Monday, 30 March 2020

தோழர் தம்பி தில்லை முகிலன்

தோழர் தம்பி தில்லை முகிலன்

புரட்சிகர செவ்வணக்கம்

தோழனே உன்னைப் பற்றி என்ன எழுத எதை எழுத எதை விட தோழமையும் உரிமையுமாய் நீண்ட பயணங்கள் .
திருமலை நகரில் எழுபதுகளின் ஆரம்பத்தில் முன்னோடிகள் சங்கப் பலகை நிகழ்வுகளில் முற்போக்கு முகம் கொண்டு மாக்சிய கருத்துக்களை அள்ளி வீசிய அந்த தருணங்கள்.உன் கம்பீரக் குரல் மிடுக்கேறிய உன் தோற்றம் பார்த்த மாத்திரத்திலேயே என்னை ஆதர்சித்த உன் தோற்றம் பின்னாளில் பல கவிதை அரங்குகளில் உன் புரட்சிகர முழக்கம் திருமலையில் ஒரு முற்போக்கு முகாமுக்கான முன்னறிவிப்பாய் அமைந்தன.
ஈழப் புரட்சி அமைப்பு கொட்டியாரப் பிரதேசத்தில் கட்டைபறிச்சான் கங்குவேலி ஆகிய இடங்களில் நடாத்திய மே தின விழாக்கள் மணல்சேனையில் நடத்திய உழவர் விழா தம்பலகாமத்தில் நடத்திய மேதின விழா எல்லாவற்றிலும் நாடகமும் கவிதையுமாய் நீ சுழன்ற அந்த கலை எழுச்சி அதிலும் உன் நாடகங்கள் சொன்ன சோசலிச சித்தாந்த சிந்தனை பகிர்வு கவிதை மூலம் காட்டமாக முன் வைத்த கடவுள் மறுப்பு.
1977 தேர்தலில் ஈழக் கோரிக்கைக்காய் ஊர் ஊராக செய்த பிரச்சாரம் இடதுசாரித்துவத்தை தமிழ் இன உணர்வுடன் பார்த்த அந்த நாட்கள் தொடர்ந்தும் அதன் வழிப் பட்ட உன் பயணம் .
எண்பதுகளில் நாடகம் கலை இலக்கியம் என நீ காட்டிய அக்கறை செயல் பாடு.பாடசாலை தமிழ் தினப் போட்டிகளுக்கு உன் நாடகப் பிரதிக்காகா தவம் கிடந்த பாடசாலைகள் உயிர்த் துடிப்பான உன் நாடக இயக்கம் உன் வழி உருவான பல கலைஞர்கள்.
Image may contain: 1 person தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் புதிய நாடக முயற்சிகள் பல் குரல் மன்னனாய் குழந்தைகளுடன் குதுகலிக்கும் அந்த பொழுதுகள் சிவாஜியை அப்படியே கொண்டுவரும் உன் குரலும் பாவங்களும்.தோழர் பற்குணத்துடன் இணைந்து சமூக அக்கறையுடனான கலை இலக்கிய செயல் பாடுகள் .
தோழனே பல்கலைக் கழக விரிவுரயாளனாய் நான் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய காலை திருகோணமலையில் நானும் மெளனகுரு சேரும் நடத்திய நாடகப் பட்டறைகளில் கலந்து கொண்டு தெரியாததை அறியத் துடிக்கும் கர்வமற்ற கலைஞனாய்.
வான்மதிக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்த போது மட்டக்களப்பு வந்து உன் மகளாக அவளைப் பார்த்துக் கொள் என்று சொல்லி நெகிழ்ந்த தருணங்கள்
அவள் இராவணேசனில் பங்கு பற்றி பாராடுப் பெற்ற போது உன் இலட்சியம் நிறைவேறியதாக நீ கொண்ட பூரிப்பு.
மகள் இறந்த போது உன் துயரை பகிர்ந்து கொண்ட அந்த நாட்கள்.
Image may contain: 2 people
நான் கடத்தப் பட்டதை அறிந்து நீ பட்ட துயரத்தை பின்னாளில் ஒரு நால் என்னிடம் சொல்லிய போது நான் நெகிழ்ந்த அந்த பொழுது.
யாரிடமும் எதையும் யாசித்து பெற்றதில்லை நிமிர்ந்த நடை நீ எங்கள் பாரதி .ஈழம் தந்த செல்லி
இறப்பு உனக்கில்லை தோழனே








பாலசுகுமார்

No comments:

Post a Comment