Thursday, 26 March 2020

கலை இலக்கிய ஆளுமை ஆனந்தன்

மறந்து போகுமா

கலை இலக்கிய ஆளுமை ஆனந்தன்


ஆனந்தன் இறந்து 25 வருடங்களை எட்டி நிற்கிறது,ஆயினும் எல்லாம் நேற்றுப் போல் என் நினைவில் நீள்கிறது.அவன் எனக்கு அறிமுகமானது 1992 ல் நான் கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளராக வந்த பிறகுதான் ஒரு மூன்று வருடங்கள்தான் ஆனாலும் நிறைந்த நினைவுகளை என்னுள் விட்டுச் சென்றுள்ளான் .
1992ல் என்னைக் கண்டதும் என்னிடம் முதல் சொன்ன விடயம் அபோது சாருமதி மட்டக்களப்பிலிருந்து வெளியிட்ட "வயல்" சஞ்சிகையில் நான் பேராசிரியர் வானமாமலை பற்றி எழுதிய கட்டுரையை சிலாகித்த விதமும் அதில் நான் இன்னும் என்ன சொல்லியிருக்கலாம் என்பது பற்றியுமான விமர்சனப் பார்வை என்னை அவனுள் நெருகமாக்கியது.நான் அறிந்த மிகச் சிறந்த வாசகன் மாக்சியத்தை நேசித்த உண்மைத் தோழன்.விருப்பு வெறுப்புகள் அற்ற விமர்சகன் .
வாசகர் வட்டத்துக்காய் ஈழத்து நாட்டாரியல் பற்றி ஓருரை ஆற்றும் படி கேட்டு ஒரு நீண்ட உரையும் அதன் பின்னரான கலந்துரையாடலும் கிழக்கின் நாட்டார் மண் சார்ந்த மரபுகள் பற்றி அவனது அபிப்பிராயங்களும் அந்த இலக்கிய கலந்துரையாடலுக்கு மகுடம் சூட்டி நின்றன.
நான் எங்கு உரையாற்றினாலும் என் ரசிகன் அவன் என் உரையை சிலாகித்து சிலாகித்து கதை சொல்வான்.ஆனந்தனைப் போல எனக்கு இன்னொரு ரசிகனும் இருந்தான் சிவராம் இருவரும் ஒரு சேர என் வீட்டு முன் மண்டபத்தில் இஞ்சி பிளேண்டியையும் குடித்துக் கொண்டு சுவாரஸ்யமான இலக்கிய அரசியல் உரையாடல்கள்.
இஞ்சிப் பிளேண்டியென்றால் ஆனந்தனுக்கு உயிர் ஆனந்தன் வீட்டுக்கு எப்போ சென்றாலும் வத்சலா இஞ்சிப் பிளேண்டியோடு வந்து நிற்பா.மறந்து போகுமா இவையெல்லாம்.
மகள் அனாமிகாவோடு செல்லம் பொழிவதில் அவன் என்றுமே குறை குறை வைக்கவில்லை பிள்ளைகள் என்றால் அவர்கள் மொழியில் சொக்கிப் போவான் .அனாமிகாவை சீண்டிப் பார்ப்பதில் அலாதிப் பிரியம் அவனுக்கு இன்று அவனும் இல்லை அவன் நேசித்த என் மகளும் இல்லை ஆனந்தன் இறந்த போது அவள் துடித்துப் போனாள் கடந்து விட முடியாத நினைவுச் சுமை.
ஆனந்தன் மட்டக்களப்பு கொண்டாட வேண்டிய கலை இலக்கிய ஆளுமை
அவன் நினைவாய் எவ்வளவோ பேசலாம் பேசுவோம்.
மளையாள இசை மலையாள இலக்கியத்தில் மிகுந்த பரிட்சயம் உள்ளவன் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கும் ஆற்றலால் சில சிறுகதைகளை மொழி பெயர்த்துள்ளான் .இன்னும் அவன் இருந்திருந்தால் ஈழத்து இலக்கியத்துக்கு மேலும் வளம் சேர்த்திருப்பான்.மலையாள இசையை எனக்கு அறிமுகப் படுத்தியவனும் அவனே அவனிடமிருந்து மலையாள இசைப் பேழைகளை வாங்கி கொடுக்காநல் விட்டு அவன் நினைவாய் என் மட்டக்களப்பு வீட்டில்.இன்றும் அவன் நினைவுகளுடன் மலையாள இசையை விரும்பிக் கேட்கும் ரசிகனாய் நான் .
வீட்டுக்கு வரும் போதெல்லாம் என்னைப் பாடச் சொல்லிக் கேட்பான்
"சுகு அந்த ஆதம் காக்கா பாடலைப் பாடு" என்பான் கேட்டுக் கேட்டு சலிக்காத பாடல் அது
"ஆதம் காக்கா ஆதம் காக்கா
அவரைக் கண்டா சொல்லிடுங்கோ
பூவரசம் கன்னி ஒன்று
பூ மலர்ந்து வாடுதெண்டு"
மறந்து போகுமா அவன் நினைவு

கிழக்கின் தொல்லியல், வரலாற்று ஆய்வாளர் தொல்லியல் நங்கை செல்வி தங்கேஸ்வரி கதிராமன்

அஞ்சலி

கிழக்கின் தொல்லியல்,
வரலாற்று ஆய்வாளர்
தொல்லியல் நங்கை
செல்வி தங்கேஸ்வரி கதிராமன்



பெண்ணியம் பேசாத பெண்ணியவாதி


கிழக்கு மண்ணுக்கு பெருமை சேர்த்த பெண்கள் வரிசையில் முன்னணி வகித்த பெரும் ஆளுமை அவர்.
வரலாறு,தொல்லியல் ,இலக்கியம் ,சமூகம் ,அரசியல் என எல்லாத் துறைகளிலும் சாதனை படைத்த ஒரு பெண்மணி என்றால் அதில் மிகை இருக்காது.
கன்னங்குடா எனும் கிராமத்தில் பிறந்து தன் ஆளுமையால் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் அறியப் பட்டவர்.துணிச்சல் மிகுந்த பெண் ஆளுமை அவர்
பரணவிதான போன்றோரின் தன்னிச்சையான தொல்லியல் முடிவுகளை கேள்விகளுக்கு உள்ளாக்கியவர்.வாதிடுவதில் வல்லவர்.
கலாசார உத்தியோகத்தராக இருந்த காலத்தில் மட்டக்களப்பு கூத்தை ஆவணப் படுத்துதலில் முன்னின்று உழைத்தவர்.
நான் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இருந்த காலை அவரோடு இணைந்து பணியாற்றிய பல சந்தர்ப்பங்கள் நினைவில் நீங்கா இடம் கொண்டுள்ளன.
அரசியலில் மட்டக்களப்பின் பாராளுமன்ற உறுப்பினராக தடம் பதித்த ஒரு சாதனைப் பெண் மணி
பல துறை சார்ந்து அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும் அவரது நிலைத்த புகழுக்கு தொல்லியல் ஆய்வுகள் துணை நிற்கின்றன.
திருகோணமலையில் அரசு செய்த குளக்கோட்டன், பற்றிய ஆய்வுகளும் மட்டக்களப்பு மாகோன் பற்றிய ஆய்வுகளும் தங்கேஸ்வரி அவர்களுக்கு புகழ் சேர்த்த நூல்கள் .மட்டக்களப்பு மீது மிகுந்த பற்ற்க் கொண்ட ஒரு ஆளுமையை இன்று இழந்திருக்கிறது.
அவரது நூல்கள்
1.விபுலானந்தர் தொல்லியல் (ஆய்வுநூல்) 1982
2.குளக்கோட்டன் தரிசனம் (குளக்கோட்டன் மன்னன் பற்றிய வரலாற்று ஆய்வுநூல்) 1985
3.மாகோன் வரலாறு (காலிங்க மாகோன் பற்றிய வரலாற்று ஆய்வுநூல்) 1995
4.மட்டக்களப்பு கலைவளம் (ஆய்வுநூல்) 2007
5.கிழக்கிலங்கை வரலாறுப் பாரம்பரியங்கள் 2007
6.கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு (கட்டுரைத் தொகுப்பு) 2007
பத்திரிகைகளில் பல கட்டுரைகளை எழுதியுள்ள வேளை பல ஆய்வு மகா நாடுகளில் மட்டக்களப்பின் தொன்மை கலாசாரம் பற்றி ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளமையும் குறிப்பிடத் தக்கது
அஞ்சலித்து நிற்கிறேன்
பால.சுகுமார்
மேனாள் புல முதன்மையர்
கலை கலாசார புலம்
கிழக்குப் பல்கலைக் கழகம்
இலங்கை

செல்லையா அண்ணாவியார்

செல்லையா அண்ணாவி

இன்று காலை தமிழகத்திலிருந்து வந்த செய்தி என்னுள் சில நினைவலைகளை எழுப்பி நின்றது.
தமிழ் நாடு இசைப் பல்கலைக் கழகம் தன் முதலாவது பட்டமளிப்பு விழாவில் புரசை கண்ணப்ப தம்பிரான் அவர்களின் மகன் புரசை சம்பந்தம் தம்பிரான் அவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி மதிப்பளித்திருக்கிறது.பாரம்பரிய கலைஞர்கள் அனைவரும் பெருமை கொள்ளும் ஒரு விடயம் நடந்தேறி இருக்கிறது.
இத்தகைய மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி மதிப்பளிக்கப் பட வேண்டியவர்கள் இன்று நம்மோடு இல்லை அவர்களில் முதன்மை பெறும் ஒரு மா கலைஞன் செல்லையா அண்ணாவியார்.
நேற்று நாடகப் பள்ளி குழுமத்தினர் செல்லையா அண்ணாவியாரை பேராசிரியர் மெளனகுரு அவர்கள் பேட்டி காணும் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தனர்.தன் தள்ளாத வயதிலும் கம்பீரமான குரலிலும் அச்சரம் பிசகாத மத்தள அடியிலும் நம்மை மயக்கி நின்றது அந்த நேர்முகம்.
உயர் கல்வி படிக்கும் காலத்தில் செல்லையா அண்ணாவியாரைப் பற்றி பேராசிரியர் வித்தியானந்தன் ,பேராசிரியர்.சிவத்தம்பி,பேராசிரியர்.சி.மெளனகுரு சொல்லக் கேட்ட நினைவுகளோடு அவர் பற்றி அறிய ஆவல் என்னுள் புதைந்து கிடந்தது.
1992ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளராக பணியேற்ற போது அந்த மா கலைஞனை முதல் முதல் சந்திக்க கிடைத்த வாய்ப்பும் அதன் பின் வந்தாறுமூலை வளாகத்தில் அடிக்கடி நிகழ்ந்த சந்திப்புகளும் அவருடனான நெருக்கம் அதிகமாகியது.
நுண்கலைத் துறை வாசலில் அமைக்கப் பட்டுள்ள இருக்கையில் அவரை காணலாம் நிரந்தர கூத்துக் களரி அமைக்கப் பட்ட போது அவர் அச்சா என சொல்லி பாராட்டியது இன்னும் அவர் குரலை என்னுள் தாங்கி நிற்கிறது.
களரியில் அவர் ஏறி நின்று அடித்த மத்தள ஒலி இன்னும் என் காதுகளை நிறைத்து நிற்கிறது..
அறுபதுகளில் கண்டடையப் பட்ட கூத்து மீளுருவாக்க பயணத்தில் பேராசிரியர் வித்தியானந்தனின் வலது கையாய் இருந்தவர் செல்லையா அண்ணாவியார்.கர்ணன் போர் முதல் வாலி வதை ,இராவணேசன் ,நொண்டி நாடகம் என எல்லாவற்றினதும் அடி நாதம் செல்லையா அண்ணாவியார் .இன்று மட்டக்களப்பு கூத்து இளையோர் மத்தியில் பிரபலம் ஆகின்ற சூழ் நிலையில் அவர் பங்களிப்பு முக்கியம் பெறுகிறது.
அறுபதுகளில் தொடங்கிய கூத்து மீளுருவாக்க முயற்சிகள் இன்று பல்கலைக் கழக செயல்பாட்டு கல்வியாக மறு ரூபம் கொண்டாலும் செல்லையா அண்ணாவியார் இவற்றில் ஒரு மூலைக் கல் என்பதை யாரும் மறுதலித்து விட முடியாது.
அவரிடம் புதைந்து கிடந்த கூத்துப் பிரதிகள் ஏராளம் தாளக் கட்டுகளும் கூத்தின் செம்மை மிகு அழகியலும் அவரின் தனித்துவம் .கூத்து நடிப்பின் பல் பரிமாணங்களையும் பாடி ஆடி வெளிப்படுத்திய ஆளுமை அவர்.
அறுபதுகளில் தொடங்கிய கூத்து மீளுருவாக்க தொடர் உலகப் பரப்பில் ஈழ நாட்டியமாய் ஈழத் தமிழர்களின் கலை அடையாளமாய் உருப் பெற்றுள்ளது.
அந்த மா கலைஞனுக்கு கிழக்குப் பல்கலைக் கழகம் மதிப்பளிக்க வேண்டும்
பால.சுகுமார்
மேனாள் முதன்மையர்
கலை கலாசாரப் புலம்
கிழக்குப் பல்கலைக் கழகம்

பத்தினிக்குப் பெரு விழா

பத்தினிக்குப் பெரு விழா

சம்புக்களி பத்தினி அம்மன் வேள்வி


''வைகாசித் திங்கள் வருவேன் என்று வரிசைக்கிசைந்து விடை கொடுத்தார்''
உரைசால் பத்தினி உரைத்துச் சென்றதன் வழி ஒவ்வொரு வைகாசி விசாகத்தை அடுத்து வரும் திங்கள் கிழமை எங்கள் சம்புக்களி பதி வருவதான ஐதீகத்தின் அடிப்படையில் வருடந்தோறும் நிகளும் பத்தினி அம்மன் வேள்வி.
பத்தினி பற்றி இரண்டாயிரம் வருசங்களுக்கு முன்னர் எழுந்த நற்றிணைப் பாடல்
''துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்,
இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்;
கண்ணுறு விழுமம் கை போல் உதவி,
நம் உறு துயரம் களையார் ஆயினும்,
இன்னாது அன்றே, அவர் இல் ஊரே; 5
எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,
ஏதிலாளன் கவலை கவற்ற,
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்
கேட்டோர் அனையர் ஆயினும், 10
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே''
ஒரு முலையறுத்த திருமாவுன்ணி என சிறப்பித்து நிற்கிறது.
"ஒரு மா பத்தினி வந்தாள்
உலகேழும் தழைத்திட வந்தாள் வந்தாள்
திரு மா மணி நங்கை வந்தாள்
தேசம் தழைத்திட வந்தாள் வந்தாள்"
ஈழத்தில் பத்தினி வழி பாடு இராண்டாயிரம் வருசம் பழமை வாய்ந்தது அந்த மரபில் சம்புக்களி பத்தினி அம்மன் வழிபாடும் முக்கியம் பெறுகிறது.
"இவளோ, கொங்கச் செல்வி; குடமலை ஆட்டி;
தென் தமிழ்ப் பாவை; செய்த தவக் கொழுந்து
ஒரு மா மணி’ ஆய், உலகிற்கு ஓங்கிய
திரு மா மணி’"
என சிலப்பதிகாரம் உரைக்க
அந்த மரபில் திரு மா மணியாய் போற்றப் படும் பத்தினி இதைத்தான்
சிலப்பதிகாரம்
"உரைசால் பத்தினி" என்றும் விழித்து சொல்கிறது
பத்தினி என்று பலரும் போற்ற
பத்தினிக்கு பெரு விழா
சேனையூர் வர்ணகுலப் பிள்ளையார் கோயிலிலிருந்து மடைப் பெட்டி எடுத்து ஊர்வலமாக சென்று கடற்கரைச்சேனை சம்புக்களி பத்தினி அம்மன் ஆலயத்தை அடையும் இரவிரவாக சடங்குகள் பத்ததி முறையில் தொடங்கி
பத்தினி மதுரையை எரித்து ஈழம் வந்த போது தன்னைக் குழிர்விக்க அரிந்த முலையில் தயிரும் வெண்ணையும் தடவி ஆற்றுப் படுத்த சொன்னதாக தொடரும் கதையோடு தானே உப்பு நீர் எடுத்து வரச் சொல்லி விழக்கெரித்ததாகவும் நம்பும் மரபில் சம்புக்களி பத்தினி வேள்வியில் இன்றும் உப்பு நீர் எடுத்து வந்து விழக்கெரிக்கும் சடங்கு இங்கு முக்கியம் பெறுகிறது.
படையலில் முக்கியம் பெறும் தையிரும் வெண்ணையும் பூசனைப் பொருளாய் அமைவதும் இதன் சிறப்புகளில் ஒன்று.
குளிர்த்தி பாடுதலும் குளிர்த்தி ஆடுதலும் என இப் பெரு வேள்வி நிறைவுறும்
"மன்று தளைக்க மனுவெல்லாம் ஈடேற ''
மக்கள் வாழ்வோடு ஒன்று கலந்த பத்தினிப் பெரு விழா

கீழடியிலிருந்து சேனையூர் வரை உறை கிணறும் கொட்டுக் கிணறும்

கீழடியிலிருந்து சேனையூர் வரை


உறை கிணறும் கொட்டுக் கிணறும்

கீழடி இன்று தமிழ் கூறும் நல்லுலகெங்கும் பேசு பொருளாய் மாறியுள்ளது கீழடி எப்படி தொன்மைத் தமிழின் அடையாளங்களை சொல்லி நிற்கிறதோ அது போலவே ஈழமும் தமிழர் வாழ்வியலின் தொன்மை அடையாளங்களை கொண்டுள்ளது .
கீழடியில் உறை கிணறு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது உறை கிணறு என்பது மணற்பாங்கான இடங்களில் கிணறு தோண்டும் போது மணல் சரியாமல் கிணற்றின் ஆழம் வரை ஊடுருவி சுட்ட மண் வளையங்களால் கட்டமைக்கப் படுவது .இது மழை காலங்களில் நீர்ச் சேகரிப்பாகவும் இருக்கலாம் .
கீழடிச் சமூகம் மிக நாகரிகம் அடைந்த சம்ழுகம் என்பதை இந்த உறை கிணறுகள் அறிவுறுத்தி நிற்கின்றன.கிணற்று வளையங்கள் மிகவும் நேர்த்தியான சுடு மண் வளையங்களாய் காட்சியளிக்கின்றன கீழடி வீடியோ காட்சிகளும் ஒளிப் படங்களும் தெளிவுறுத்தும் நம் நாகரிகத்தின் செழுமையின் நீட்சி இது.
என் சிறு வயதில் எங்கள் ஊரில் கொட்டுக் கிணறு அமைக்கும் முறைமையை கண்டிருக்கிறேன் கிணறு வெட்டும் போது கொட்டிறக்குதல் என்பார்கள்.மரத்தினால் செய்யப் பட்ட வட்டமான கொட்டுகள் கீழே இறக்கப் பட்டு நீரின் ஊற்றைக் கட்டுப் படுத்தவும் கிணற்றுச் சுவர் சரியாமல் இருக்கவும் இது பயன் படும் .
தம்பலகாமத்திலும் இந்த வகை கொட்டுக் கிணறுகளை கண்டிருக்கிறேன்.
மட்டக்களப்பிலும் இந்த கொட்டுக் கிணறுகள் முன்னர் அமைக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது அண்மையில் மட்டக்களப்பில் மிகப் பழமையான சுடு மண் கொட்டுக் கிணறு கண்டு பிடிக்கப் பட்டமையும் இதனோடு பொருத்திப் பார்க்க முடியும்
தமிழர்கள் எங்கிருந்தாலும் ஒரு தொடர் பண்பாட்டு கலாசார நீட்சியை பெற்றுள்ளார்கள்.
நம் நதிக் கரைகளில் தொல்லியல் ஆய்வுகள் முன்னெடுக்கப் படும் போது குறிப்பாக வெருகல் கழி முகம் திருக்கரசை மாவலி ஆற்றுப் படுக்கை என்பன வரலாற்றின் தொட்டில்கள்

Wednesday, 4 July 2018

சேனையூர் ஓர் அறிமுகம்

சேனையூர் ஓர் அறிமுகம்


இயற்றை தன் அருட்கொடைகளினால் அள்ளித் தெளித்திருக்கும் வண்ணக் கோலம் எங்கள் சேனையூர். முல்லை, மருதம், நெய்தலொடு குறிஞ்சியின் காடுகளுடன் விரியும் அழகு நிலம் மாவலியாறும் கடலும் ஒருசேர சங்கமித்து சிற்றாறாய் பெருகி எம்மூரை வட்டமிட்டு களியோடைகளாய் காட்சிப்படும் எங்கள் ஊர் கரையோரம் எங்கும் கண்ணா மரங்களின் கூடல் கண்ணாவும் களியோடையும் எங்கள் மண்ணின் அழகின் உச்சங்கள்.
Image may contain: tree, plant, outdoor, nature and water
சேனையூர் சிற்றாறு களி ஓடைகள் வழியே பயணித்து கமுகும் தென்னையும் கவினுறு சோலையாய் குடைவிரிக்க ஊத்தடிக் கரச்சையில் ஊற்றெடுத்து ஓடையாய் உருப்பெற்று சம்புக்குளத்தோடு இணையும் அழகு இணையிலா எழில் கூட்டும்.
ஆற்றோரம் எங்கும் அழகிய குடியிருப்புக்கள், குடியிருப்புக்கள் தோறும் சிறிய சிறிய துறைகள். துறைகளையண்டி சேம்பும் வெருகும் விளைந்து நிற்கும் புன்னைமரங்கள் பூப்பூத்து சொரியும். பறவைகள் தங்கள்
கும்பம் - பாலசுகுமார் 9
சரணாலயமாய் கூடுகட்டி குஞ்சுகளுடன் வாழும். மந்தியொடு சிறுவன் குரங்குகள் மகிழ்ந்து விளையாடும். பின்னர் சீறிக்கொண்டு சினந்து கீச்சிடும். வில்லாய் வளைந்த கண்ணா விழுதுகள் கால்களாய் நீண்டு காடாய் பெருகும். யுத்தகாலத்தில் எத்தனை உயிர்கள் இங்கு தப்பிப் பிழைத்தன. தஞ்சமளித்த தனிப்பெரும் சோலை.
வளவுகள் ஒவ்வொன்றும் வளத்தின் சாட்சி. தென்னையும் மாவும் தேனுறு பலாவும், புன்னையும் வாழையும் வானுறு கமுகும் என்னமாய் இருக்கும். எவ்வளவு அழகு வாயில்கள் தோறும் பவளமல்லியும், நந்தியவட்டையும் செவ்வரத்தையும், வாடாமல்லியும், அடுக்குமல்லியும், நித்திய கல்யாணியும் நித்திலமாய் பாய்விரிக்கும். சேனையூர் எங்கும் அழகின் ஆட்சி.
சேனையூர் ஈழத்தமிழர்களின் பூர்வீக நிலங்களில் ஒன்று. கிறிஸ்துவுக்கு முற்பட்ட கால வரலாற்று ஆதாரங்களுடன் இன்றுவரை தொடர்கின்ற வரலாற்று பாரம்பரியம் மிக்க பழந்தமிழ் கிராமம்.
ஒரு பிரதேசத்தின் வரலாறு என்பது வெறுமனே எழுத்தாதாரங்களுடன் மட்டுப்படுத்தப்படுவதல்ல. வரலாறு பற்றிய நவீன ஆய்வுகள் மக்கள் வாழ்வியலையும் பண்பாட்டையும் தொண்மை வரைவியல்களையும் கணக்கில் எடுத்துக்கொள்வதாயுள்ளவை. பழ மரபுக் கதைகள், நம்பிக்கைள், பாடல்கள், பழமொழிகள் என்பனவற்றின் கூட்டாக வரலாறு இன்று பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆபிரிக்க மக்களின் வரலாறு அண்மைக்காலங்களில் இந்த அணுகுமுறையிலேயே வரைவு செய்யப்படுகின்றன. சேனையூர் மக்களும் பல்லாயிர வருச வரலாற்றுக்கு சொந்தக்காரர்களே. இப்பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்கள், தமிழர் மரபைப் பேணுகின்ற நடுகற்கள், கிறிஸ்து சகாப்தத்தோடு தொடர்புடைய புராதன குளங்கள், கறுப்பு - சிவப்பு மட்பாண்டங்கள், குன்றுகளை அண்டிக் காணப்படுகின்ற மனித நாகரிகத்தின் எச்சங்கள் என்பன சேனையூரின் பழைமையை பறைசாற்றி நிற்கின்றன.
உலக நாகரிகங்கள் எல்லாமே நதிக்கரைகளிலும் ஆற்றோரங்களிலும் களிமுகங்களிலும் முகாமிட்டு வளர்ந்துள்ளன. சேனையூரின் நாகரிகமும்
ஊற்றடியில் ஊற்றிட்டு களியோடையில் காலூன்றிய நாகரிகமாகவே வளர்ந்துள்ளது. மாவலியாறும், வங்காள விரிகுடா கடலும் சங்கமிக்கும் ஆறு சேனையூருக்கு வளம் சேர்த்து வரலாற்;றை உறுதிப்படுத்தி நிற்கிறது.
வரலாறு என்பது, புனைவு அல்ல. அது மக்கள் வாழ்வை அடையாளங்களிலும் பண்பாட்டிலும் வெளிப்படுத்த வேண்டும். சாண்டில்யன் கதைகள் எல்லாம் வரலாறு அல்ல. அவை வரலாற்று புனைவுகள். கற்பனைகள். கற்பனைகள் ஒரு போதும் வரலாறாகிவிட முடியாது. அதுபோல் இட்டுக்கட்டுவதும் வரலாறாகிவிட முடியாது.
சேனையூர் வரலாறு எல்லாளன் வரலாற்றோடு தொடர்புபட்டு இருப்பதை புலவர் கா.வீரசிங்கம் தன் பாடலில் இப்படிக் கூறுவார்.
“பரிவாரமுடனே எல்லாளன் வந்து இறங்கினான் அன்று இலங்கை துறையில்
படைகளை நகர்த்தி வருகிற போது இடையில் கண்டான் எம்மூர்தன்னை
மருத மரங்களின் விரியுடை சேனையை பெரு மன்னன் கண்டு தாகம் தணிய தண்ணீர் அருந்தி களைப்பது நீங்கி பூத்துக்குலுங்கி பூமணம் வீசி மாங்குயில் பாடி மகிழ்ந்திடும் ஊரில்
ஆற்றம் கரையில் அழகிய மருதநிழலில் களைத்து கிளைத்து கருநடை நடந்து வந்த தன் சேனை குலைந்து போகாமல் கொண்டுவந்து மருத நிழலில் வைத்தான் அன்று
மருத நிழலில் சேனையை வைத்தால் மருதடிச்சேனை எனும் பெயராயிற்று
மருதடிச்சேனை என வழங்கிய அப்பெயர் குன்றிக் குறுகி சேனையூராகி சென்றது பலகாலம் நின்று நிலைத்தது அந்தப் பெயரே”
தொன் மங்களினூ டு இங்கு வரலாறு பயணிக்கிறது.
சேனையூர் பற்றிக் கவிஞர் நாகேஸ்வரன் இப்படிக் கூறுவார் “சேனையூர்
தௌ;ளு தமிழ் சொல் உச்சரிக்கும் போதே உவகை உச்சிவரை முட்டும் முன்னோர்கள்
எம் முன்னோர்க்கும் முன்னோர்கள்
வாழ்ந்து வந்த எங்கள் வளம் கொழிக்கும் கிராமம்
ஏழைகட்கு வாழ்வளிக்கும் வளத்தை வாரி தான் சுமந்து உப்பு நீர் கடலிருந்து உட்புகுந்து வளைந்து நெளிந்து
முப்புறமும் சூழ்ந்து எப்பொழுதும் அரணாக இயற்கை தந்த கொடை
பழந்தமிழ் மணம் வீச பண்பாடு சுமந்து
பண்போடு கலாசார பெருமைகாத்து முத்தமிழ் கலை வளர்த்து புத்தெழுச்சியோடு
உத்வேகம் கொண்ட உயிர்த்துடிப்புள்ள கிராமம்”
சேனையூரின் வரலாற்றையும் பண் பாட்டையும் பறைசாற்றி நிற்கிறது இக்கவிதை.
சேனையூர் வரலாறு குளக்கோட்டன் வரலாறோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. கோணேசர் கல்வெட்டு சொல்கின்ற மீகாமப் பரம்பரையினர் சேனையூர் மக்களே வெடியரசன் போர் சொல்கின்ற மீகாப் பரம்பரை கண்ணகி குளிர்த்தியில் சொல்லப்படுகின்ற
“மீகாமனுக்கு மிக்க வரம் கொடுத்து நாகமணி வாங்க நயந்தாய் அருள்தருவாய்”
வரிகள் மீகாமப் பரம்பரையினரின் இருப்பையும் வரலாற்றையும் உறுதிப்படுத்துகின்றன.
சோழப் பேரரசு இலங்கையில் ஆதிக்கம் செலுத்திய பொழுது, அவர்கள் செல்வாக்குக்கு உட்பட்டதாயிருந்தமையை பல சான்றுகள் நிரூபிக்கின்றன. வீரபத்திரன் கோயிலில் இன்று காணப்படுகின்ற கல் தூண்களோடு பொலநறுவை சிவாலயம் போன்ற அமைப்பு இருந்தது. அவை அகறப்பட்டு இன்று தூண்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. 1979ம் ஆண்டு இதனை ஆய்வுசெய்த பேராசிரியர் இந்திரபால இது சோழர்கால சிவன் கோயில் என்பதை உறுதிப்படுத்திச் சென்றார்.
தொடர்ந்து, போர்த்துக்கீசர் வருகை ஒல்லாந்தர் வருகை என்பனவற்றோடு சேனையூர் வரலாறு தொடர்புபடுகிறது. இவையெல்லாம் தனியனாகப் பார்க்க வேண்டிய விசயங்கள்.
ஒல்லாந்தர் இலங்கையில் ஆட்சிசெய்த பொழுது அந்தந்தப் பிரதேசத்;தில் இருந்த நிர்வாக முறைகளை உள்வாங்கிக்கொண்டு ஆட்சி செய்தனர். கோணேசர் கல்வெட்டு கொட்டியாரத்திலிருந்த ஏழூர் அடப்பன் பற்றிப் பேசுகிறது. அந்த ஏழூர்களில் சேனையூரும் ஒன்றாக இருந்திருக்கிறது. சேனையூரில் கடைசிவரை அடப்பன் முறை பயன்படுத்தப்பட்டிருந்தது. கடைசி அடப்பனாக திரு.குமாரவேலி அவர்கள் இருந்தார்கள். 1970களில் அவர் இறக்கும்வரை அடப்பன் என்றே அழைக்கப்பட்டார். உதாரணமாக விளக்கீடு நடைபெறும் நாளில் சம்பூர் பத்திரகாளி கோயிலிலிருந்து அம்மன் முகம் வீடுவீடாக காணிக்கைக்காக எடுத்துவரப்படும் போது பறை மேளத்தோடு இணைந்ததாக அந்த வரவு இருக்கும். முதலில் அடம்பனார் வீட்டுக்குச் சென்று பறையடித்துதான் காணிக்கையை தொடங்குவார்கள். இது ஒரு மரபின் தொடர்ச்சி.
பிரித்தானியர் இலங்கை வந்த பொழுது இலங்கையெங்கும் பாடசாலைகளை அமைத்தனர். மெதடிஸ்த மிசனரிமார் இந்த பணியினைச் செய்தனர். 19ம் நூற்றாண்டில் இப்பாடசாலைகள் அமைக்கப்பட்டன. அப்படி அமைக்கப்பட்ட பாடசாலையே சேனையூர் மெதடிஸ்த மிசன் பாடசாலை. (இன்றைய கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயம்)
பிரித்தானியர் காலத்திலேயே பொலிஸ் விதான் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கொட்டியாரப் பிரதேசத்தின் பழமையான புராதன கிராமங்களிலேயே இம்முறை பயன்பாட்டுக்கு வந்தது. அந்தவகையில் பொலிஸ் விதான் மருதடிச்சேனை என்ற முறைமை 1960களில் கிராமசேவையாளர் முறை அறிமுகப்படுத்தப்படும் வரை அமுலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. கடைசி பொலிஸ் விதானையாராக இருந்த திருவாளர சிவபாக்கியம் அவர்கள் வீட்டில் “பொலிஸ்விதான் மருதடிச்சேனை” என்ற அறிவிப்பு பலகையை நான் பார்த்திருக்கிறேன்.
இலங்கையின் வரலாற்றுப் பதிவுகளில் செப்பேடுகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. சேனையூர் வர்ணகுலப்பிள்ளையார் கோயில் வரலாற்றுப் பதிவை பொன்னாச்சியின் செப்பேடு உணர்த்தி நிற்கிறது. யுத்த சூழ்நிலையில் செப்பேடு காணாமல் போனாலும், இச்செப்பேடு பற்றி திருகோணமலை கோயில்களின் திருத்தல வரலாறு என்ற நூலில் பண்டிதர் வடிவேல் அவர்கள் இதனை சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
சேனையூரின் வரலாற்றை மேலும் உறுதிப்படுத்தும் பண்பாட்டியல் அடையாளமாக சேனையூர் நாகதம்பிரான் ஆலயம், சேனையூர் வீரபத்திரன் ஆலயம், சேனையூர் சம்புக்களி பத்தினி அம்மன் ஊற்றடிப் பிள்ளையாரும் அதனோடிணைந்த புவனேஸ்வரி அம்மனும் வரலாற்றின் வழிவருவனவே.
சேனையூரில் சிறப்பாக காணப்பட்ட வதனமார் வழிபாடு ஒரு முக்கியமான பண்பாட்டடையாளம். அதனோடு வீடுதோறும் கொடுக்கப்படும் சமையல் வேள்விகள் என்பனவும் நம் கலாசார மரபுகளே.
வயல் வாழ்வோடு, இணைந்து வரும் வன்னித்தெய்வ வழிபாடு, குளக்கட்டு பத்தினி வைரவர் பொங்கல் , குளத்துமேட்டு பொங்கல் என்பனவெல்லாம் ஒரு புராதன சமூகத்தின் சமூக குறியீடுகளாய் இன்றுவரை விளங்கிச்சென்றன.
இங்கு பாரம்பரியமாய் தொடர்கின்ற வைத்திய முறைகள் பல பரம்பரையினர் இன்றுவரை இத்துறையில் தொடருகின்ற பயணம் நம் தொன்மையின் அடையாளங்களே.
பொங்கல்
, தீபாவளி எனவரும் பண்டிகைகளும் பண்டிகைகளினுடு சிறப்புப்பெறும் விளையாட்டுக்கள், விழாக்கள், கும்மி, கோலாட்டம், வசந்தன் என களி நடமிடும் கலைகள் என நீளும் நம் கலைமரபுகள்.
சேனையூர் கிராம முன்னேற்றச் சங்கம், சேனையூர் சிறிகணேசா சனசமூக நிலையம், சேனையூர் இந்து இளைஞர் மன்றம், சேனையூர் கூட்டுறவுச் சங்கம், சேனையூர் இலக்கிய வட்டம் என்பன சேனையூரின் நவீன வரலாற்றின் சுவடுகள். இவை புதிய வரலாறாய் இன்றுவரை தொடரும் பயணம். புதிய சேதிகளை சொல்லி நிற்கின்றன.
சேனையூர் மத்திய கல்லூரி 1957ல் ஆரம்பிக்கப்படுகிறது. சேனையூரின் கல்வி வரலாற்றில் புதிய புரட்சி கொட்டியாரப் பிரதேசம், கடந்து திருகோணமலை மாவட்டம் முழுவதுமிருந்து மாணவர்கள் இங்கு வந்து கல்வி கற்றனர். அகில இலங்கை ரீதியில் பல சாதனைகள் நிகழ்த்திய கல்லூரி புதிய வரலாறாய் நம்முன்

Tuesday, 3 July 2018

எங்கள் மூத்த அண்ணாவி ஆரையூர் மு.க எனப்படும் கலாபூசணம்.மு.கணபதிப் பிள்ளை

Image may contain: one or more people and people standingஇன்று 30.06.2018 சனிக்கிழமை ஆரையம்பதியில் மூத்த கலைஞர் மூனாகானாவுக்கு மதிப்பளிப்பு நிகழ்வு நடை பெறுகிறது வாழும் போதே வாழ்த்தி கொண்டாடுவோம் நம் மண்ணின் மா கலைஞர்களை

எங்கள் மூத்த அண்ணாவி ஆரையூர் மு.க எனப்படும் கலாபூசணம்.மு.கணபதிப் பிள்ளை

அண்ணாவியார்,கவிஞர்,மரபு வழிப்பட்ட ஆராய்ச்சி அறிஞர் என பன்முகத் தன்மை கொண்ட படைப்பாளி.ஆரையம்பதியின் அதன் வரலாற்றையும் கலாசார பண்பாட்டு விழுமியங்களையும் உலகறியச் செய்வதில் பெரும் பங்காற்றி ஆரையம்பதிக்கு பெருமை சேர்த்த முதல் தலை கலை மகன்.
கூத்து மீளுருவாக்கம் என்ற கோட்பாட்டு தளம் அதற்கான உரிமை கோரல் வாதப் பிரதி வாதங்கள் நீண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் கலைஞர் சத்தமின்றி கூத்தில் புதிய மாற்றங்களை இன்றைய கூத்து பிதாமகர்கள் பிறக்காத அறுபதுகளில் கலைஞர் மு.க கூத்துக்களில் அதன் கதை கூறலில் புதிய உள்ளடக்கப் புனைவை சமுகப் பிரச்சினைகளை மையமிட்டு நிகழ்த்திக் காட்டியவர்.அந்த கூத்துக்கள் நவீன கூத்துக்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றன.கூத்து மீளுருவாக்க முன்னோடிகளில் ஒருவர் நம் மு.க.
பல விருதுகள் அவரை தேடி வந்தடைந்தன இலங்கை அரசின் விருது வடக்கு கிழக்கு மாகாண அரச விருது,கிழக்கு மாகாண இலக்கிய விருது என பல விருதுகளைப் பெற்றாலும் கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத் துறை தலைக்கோல் விருது கொடுத்து கிழக்கின் தலை கலை மகனாக மதிப்பளித்தமை இங்கு குறிப்பிடத் தக்கது.
அவருடனான பரீட்சயம் நான் கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளராக கலைப் பீடாதிபதியாக கடமையர்றிய காலங்களில் அவரோடு உரையாட அவர் அனுபவங்களை என்னுள் பகிர்ந்து கொள்ள கிடைத்த அந்த நாட்கள் எனக்கு கிடைத்த ஒரு பேறாகவே கருதுகிறேன்.
மட்டக்களப்பின் பண்பாடு வரலாறு மரபு வழிக் கலைகள் என்பவற்றில் ஒரு முதிர்ந்த அறிஞர் ஆரையம்பதி சமூகம் அவரால் பெருமையுறுகிறது.
Image may contain: 1 person, smiling
கிழக்கு மாகாணம் பற்றிய அறிதலில் ஒரு பல்கலைக் கழகமாக திகழும் மு.க அவர்களுக்கு கிழக்குப் பல்கலைக் கழகம் இலக்கிய கலாநிதி பட்டம் அளித்து தன்னை கெளரவப் படுத்திக் கொள்ள முடியும்.
இந்த மகா கலைஞனை வாழும் போதே வாழ்த்தி மகிழ்வோம்
இவன்
பால.சுகுமார்
மேனாள் முதன்மையர்
கலை கலாசாரப் புலம்
கிழக்குப் பல்கலைக் கழகம்