கவியல்ல நிஜம்
பிரிவு……
உன்னையும், என்னையும் விட்டு
உலகையும், உடலையும் விட்டு
மற்றெல்லாம் பிரிவல்லவே.
ஆடைபிரிந்து அம்மணமானதும்,
அந்தரங்கம் பிரிந்து அவமானம் சுமந்ததும்
பிரிவென்றாகுமோ?
முன்னம் பள்ளி பிரிந்தே
முதநிலைப் பள்ளியாகி
அது பிரிந்தே உயர் பள்ளி ஏகி
அழகிய பிரிவு வந்தே
பல்கலைக் கழகமாக…
பட்டங்களும், பதவிகளும்
பாராட்டுதல்களும் பலவும்
ஒன்றன் பிரிதலும் ஒன்றன் வருதலுமே
உலக இயல்பென்றாகும்.
நீ உலகைக் காணலாம்
உடலைப் புழுவாய் நெளித்தே ஊரலாம்
மெதுவாய் நிமிர்த்தி நழுவலாம்
இருந்தும் நின்றும்
விழுந்தும் எழுந்தும்
நடந்தே அடி பிரிக்கலாம்.
பின்னே கால்
பிடரி பட ஓடலாம்
நீ………
கருவுலகை விட்டு
பிரிந்த பின்னாலே.
மங்கையாய்ப் பூத்தால்
ஓர் மாலையாகிடும் பூ
மணமாகிடவும் இரு
மாலையாகிடும் பூ
மடியினில் கிடத்தியே
மாரடித்து மண்ணில்
மறைத்திடும் உடலை
மூடிடும் மாலை பூ
மரத்திலும் செடியிலும்
கொடியிலும் காம்பறுந்து
கைப்பிரிந்தே
நூலேறி பிணைந்ததாலல்லவா?
புதிதாயோர் பூமி காண்பாய்
புத்தகமாய்ச் சரிதமும் காண்பாய்
கனமாய்க் கோடி கொள்வாய்
உன் பாதச் சுவடுகள்
யாரைத் தொடர்ந்தோ
பச்சை மண்ணைப் பெயர்த்தடி
பிரிந்ததாலே.
இழுத்து விடும் மூச்சும்
நில்லாமல் ஓடும் காற்றும்
இல்லாது நீ இருந்ததுண்டா?
சொல்லாற் பறிதலும்
சொல்லும் பொருளும்
பாட்டுமென்றாகியே
பின்னெல்லாம்
கடலும் காடும் வானும் வரைந்திடவும்
வளியதன் பிரிதலாலேயாம்.
உன்னைப் பார் - உன்
உருவம் பார்
ஒரு நொடி உன்
கண்ணைக் கடந்துமே
கருவி பிரிந்து
ஒளி பிடித்த புகைப்படமே அது.
பாடு பேசு பலமாய்த் திட்டு
ஓ… என்றே அழு
ஆ… என்றே விளி
ஈ… என்றே சிரி
ம்… என்றே நீ ஊமையாய்க் கிடக்க
இவை பெறுமா?
உன்
உதடுகளின்
உண்மைப் பிரிவில்
உதிப்பவைதான் இவை.
ஆயிரம் பக்கமாகலாம்
அற்புதக் கதையுமாகலாம்
ஆக்கியோன் படைத்து
அழுக்குப் படாது
அட்டைக்குப் பூட்டிட்டு
அடுக்கி வைத்திருக்கும்வரை அது
அசையாத உன்
அனுங்காத உள்ளம்போன்றதுதான்.
பக்கம் பிரித்துப் படிக்கையில்
சொற்கள் பிர்த்தே அறிகையில்
வரிகள் பிரித்தே தெளிகையில்
ஆயிரம் பக்கங்களும்
அற்புதக் கதையாகலாம் நாளை
உன் உள்ளங் கவர்ந்த
அதிசயக் காவியமாகலாம்.
முகிலைப் பிரிந்து மழையாவதும்
மூச்சைப் பிரிந்து உயிராவதும்
நீரைப் பிரிந்து அலையாவதும்
நிலத்தைப் பிரிந்து சிலையாவதும்
உன்னை நீ பிரிந்தே ஓர்
உயர்வாவதும்
உலக நியதி.
செயலற்றநிலை பிரிவல்ல. பிரிந்தே இருப்பதும் செயலல்ல.
சேர்ந்தே இருப்பதும் செயலல்ல.
செயலற்ற நிலை சேர்க்கையுமல்ல.
பிரிந்தே கிடப்பது
செத்த நிலை.
சேர்ந்தே இருப்படுது அதே நிலை.
ஆக…
சேர்வதும், பிரிவதுமே
வாழ்க்கையில்
தத்துவமும்
நிஜமும்.
பிரிவோம்,
பின்னர் சேர்வதற்காய்.
பிரிகின்றீர் பிரிகின்றீர்.
பின்வந்து சேருங்கள்
பூக்களாய் பிரியுங்கள்
மாலையாய் சேருங்கள்
பக்கமாய்ப் பிரியுங்கள்
பாடமாய் ஆகுங்கள்.
கருவாய் பிரியுங்கள்
உயிராய் உலவுங்கள்.
காற்றாய்ப் பிரியுங்கள்
மூச்சாய் சேருங்கள்.
கல்லாய்ப் பிரியுங்கள்
சிலையாய் மிளிருங்கள்.
கலையாய்ப் பிரியுங்கள்
நிலையாய் ஆகுங்கள்
நிஜமாய் வருவீர்கள் என்றே
நானும் பிரிகின்றேன்…
மீண்டும் வருவதற்காய்.
கட்டைபறிச்சான் மதுரன்
2010.10.11
No comments:
Post a Comment