Thursday, 3 April 2014

பாலுமகேந்திரா

பாலுமகேந்திரா எனும் சகாப்தம்: பாலநாதன் மகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட பாலு மகேந்திரா இலங்கை மட்டக்களப்பு அருகே உள்ள அமிர்தகழி கிராமத்தில் 1939-ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதில் இருந்தே புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வந்த பாலுமகேந்திரா, பின் திரைப்பட ஒளிப்பதிவாளராக உருவெடுத்தார். புணே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவில் பட்டயப் படிப்பை முடித்தார்.
1973-ஆம் ஆண்டு மலையாளத் திரையுலகில் ஒளிப்பதிவாளராக தன் கலைப் பயணத்தை தொடங்கினார்  பாலுமகேந்திரா. "பனிமுடக்கு', "கலியுகம்', "பிரயாணம்' ஆகிய தொடக்க கால படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. 
பாலுமகேந்திராவுக்கு திரைக்கதை எழுதுவதிலும் அதீத ஆர்வம் இருந்தது. 1978-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் "கோகிலா' எனும் திரைப்படத்தை கன்னடத்தில் இயக்கி, ஒளிப்பதிவு செய்தார். தமிழகத்தில் கன்னட மொழியிலேயே வெளியான இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. மேலும் தமிழகத்தில் 100 நாள்களைக் கடந்து ஓடிய முதல் கன்னடப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு திறனை கண்டு வியந்த நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மகேந்திரனிடம் "முள்ளும் மலரும்' படத்துத்தில் ஒளிப்பதிவாளராக பாலுமகேந்திராவை சிபாரிசு செய்தார். 1978-ஆம் ஆண்டில் வந்த இப்படம் இன்றளவும் தமிழின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தமிழ்த் திரையுலகில் இயக்கம், ஒளிப்பதிவு, திரைக்கதை என பல துறைகளிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பாலுமகேந்திரா, பிரதாப் போத்தன், ஷோபா நடிப்பில்  1979-ஆம் ஆண்டு "அழியாத கோலங்கள்' என்ற படத்தை இயக்கினார். இப்படத்தை தொடர்ந்து "மூடுபனி', "மூன்றாம் பிறை', "வீடு', "சந்தியா ராகம்', "வண்ண வண்ண பூக்கள்', "நீங்கள் கேட்டவை', "உன் கண்ணில் நீர் வழிந்தால்' "ரெட்டைவால் குருவி' "ராமன் அப்துல்லா', "மறுபடியும்', "ஜூலி கணபதி', "சதிலீலாவதி', "தலைமுறைகள்' என தமிழ், தெலுங்கு, கன்னடம் என 22 படங்களை இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ளார். மற்ற இயக்குநர்களின் உருவாக்கத்தில் தயாரான 28 படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். 
5 முறை தேசிய விருதுகள்: ரசனை மிக்க சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற பல படங்களை இயக்கிய பாலுமகேந்திரா, தேசிய அளவில் பல விருதுகளை பெற்றுள்ளார். சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதை "கோகிலா', "மூன்றாம் பிறை' ஆகிய இரு படங்களுக்கும் பெற்றார். "வண்ண வண்ண பூக்கள்', "வீடு' இரு படங்களும் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை பாலுமகேந்திராவுக்கு பெற்றுத் தந்தன. குடும்ப நலம் சார்ந்த சிறந்த திரைப்படத்துக்கான விருதை "சந்தியா ராகம்' தேடித் தந்தது.
இதைத் தவிர ஃபிலிம்பேர் விருதுகள், கர்நாடக மாநில அரசின் விருதுகள், கேரள அரசின் மாநில விருது, ஆந்திர அரசின் நந்தி விருது என பல விருதுகளை பெற்றுள்ளார் இயக்குநர் பாலுமகேந்திரா.
சிறுகதைகள், கவிதைகள், உரைநடை என எழுத்துலகிலும் தன் கவனத்தை செலுத்தி வந்தார். புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளை மையமாக வைத்து உருவான "கதை நேரம்' சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி பரவலான பாராட்டுகளை பெற்றது.
சினிமா பட்டறை என்ற பெயரில் சென்னை, சாலிகிராமத்தில் சினிமா குறித்த பயிற்சி பள்ளியை தொடங்கி ஏராளமான மாணவர்களை உருவாக்கி வந்தார் பாலுமகேந்திரா. பாலா, வெற்றிமாறன், ராம், சீனுராமசாமி, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் என பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்தவர்கள், தற்போதைய தமிழ் சினிமாவின் நம்பகமான படைப்பாளிகளாக விளங்கி வருகின்றனர்.
கடைசிப் படம்: ஒளிப்பதிவு, இயக்கத்தில் மட்டுமே இதுவரை கவனம் செலுத்தி வந்த பாலுமகேந்திரா, முதல்முறையாக நடிக்கவும் செய்தார். இயக்குநர் சசிகுமார் தயாரித்த "தலைமுறைகள்' படத்தை இயக்கியதோடு, அதன் முதன்மை கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்தார். கடந்த டிசம்பர் மாதத்தில் வெளிவந்த இப்படத்தின் கடைசி காட்சியில் வயோதிகம் காரணமாக பாலுமகேந்திரா இறப்பதாக காட்சி அமைந்திருக்கும்.
இறுதிச் சடங்கு: சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திரா சினிமா பட்டறை வளாகத்தில் பாலுமகேந்திராவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பாலுமகேந்திராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதிச் சடங்குகள் போரூர் மின் மயானத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.14) காலை நடைபெறுகிறது. பாலுமகேந்திராவுக்கு மனைவி அகிலா, மகன் ஷங்கி மகேந்திரா ஆகியோர் உள்ளனர். ஷங்கி மகேந்திராவும் ஒளிப்பதிவாளராக உள்ளார்

No comments:

Post a Comment