Monday, 28 May 2012

செட்டியூர் கண்ணகை அம்மன் ஆலயம் - சடங்கும் வழக்குரையும் 02


onday, June 13, 2011

செட்டியூர் கண்ணகை அம்மன் ஆலயம் - சடங்கும் வழக்குரையும் 02

வைகாசி பொறந்தாலே( பிறந்ததும்) வெயில் நீங்கி இதம் குளிரும் குளிர்த்திப்பாடல்களால் நிலம் நனையும் என்று ஆதங்கப்பட்டு வாழும் ஈழத்திருநாட்டார்.

கிராமங்கள் தோறும் கண்ணகை அம்மன் கோயிலும் அதன் திருவிழாவாக பெயர் பெறும் சடங்குமுறைகளும் சிறப்புப்பெயர் கொண்டழைக்கின்றோம்.
தமிழ் இலக்கிய வரலாற்றின் மரபிலக்கியங்களாக இந்த சிற்றிலக்கியங்களின் நீட்சியாக அம்மன் பாடல்கள் மண்சார் வெளிப்படையாகவும் காணப்படுகின்றன. இங்கு குளித்திப்பாடல்கள், காவியப்பாடல்கள், தாலாட்டு, மான்மியம், ஊஞ்சல் என்று பலவகையான பொக்கிசங்களாக மரபுவழிச் சின்னங்களாக இருக்கின்றன.

"அன்று தொட்டுப் பாண்டியநாடு மழைவறங்கூர்ந்து வறுமை எய்தி வெப்பு நோயும் குருவும் தொடரக்கொற்கையிலிருந்த வெற்றிவேற்செழியள் நங்கைக்குப் பொற்கொல்லராயிரவரைக் கொன்று களவேள்வியால் விழாவோடு சாந்திசெய்து, நாடுமலிய மழைபெய்து நோயுந் துன்பமும் நீங்கியது"
- சிலப்பதிகார உரை

இந்த சிலப்பதிகாரத்திலேயே கண்ணகி காரணமாக வெம்மைநோய் வந்துநீங்குதல் பற்றி கூறப்பட்டுள்ளது. வைசூரி, குக்கல், வெப்பு, சின்னம்மை, வயிற்றுக்கடுப்பு, கண்ணோய, பெருஞ்சுரம், மங்கமாரி போன்ற சூட்டுநோய்கள் கண்ணகி அம்மனின் கோபத்தினால் பரவுவதான எண்ணப்பாடு ஐதிகம் இங்கு உள.

இதனால் காளியின் அம்சமான கண்ணகித் தாயிக்கு நேர்த்திக்கடன் செய்தலை வழக்கமாகக் கொண்டு வழிபாடு செய்தல் இன்றும் இருக்கும் மரபு.

இதற்காக மற்றும் குழந்தைப்பேறு, மாங்கல்ய வரன் என்றும் பல்வேறு வேண்டுதல் என்றும் அவைகளுக்கெல்லாம் நேர்த்தி வைத்து மடிப்பிச்சை எடுத்தல், காவடி எடுத்தல், அலகிடுதல், கற்பூரச்சட்டி எடுத்தல் என்றும் சடங்கு காலத்தில் பொன்னாலும் வெள்ளியிளாலும் செய்யப்பெற்ற கண்ணுருவங்குளம் கண்மணிகளும் அம்மனுக்குக் காணிக்கையாகச் சமர்ப்பித்தல் அடயாளப்பொருட்கள் என்றழைப்பர்.

இரவுவேளையிலும் நேர்த்திக்கடன் செலுத்த வந்த ஆசான்

அடயாளப்பொருட்களை பெறுவதில் மக்கள்

திராவிடப்பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற சக்தி வழிபாட்டினையே கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற கண்ணகியம்மன் ஆலயங்களில் காணலாம்.

நமக்கு செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலயமே மிகப்பிரசித்திபெற்று விளங்குகிறது. எங்கள் ஊரில் ஒவ்வொரு ஆலயம் இருந்தாலும் இக்கண்ணகி அம்மன் ஆலயம் மிகச்சிறப்புப் பொருந்தியது காரணம் இவ்வாலயத்தில் கிரான்குளம், குருக்கள்மடம்,செட்டிபாளையம், மாங்காடு, தேத்தாத்தீவு, களுதாவளை ஆகிய ஊர்களைச்சேர்ந்தவர்களும் ஒன்றாகச் சேர்ந்து சடங்குகளை நடத்துதே.

இச்சடங்கு காலகட்டத்தில் கிராமங்களில் மஞ்சள் தட்டக்கூடாது; மாவிடிக்கக்கூடாது2 புலால் உண்ணக்கூடாது; இப்படி பலத்த பாரம்பரிய கட்டுப்பாடுகள் உள்ளன.அவை இன்றும் பண்பாடு ரீதியாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றமை அம்மனிலுள்ள பயபக்தியைக் காட்டுகிறது என்றே சொல்லத்தோன்றுகிறது.

கண்ணகை அம்மன் சடங்கு என்றாலே மனசுக்கு என்னமோ இதமான மகிழ்ச்சியான உணர்வு இப்பிரதேச ஊர்மக்களுக்கு வருவது இயல்பு. காரணம் கண்குளிரும் மனம் மகிழும் பல நிகழ்வுகள் நடந்தேறுவதே.

முதல்நாள் - கதவு திறத்தல்

முதல் நாள் கதவு திறத்தல் என்று அழைப்பர். அம்மன் கோயில் சடங்கு ஆரம்பம் என்பதைக்குறிக்கும் நாள். இந்நாள் எப்போ வரும் என்று ஏங்கிக் கேட்டு அம்மாவைக் குடைதலே இவ்விழாவின் சந்தோசத்தை அதிகரிக்கும். எங்கட செட்டியூர் கண்ணகை அம்மன் ஆலயச்சடங்கின் கதவுதிறத்தல் கிரான்குளம் மக்களால் நிகழ்த்தப்படும்.

சடங்கு

சடங்கு என்ற சொல் அம்மனுக்கு நடக்கும் பூசையைக்குறிக்கும். இங்கே உடுக்கு வாத்தியங்களோடு அம்மன் காவியம் பாடுதல்,உடுகுச்சிந்து பாடுதல் அம்மானைக்காய், சிலம்பு என்பவற்றை கிலுக்குதல் (குலுக்குதல்), குரவைபோடுதல், அவ்வேளையில் ஆலத்தி எடுத்தல் என்பனவைகளும் அடங்குகின்றன.
நாள்தோறும் மதியம்(பகல்), இரவு பூசைகள் சடங்குப்பூசையாக கொள்ளப்படும்

கல்யாணக்கால் சடங்கு

கல்யாணக்கால் சடங்கு தேற்றாத்தீவு மக்களுக்கு உரிய சடங்காக அமைகிறது செட்டிநகர் கணணகை அம்மன் ஆலயத்தில்.
கல்யாணக்காலினை பூவரசுகம்பம் ஒன்றினை ஆலயமண்டபத்தினுள் நட்டு ஆடை அலங்காரம் அணிகலன்காலால் ஒரு பெண்ணென கோலம் செய்து கண்ணகை அம்மனாகப் பாவித்து கோவலனார்க்கு திருமணம் செய்துவைத்தல் அதற்குரிய பாடல்களோடு வழிபட்டு சடங்கு செய்தல் இன்றும் வழக்கு.


குளுத்தி
தினமும் முறையான சடங்கு நடந்தேற இறுதிநாளில் நடைபெறும் நிகழ்வே "குளுத்தி" என்று அழைப்பர். குளித்தியிரவு சடக்கும் சடங்கிலே பொங்கலிடுதல் முதன்மையாகவும் பொங்கல் விழா முடிவுற சுண்ணமிடித்தல் இதமான நிகழ்வாக அமையும். பின்னர் குளுத்திப் பாடல் படிக்கத் தொடங்கி அம்மனின் கோபங்கள் தணியச்செய்து "வாழி" எனும் பாடல்கள் பாடப்படும். அம்மனை வரம்வேண்டிப் வாழ்த்தும் சேர்ந்து பாடும்பாடல்களாக அமையும்.
கடைசியில் "பாணக்கம்" வழங்கப்படும் இதனை குளுத்திப்பாணக்கம் என்றழைப்பர். இது ஓர் அமிர்தமாக சுவையேறியதாக இருக்கும்.
இவ்விழா செட்டியூர் கண்ணகை அம்மன் ஆலயத்தில் களுதாவளைவாழ் மக்களால் நிகழ்த்தப்படுகிறது.


வழக்குரை


மட்டக்களப்பிலே கண்ணகி கோயில்களில் கண்ணகி வரலாற்றுரைப்பதாக அவள் பெயராலோ, இளங்கோவடிகள் பெயராலோ, அவள் உரைத்த வழக்கின் பெயராலோ கொண்டமைந்த "வழக்குரை" என்றும் "வழக்குரைக் காவியம்" என்று அழைக்கபடும் காவியம் தினந்தோறும் பகலில் பாடுவது சிறப்பு.
மட்டக்களப்பின் இலக்கியச் செல்வமாக இந்த வழக்குரைக் காவியமானது சிலம்பிலே காணும் கண்ணகியை பிறப்பிலிருந்தே தெய்வநிலைசேர்ந்து வளர்ந்துவரும் ஒன்றாய் பல வேறுபாடுகள் கொண்ட கதையாய் உடையதாய் காணப்படுகிறது.

இன்று காலையில் பாடும் போது..


வசந்தன் ஆடல்

"வசந்தன்", "வசந்தன் கூத்து" என்று அழைக்கப்படும் கூத்து மரபு இன்றும் வழக்கில் உள்ளது. அனேகமாக கண்ணகை அம்மனின் சடங்கிலே இவ்வாடல் நிகழ்த்தப்படுவது வழக்கம்.
செட்டியூர் கண்ணகை ஆலயத்தில் தேற்றாத்தீவு மக்களின் பூசை நாளில் தேற்றாத்தீவு பிள்கைகளால் ஆடப்படுவது இயல்பும் சிறப்பும்.



தண்ணீர்ப்பந்தல்


ஒவ்வொரு கிராமத்திலிருந்து நடைநடையாக வரும் அடியார்களுக்கு வெயிலில் தாகத்தைப்போக்கும் முகமாக வீட்டுக்கு முன் வேலியோரங்களில் தண்ணீர் குடங்கள் வைத்திருக்கும் தன்மை இம்மக்களின் தொன்றுதொட்டு வாழவைக்கும் தன்மையை எடுத்துக்காட்டி நிற்கும். இதைவிட சந்திகளிலும் கோயில்களிலும் தாகசாந்தி செய்யும் நிலையமாக தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டிருக்கும்.





மடிப்பிச்சை எடுத்தல்

மடிப்பிச்சை எடுத்தல் அம்மன் ஆலயம் என்றாலே பெண்களுக்கு நேர்த்திக்காகவும் அம்மனுக்கு வேண்டுதலுக்காகவும் வீடு வீடாய் சென்று ஒற்றைப்படை இலக்கத்தில் 5 அல்லது 7 அல்லது 9 வீடுகளுக்குச் சென்று "கண்ணகை அம்மன் பேரால மடிப்பிச்சை போடுங்கோ" என்று அம்மனுக்கு தமது சேலையின் முந்தனையில் எடுத்து வேப்பிலையின் துளிரிலைகளை தலையில் சூடி கையிலும் எடுத்துக்கொண்டு நெல்லைச் சுமந்து வெற்றுக்கால்களுடன் கோயிலுக்கு சென்று அவற்றை கொடுத்தல் இப்பொழுதுகளிலும் நடைபெறுகிறது.
இம்மடிப்பிச்சை எடுப்பதற்கு சிறுபிள்ளைகளும் ஆயத்தம்கொள்வது அவர்களுக்கு அளப்பரிய சந்தோசத்தை ஏற்படுத்தும்.
இன்று காலையே நமது மருமகளொருத்தி ஆரம்பிச்சுட்டாள் பாருங்க



தோரணம் கொண்டுவருதல்


கோயில் அலங்கார வேலைகளில் ஈடுபடும் இளைஞர்


கடைத்தெரு

மனதை உருக்கும் பறவைக் காவடிகள்


காலையில் காவடி எடுத்தல்



செட்டியூர் கண்ணகை அம்மன் காவியம் நேற்று (12-06-2011) எமது சண்.இன்பராஜனால் பாடப்பட சிவகுரு தணிகசீலனால் இசைக்கோர்வை செய்யப்பட்டு இந்து இளைஞர் மன்ற செயலாளர் த.விமலானந்தராஜாவினால் அம்மன் ஆலயத்தில் வெளியிடப்பட்ட இறுவட்டிலில் உருவான பாடலை கேளுங்கள்.




இன்று இரவு குளுத்தி நிகழ்வுடன் இனிய நாட்கள் விடைபெறும் அடுத்தவருடம் வரை தித்திக்கும் நினைவுகளுடன்.

இங்கு செட்டிபாளையம் கண்ணகை அம்மன் படங்களைக் பாருங்கள்


உசாத்துணை நூல் : மட்டக்களப்புத் தமிழகம் வித்துவான் வீ.சி.கந்தையா

Download As PDF  

சடங்கும் வழக்குரையும் 01

கண்ணகை அம்மன் என்றாலே மட்டக்களப்புக்கு மிகவும் சிறப்பும் பெருமையும் அமைவது மகிழ்ச்சி.
கண்ணகி என்று சிலம்பினுள் வரும் இங்கே கண்ணகை என்ற சிறந்த பொருளாக திரிபுற்றது காண். கண்- நகை என்ற இரு சொற்களின் சேர்க்கையான கண்ணின் ஒளி கண்ணுக்கு அணிகலன் ஆக பொருள்பொதிந்து வழிபாட்டுக்கும் சடங்கு என்ற பதங்களால் ஆன கிராமத்து மண்ணின் பெருமையும் சிறப்புமாய் அமைகின்றது. "சடங்கு" என்றுரைத்தல் அம்மன் கோயில்களில் நடக்கும் பூசையினைக் குறிக்கும் இதனால் கண்ணகையம்மன் சடங்கு என்று அழைக்கப்படும் இவ்விழா வருடந்தோறும் வைகாசி வளர்மதி நாட்களில் இடம்பெறும்.
கதவு திறத்தல், என்ற சொற்பதத்தால் ஆரம்ப விழா முதல்நாள் சடங்காக அமையும். நாள்தோறும் மதியம்(பகல்), இரவு பூசைகள் சடங்குப்பூசையாக கொள்ளப்படும். உடுக்கு வாத்தியங்கும் சிலம்பு ஓசையும் சேர்ந்து அம்மன் காவியம் உடுக்குச் சிந்து பாடுதல், கல்யாணக் கால் சடங்கு, என்பனவும் இங்கு சிறப்பானவை. சடங்கு நாட்களில் நேர்த்திக்கடனாக பல சிறப்பான பக்திபூராக அடியார்கள் வழிபடுவர் அம்மனை.
செட்டிபாளையம் அம்மன் கோயில் என்றாலே எங்கள் பிரதேசத்தில் ஊரில் வெகு சிறப்பாக ஒரு கொண்டாட்டம். இங்கு கண்ணகை அம்மன் காவியம் சிறப்பு இங்கு போய் காண்க இந்த பாடல்
இப்பாடல் எமது மண்ணின் சிறப்புப் பொருந்திய ச.இன்பராஜன் அவர்கள் பாட இசைச்சேர்க்கை ஒலிப்பதிவை தணிக சீலன் அவர்கள் உருவாக்கத்தில் அமைந்தது சிறப்பே..

















Download As PDF  

Thursday, 26 April 2012

திமிலைத்துமிலன்


திமிலைத்துமிலன்
திமிலைத்துமிலன் (சின்னயா கிருஷ்ணபிள்ளை) ஈழத்துத் தமிழ் எழுத்தாளர். மூத்த கவிஞர். சிறந்த சிறுகதை, புதின எழுத்தாளர், ஓவியர், ஆய்வாளர், நாடகாசிரியர். இவர் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்றுப் பட்டம் பெற்று அங்கேயே நீண்ட காலம் விரிவுரையாளராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். இதுவரை 15 நூல்களை வெளியிட்டுள்ளார்.
குடும்பவிபரம்

இலங்கையில் மட்டக்களப்பில் திமிலைத்தீவில் பிறந்தவர். இவர் காலஞ்சென்ற கவிஞர்களான திமிலை மகாலிங்கம், திமிலைக் கண்ணன் ஆகியோரின் சகோதரர். இவரும் இவரது சகோதரர்களும் 1960 களில் இலக்கிய உலகில் கொடிகட்டிப் பறந்தவர்கள்.
விருதுகளும் பட்டங்களும்

இவரது கவித் திறனுக்காக இவர் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார். கவிமணி, கவியரசு, தமிழ் ஒளி, கவிதல பாஸ்கரன், கலாபூஷணம் ஆளுநர் விருது, கலைக்கழக விருது என்பன அவற்றுட் சிலவாகும். இவரது கவித்துறை ஆற்றலுக்காக 2009 மார்ச் 30 ம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கிய கலாநிதிப் பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளது. கனடியத் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் 2009 நவம்பர் 9 ம் திகதி நிகழ்த்திய இவரது பவள விழாவிலே இவருக்கு செந்தமிழ்க் கவிமாமணி பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளது. இவர் சென்னை குழந்தை எழுத்தாளர் சங்கம் நடாத்திய கவிதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றுள்ளார். ‘ஆனந்த விகடன்’ நடத்திய கவிதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றுள்ளார். இலங்கையில் நடைபெற்ற பல கவிதைப் போட்டிகளில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.
ஓவியம்

இவர் ஈழத்துச் சஞ்சிகைகள் பலவற்றில் ‘கிருஷ்ணா’ என்ற பெயரில் எண்ணற்ற ஓவியங்களை வரைந்துள்ளார். வீரகேசரியில் 1950 களில் தாரா என் தங்கை என்ற கவிதைச் சித்திரத் தொடர்கதையை வரைந்துள்ளார். கண்ணாடியில் இவர் வரைந்த ஓவியங்களைக் கொண்ட கண்காட்சி ஒன்று மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையில் நடைபெற்றது.


வெளிவந்த நூல்கள்

நீரர மகளிர்
கொய்யாக்கனிகள்
நெஞ்சம் மலராதோ?
அழகுமுல்லை
மஞ்சுநீ மழைமுகில் அல்ல
எல்லம் எங்கள் தாயகம்
முத்தொள்ளாயிரம்
அணில்வால்
யாப்பும் அணியும்
தமிழ் இலக்கியம் கற்பித்தல்
திமிலைத்துமிலன் கவிதைகள் - காதல்
திமிலைத்துமிலன் கவிதைகள் - சமூகம்
பாவலர் ஆகலாம்
கருமணியிற் பாவாய்
ஈழத்துக் கல்விமரபில் எண்ணெய்ச் சிந்து
மேடையேற்றிய நாடகங்கள்

முத்தொள்ளாயிரம்
ஈடிபஸ்

இலக்கிய கலாநிதி வித்துவான் சா.இ.கமலநாதன்




கிழக்கிலங்கையின் மூத்த தமிழறிஞர் இலக்கிய கலாநிதி வித்துவான் கமலநாதன்.கிழக்குப்பல்கலைக்கழகம் கலைகலாசார பீடத்தின் பரிந்துரையின் பேரில் இலக்கிகியகலாநிதி பட்டம் வழங்கி கெளரவித்தது.பேராசிரியர் வித்தியானந்தனின் கூத்து மீளுருவாக்க முயற்சிகளுக்கு பக்க துணையாய் இருந்தவர் .வித்துவான் கமலநாதன் அவர்கள்.வித்துவான் என்ற பட்டத்திற்கு பெருமை சேர்த்தவர்.சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சபையின் மூலம் விபுலானந்தரின் ஆக்கங்களை மீள்கண்டுபிடிப்பு செய்து வெளிக்கொணர்ந்த பெருந்தகையாளன்.இவரது மட்டக்களப்பு பூர்வசரித்திரம் என்ற நூல் கிழக்குமாகாண வரலாற்றின் திறவுகோல்