவடிக்கைகள் வெற்றிபெற்று நிற்கின்றன என்பதே இங்கு பிரதானமான அம்சமாகும். வரலாற்றில் சமூகமாற்றத்திற்காக செயற்பட்ட இயக்கங்கள் தனிமனிதர்கள் இத்தகைய பலவீனங்களுக்கும் பின்னடைவுகளுக்கும் உட்பட்ட வந்துள்ளனர் என்பதையும் அவை காலத்தால் களையப்பட்டு பலமாக மாற்றப்பட்டு வெற்றிகளாக்கப்பட்டவையும் வரலாற்றை நேர்மையுடன் அணுகுபவர்களால் உணரமுடியும். முடிவுரை:- கவிஞனாக ஆசிரியனாக சஞ்சிகையாளராக பரிணமித்த சாருமதியின் பங்களிப்பு மகத்தானது சாருமதி தன் காலக்கட்டத்தில் எதிர் நோக்க முரண்பாடுகளை கண்டு அதற்கு அடங்கி போகாமலும் அம்முரண்பாடுகளிலிருந்து விலகி நின்ற தத்துவ ஞானியாகவும் இல்லாமல் அவர் அம் முரண்பாடுகளை எதிர்கொண்டு அவற்றுக்கான தீர்வினையும் முன்வைக்க முனைந்த சமூக விஞ்ஞானியாகவும் காணப்படுகின்றார். சாருமதியை பொறுத்த கனதியான ஆழமான ஆய்வுகள் வெளிவரவேண்டியது அவசியமானதாகும். அவரது வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகள் கூட அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டியாக அமையும். இறுதியாக ஐம்பத்தொரு வயதினை ஒருவரின் இறப்பு வயதாக கொள்வது துயரகரமானது அதிலும் உழைக்கும் மக்களின் பதாகையை உயர்த்திப் பிடித்த இம்மனிதனின் இறப்பு மிக மிக துயரமானது. சாருமதியின் பதாகையை தடம் புரளாது முன்னெடுத்து செல்வதே மாணவர்கள், நண்பர்களின் மிக முக்கியமான பணியாகும். இதுவே மறைந்த கவிஞருக்காய் நாம் ஆற்றும் அஞ்சலி. குறிப்பு: காலத்தின் தேவையை நன்கறிந்து சாருமதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகளை தொகுத்து நந்தலாலா இலக்கிய வட்டத்தினர் அறியப்படாத மூங்கில் சோலை என்ற கவிதை தொகுப்பினை ஆழகான முறையில் வெளியிட்டுள்ளனர்.(விலை.200 ரூபா இலங்கை விலை). வணிக நோக்கிற்கு அப்பால் வாசகர்களின் நலனையொட்டி மலிவு விலையில் தரமான பதிப்பாக வெளிவந்துள்ளமை இந்நூலின் இன்னொரு சிறப்பம்சமாகும். இதனையொட்டி சாருமதியின் கவிதை மற்றும் அவரது பங்களிப்பு குறித்த விமர்சன கூட்டங்கள் மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய இடங்களில் நடைப்பெற்றுள்ளன. விரைவல் ஹட்டனில் விமர்சன நிகழ்வொன்றினை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன |
Tuesday, 2 November 2010
Subscribe to:
Posts (Atom)