Wednesday, 15 September 2010

உணர்வலைகளின் தூரிகைத் தீட்டல்

உணர்வலைகளின் தூரிகைத் தீட்டல்
அன்பாதவன்

வாழ்க்கை சில நேரங்களில் மிகக் கொடுமையானது. வாழ்வின் நியதிகளோ மிகக் கடுமையானது. தம் சொந்த மண்ணை உறவுகளை பழகியப் பிரதேசங்களை விட்டு விலகி புலம்பெயர்ந்து வாடும் வாழ்க்கை துயரங்களிலும் சோகமானது.

ஈழ மக்களோ சாபத்தையே வரமாய் வாங்கி வந்தவர்கள். உறவுகளை, ஊரை, எல்லாவற்றையும் உதறி, உயிர்வாழ்தல் எனும் நோக்கத்தோடு இதயத்தை ஈழத்திலும் உடலை மட்டுமே உலக நாடுகளில் ஏதாவதொன்றிலுமாய் வாழும் வாழ்வு வாழ்வாகாது.

இத்தகைய சூழலிலும் உயிர்த்துடிப்புள்ள இலக்கியங்களை உருவாக்குவதில், ஈழத் தமிழ் படைப்பாளிகளே முன் நிற்பதை மறுக்க வியலாது எவராலும்.

ஆழியாள் அப்படி ஒரு படைப்பாளி! வேற்று வெளியில் வாழ்ந்தாலும் (!) தனது பூர்வீகம் குறித்த பதிவுகளையும், சமகால வாழ்வியல் சூழலையும் கவிதைகளாய்ப் படைப்பதில் சமர்த்தர் என்பதை நிரூபிப்பதாய் துவிதம் கவிதைத் தொகுதி துவிதம் என்ற சொல்லுக்கு இரண்டு, இருமை எனப் பொருள் தருகிறது அகராதி. தனது இரண்டாவது தொகுப்பென்பதால் துவிதம் எனப் பெயரிட்டிருப்பாரோ ஆழியாள்!

“துவிதம் தொகுப்பில் இடம் பெற்ற கவிதைகளில் பெரும்பாலானவை ஆஸ்திரேலியா, வாழ்புலத்தில் உருவானவை. இருப்புக்கும் வாழ்வுக்கும் இடையில் எதிர்வினை புரியும் எழுத்து தன்னளவில் தனக்கேயுரிய தர்க்க முறை அறிதல் முறைகள் மொழியைக் கண்டமையும் அனுபவங்களை அணுகும் கோணமும் தனித்துவமாக வெளிப்படும். இந்த நீதியில் ஆழியாள் கவிதைகள் புதியத் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன” என முன்னுரைக்கும் மது சூதனனின் வார்த்தைக் கவனங்களோடு துவிதம் தொகுதிக்குள் நுழைபவருக்கு காத்திருக்கின்றன புதிய கவியனுபவங்கள்!

‘கலங்கரை விளக்கத்து / இரவுக் காவலாளியாகவும்
ஆறடிக் குழியுள் / மௌனம் புடைசூழ இறக்கப்பட்ட
பிணமொன்றைப் போலவும் / தனித்தே
மிகத் தனித்தே இருக்கின்றேன்’

என தன்னிலை விளக்கம் அளிக்கும் கவிஞரின் மனநிலையை வாசகன் எளிதாய்ப் புரிந்து கொள்ளவியலும்! எத்தனை பெரிய தேசத்திலும் நம்மைப் பகிர ஆளில்லாவிடில் தனிமை! கொடுமையான தனிமை!

‘அந்த யாரோ யாராயிருக்கும்
ஆணா பெண்ணா அடுத்தபாலா
யாரோவை யார்
வேலை ஏவியது
யாரோவுக்கு சம்பளம் கொடுப்பது யார்?
அது எவ்வளவு? போதுமா?’

அந்த யாரோ தான் இத்தகைய பிரசனைகளுக்கும் காரணம்! இணைந்து வாழ விரும்பும் ஈழ சிங்கள இன மக்களை மொழியின் பெயரால் பிரிப்பது யாரோ! ஷெல் வீச்சுகளினால் புகலிடம் தேடி ஓட வைத்தது யாரோ!

சமாதானத்தின் காலத்தில் பூமியைத் தோண்ட எலும்புகளே கிடைக்கும் தேசத்தில் கவிதை அழகியலும் மரணம் சார்ந்ததாகவே இருக்கும்!

‘கடை இரு
வெறும் நூற்றாண்டுகளின் மேல்
அரிதார நிலம் பூசி
நட்சத்திரங்கள் ஓர் ஆறை
அள்ளி அதில் தெளித்து
உச்சிக் கம்பத்தில் பறக்க விட்ட
வெள்ளை விளை நீலம் இது’ என தான் வாழும் கங்காரு தேசத்தை காட்சிப்படுத்தினாலும் ஆழியாளுக்கு தான் யார் .... தன் நிலை என்ன என்பது புரிந்தே இருப்பதை பதிவு செய்யும் வரிகளிவை!

‘பிறந்த வீட்டில் கறுப்பி
அண்டை நாட்டில்
சிலோன் அகதிப் பொண்ணு
இலங்கை மத்தியில்
தெமள
வடக்கில் கிழக்கச்சி
மீன் பாடும் கிழக்கில்
நானோர் மலைக்காரி

மலையில்
மூதூர்க் காரியாக்கும்

ஆதிக்குடிகளிடம்
திருடப்பட்ட தீவாயிருக்கும்
என் புகுந்த நாட்டில்
அப்பாடா!
பழையபடி நான் கறுப்பியானேன்! ’

புலம்பெயர்ந்து புகுந்த தேசத்தின் அரசியல் விளையாட்டுகளையும் விமர்சனம் செய்யும் போது ஆழியாள் உள்ளிருக்கும் கவிஞர் மிக யதார்த்தமாக வெளிப்படுவது சிறப்பு.

உளைச்சலில் தவிக்கும் மனநிலையிலும் ‘அந்தி’யை ‘முன்னிரவுக் குயில் கிட்ட முட்டை பொறிகிறது.’ என அழகியலோடு வெளிப்படுதல் கவியுணர்வு கொண்டவர்களுக்கே சாத்தியம்.

தானறிந்த, தானுணர்ந்தவற்றை கவிதைகளாக செதுக்கியிருக்கும் ஆழியாளின் சிறப்பு சொற்சிக்கனம்! மிகச் செறிவாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளைக் கொண்டு கவிதை நெய்திருக்கும் ஆழியாள் அந்த முயற்சியில் வெற்றி பெற்றிருப்பதையும் பதிவு செய்யத் தான் வேண்டும்.

புலம் பெயர் ‘வாழ்வு என்பது சுயம் குறுக்கி வாழ்வது! வாழ்வது’ என்று சொல்வது கூட நேர்மையாகாது! இருப்பது(ஒதண்t ஆஞுடிணஞ்) அத்தகைய இருப்பில் உணர்வலைகளின் வேகத்தோடு யதார்த்தம் மோதும் போது ‘காமம்’ போன்ற கவிதைகள் பிறக்கத்தான் செய்யும்.

‘உயரும்
மயைடிவார மண் கும்பிகளுள்
திணறி அடக்கமுறும்
மனித மூச்சுகளும்
பள்ளங்களின் ஆழப்புதைவில்
அலறி ஓயும் குரல்களின்
இறுதி விக்கல்கலும் உண்டு இங்கு
அவருக்கு செவிகள் உண்டு
இருளுக்கு கூர் விழிகளும் உண்டு
பீறிக் கசியும் ரத்தமாய் மேலும்
உண்டு இன்னொன்று
அவனுக்கு .’

உள் நாட்டு யுத்தம், ஈழப் படைப்பாளிகளின் படைப்பாக்கத் திறனை திசைமாற்றி விட்டதை பல்வேறு புலம் பெயர் நூல்கள் பறைசாற்றுகின்றன.

‘சுருங்கிய வெறுங்கைகளே
வெம்பி அல்லாடிச் சொல்லப்
போதுமானதாய் இருந்தன
வேண்டாம் போர் என்று,’

துப்பாக்கி முனையில் அதிகாரம் பிறக்கும்! கவிதை பிறக்குமா? அன்றி துவக்குகள் தான் கவிதை ரசிக்குமா? விமான நிலைய சந்திப்பில், உறவுகளைக் கண்டு கவிதை எழுதி ஆற்றுப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்! வேறென்ன இயலுமிப்போது ...?

துவிதம் (கவிதைகள்),
ஆழியாள்.

ஆழியாள்:

காலப் பொழுதுகள் பலவற்றில்
வீதி வேலி ஓரங்களில்
நாற்சந்தி சந்தைகளில்
பிரயாணங்கள்; பலவற்றில் கண்டிருக்கிறேன்.

நாய் கரடி ஓநாய்
கழுகு பூனை எருதாய்ப்
பல வடிவங்கள் அதற்குண்டு.

தந்திக் கம்பத் தருகே
கால் தூக்கியபடிக்கு
என்னை உற்றுக் கிடக்கும்
அம் மிருகம் துயின்று
நாட்கள் பலவாகியிருக்கும்.

அதன் கண்கள்
நான் அறியாததோர்
மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று
அவற்றின் பாலைத் தாகம்
அறியாப் பாஷையை
எனக்குள் உணர்த்திற்று.

அழகி மன்னம்பேரிக்கும்;
அவள் கோணேஸ்வரிக்கும்;
புரிந்த வன்மொழியாகத்தான்
இது இருக்கும் என
அவதியாய் எட்டிக் கடந்து போனேன்.

அன்றைய அலைச்சலும்
மனக்குமைச்சலும் கூடிய
தூக்கத்தின் இடையில் - நானும்
அவள்களுக்குப் புரிந்த
அதே அதே ஆழத்திணிக்கப்பட்ட
பாஷையை புரிந்து கொண்டேன்.

அருகே கணவன்
மூச்சு ஆறிக்கிடக்கிறான்

ஆழியாள்:

ஆழியாள்
பெயர்: மதுபாஷினி
புனைபெயர்: ஆழியாள்
பிறப்பிடம்: திருகோணமலை
வசிப்பிடம்: அவுஸ்திரேலியா
தொடர்புகளுக்கு:
முகவரி: மதுபாஷினி
20 Dulverton Street,  Amaroo, Canberra ACT2914, Australia
Tel: 61262418183
E.mail: aazhiyaal@hotmail.com
படைப்பாற்றல்: கவிதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம்

படைப்புகள்:

கவிதைத் தொகுப்புகள்:

    * உரத்துப் பேசு - 2000
    * துவிதம் - 2006

சிறுகதைத் தொகுப்பு:

    * கொட்டியாரக் கதைகள்

இவர்பற்றி:

    * இவர் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஆங்கில விரிவுரையாளராக ஐந்து வருடங்கள் பணிபுரிந்தவர். அவுஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுமாணிப் பட்டப் படிப்பைப் பெற்றுள்ளார். இவரது கவிதைகள் மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மூன்றாவது மனிதன், கணையாழி, சரிநிகர், ஆறாம்திணை, தோழி, உயிர்நிழல், அம்மா, பெண் ஆகிய இலக்கியச் சஞ்சிகைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவருகின்றன.

Tuesday, 14 September 2010

திருக்கரைசைப்புராணம்

கரைசைப்புலவர்


இவர் திருக்கரைசைப்புராணம் என்னும் நூலின் ஆசிரியர். திருக்கோணமலைக்கு அருகிலுள்ள மகாவலி கங்கைக் கரையிலே 'கரைசை *என வழங்கும் பதியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் புகழை விரித்துக் கூறுவது இந்நூல். கரைசையம்பதியானது 'அகத்தியத் தாபனம்' எனவும் அழைக்கப்படும்.

நூலாசிரியரின் இயற்பெயர் தெரியவில்லை. நூற்பாயிரத்துள்ளே குருவணக்கம், புராண வரலாறு என்னும் பகுதிகளுள் வரும் 'ஈசானச்சிவன் மலர்த்தாள் மறவாது', 'கொற்றங்குடிவாழும் பிரான் சரணத் துறுதிகொண்டே' முதலிய குறிப்புக்களினின்றும் இந்நூலாசிரியர் உமாபதி சிவாசாரியரின் சீடர்களுள் ஒருவர் என்பாருளர் எனக் கூறுவர் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர். "சிலர், எமாபதி சிவாசாரியர் பரமபரையிலுள்ளார் ஒருவர் என்பர்" எனக் கூறுவர் திருக்கோணமலை அகிலேசபிள்ளை. அவர் கூற்றின்படி தக்கிண கைலாச புராணத்தின்பின் எழுந்தது இந்நூல்.

உமாபதிசிவாசாரியர் 1304இல் கொடிக்கவி என்னும் நூலை இயற்றினர். எனவே 1380-1414இல் அரசாண்ட சிங்கைச் செகராசசேகர மகாராசாவின் வேண்டுகோளுக்கிணங்கிப் பண்டிதராசர் போன்ற ஒரு புலவராலே திருக்கரைசைப் புராணம் இயற்றப்பட்டது எனக் கோடல் பொருந்தும்.

ஈழத்தில் பெருமையையும் மகாவலிககங்கைச் சிறப்பையும் இந்நூலிற் பரக்கக் காணலாம்.


திருக்கரைசைப் புராணம்

கடவுள் வாழ்த்து

விநாயகர் துதி

பொன்னிரவி தனைவளைத்துப புகுந்துலவு
மொருநேமிப் பொற்றேர் மீது
மன்னிரவி யெனவிளங்கு சுதரிசன
மூவிலைவேல் வயங்கு சங்க
மின்னிரவி னிருள்கடியும் பிறைக்கோடும்
கரத்தேந்தி மேவா ருள்ளக்
கன்னிரவி மதம்பொழியுங் கரைசையில்வாழ்
கரிமுகனைக் கருத்துள் வைப்பாம். 1
_______________________
*கரைசை, கரசை, ஆகிய இரு வழக்குக்களும் நூல்களிற் காணப்படுகின்றன.


குருவணக்கம்

அண்டர்பிரா னடமாடுந் தில்லைமணி
மன்றதனி லகலா தென்றும்
விண்டசிவ சித்தாந்த வேதாந்தப்
பொருள்விளக்கும் விளக்க மாகித்
தொண்டறியா நாயேனுக் கருள்புரிந்து
கிளைமுழுதுந் தொழும்பு கொண்ட
எண்டகுசீ ரீசானச் சிவன்மலர்த்தாண்
மறவாதென் னிதயந் தானே. 2

புராண வரலாறு

வண்ணமலி வடகைலைக் கொடுமுடியாந்
தென்கைலை மணியார் தம்மைத்
தண்ணமரு மலரிட்டுத் தாடொழுவான்
பொருட்டங்ஙன் சாரா நின்ற
கண்ணகலுங் கலைஞானத் தெளிவனைத்துங்
கைவந்த கலச யோனி
அண்ணலுமுத் தரமுகமே யாகியமா
வலிகங்கை யாடும் போதில். 3

ஆங்கொருபே ரற்புதமா வசரீரி
வாசகத்தா லண்ண லார்த்தம்
பாங்கமருந் தென்மலயம் பயின்றதமிழ்க்
குறுமுனிவ பயிலு கின்ற
வீங்கமரு மிக்கங்கை யிரும்பெருமை
யியல்பிவையா மீங்ங னீயு
மோங்கநம்மைத் தாபனஞ்செய் திடுதியென
வுவனறிய வுரைத்திட் டாரால். 4

அக்கணமே தாபனஞ்செய் தவ்விறைக்குச்
சூதமுனி யருளிச் செய்த
மிக்கதிரும் வடபாடைப் புராணத்தைத்
தன்கலையின் விருத்தப் பாவாற்
றிக்கிசைய வருந்தொண்டர் செய்தியென
வென்னறிவுஞ் சிறிது சேர்த்தி
ஒக்கவுரைத் தனன்கொற்றங் குடிவாழும்
பிரான்சரணத் துறதி கொண்டே. 5

இலங்கைச் சருக்கம்

தனிப்பணி யரசே யுன்றன்
றலையில்வா ழுலக மெல்லாம்
இனிச்சிறு கணத்தி னுள்ளே
யில்லையென் றாகு மந்தோ
மனத்தினி லருள்சு ரந்து
மல்கிய பணத்தி லொன்றைக்
குனித்தினி யொதுக்க வேண்டுங்
குவலயம் பிழைக்க வென்றார். 6

அம்மொழி கேட்ட பின்ன
ரடலராக் குலத்து வேந்துந்
தம்மது பணத்தி லொன்றைச்
சம்றொதுக் கிடவே கண்டு
பொம்மெனப் பலத்தான் மோதிப்
பொற்கிரிச் சிகரத் தொன்றைத்
தெம்மலி பவனன் றள்ளித்
தென்றிசைக் கடலில் வீழ்ந்தான். 7

ஒண்டரு மீரட்டி முப்பான் யோசனை விசால மாகி
அண்டியோ சனைதா னீள மைம்பதிற் றிரட்டி யாகி
மண்டிய புரிசை யேழாய் வாயில்க ளெட்ட தாகி
திண்டரு மொன்பான் கோடி சிவாலயந் திகழ்வ தாகி 8

ஆடகத் தமைத்த பித்தி யகப்புறம் புறப்பு றங்கண்
மேடகத் தெற்றி மாட மிளிர்மணி விமான கூடம்
பாடகப் புறந்தாட் கிள்ளைப் பனிமொழிப் பவள வாயார்
நாடகத் தரங்கந் துன்று நனிநெடு வீதி நண்ணி 9

காண்டகு மிடங்க டோறுங் கலிகைவா யவிழ்ந்த விழ்ந்து
பூண்டதேன் றிவலை சிந்திப் பொன்னிறப் பராகந் தெள்ளும்
நீண்டவான் கற்ப கத்தி னீழலஞ் சூழன் மேவி
ஈண்டரு மிலங்காத் தீப மீழமா யிசைந்த தன்றே. 10

அப்பதி யதனிற் பச்சை யணிமணி யடக தாகத்
துப்புறு முத்தம் வல்சி சொன்னவான் கலத்திற் சேர்த்தி
குப்புற வண்ட லாடுங் கோதையர் குழாங்க ளென்றா
லெப்பதியதற்கொப் பாமென் றியம்பிடுந் தகைமைத் தம்மா. 11

சுத்தவான் கதிரி னோடு தூமணிக் கதிருத் தோய்வுற்
றெத்திசை களினு மேற விரும்பகற் போது மல்கும்
நத்தமு மிந்திர நீல நகையிருட் பிழம்புங் கூடி
வைத்தபே ருலகிற் கேற மல்கிடு மிரவின் போ. 12

காடெலாங் கரிநல் யானை கரையெலாம் பவளக் குப்பை
நாடெலா மிரத்ன ராசி நகரெலாம் நல்லோர் சங்கம்
வீடெலாஞ் செம்பொற் கூரை வெளியெலாஞ் செந்நெற் குன்றங்
கோடெலாம் மஞ்ஞை யீட்டம் குழியெலாங் கழுநீர்ப் போது. 13

காவெலாம் மதன பாணங் கரையெலாஞ் சங்கச்சங்கம்
பூவெலாம் வண்டின் சாலம் புறவெலாம் நிரையி னீட்டம்
மாவெலா மன்னக் கூட்டம் மலையெலாங் காள மேகம்
நாவெலா மமிர்த கீத நதியெலா முதுநீர்த் தீர்த்தம். 14

தண்ணமர் சாலி முத்தும் தடங்கட லிப்பி முத்தும்
வண்ணவொண் பணில முத்தும் வரையறா வோல முத்தும்
கண்ணமர் கரும்பின் முத்துங் ககனமஞ் சீன்ற முத்தும்
வெண்ணில வில்லாப் போது மிகுநிலாக் கொழிக்கு மன்றே. 15

பணிலம்வெண் டிரையி னார்ப்பப் பவளமுந் தவள முத்தும்
மணிகளுஞ் சாந்தும் பூவும் மாலையும் பிறவும் வேய்ந்தும்
திணிமதிக் குடைக வித்துத் திரைக்குழாங் கவரி காட்ட
அணிமணி வீதி தோறு மாழியு முலாவு மாமால். 16

கொஞ்சிய கிள்ளை மென்சொற் கோதையர் சிலம்பி னார்பும்
வஞ்சியின் காஞ்சி யார்ப்பும் வாயறாத் தமிழி னார்ப்பும்
விஞ்சிய மள்ள ரார்ப்பும் விழாவெழு முழாவி னார்ப்பும்
அஞ்சிறை வண்டி னார்ப்பு மன்றியோ ரார்ப்பு மின்றால். 17

தெளிவுறு கிரணக் கற்றைச் செம்மணிப் பத்தி சேர்ந்து
குளிர்புனல் நதிக ளெல்லாங் குருதியி னாறு போலு
மொளிர்தரு மிப்பி யீன்ற வொண்ணிறத் தவள முத்தின்
வெளிநிலா வீங்கி யுப்பு வேலைபா லாழி யொக்கும். 18

ஊட்டு செஞ்சுடர் மணியினைத் தடியென வுகந்து
காட்டுத் தம்மிரு பதங்காளற் கவர்கின்ற கங்கந்
தோட்டுத் துண்டங்கொண் டுண்பதற் காமெனத் துணிந்து
கூட்டில் வைத்தன பறந்தன வாதரங் கூர்ந்து. 19

மடைகி டந்தவொள் வளவயற் றொளியறா வரம்பின்
கிடைகி டந்தசங் குதவிய முத்தெலாங் கண்டு
புடைகி டந்ததம் மண்டங்க டம்மொடு புகட்டி
யடைகி டந்தன சிறையகத் தடக்கியே யன்னம். 20

மாறில் பாளைகண் மலரிளங் கமுகினல் வாளை
யேறு பாய்தர வயலெலா முகுவன விளங்கா
யாறு பாய்வதென் றதிசய மெனக்கரும் பாலைச்
சாறு பாய்தர வளாவன கழனியிற் சாலி. 21

இன்ன லின்றியே யிணர்த்ததா ளிப்பனை யெவைவும்
பொன்னின் வீதியுட் பொலிநிலைத் தேர்க்குழாம் போலுங்
கன்னி மார்குழல் கூந்தலங் கமுகுகள் காட்ட
வன்ன பாளைக ளளிப்பன கமுகுக ளனந்தம். 22

கண்ணி லாவிய நறுந்தொடைக் காளையர் தங்கள்
வண்ண மாதர்கள் வதனமேற் புணர்கின்ற வைரம்
மண்ணி லாவிய வெண்ணிறக் கலைமதி யெழுச்சி
யுண்ணி லாவிய புனலிடைக் கண்டபி னொழிப்பார். 23

மஞ்சின் முத்தமு மரந்தையின் மரகத மணியும்
விஞ்சு செம்பொனும் வலவயிற் செம்மணி வேய்ந்தும்
மஞ்சொற் கம்பலை யாற்றினன் னீலமு மவிர்ந்தும்
பஞ்ச வன்னமே யிரவினும் பகலினும் பயிற்றும்.

சித்திரவேலாயுதர் காதல்

வீரக்கோன் முதலியார்

1686


இவரது ஊர் திருக்கோணமலையைச் சேர்ந்த தம்பலகமம். இவரியற்றிய நூல் 'வெருகல் சித்திரவேலாயுதர் காதல்',இந்நூல் 421 கண்ணிகளைக் கொண்டது; திருககோணமலைக்குத் தெனபாலுள்ள வெருகற் பதியிலெழுந்தருளியிருக்கும் சித்திரவேலாயுத சுவாமியின் புகழைக் கூறுவது. கண்டியிலிருந்து அரசாண்ட இராசசிங்கன் என்பவன் நூலினுட புகழப்படுகின்றமையின் நூலாசிரியர் வாழ்ந்த காலமும் அவன் காலமேயாம் (1686).


சித்திரவேலாயுதர் காதல்

சீர்பூத்த தென்வெருகற் சித்திரவே லாயுதர்மேல்
ஏர்பூத்த செந்தமிழா லின்பரசக் காதல்சொல்ல 1

வார்பூத்த கும்பதன வல்லவைதன் பாகமுறுங்
கார்பூத்த மேனிக்க ணபதிதாள் காப்பாமே. 2

தென்னிலங்கை ராவணணைச் செய்யவிர லாலூன்றிப்
பின்னவன்ற னின்னிசையைப் பெட்புடனே கேட்டுவந்து

வாளுடன்வா ணாள்கொடுத்த மாகோணை நாயகர்தந்
தாளிணையெந் நாளுந்த மியேனுக் குத்துணையே. 4

செயய வெருகனகர்ச் சித்திரவே லாயுதர்மேல்
வைய மகிழு மதுரமொழிக் காதல்சொல்ல 5

மையனைய பூங்குழலாண் மாதுபிடியன்னநடை
ஐயைமலர்ப் பாதமதை யன்பாகப் போற்றிசெய்வாம். 6

...............................

வேலரிடம் தூதாய் விரைந்தேதி யென்றுயரைச்
சாலமுடன் சொல்லுஞ் சமயம€தைக் கூறுவன்கேள் 368

என்போலும் பெண்களிசைந்தனுப்புந் தூதுவர்கள்
அன்புடனே பேசு மமையமதிற் சொல்லாதை. 369

இந்திரனுஞ் சந்திரனு மெண்ணிரிய விண்ணவரும்
வந்துதொழும் போதெனது மையறனைச் சொல்லாதை.

வீரவா கோடுமற்றும் வீரர்மற்றும் வீரர்தொழு தேத்துகின்ற
நேரமதி லென்மயலை நீயெடுத்துச் சொல்லாதை 371

மெத்தபுகர் வாய்ந்த வெருகற்ப தியுறையுஞ்
சித்திரவே லாயுதரின் சீரடியி லன்புகொண்டு 372

மானமு டன்மிக்க வயனிலமுந் தோப்புகளும்
மானிய மாயீந்த மகராச ராசேந்திரன் 373

மாணிக்கம் வைத்திழைத்த வன்னப்ப தக்கமுடன்
பூணணிக ளீந்து புகழ்படைத்த பூபாலன் 374

கண்டிநக ராளுங் கனகமுடி ராசசிங்கன்
தெண்டனிடும் போதெனது சேதியைநீ சொல்லாதை. 375

சித்திரவே லாயுதவேள் சேர்ந்துமகிழ் வாயுறையுஞ்
சித்திரஞ்சே ராலயமுஞ் செம்பொற் சினகரமும் 376

திட்டமுடன் முன்னாளிற் செய்தநல்ல நாகனெனுஞ்
செட்டிவம்மி சத்திலுள்ள செய்யபிர தானிகள்போய் 377

பன்னரிய பாதம்ப ணிந்துதொழு சேத்துகையில்
என்னடைய சங்கதியை யெள்ளவுஞ் சொல்லாதை. 378

துன்னு மிருமரபுந் துய்யவிளஞ் சிங்கமெனும்
வன்னிமைபொற் பாதம் வணங்கையினீ சொல்லாதை 379

சாற்று நிலைமை தலைமையுடன மற்றுமுளார்
போற்றுகையி லென்மயலைப் பூங்கிளியே சொல்லாதை 380

வித்வசனர் பாமாலை மெல்லடியிற் சூட்டுகையிற்
சத்தியமா யென்மயலைச் சற்றுநீ சொல்லாதை. 381

எண்டிசையிற் பாலகரு மிப்புவியி லுள்ளவருந்
தெண்டனிடும் வேளையிலென் சேதிதனைச் சொல்லாதை. 382

வன்னிமைதே சத்தார்ம காநாடு தான்கூடி
மின்னுமெழின் மண்டபத்தில் வீற்றிரக்கும் வேளையிலே 383

கோதில்புகழ் சேர்வீரக் கோன்முதலி தானியற்றுங்
காதலரங் கேற்றுகையிற் காதறனைச் சொல்லாதை

கண்ணகி வழக்குரை காவியம்'

சகவீரன்

இவராற் பாடப்பட்ட நூல் 'கண்ணகி வழக்குரை காவியம்' என்பதாகும். இந்நூல் வரம்பெறுகாதை முதலாகப் பதினைந்து காதைகள் கொண்டது. கண்ணகி பாண்டியனுக்கு வழக்குரைப்பதோடு நூல் முற்றுப் பெறுகியது. 2219 பாடல்கள் கொண்ட இந்நூல் அகவல், வெண்பா, சிந்து முதலிய யாப்புக்களால் ஆனது. நூற் காதைகள், பாடல்கள் என்பனவற்றின் எண்ணிக்கை பல ஏடுகளில் வேறுபட்டுக் காணப்படுகின்றது.

அரங்கேற்று காதையில் உள்ள பின்வருஞ் செய்யுள்களிலிருந்து இந்நூலாசிரியரின் பெயர் சகவீரன் என்பத பெறப்படுகின்றது :


தரங்கேற்றும் வெண்டிரைசூழ் தரளமெறி புவியதனில்
அரங்கேற்றும் கதைபாட அவனியுளோர் கேட்டருள
இரங்கேற்று நல்லோர்முன் யானுரைத்த புன்சொலெனும்
அரங்கேற்றுகதைகள் தன்னை அவனியுள்ளோர்கேளுமெல்லாம்.

அவனிபயில் குடிநயினாப் பணிக்கனெனும் பவமிகுந்த
கவளமதக் களிற்றண்ணல் காங்கேசன் தேவையர்கோன்
தவனெனவி ளங்குபுகழ் சகவீரன் தாரணியில்
சிவனருளா லிக்கதைக்குச் செந்தமிழ்ப்பா மாலைசெய்தான்.


கண்ணகி வழக்குரை

வரம்பெருகாதை

இரவிகுலத் தேயுதித்த எண்ணரிய நரபாலன்
கரைபுரள நதிபெருஞ் காவிரிநன் னாடுடையோன்
வருகலியும் மருவலரும் வாழ்மனையிற் புகுதாமல்
அரசுநெறி தவறாமல் அவனிதனை ஆற்நாளில் 1

நாளவமே போகாமல் நல்லறங்க ளவைமுயன்று
காளைநெறிப் பூங்குழலார் கற்புநெறி யதுகாத்து
ஆளுகின்ற படிபுரக்கும் ஆராய்ச்சி மணிதூக்கிக்
காளமுகில் போலுதளங் கரிகாலன் திருநாட்டில். 2

நாட்டுகின்ற பூம்புகாரில் நற்குடியில் உள்ளவரின்
ஈட்டுகின்ற யால்மிகுந்த இல்வணிகர் மாசாத்தார்
கோட்டுசிலை வாணுதலார் கொடியிடையார் மனைவியுடன்
வாட்டமற வுடன் மகிழ்ந்தே வாழ்ந்திருக்குங் காலையிலே. 3


கப்பல்வைத்தகாதை

திருந்துபுகழ் வளர்வர்பிரான் திண்புயஞ்சேர் துங்கவேடன்
துரந்துசெல்லும் புறவினுக்குத் துணிந்துடலை யரிந்தபிரான்
பரிந்துதான் கன்றிழந்த பசுவினுக்குத் தன்மகனைப்
பொருந்தவுறு மனுவேந்தன் புரக்குமந்தப் புகார்நகரே. 4

புரக்குமந்தப் புகார்நகரிற் புரவலனுக் கொப்பா
இருக்குமந்த வசியர்தம்மில் இயல்புடைய வணிகேசன்
திரக்குலவு மானாகர் திருமங்களாங் கண்ணகையைப்
பரக்குபுகழ் மாசாத்தார் பாலகற்குப் பேசிவந்தார். 5

கப்பல்வைக்க வேணமென்று கட்டுரைக்க மீகாமன்
செப்புநீ பலகையுள்ள திசையைஎன்றார் மாநாகர்
அப்பொழுதே பரதவனும் ஆய்ந்துரைப்பான் தென்னிலங்கை
மெய்ப்படவே கொல்லமீழம் மிகுபலகை உள்ளதென்றான் 6


கடலோட்டுகாதை

வடவேட்டிற் பாரதத்தை மருப்பொன்றால் எழுதிமுன்னர்
அடலோட்டுக் கயமுகனை அமர்க்களத்திற் கொன்றபிரான்
படவோட்டு மீகாமன் பையரவின் மணிகொணர்ந்த
கடலோட்டுக் கதைபாடக் கரிமுகனே காத்தருள்வாய். 7

விடுவதென்றான் மீகாமன் வெகுண்டேது வார்த்தைசொல்வான்
கடலசரசன் என்றென்னைக் காசினியோ ரறியாரோ
கெடுகருமங் கருதிவந்தாய் கிளையோடு முனைவானில்
படமலைவேன் மீகாமா பாயைவிடாய் என்றுரைத்தான். 8


வெண்பா

போகவிடா தந்தப் போரில் வெடியரசை
வாகைபுனை மீகாமன் வாள்வலியால் - ஆகமுற
ஆர்த்துப் பொருமவரை ஆஞ்சவமர் வந்து
சேர்த்துக் கொடுவந்தான் சென்று. 9


கலியாணக்காதை

இட்டமுடன் கண்ணகையார் இனியமணம் முடிப்பதற்க
பட்டணத்தி லுள்ளவர்க்கும் பலதிசையி லுள்ளவர்க்கும்
மட்டவிழும் சீரகத்தார் வணிகேசர் தங்களுக்கும்
ஒட்டமுடன் வெள்ளிலைபாக் கொழுங்குறத்தா மிட்டனரே. 10

தானமிக்க கோவலரைத் தக்கநல்ல மணக்கோலம்
ஆனதிரு வாசியுமீட் டாபரண வகையணிந்து
கானமருஞ் சீரகத்தார் கழுநீர்த்தா மம்புனைந்து
ஈனமில்லா நன்னெறியே இசைந்தவித மிருந்னிரே. 11


மாதவி அரங்கேற்றம்

கதித்தெழுந்த வனைமுலைமேற் கதிர்முத்தின் கச்சணிந்து
பதித்தபொன்னின் நவரெட்ணப்பணிவகைகள் பல பூண்டு
மதித்தகருங் குழல்முடித்து வயிரநெற்றி மாலையிட்டு
எதிர்த்தவரை வெல்லுமணி மேகலையு மிறுக்கினளே. 12

தாளம்வல் லாசிரியன் தண்டமிழ்க்கு மாசிரியன்
மூழுமிய லாசிரியன் முத்தமிழ்க்கு மாசிரியன்
தோளுந் துணையுமென்னத் துடியிடையார் புடைசூ‘ப்
பாளைசெறி குழலிலங்கப் பலகைஉற்ற களரிதன்னில். 13


வேறு

தானே இயலிசை வாரமும் பாடித்
தன்னிசை யின்வழி நின்றுமி யாழே
தேனார் குழல்வழி நின்ற குழலும்
சிறந்து நின்றதோர் தாமந் திரிகை
நானா விதமன்னர் அந்தரங் கொட்ட
நன்னூல் வழியிந்த சீராகம் நிற்கத்
கானார் குழலவள் மாதவி சற்றே
கையோடு மெய்கால் அசைத்துநின் றாளே. 14.

தத்தித் தோம் ததிக்கிண தோம்
தக்குண தக்குண தக்குண தோம்
தத்தித் ததிகுதி செய்கிட தங்கிட
செங்கிட செங்கிட தாகிட தோம்
ஒற்றைச் சுற்றுடன் உய்ப்ப முழாவொடு
உற்ற கிடக்கை உடன் விதமும்
வைத்துச் சித்திர வுற்ற நடிப்பொடு
மாதவி சோழன்முன் னாடி ளே. 15.


இரங்கிய காதல்

கானிரங்கு தொடைமார்பன் காவிரிசூழ் வளநாட்டில்
வானிறங்கு புகழ்கொண்ட மாசாத்தர் கோவலற்கு
தேனிரங்கு மொழிமடவார் சேயிழையார் மாதவியார்
தானிரங்க கதைபாடத் தரணியுள்ளோர் கேளுமேல்லாம். 16


வயந்தமாலை தூது

இங்கேதான் வந்ததுவும் யானுரைக்க நீர்கேளும்
அங்கேதான் மாதவியை ஆணதனில் வைத்தன்றீர்
சங்கேருங் கைமடவாள் தான்தந்த ஓலையிது
கொங்காருந் தாரானே கோவலரே எனக்கொடுத்தார். 17


வழிநடைக்காதை

போயினரே கோவலரும் பூவைநல்லாள் கண்ணகையும்
வேயனைய தோளசைய மென்காந்தள் விரல்தடிப்பத்
தூயநுதல் வேர்வரும்பத் துணைமுலைகுங் குமமழிப்பத்
தீயிலிடு மெழுகெனவே திருந்திழையார் சென்றனரே. 18


அடைக்கலக்காதை

அடைக்கலங்கா ணுமக்கென்று அருள்வணிகர் உரைத்ததன்பின்
இடைக்குலங்கள் விளங்கவரு மேந்திழையு மேதுரைப்பான்
மடைக்குள்வரால் குதிபாயும் வளம்புகார் வணிகேசா
தொடைக்கிசைந்த தோளாளே செல்லுவதேன் இவைகளெல்லம்.


கொலைக்களக்காதை

சொன்னமொழி எப்படியோ சொல்லாய்நீ தட்டானே
கன்னமிடுங் கள்வனெனிற் கண்காணத் திரிவானோ
இன்னபடி யென்றறியேன் இன்னானென் றறிவதற்கு
அன்னவனை நம்மிடத்தே அழைத்துவர வேணுமென்றார். 20

கொண்டுசென்று கைதொழுத கொலையானைப் பாகர்தமைக்
கண்டுமனம் களிகூர்ந்து காவலனு மேதுசொல்வான்
தண்டரளச் சிலம்பெடுத்துச் சாதித்த கள்வன்மிசை
உண்டிசையும் தான்மதிக்க யானைதனை யேவுமென்றான். 21

குஞ்சரமு மப்பொழுது கொல்லாமல் அவனுடைய
அஞ்சனத்தால் மிகவெருண்ட அணுகாமற் போனதுகாண்
வஞ்சமற்ற பேருடைய மாலகனே மழுவதனால்
விஞ்சைமிகுங் கள்வனுடன் வெட்டிவைக்க வேணுமென்றான். 22

உயிர்மீட்புக்காதை

பார்த்தாள் பயமுற்றாள் பங்கயச்செங் கைநெரித்தாள்
வேர்த்தாள் விழுந்தழுதாள் விதனப்பட் டீரோவென்றாள்
சேர்த்தாள் குறைப்பிணத்தைச் சேறுபடத் திருமுலைமேல்
ஆர்த்தாள் விழுந்தழுதாள் ஆருனக்குத் துணையென்றாள். 23

பண்ணாருந் தமிழ்தெரியும் பட்டினத்தில் வாழாமல்
மண்ணாளும் வாள்மாறன் மாமதுரை தன்னில்வந்து
எண்ணாதா ரியலிடத்தே என்னையுமே தனியிருத்திக்
கண்ணாலும் பாராமற் கைவிட்ட கன்றீரோ. 24

* உறங்கி விழித்தாற்போல் உயர்வணிகன் எழுந்திருந்து
என்னைநீ ரறியிரோ என்னுடைய எம்பெருமான்
உன்னைநா னறியேனோ என்னுடைய ஒண்ணுதலே
கண்ணுங் கறுப்புமெந்தன் காரிகையைப் போலிருப்பீர். 25

(* இப்பாடல் சில ஏடுககளில் இல்லை)

வழக்குரைத்தகாதை

கொடியிடையார் கண்ணகையும் கோவலரை விட்டகன்று
கடிகமழும் குழல்விரித்துக் கையில்ஒற்றைச் சிலம்பேந்தி
படியிலுள்ளோர் மிகவிரங்கப் பங்கயமாம் முகம்வாட
வடிபயிலும் மேல்மாறன் மதுரைமறு கேநடந்தாள். 26

மீனநெடுங் கொடிவிளங்க வெற்றிமன்னர் புடைசூ‘ச்
சோனைமத கரிபரியும் துங்கமணித் தேர்படையும்
தேனமரும் தொடைபுனைந்து செங்கனக முடியிலங்கை
மானபங்கம் பாராத வழுதிதிரு வாசலிலிதோ. 27

ஊரும் மதிக்குல மன்னா உலகா ளஅறியா ததென்னா
தாரு மனக்குவேம் பானாற் தடங்கா வும்வேம் பாய்விடுமோ
காருந் தருவும் நிகர்க்கும் கைக்கோ வலரை யேவதைத்தாய்
பாரி லரசர் கள்முன்னே பழிப டைத்தாய் பாண்டியனே. 28

சோரனென்று சொன்னாய்நீ தொல்வணிகர் பெருமானை
ஏரணியுங் கனகமுடி இரத்தினவித் தாரகனைக்
காரனைய கொடையானைக் காவலனைக் கள்வனென்றாய்
வாரிதலை யாகநின்ற வையகத்தோ ரறியாரோ. 29

மீனவனே என்றுசொல்ல வேல்வேந்தன் முகம்வாடி
மானபங்கம் மிகவாகி மதியழிந்து மன்னவனும்
ஆனபெரும் பழியெமக்கு அறியாமல் வந்ததென்று
தேனமருந் தொடைவழுதி செம்பொன்முடி சாய்ந்திருந்தான். 30


குளிர்ச்சிக்காதை

மாகனலை விலக்கியந்த மாதுநல்லாள் வழிநடந்து
கோபாலர் தெருவில்வரக் கொடியிடையா ரிடைச்சியர்கள்
தாமாகத் திரண்டுவந்து தையல்நல்லார் இடைச்சியர்கள்
வேல்விழியார் முலைதனக்கு வெண்ணெய்கொணர்ந் தப்பினரே.


வேறு

பாராய்நி யென்தாயே பராசக்தி ஆனவளே
ஆராலும் செய்தபிழை யத்தனையும் தான்பொறுப்பாய்
நேராக இவ்வுலகை நீகாத்துக் கொள்ளெனவே
நேராகப் புரமெரித்த நிமலனிட முள்ளவளே. 32

உள்ளவளே ஐவருக்கும் ஊழிமுத லானவளே
வள்ளஇடைப் பாகம்வைத்த வாணுதலே வாள்மாறன்
தெள்ளுதமிழ் மதுரைசுட்ட தேன்மொழியே யென்தாயே (யுன்)
பிள்ளைகள்தான் செய்தபிழை பேருலகில் நீ பொறுப்பாய். 3

Monday, 13 September 2010

திருகோணமலை த.கனகசுந்தரம்பிள்ளை

திருகோணமலை தமிழ் அறிஞர் தி.த.கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் 1863 ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் 24 ஆம் நாள் பிறந்தார்.இன்று அவரது பிறந்த தினம். யாழ்பாணத்துக்கு ஆறுமுகநாவலர், மட்டக்களப்புக்கு விபுலானந்தர், திருகோணமலைக்கு யார் எனக்கேட்டால் கனகசுந்தரம்பிள்ளை என்பதே பதிலாயமையும். தமிழ் நாட்டுக்கு தமது பதினேழாவது வயதில் சென்று அங்கு அறிஞர் பெருமக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு கல்விமானாக அவர் திகழ்ந்தார். திருகோணமலை அரச உத்தியோகத்தரான தம்பிமுத்துப்பிள்ளை அவர்களின் மகனான அவர் திருமலையின் சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களான கணேசபண்டிதரிடம் தமிழையும், வடமொழியையும் கதிரவேற்பிள்ளை அவர்களிடம் ஆங்கிலத்தையும் கற்றார். பதினான்கு வயதுக்குள்ளாகவே மும்மொழிகளிலும் செறிந்த அறிவினைப் பெற்றார். மறைசை அந்தாதி, திருவாதவூரடிகள் புராணம் முதலிய நூற்களுக்கு பொருள் விளக்கத்தக்க அறிவையும் பெற்ற அவர் நிகண்டு, நன்னூல் ஆதியனவற்றிலும் சிறந்த அறிவுடன் திகழ்ந்தார்.

நல்லோன்;;;;;; கனகசுந்தரன்

என்றும் எழிலுடன் எங்கள் தமிழன்னை
நின்று நிலவ நிறைதமிழில் - ஒன்றுதிருக்
கோணா மலைக்கான சுந்தரன் மாண்பணியை
ஏணாகக் கொள்வோம் எடுத்து.

கற்றுமிக வாய்ந்து கனகசுந்த ரன்திறனில்
உற்ற தமிழ்ச்செய்திப் பெற்றிதனை - நற்றமிழர்
பற்பலர் கொண்டனர்காண் பைந்தமிழ்ச் சீரினுக்கே
பொற்பாய் மிளிர்ந்த தமிழ்.

ஏடுகளிற் ஏறி எழிலாக வீற்றிருந்த
பீடுதமிழ்த் தெய்வத்தைப் புத்தகமாய் - நாடுகளில்
பல்லோர் பகர்ந்தேத்தப் பாங்காய்ப் பரிந்துழைத்தான்
நல்லோன் கனகசுந்தரன்.

எழுத்தியலும் சொல்லியலும் ஏடுகளில் தேர்ந்து
வழுக்களைந்து வான்தமிழை வாரி - வழங்கியதால்
கற்றார்உள் ளத்தில் கனகசுந்தரன் நின்றான்
கொற்றத் தமிழனவன் காண்.

அன்னை தமிழுக்கே ஆய்ந்தழகு தான்செய்தான்
உன்னுந் திருக்கனக சுந்தரன் - முன்னாள்
இவர்போல் தமிழ்ப்பணி ஈழநன் னாட்டார்
தவமாய்த் தழுவல் தகும்.

_புலவர் நா. சிவபாதசுந்தரனார்.

தி.த.காவின் பதிப்பு முயற்சிகளை பின் வருமாறு குறிப்பிடலாம்:
1. தொல் - எழுத்ததிகாரம் - நச்சினார்கினியர் உரையுடன்
2. தொல் - சொல்லதிகாரம்
3. கம்பராமாயணம் - பாலகாண்டம்
4. தமிழ் நாவலர் சரிதம்

1.தொல்காப்பியம் முழுவதையும் ஆராய்ந்து வெளியிட விரும்பிய கனகசுந்தரம் பிள்ளை அவர்கள், ஏட்டுப்பிரதிகள், அச்சுப் பிரதிகள் பலவற்றையும் சேர்த்தெடுத்து அவற்றை ஆராயும் பணியில் ஈடுபட்டார். முதலில் எழுத்ததிகாரப் பணியை மேற்கொண்டார். ஏட்டுப்பிரதிகளையும் நூற் பிரதிகளையும் ஒப்பு நோக்கி ஆராய்ந்து சூத்திரங்கள் சிலவற்றில் காணப்பட்ட பிழைகளையும் திருத்தியும் உரையாசிரியர்களால் எடுத்தாளப்பட்ட உதாரணச் செய்யுள்கள் எந்தெந்த நூல்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளனவென எடுத்துக்காட்டியும் பிள்ளையார் அவர்களால் தயாரிக்கப்பட்ட நச்சினார்க்கினியர் உரையுடன் எழுத்ததிகாரத்தை திருநெல்வேலி சைவ சித்தாந்த பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. மேற்படி கழகம் அந்நூலுக்கு எழுதிய பதிப்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது. "மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையுடன், திருகோணமலை த.கனகசுந்தரம்பிள்ளை B.A அவர்கள் பல ஏட்டுச்சுவடிகளைக்கொண்டு செய்து வைத்திருந்த திருத்தங்களுடன் பதிபிக்கப்படுகிறது".

2.தொல்காப்பியம் - சொல்லதிகாரம்
தொல் - சொல்லதிகாரம், பிள்ளையவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் வெளியிடப்பட்டது.

3.கம்பராமாயணம் - பாலகாண்டம்
பிள்ளையவர்கள் சுண்ணாகம் குமாரசுவாமி புலவருடன் சேர்ந்து நம்பியகப் பொருளுக்கு ஒரு அரிய உரையை எழுதி வெளியிட்டும், கம்பராமாயணத்தை பிழையறப் பரிசோதித்து கூடிய மட்டில் ஏட்டுப்பிரதிகள் பலவற்றோடு ஒப்பு நோக்கிச் சுத்த பாடம் கண்டு முழுவதையும் அரும்பதவுரையுடன் அச்சிட முயன்று முதலில் பாலகாண்டத்தை அவ்விதம் வெளியிட்டனர். அயோத்திய காண்டத்துக்கு அரும்பதவுரை பூர்த்தியாகும் முன்பே இவர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக இறைவனடி சேர்ந்தனர்.மேற்கூறிய பாலகாண்டப்பதிப்புப்பற்றி எஸ்.வையாபுரிப்பிள்ளை "...ஆறு காண்டங்களுள் சுண்ணாகம் குமாரசுவாமிப்பிள்ளையும், தி.த.கனகசுந்தரம்பிள்ளையும் பதிப்பித்த 'பாலகாண்டம்' ஒன்றே இன்றுவரை சுத்தப்பதிப்பாக வெளிவந்துள்ளது" என்று கூறியுள்ளார். இது வசிட்டர் வாயிலிருந்து வந்த கூற்றல்லவோ!

4.தமிழ் நாவலர் சரிதை -1921-
இந்நூலினை இயற்றியவர் யாரென்பது தெரியவில்லை.எனினும் தமிழ் புலவர் வரலாற்றினைக் கூறப்புகுந்த முதல் நூல் எனப்பெருமை பெற்றது. கம்பர், புகழேந்தி, ஒட்டக்கூத்தர் முதலிய பல்வேறு தமிழ் புலவர்களின் வாழ்க்கை வரலாற்றினைக்கூறும் இந்நூலில் வரும் பாடபேதங்கள், பிரதிபேதங்கள், புதிதாகப் புகுத்தப்பட்ட பாடல்கள் ஆதியனவற்றையும் புலவர்கள் காலம், அவர்களின் பாடல்கள் முதலியனவற்றையும் ஆராய்ந்து பிள்ளையவர்கள் தாம் திருத்தித் தயாரித்த நூலை 1921 இல் வெளியிட்டுள்ளார். தமிழ் நாவலர் சரிதையை நாராயணசாமி முதலியார் என்பார் ஏற்கனவே 1916 இல் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்

Tuesday, 7 September 2010

விடியும்! -நாவல்

விடியும்! -நாவல்- (30)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


காத்திருப்பது கொஞ்சம் கடினமான காரியந்தான். நேரத்தைப் பார்த்தான் செல்வம். ஏழைந்து. செல்லத்தம்பி மாஸ்றர் சரியாக ஏழரை மணிக்கு வந்து சந்திப்பார். நீங்க கதைக்கிற போது எல்லாரும் நிக்கிறது சரியில்லை. நான் நிமலராஜனைக் கூட்டிக் கொண்டு வெளிய போய் உங்களுக்குச் சாப்பாடும் எடுத்துக் கொண்டு எட்டரை போல வாறன் என்று மூர்த்தி சொல்லிவிட்டுப் போய் பதினைந்து நிமிசமிருக்கும்.

அவர் இருப்பது அரசபடையின் கட்டுப்பாட்டுப்பகுதியில். படிப்பிப்பது விடுதலைப்புலிகளின் பகுதியில். சொன்னால் சொன்ன நேரத்துக்கு வந்திருவார் என்று மூர்த்தி சொல்லிவிட்டுப் போயிருந்தான். வந்தாத்தான் தெரியும். காத்திருக்கும் பரபரப்பில் கடித்ததால் பெருவிரல் நகத்தின் உள்சதையில் இரத்தம் கசிந்தது. மற்ற விரல்களில் கடிப்பதற்கு நகமில்லை. கால் நகத்தைக் கடித்தும் பழக்கமில்லை. மூக்கு வியர்த்தது. எழுந்து ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தான். தூரத்தில் வீட்டு வெளிச்சமொன்று பொட்டுப் போல் தெரிந்தது. மற்றும்படி இருட்டுக் கிராமம். காடு போல மரங்கள் சூழ்ந்த பச்சைக் கிராமம். அதைத் தழுவி வந்த குளிர்ந்த காற்று உடலில் பட்டும் வியர்வை குறையவில்லை. சீதோஷ்ண மாற்றத்தால் சுரக்கும் வியர்வையல்ல இது.

பரீட்சை முடிவைக் காவிவரும் தபால் பியூனை பார்த்திருக்கும் அந்தரத்துடன் அவன் காத்திருந்தான். புதிய இடம், முன்பின் கண்டு பழகியிராத மனிதர்கள். செல்லத்தம்பி மாஸ்றரும் பழக்கமில்லாதவர்தான். அவர் கொண்டு வரும் செய்தி எப்படியிருக்கப் போகிறதோ!

அரசினால் கவனிக்கப் பெறாத பல அநாதரவான பள்ளிக்கூடங்களில் ஒன்றின் தலைமை வாத்தியார் அவர். அந்தப் பகுதிப் பள்ளிகளின் தேவைகள் சாமான்யத்தில் நிறைவேற்றப்படுவதில்லை -அவரது அதிபர்தர உயர்ச்சி உட்பட. பட்டியலில் பெயர் இருக்கிறது என்று கேள்விப்பட்டு மூன்று வருடங்கள் கழிந்துவிட்டன. அது மெய்யோ பொய்யோவென துருவிப் பார்க்க அவர் விரும்பவில்லை. அரச கட்டுப்பாட்டுப் பள்ளிகளில் அவரோடத்தவர்கள் உயர்ச்சி பெற்று இரண்டாம் கையாக வாங்கிய மோட்டார் சைக்கிள்களில் ஓடித் திரிகிறார்கள். அவருக்கு இன்னமும் கல்யாணத்தின் போது வாங்கிய றலீ சைக்கிள்தான் தஞ்சம். அதற்கும் பொறுமை நிறைய - இன்னும் சினக்காமல் ஓடுகிறது.

கவலைதான். ஏற்கனவே கவனிப்புப் பெறாத அந்தப் பகுதிப் பிள்ளைகளின் படிப்பு புறக்கணிக்கப்படக்கூடாது என்பதற்காக அவர் தன் சொந்தக் கவலைகளை மறந்து போகவே விரும்பினார். பிறந்தது சம்பூரில், கட்டினது தம்பலகாமத்தில், சீவிப்பது மூதூரில். சுற்றுப்புறக் காடு களணியெல்லாம் தண்ணி பட்ட பாடு. அவரிடத்தில் படித்த பிள்ளைகள் இயக்கத்திலும் இருக்கிறார்கள், சறுக்கிறதுக்குச் சந்தர்ப்பம் இல்லை. அவருடைய சொல்லு புலிகளிடம் எடுபடும். .. .. .. இவைகள் மச்சான் குணரெத்தினம் அவரைப் பற்றி அளித்திருந்த பயோ டேட்டா.

செல்வம் நம்பிக்கையோடு காத்திருந்தான். அதற்குக் காரணமிருந்தது. இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த மச்சான் குணரெத்தினம், செல்லத்தம்பி மாஸ்றரின் பெறாமகன். செல்லத்தம்பி மாஸ்றருக்கு இருக்கிற மதிப்பைப் பற்றி ஒரு இரவு முழுக்க கொட்டாவி விட்டுக் கொண்டு குணரெத்தினம் சொல்லியிருக்கிறான். தனக்கென்றால் நூறுக்கு 99.9 வீதம் நம்பிக்கை இருப்பதாகவும் கவலைப் படவேண்டாம் என்றும் கூறியிருந்தான். கணித ஆசிரியரானதால் எதையும் தசக் கணக்காக சொல்லிப் பழக்கம்.

அவன் காத்திருந்தான். நீங்க நம்பிக்கையோடு போங்க என்று குணரெத்தினம் கொடுத்த ஊக்கம் ஒரு புறம். சிலவேளைகளில் தம்பியையும் கையோடு கூட்டி வந்திாலும் வந்திருவார் என்று அவன் காட்டிய ஒளிக்கீற்று மறுபுறம். கூட்டி வந்தால்!

செல்வம் இப்போது அதுபற்றி யோசிக்க ஆரம்பித்தான். கனடியன் விசிட் விசாவிற்கு விண்ணப்பம் செய்தால் ஸ்பொன்சர் கேட்பார்கள். சொந்தத் தம்பிக்கு ஸ்பொன்சர் பண்ணினால் அங்கேயே காலூன்றி விடுவான் என்ற சந்தேகம் எழக்கூடும். டானியலை ஸ்பொன்சர் பண்ணச் சொல்லிக் கேட்கலாம்.

விசா விசயத்தில் தூதரகம் இப்போது கெடுபிடி என்ற தகவலும் இருக்கிறது. அப்படியானால் ஸ்டூடன்ற் விசாவிற்கு முயற்சி பண்ணலாம். டானியலுடன் கதைத்து டொறன்டோவிலுள்ள ஒரு கொலிஜ்ஜில் அட்மிசன் எடுத்து அனுப்பச் சொல்ல வேண்டும். படிப்புச் செலவுக்காக காசு கூடுதலாக காட்ட வேண்டி வரும். அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இந்த வழி அநேகமாக வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது. எதற்கும் குறுக்கு வழிகளையும் பார்த்து வைக்க வேனும். ஆளை இந்தியாவுக்கு அனுப்பி பாஸ்போட் முடித்து விசா குத்துவிச்சு அனுப்புவது ஒரு வழி. இல்லாட்டி கொழும்பில் ஏஜன்சியிடம் கதைத்து காசு கட்டி அனுப்பவேனும். இப்ப பத்து லட்சம் போகிறது என்று மூர்த்தி சொன்னான். அது பரவாயில்லை. போகிற வழியில் எங்காவது மாட்டுப்பட்டு நிற்கிற சிக்கலுமிருக்கு. என்ன ஆனாலும் ஒரு நிமிசம் கூட ஆளை இங்க வைச்சிருக்கப்படாது. ஓடித் தப்பிவிட வேனும். காசு பத்தாதென்றால் டானியல் இருக்கிறான்.

எல்லாத் திட்டங்களும் டானியலை நம்பியே வளைய வந்து கொண்டிருப்பதைப் பார்க்கையில் தனது வாழ்க்கையை அவன் ஆக்கிரமித்திருக்கிற அளவு புரிந்தது. வந்ததுக்கு ஒரு தரமென்றாலும் டெலிபோன் எடுத்துக் கதைக்காதது பற்றி கவலையும் வந்தது. வீட்டுக்கு வந்தபின் கனடாவை மொத்தமாக மறந்து போனது உண்மைதான்.

தெரு நாயொன்று யாரோ இருட்டில் கல்லெறிந்ததில் மிரண்டோடியதைப் போலக் குரைத்தது. நேரம் ஏழு முப்பத்தைந்தாகிவிட்டது. அவனுக்கு விசர் பிடிக்கத் தொடங்கிற்று. அரை மணிக்கொரு தரம் வருகிற பஸ் கொஞ்சம் பிந்தினாலே அவனுக்கு ஒன்றுக்கு முடுக்குவதைப் போலிருக்கும். பொறுமையோடு காத்திருப்பதென்பது முடியாத காரியம். முற்றத்தில் இறங்கினான். வெளிச்சமற்ற முற்றம். வானத்தில் நிலவில்லை. அண்ணாந்து சுற்றிப் பார்த்தான். அமாவாசை இருட்டு.

வாசலில் அசைந்த இருட்டிலிருந்து டிரைவர் சம்சுதீன் வெளிப்பட்டார். சம்சுதீனை வரவேற்கும் மனநிலையில் அவனில்லை. செல்லத்தம்பி மாஸ்டர் வருகிற நேரத்தில் இவர் இருந்தால் தம்பியின் விசயத்தை மனம் விட்டுப் பேச முடியாது, என்ன செய்யலாம் என்ற யோசனையில் வாங்க சம்சுதீன் என்றான்.

இஞ்சினியர் ஐயா இல்லையா என்று கேட்டான் சும்சுதீன்.

“இல்லை சாப்பாடு வாங்கப் போயிற்றாங்க. ஏதும் சொல்ல வேனுமா ? ”

சம்சுதீன் இன்னமும் முற்றத்தில் நின்று கொண்டிருந்தான். வீடு பக்கத்திலிருப்பதால் ஒருவித காரணமும் இல்லாமல் சும்மா வந்திருப்பதாகவே தோன்றியது. உள்ளே வந்து இருக்கச் சொன்னால் மாஸ்டர் வருகிற போது ஆளைக் கிளப்புவது கஷ்டமாகிவிடலாம். ஆனால் முற்றத்தில் வைத்து பேசிக்கொண்டிருப்பது அழகில்லையே!

“வாங்க சம்சுதீன் வந்து உள்ள இருங்க”

இல்லை, போக வேனும் சும்மாதான் பாத்துட்டுப் போகலாமின்னு வந்தேன் என்றவன் சொன்னதற்கு மாறாக உள்ளே வந்தான். கதிரையை இழுத்துப் போட்டான் செல்வம்.

“வசதியெல்லாம் எப்படி ?”

“பரவாயில்லை”

வேறு சாதாரண சந்தர்ப்பமாக இருந்தால், இது போன்ற தட்டத் தனியான நேரத்தில் ஆளை இருத்தி வைத்து எவ்வளவோ பேசலாம். இப்போது எதைப் பேசுவது ?

“இந்தப் பக்கம் பொடியன்கள் வர்றதா ? ”

“நான் காணேல்லை, நம்மாக்கள் கண்டிருக்கிறாங்க”

“உங்க ஆக்களோட எப்படி அவங்க நடந்து கொள்ளுவாங்க ? ”

“முந்தி நல்லாத்தான் இருந்தது. காசு கேட்கத் தொடங்கினாப் பிறகு கொஞ்சம் எட்டத்தில நிக்கிற மாதிரித் தெரியுது”

“ஏன் நீங்க அவங்களை நம்பவில்லையா ? ”

“அப்படின்னு சொல்ல முடியாது. ஆனா அடிக்கடி ஏதாவது பிரச்னை நடக்குது. அதனால நம்பிக்கை குறைஞ்சு கொண்டு போகுது”

“எப்பிடி ? ”

“இவங்க வந்தா எங்களுக்கு கஷ்டம் என்று நம்மாக்கள் அபிப்பிராயப்படறாங்க”

ஏனோ தெரியவில்லை சம்சுதீனுக்கு தன் மனதிலிருப்பதை சொல்ல வேண்டுமென்று எண்ணம் வந்தது செல்வத்திற்கு. அவன் சொன்னான்.

“நீங்க பிழையாக விளங்கா விட்டால் நான் ஒன்றைச் சொல்ல விரும்புறன். இன்று நேற்றல்ல திருகோணமலையில பிறந்து வளர்ந்த காலத்திலிருந்து தமிழர்களும் முஸ்லிம்களும் அண்ணன் தம்பி மாதிரித்தான் இருந்து வந்திருக்கிறம். புட்டுக் குழலில் போடுகிற மாவும் தேங்காய்ப்பூவும் மாதிரி ஒன்றுக்குள் ஒன்றாகத் தான் சீவிச்சுக் கொண்டிருக்கிறம். இனம் மதம் வேறுபட்டாலும் மொழியாலும் பக்கம் பக்கமா ஒன்றாகச் சீவிக்கிற உறவாலும் இணைஞ்சிருக்கிறம். ”

“அதன்டா உண்மைதான்”

“அரசிற்கும் புலிகளுக்கும் இருபது வருசமா போராட்டம் நடந்து கொண்டிருக்கு. தமிழர்களைப் பொறுத்த அளவில் இது ஒரு ஜீவமரணப் போராட்டமாக வந்துவிட்டது. அரசும் புலிகளும் ஒருவரையொருவர் அழிப்பதில் சாத்தியமான அத்தனை வழிகளையும் முயல்கிறார்கள். இந்த உக்கிரமான போரில் இடையில் அகப்படுகிற அப்பாவிப் பொதுமக்கள் கஷ்டப்படுவது தவிர்க்க முடியாதது. இப்படியான ஒரு பயங்கரமான போர்க்காலச் சூழலில், போராட்டத்தில் பங்குபற்றாமல் இடையில் இருக்கிற ஒரு இனத்திற்கு சில இடைஞ்சல்களும் கஷ்டங்களும் உண்டாவது இயற்கை. ஆனால் சமாதானம் என்று வருகிற போது அந்த இடைஞ்சல்கள் எல்லாம் பறந்து போய்விடும்.

சுயகெளரவமுள்ள ஒரு சிறுபான்மை இனத்தில் பெரும்பான்மை இனம் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறையின் அவதிகளை இரத்தமும் சதையுமாக அனுபவித்தவர்கள் பொடியன்கள். அந்த அனுபவம் அவர்களுக்கு கற்றுத் தந்திருக்கும் பாடங்கள் அவர்களை நேர்மையான வழியில் அழைத்துச் செல்லும் என்பதை நான் பரிபூரணமாக நம்புகிறேன். அவர்கள் அடையத் துடிக்கிற சுதந்திரத்தில் இந்த மண்ணிலிருக்கும் அத்தனை பேரும் யாருக்கும் யாரும் குறைந்தவர்கள் இல்லை என்ற சுயகெளரவம் கட்டாயம் இருக்கும். நான் பெரிசு நீ சிறிசு என்ற பேதமில்லாத பெருந்தன்மை நிச்சயம் இருக்கும். இருக்க வேண்டும். அதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. நீங்களும் நிச்சயமாக நம்புங்க சம்சுதீன்.”

“அப்படி நடந்தா எல்லாருக்கும் நல்லந்தானே ஐயா என்று சொன்ன சம்சுதீன், ஐயா வந்தா நான் வந்திட்டுப் போனதா சொல்லுங்க, அப்ப வரட்டா என்று எழுந்தான்.

முஸ்லிம் மக்கள் எங்கள் சகோதரர்கள். காலங்காலமாக நட்பு மாறாமல் வாழ்ந்தவர்கள். அவர்களை ஒதுக்கிவிட்டு அனுபவிக்கிற எந்த சுதந்திரமும் உண்மையான சுதந்திரமாக இராது. சிறுபான்மைக்குள் ஒரு சிறுபான்மையாக இருப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்படுவது சகஜம். அதனைப் போக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் மகனின் கடமை என்று நம்புகிறவன் செல்வம்.

சம்சுதீன் போனபின்னும் செல்லத்தம்பி மாஸ்டர் வரவில்லை. ஒன்றுக்கு வருவது போலிருந்தது. கக்கூசு பின்வளவில் இருக்கிறது, சுற்றி வளைத்து பற்றைகள். இராயிருட்டியில் பாம்பு கீம்பு இருக்கும். முன்முற்றத்து வேலியோரமாக இருட்டின் மறைப்பில் ஒன்றுக்குப் போக நடந்தான். கிடுகுவேலியில் பட்டால் சரசரவெனச் சத்தம் கேட்கும். கொஞ்சம் தள்ளி நின்று சிப்பைக் கழட்டினான். அப்போது பார்த்து ஆரோ வருகிற மாதிரி அசமாத்தம்! மாஸ்றராகத்தான் இருக்கும். வந்ததை டக்கென்று அடக்கிக் கொண்டு திறந்த சிப்பை மேலே இழுத்துவிட்டு வாசலுக்கு வந்தான்.

வந்தவர் லோங்ஸ் போட்டிருந்தார். மாஸ்றராக இருக்க முடியாது. ஒன்றுக்குப் போவதை அந்தரத்தில் நிறுத்தப் பண்ணிய மனிதரை வேண்டாத விருந்தாளியைப் போலப் பார்த்து நீங்க ? என்று கேட்டான்.

“செல்லத்தம்பி”

தலைமை வாத்தியார் வேட்டியில் வரவேண்டும் என்று கட்டாயமா என்ன ? வேட்டியென்றால் கட்டுவதும் காபந்து பண்ணுவதும் கஷ்டந்தான். இடுப்பில் ஒன்றுக்கு நாலு சு;றுச் சுற்ற வேண்டும், இருந்து எழும்ப கெதியில் கசிங்கிப் போகும், அடிக்கடி நீலம் போட்டுத் தோய்க்க வேனும், வேட்டித் தலைப்பு இடையிடையே சைக்கிள் செயினுக்குள் கொழுவிக் கொள்ளும், கிழியும், கறை படும். .. .. வசதி கருதி பல தமிழ் வாத்தியார்கள் இப்போது காற்சட்டைகளுக்கு மாறிவிட்டார்கள்.

“வாங்க சேர்”

“செல்வநாயகம் ?”

“ஓம்”

“எங்க மூர்த்தியைக் காணேல்லை ?”

“சாப்பாடு வாங்க வெளிய போயிற்றினம்”

“நேரத்துக்கு வந்திருப்பன், பக்கத்தில ஒரு செத்த வீடு. அதாலதான் ஒரு சாப்பாட்டுக்குக் கூட உங்களை கூப்பிட முடியேல்லை”

அவன் இருக்கச் சொல்லுமுன்பே சம்பிரதாயம் பார்க்காமல் கதிரையில் இருந்தார். இன்னும் நாலைந்து வருசத்தில் இளைப்பாறுகிற வயசு. தலை முற்றிலுமாகப் பழுத்துவிட்டது. கிராமத்துச் சூழலுக்கு பொருத்தமில்லாத நல்ல நிறம். வெய்யிலில் திரிந்து கொஞ்சம் செம்படை அடித்திருந்தார்.

மூர்த்தி வாங்கி வைத்துவிட்டுப் போன சோடாப் போத்தலை உடைத்தான். கழுவிக் கவிழ்த்து வைத்திருந்த கிளாசை இன்னொரு முறை கழுவினான். சோடாவை ஊற்றினான். வெளிக் கிளாசில் படிந்து வழிந்த தண்ணீரை தன் கைஇலேஞ்சியால் அவர் பார்க்கும்படியாகத் துடைத்து விட்டுப் பக்குவமாகக் கொடுத்தான்.

“குடியுங்க சேர்”

அவராகத் தொடங்கட்டும் என்று காத்திருந்தான். கண்ணாடி எடுத்துப் போட்டுக் கொண்டார்.

“ஓம் ஓம் குடிப்பம்”

“நேற்று இங்க நடந்த விசயம் கேள்விப்பட்டனீங்களோ”

நாடக மேடையில் தொடர்பு விட்டுப் போகும் வசனத்திற்கு பின்னாலிருந்து வரி எடுத்துக் கொடுக்கும் உதவியாளர் போல, வந்த விசயத்தை அவர் தொடங்குவதற்கு ஏதுவாக அந்தக் கேள்வியைச் செருகினான்.

“அங்க போய் தோய்ஞ்சிற்று வரத்தான் கொஞ்சம் செண்டு போச்சு. பாவம் வல்லிபுரம் மூக்கைப் பிடிச்சா வாயைத் திறக்கத் தெரியாத பிறவி. இந்த அநியாயங்களால தானே எங்கட பிள்ளையள் துவக்கைத் தூக்கிக் கொண்டு காட்டுக்குள்ள திரியுதுகள்“

“ஆமி அடையாள அணிவகுப்பு நடத்துவாங்களோ ? '

“அணிவகுப்பா ? ஆக்கள் இவ்வளவுக்கும் இடம் மாறாமல் இருந்தாலே பெரிய காரியம்”

அவனே கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் அவர் சொல்கிற பதில்களில் அவனுக்கு இம்மியளவும் சிரத்தையில்லை. அவனுக்கு தம்பியின் முடிவு தெரிய வேண்டும். வருவானா ? இல்லையா ?

“சேர் தம்பீர விசயம்!”

“ஓமோம். முந்தநாள் சம்பூர் போயிருந்தனான். மகளிர் அணிப் பொறுப்பாளரைச் சந்திச்சனான். என்னட்டைப் படிச்ச பிள்ளைதான். ”

“தம்பியைச் சந்திச்சனீங்களா ? ”

“இல்லை”

“நான் இன்டைக்கு வாற விசயம் தம்பிக்குத் தெரியுமா ? ”

“வருவீங்களென்டு தெரியும். இன்டைக்கென்டு தெரியாது”

“தெரிஞ்சா கட்டாயம் வந்திருப்பான் என்னைப் பார்க்க”

அவர் மெளனமாயிருந்தார். சந்தோசத்தை சிலர் உடனே வெளிக்காட்ட மாட்டார்கள். மெளனமாக இருந்து சஸ்பென்ஸ் உண்டாக்கி ஆளைக் குழப்பி பிறகு வெளியிடும் போது சந்தோசம் இரட்டிப்பாக இருக்கும் என்ற எண்ணமாக இருக்கலாம். துக்கத்தை உடனே சொல்லி ஒரேயடியாக ஆளைக் குழப்பியடிக்காமல் மெளனமாக இருந்து மெதுமெதுவாக அவிழ்த்து விடுவது சிலருடைய வழி. இவருடைய மெளனம் எந்த வழி! அந்தரத்தில் இருந்த அவனுக்கு அந்த மெளனம் ஒத்துக்கொள்ளவில்லை.

“பொதுவாக இயக்கத்தில சேத்திட்டால் கழட்டிக் கொள்ளுறது கஷ்டம் என்று சொல்றாங்கள். உண்மையா சேர் ? ”

“எல்லாரோடும் அப்படி நடப்பார்கள் என்று சொல்ல முடியாது. ”

“அப்ப ? ”

“உங்க குடும்ப நிலைமை, அப்பாவுக்கு சுகமில்லாத விசயம், பொம்பிளைச் சகோதரங்கள், நீங்க கனடாவில, அவர்தான் இங்க ஒரு ஆம்பிளைச் சகோதரம் - எல்லாம் சொன்னனான் ”

“என்ன சொல்லிச்சினம் ? ”

“வந்தா கூட்டாற்றுப் போங்க எங்களுக்கு ஆட்சேபனையில்லை என்று சொன்னாங்கள்”

“பிறகு ?”

அவன் அவருடைய கண்களையே உற்றுப் பார்த்தான். எவரொருவர் கண்களை நேராகப் பார்க்காமல் முகட்டையோ நிலத்தையோ பார்த்துப் பேசுகிறாரோ அவர் உண்மை பேசவில்லை என்பது அவன் கணிப்பு. நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் இதய சுத்தமான மனிதர்களின் வெளிப்பாடு. போகவிட்டு பின்னுக்கு நின்று பார்ப்பது, தலையை அசைக்காமல் கண்ணை மட்டும் இடது வலதாக அசைத்துப் பார்ப்பது எல்லாமே கள்ளத்தனமானவை. அவர் அவனை நேராகப் பார்த்துக் கொண்டே தொடர்ந்தார்.

“இயக்கத்தைப் பொறுத்தவரை, விருப்பமில்லாத ஆக்களை வைத்திருக்க மாட்டார்கள். இது விடுதலைக்கான ஜீவமரணப் போராட்டம். இதில் அரைகுறை ஈடுபாடு சரிராது”

“அப்ப ? ”

“உங்க தம்பியோட கதைக்கிற சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கேல்லை,”

“ஏன் ஆள் அங்க இல்லையா ? ”

“அது எனக்குத் தெரியேல்லை. கடிதம் ஒன்று குடுத்து விட்டிருக்கிறார்”

“என்ன கடிதம் ? ”

“உங்களுக்கு எழுதின கடிதம். நான் பார்க்கேல்லை. ”

அவனுக்கு முகம் டக்கென்று கறுத்துப் போயிற்று. கையோடு ஆளைக் கூட்டி வருவார் என்று பார்த்தால் கடிதம் கொண்டு வந்திருக்கிறார். வந்தாக் கூட்டாற்றுப் போங்க என்று அவர்கள் சொன்ன உடனேயே தம்பியை நேர சந்திக்க அவர் முயற்சித்திருக்க வேண்டும். என்னென்றாலும் பிறத்தி பிறத்தி தானே. தன்னுடைய மகனென்றால் விட்டு வந்திருப்பாரா ? குணரெத்தினம் புழுகின அளவிற்கு ஒன்றுமில்லை.

“உலகம் தெரியாத பிள்ளை. ஏதோ ஒரு வேகத்தில எடுபட்டு வந்திற்றான். பெத்த தாய் கண்ணீரும் கம்பலையுமா நிக்கிறா. அவன் வராட்டி மனுசிக்கு என்ன நடக்கும் என்டு தெரியாது. எனக்கு தம்பியை ஒருக்கா சந்திக்கக் கிடைச்சாப் போதும் கையோடு கூட்டிக் கொண்டந்திருவன். உங்களால ஒழுங்க பண்ணேலுமா சேர் ? ”

“எனக்கு உங்கட கஷ்டம் விளங்குது. எதுக்கும் அவருடைய கடிதத்தை ஆறுதலாக வாசிச்சுப் பாருங்க. வாசிச்சவுடன கிளிச்சுப் போட்டிருங்க. நாளைக்குக் காலைல வெளிக்கிட முதல் சொல்லி அனுப்பினா நான் முயற்சி பண்ணிப் பாக்கிறன் ”

அவர் சட்டைப் பையிலிருந்து ஒரு பழுப்பு நிறக்கவரை எடுத்துக் கொடுத்தார். அதில் திரு. செல்வநாயகம் என்று மட்டும் போட்டிருந்தது, தம்பியின் கையெழுத்துத்தான். கடிதத்தைக் கொடுத்துவிட்டு அவர் சொன்னார்.

“ஒன்றை மட்டும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இதில் அக்கறை எடுக்கவில்லை என்று நீங்க நினைக்கக் கூடாது. ஒரு தகப்பனுக்கு இருக்கக்கூடிய கவலை எனக்கும் இருக்கு. பெத்ததுகள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று எனக்குத் தெரியும்.”

அவன் கண்கலங்க அவரை உற்றுப் பார்த்தான்.

“தம்பி வயசான எங்களுக்கு இன்னமும் விளங்காத, விளங்கிக் கொள்ள விருப்பமில்லாத சில முக்கிய விசயங்கள் இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு தெளிவாக விளங்குது”

அவர் எழுந்தார். “நான் அப்ப வாறன் தம்பி. கலவரப்படாம வாசியுங்க. மூர்த்தியைக் கேட்டதாகச் சொல்லுங்க. ”

அவர் நடந்தார். அவன் எதுவும் சொல்லவில்லை. கூடவே வாசல்வரை போய் அவரை விட்டு வருவதுதான் மரியாதை. அது உறைக்காமல் அவர் போவதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவர் கதவடியில் போய் திரும்பி நின்று அவனைப் பார்த்தார். பல் தெரியாமல் சிரித்தார். அடுத்த கணம் இருட்டில் கலந்தார்.

அவன் பதிலுக்குச் சிரிக்கவில்லை. அவருக்காக கிளாசில் ஊற்றி வைத்த சோடா காஸ் இறங்கிப் போய் அப்படியே இருந்ததை அவர் போன பின்தான் கவனித்தான்

தம்பன் கோட்டை

தம்பன் கோட்டை வரலாறு சுவாரசியமானது. அறியப்பட வேண்டியது.
கலிங்கத்து விஜயபாகு கி.பி.1215 இல் இலங்கை மீது படையெடுத்து பொலன்னறுவையைக் கைப்பற்றி கி.பி. 1236 வரையிலும் இலங்கையை ஆட்சிசெய்தான் என்று சரித்திரம் கூறுகிறது. இலங்கையை ஆண்ட கலிங்க மன்னர்கள், இங்குள்ள பௌத்தர்களைத் திருப்திப்படுத்தி ஆட்சியில் நீடிக்க பௌத்த மதத்தைத் தழுவி பௌத்த மன்னர்களாகவே ஆட்சி செய்தனர்.
ஆனால் கலிங்க விஜயவாகு, கலிங்க மாகன் என்றெல்லாம் பெயர்கொண்ட இம்மன்னனிடமோ வலிமை மிக்க தமிழ், மலையாள வீரர்கள் அதிகமாக இருந்ததால் தன்னை எதிர்த்தவர்களைத் தன் போர் வலிமையால் அடக்கி மதம் மாறாமல் இந்து மன்னனாகவே ஆட்சியில் இருந்தான்.
இலங்கை முழுவதும் உள்ள பௌத்தர்கள் இவனது ஆட்சிக்கு எதிர்ப்பாக இருந்து, அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளனர். தமக்கு எதிராக நாட்டில் எந்த மூலையிலாவது கிளர்ச்சி தோன்றினால் அதை முறியடிக்க வசதியாக பொலநறுவை, புலச்சேரி, சதுர்வேதமங்கலம், (தற்போதைய கந்தளாய்) கந்துப்புலு, குருந்து, பதவியா,மாட்டுக்கோணா, தமிழ்ப்பட்டணம்(தற்போதைய தம்பலகாமம்) ஊரார்த்தொட்டை, கோமுது, மீபாத்தொட்டை, மன்னார், மண்டலி, கொட்டியாபுரம் என்று நாட்டின் பல பகுதிகளிலும் தேவைக்கு அளவான கோட்டைகளை நிறுவி படைகளையும் தகுந்தாற்போற் நிறுத்தியிருந்தான் என்பதை சரித்திர நூல்கள் நிரூபிக்கின்றன.
தம்பலகாமத்தில் வேறு இனங்களின் கலப்பின்றி தமிழர்கள் மட்டுமே வாழ்ந்ததால் அதற்கு தமிழ்ப்பட்டணம், தம்பைநகர் என்ற பெயர்கள் வழங்கி வந்ததாக அறியமுடிகின்றது. கி.மு.543ல் இலங்கை வந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற முதல் ஆரியமன்னரான விஜயன், இந்த தம்பலகாமம் ஊரில்தான் சிவன் ஆலயத்தை அமைத்தான் (என்று செ.இராஜநாயக முதலியார் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் கூறுகிறது).

இந்த ஆலயத்துக்கு அண்மையில் உள்ள வெண்பில் கலிங்க விஜயவாகு கிழக்குப் பகுதிகளினின்றும் வரக்கூடிய எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கக் கோட்டையொன்றை அமைத்து, தம்பன் என்ற தளபதியின் கீழ் பெரும் படையொன்றை நிறுத்தியிருந்தான். இந்த தளபதி தம்பன் வீரசாகசங்களுக்குப் பேர் போனவர்.
தனது பொறுப்பிலிருந்து கோட்டைமீது இலங்கையின் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அவர் தம்பன் கோட்டைப் பிரதேசத்திலேயே போரிட்டு முறியடித்தது மில்லாமல், இனிமேலும் அவர்கள், எந்தத் தாக்குதலுக்கும் முயலக்கூடாத வகையில் அவர்களை அடக்கிப்போடவேண்டும் என்ற முனைப்பில் அவர்களைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்று இறுதிப் போரிட்டு முடக்கிப் போட்டார். அப்படி முடக்கிப்போட்ட இடம்தான் பொலநறுவை மட்டக்களப்பு பாதையில் அமைந்துள்ள தம்பன்கடுவை என்று அழைக்கப்படும் தம்பன் கடவை என்ற இடமாகும்.
(ஏறத்தாழ 800 வருடங்களுக்கு முன்னான காலப்பகுதியிலே இந்தக் கதை நடக்கிறது) கோணேஸ்வர ஆலயத்திற்கு அண்மையில் உள்ள வெண்பில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு இன்று கட்டிடச் சிதைவுகளால் உயர்ந்த மேட்டுநிலமாக பற்றைக்காடுகள் எழுந்து காணப்படுகிறது. கோட்டையைச் சுற்றிலும் நாற்புறமும் பெரிய அகழி இருந்து தூர்ந்துபோய், மழைக்காலத்தில் மட்டும் நீர் நிறைந்து கேணிபோல் தென்படுகிறது. தூர்ந்த அகழியில் பிரம்பும் நாணலும் புதராகிப் போயுள்ளன. காடாகிப் போய்விட்ட மேட்டு நிலம் இன்றும் கோட்டை என்றே அழைக்கப்படுகின்றது

தம்பலகாமம்.

தம்பலகாமம்.

திருகோணமலைக்கு தெற்கே, பதினைந்து மைல்கள் தூரத்தில் அமைந்த பசுமைப்பூமி.
ஒருகாலத்தில் வருடமொன்று மூன்று போகங்கள் (தடவைகள்) நெல்விளைந்த நிலம்.
தூய தமிழ்ப்பெயர்களில் வதிநிலங்களையும், சூழவும் வயல் நிலங்களையும்
தன்னகத்தே கொண்ட அழகான மருதநிலம். இந்த முது நிலத்தின் ஆற்றுப்படுக்கைகள்
எந்நேரமும் நீரால் நிறைந்தோடுபவை. கடல் நடுவே காணும் தீவுக்கூட்டங்கள்
போல், வயல்களின் நடுவே திட்டுத்திட்டாகத் தெரியும் குடியிருப்புக்கள்.

தம்பலகாமத்தை ஒரு தடவை சுற்றி வந்தால் அத்திட்டுக் குடியிருப்புக்களின்
பெயர்களில் தமிழ் மணக்கும். மக்களின் வாழ்வில் தமிழ் சுவைக்கும்.
திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கி விரிகின்ற நெடுஞ்சாலையில்
பதின்மூன்று மைல் தொலைவில் கிழக்கு நோக்கிப்பிரிகின்ற சாலை எம்மைத்
தம்பலகாமத்துக்கு அழைத்துச் செல்லும்.

சாலை பிரியும் அச்சந்தி தம்பலகாமம் சந்தி அல்லது பதின்மூன்றாம் கட்டை என
அழைக்கப்படும். அங்கிருந்து உள் நுழைந்தால் வரும், முதலாவது
குடியிருப்பின் பெயர் புதுக்குடியிருப்பு. அதையும் தாண்டி உள்ளே செல்ல
சாலை மீண்டும் இரண்டாகப்பிரியும். இடதுபுறமாகச் செல்லும் சாலை ஊருக்குள்
சென்றுவர, மற்றையது கோவில்குடியிருப்பு நோக்கிச் செல்லும்.

இடதுபுறமாக ஊருக்குள் செல்லும் சாலை வழியே செல்வோமானால், பட்டிமேடு,
கூட்டாம்புளி, கள்ளிமேடு, முன்மாதிரித்திடல், சிப்பித்திடல், வர்ணமேடு,
முள்ளியடி, வரைக்கும் சென்று கிண்ணியா நோக்கி அவ்வீதி செல்லும்.
கோவில்குடியிருப்பு வரை சென்ற வீதி அங்கிருந்து நீண்டு,
குஞ்சடப்பன்திடல், நாயன்மார்திடல், நடுப்பிரப்பன்திடல், ஆகிய வற்றினுர்டு
சென்று முள்ளியடியில் மற்றைய வீதியுடன் இணைந்து கிண்ணியா செல்லும்.
இந்தக் குடியிருப்பினிலெல்லாம் , தென்னை மரத்தோப்புகளும்,
தீங்கனிச்சோலைகளும், இதந்தரு மனைகளும், இன்பமும் நிறைந்திருக்கும்.

கோயில்க்குடியிருப்பின் நடுவே உயர்ந்து நிற்கும் ஆதி கோணேஸ்வரர் ஆலயம்.
இந்த ஆலயத்தின் தோற்றப்பாட்டுக் கதையோடு பின்னிப் பிணைந்திருக்கிறது
திருத்தம்பலேஸ்வரத்தின் வரலாறு என்பது என் எண்ணப்பாடு. அதன்
வரலாற்றுக்குச் செல்லமுன் தம்பலகாமம் என்ற பெயர் வருவதகான காரணத்தைச்
சற்று நோக்குவோம்.

இந்நிலப்பரப்பை ஒருகாலத்தில் ஆட்சி செய்த மன்னனின் பெயர் தம்பன் என்றும்
அவன் பெயர்சார்ந்தே இந்நிலப்பரப்பு தம்பலகாமம் எனப்பெயர் பெற்றதென
இங்குவாழ்ந்த பெரியோர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கின்றேன். இம்
மன்னன் சோழர்காலத்தே வாழ்ந்த பூர்வீக ஈழத்தமிழனாக இருந்திருக்க
வேண்டும். சோழமன்னர்களின் ஆட்சி விரிவாக்கத்தின்போது, அவர்களுடன்
இசைந்து வாழ்ந்தவனாகவும் இருந்திருக்க வேண்டும். இப்படி அவன் சோழ
மன்னர்களுடன் நல்லுறவு பேணி வளர்த்தமையால், சோழமன்னர்கள் தங்கள் ஆட்சி
விரிவாக்கத்தின்போது ஆற்றிய நற்பணிகளினூடாக, இப்பகுதியில் இருந்த
சிவனாலயத்தைப் புனருத்தாரணம் செய்து, குடமுழுக்குச்
செய்திருக்கின்றார்கள். அத்தோடு, தங்கள் வழியில், அந்நிலமன்னனாகவிருந்த
தம்பன்பெயரால் அவ்வாலயத்திற்கு தம்பலேஸ்வரம், திருத்தம்பலேஸ்வரம் எனப்
பெயரிட்டிருக்க வேண்டும். (சோழர் காலத்தே கட்டப்பெற்ற ஆலயங்களுக்கு
அதைக்கட்டிய மன்னர்களின் பெயர்சார்ந்து பெயரமைக்கப்பட்டிருப்பதற்கு,
சோழேஸ்வரம், ராஜராஜேஸ்வரம், ஆகிய பெயர்களை உதாரணமாகக் காணலாம்.)

தம்பன் எனும் தலைவன் நிச்சயம் ஒரு ஈழத்துத்தமிழன் என, நான் கருதுவதற்கு
முக்கிய காரணம், அத்தகைய ஒரு பெயர் சோழர்பரம்பரைக்குள் காணப்படவில்லை.
அதேசமயம் தமிழீழத்தின் வன்னிப் பெருநிலப்பரப்பில், இத்தகைய பெயர்களும்,
மன்னர்களும் கூட வாழ்ந்திருக்கின்றார்கள். பனங்காமம் என்ற நிலப்பரப்பை
ஆட்சிசெய்த அரசன், பனங்காமவன்னியன் என அழைக்கப்பட்டிருக்கிருக்கின்றான்.

தம்பனின் ஆட்சிக்குட்பட்டிருந்த வயல்நிலப்பகுதியை, தம்பலகமம் என்பது
சரியா? அல்லது தம்பலகாமம் என்பது சரியா? என ஒரு கேள்வி பின்னாட்களில்
எழுந்தபோது, மறைந்த பண்டிதமனி கணபதிப்பிள்ளை அவர்கள், பனங்காமம்,
கொடிகாமம், வீமன்காமம், எனும் பெயர்களை மேற்கோள்காட்டி, தம்பலகாமம் என
அழைப்பதே சரியென நிறுவினார்.

அதைவிடவும், தம்பலகமம் என பெயர்விளித்துவருங்கால், அது பின்னாட்களில்
சிங்கள குடியேற்றவாசிகளால் தம்பலகமுவ அல்லது தம்பலகம எனப் பெயர் மாற்றம்
செய்ய இலகுவாக இருக்கும் என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

தம்பலகாமத்திற்கான வரைபடம் கிடைக்காத காரணத்தால், என் மனம் நிறைந்த அந்த
மண்ணை நானே வரைந்து இங்கே தந்துள்ளேன். அதிலே தம்பலகாமம் சந்தியிலும்,
கோவிகுடியிருப்பிலும் சிகப்பு வட்ட அடையாளமிட்டபகுதிகளில் மிகப்பெரிய
இராணுவ முகாம்கள் இருப்பதாக அறிகின்றேன். இம்மண்ணிற்கு அண்மையில் சென்று
வந்த என் நண்பனிடம் எனக்கும் ஆசையுண்டு எனச் சொன்னபோது சொன்னான்,
வேண்டாம் தற்போது வேண்டாம். ஏனெனில் உன் மனதில் பதிந்துள்ள அந்தப் பசுமை
மண்ணை நீ இப்போது பார்க்க முடியாது. ஆதலால் அந்நிலம் மீட்சிபெறும்வரை,
அதன் பசுமை நினைவுகளாவது உன்னிடம் அழியாதிருக்கட்டும் என்றான்...

சென்ற பகுதியில் தம்பலேஸ்வரம் எனும் பெயர் வரக்காரணம், தம்பன் எனும்
மன்னன் அல்லது தலைவன் ஆட்சி செய்த பகுதியென்றும், அதனால் அவன் பெயர்
சார்ந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்ற கோணத்தில் ஆராய்ந்திருந்தோம்.
இப்பகுதியில் இப்பெயரினை மொழிவழக்கு ரீதியில் ஆராயவிளைகின்றேன். இந்த
வகையில் ஆய்வு செய்ய உதவிய என் ஆய்வாள நண்பருக்கு நன்றிகள்.

தம்பலம் என்ற சொல்லுக்குப் பொருள்தேடி சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை
அவர்களின், “தமிழ்மொழி” அகராதியை புரட்டிப்பார்த்தபோது,
ஆச்சரியப்படத்தக்க உண்மைகள் புலப்பட்டன. அவ்வகராதியிலிருந்து எமக்குப்
பொருத்தமாக அமைந்த சில சொற்களை இப்பகுதியில் எடுத்து நோக்குவோம்.

தம்பலகாமத்தின் செந்நெல்வயல்களும், ஆதி கோணைஸ்வரர் கோவில் கோபுரமும்.

தம்பலடித்தல்:
இச்சொல்லுக்கு அகராதி சொல்லும் விளக்கம், பயிரிடுதல், உழவு செய்தல்
என்பதாகும்.
இவ்விளக்கம் நுர்றுசதவீதம், தம்பலகாமத்துடன் ஒத்துப்போகும். ஏனெனில்,
வயலும் வயல்சார்ந்த மருதநில மண் என நாம் முன்னரே பார்த்திருந்தோம். இந்த
செந்நெல் கழனிகளில் நடைபெற்ற தொழிலினடிப்படையில் இப்பெயர் வந்திருக்கக்
கூடும்.

தம்பலாடல்:
இச்சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம், சேறடித்தல் அல்லது சேறாடால்.
இந்த விளக்கமும் இப்பிரதேசத்தின் தன்மையேர்டு பெருமளவு ஒத்துப்போகும்.
ஏனெனில் இப்பிரதேசத்தின் உழவு என்பது சேறடித்துப் பயிரிடும் முறைமையே.
இதைச் சேறாடல் எனச் சொல்வது அதிகபொருத்தம் என்றும் சொல்வேன். உழவுக்கு
இயந்திரங்கள் வந்த பின்னர் கூட, இப்பகுதி மக்கள் எருமைகளைக் கொண்டு,
கழனிகளை கால்களால் மிதித்து, நீரும், களிமண்ணும், சேர்ந்த
சேற்றுக்களியாக்கிய நிலங்களில் விதையிடுவது வழக்கமாகவிருந்தது. இந்தச்
சேறுமிதிப்பினைக் கழனிகளின் கரையிருந்து பாரத்தால், வயலில்
சேறுமிதிப்பவர்கள், ஆடல்புரிவதுபோன்றே தோற்றமளிக்கும்.

தம்பலி:
இச்சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம், மருதமரம் என்பதாகும்.
இப்பிரதேசத்தில் நிறைந்து காணப்படும் மரவகைகளில் அதிகமானது மருதமரங்களே.
( அந்த மருதமரங்களின் நிழல் சுட்டியே இவ்வலைப்பக்கத்திற்கு மருதநிழல்
என்று பெயரிட்டேன்) வயல்நிலங்களின் கரைகளிலும்,
நீர்பாசனப்படுக்கைகளிலும், களத்துமேடுகளிலும் இந்த மருதமரங்களை நிறையவே
காணலாம். மிகப்பெரிய விருட்சமாக வளரும் இம்மரங்களின் நிழல்கள் இதமானவை.

தம்பல்:
இச்சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம் சேறு என்பதாகும்.
ஏலவே சொன்னதுபோல் இப்பகுதி வயல்நிலங்களின் மண்வளம் கருங்களிச்
சேற்றுத்தன்மைகொண்டதாகும்.

இப்படித் தமிழச்சொற்களின் தொடர்புகொண்டு ஆய்வு செய்யிடினும், இப்பிரதேசம்
பூர்வீக தமிழ்ப்பிரதேசமாவே காணப்படுகிறது

Monday, 6 September 2010

தம்பலகாமம்



இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகச் சிவவழிபாடு நடைபெற்று வரும் தெய்வீகச் சிறப்பு உள்ளதால், ஊர் பெயருக்கு முன்னால் திரு என்ற சிறப்பும் சேர்ந்து திருத்தம்பலகாமம் என்று அழைக்கப்பட்டு வருகின்றது.



மிகுந்த அருள் சிறப்புடைய மகாதலங்களுக்கே ஸ்தல புராணம் இருக்கின்றது. திருத்தம்பலகாமம் கோணேஸ்வரர் ஆலயத்துக்கு ஸ்தலபுராணம் இருப்பதுடன் தம்பலகாமம் ஊருக்கும் புராணம் இருக்கிறது.



திருக்கோணமலைக் கோணேஸ்வரத்தின் ஸ்தல புராணமான திருக்கோணேசலப்புராணமே தம்பலகாமம் கோணேஸ்வரத்தின் புராணமாகவும் இருக்கிறது. இப்புராணம் திருக்கோணமலை நகரச் சிறப்பு, கோணேஸ்வரம் திருக்கோணமலைக்கு வந்த விபரங்கள், கோணேஸ்வரத்தின் தெய்வீக அருள் சிறப்பு போன்றவைகளைக் கூறுகிறது. அத்துடன் திருக்கோணாசலப் புராணம் தம்பை நகர்ப்படலம் என்ற அதிகாரத்தில் தம்பை நகரின் வளச்சிறப்பு, தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரத்தின் அருள் சிறப்பு, வழிபாட்டுமுறை போன்றவைகளை விபரமாகக் கூறுகிறது.



ஆகவே திருக்கோணமலை, தம்பலகாமம் கோணேஸ்வரங்கள் இரண்டுக்கும் பொதுவான ஸ்தல புராணம் திருக்கோணேசலப் புராணம் என்பது தெரிய வருகிறது. கோணேஸ்வரம் பற்றிய நூல்கள் தம்பலகாமத்தை தம்பை நகர் என்றே கூறுகின்றது. திருக்கோணேசலப்புராணம் தம்பை நகர்ப்படலத்திலுள்ள ஒரு பாடல் பின்வருமாறு:-



கரிய குவளைத் தளிர் மேய்ந்து
கடைவாய் குதட்டித் தேன் ஒழுக
எருமை கிடந்து மூச்செறியும்
எழிலார் தம்பை வளநாட்டில்



இப்பாடல் தம்பை நகர்ப் பிரதேசத்திலுள்ள நீர்வள, நிலவளச் சிறப்பைப் பற்றிக் கூறுகின்றது. இப்பாடல் குறிப்பிடும், நில, நீர்வளம் தற்போதைய தம்பலகாமத்தை ஒத்ததாக உள்ளதால் பழைய தம்பை நகரின் தெற்குப் பகுதி என்று தம்பலகாமத்தைக் கூறலாம்.



தம்பை நகரின் நகரப் பகுதி எங்கே? என்றுதான் தேடவேண்டி உள்ளது. இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் கப்பல் துறைக்கடலைக் கடல் துறையாகக் கொண்டு இலங்கையின் சரித்திர தொடக்க காலத்துக்கு முன், தம்பை நகர் பெரிய வணிக நகராக இருந்தது.



மனித வாழ்க்கையில் பொருள் வகிக்கும் முக்கியம் கருதிப் பெரியோர்கள் அறிவுரைக்கேற்ப தம்பை நகர்த் தமிழ் வாலிபர்கள் தங்கள் கடல் துறையான கப்பல் துறைக்கடலில் இருந்து மரக்கலங்களின் வழியாக தாம் வங்கப் பெருங்கடலைக் கடந்து வேறு நாடுகளுக்குச் சென்று பொருளீட்டி வந்தனர்.



தென்பாரதத்தில் நடந்த புறநானூறு சம்பவங்கள் இங்கும் இடம்பெற்றன என அறியக் கிடக்கின்றது. இப்படித் தமிழ்ச் சைவர்களின் வாழ்விடமான தம்பை நகரில் கலகங்கள் ஏற்பட்டு உயிர் இழப்புக்கள் அதிகரித்து வந்ததால் பலர்
அங்கு வாழ முடியாத சூழ்நிலை ஏற்படவே வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர் எனினும் ஒரு பிரிவு மக்கள் தங்கள் பிரதேசத்தை விட்டுப்போக மனமில்லாமல் தெற்குப் பகுதிக்கு வந்து வடக்கே பால்துறைக் கடல்வரை உள்ள தாழ்ந்த பிரதேசத்திலுள்ள திடல்களில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.


இதுவே இன்றைய தம்பலகாமம் என்று கூறப்படுகின்றது. ஊர்ப்பேர்கள் திடல்கள் என்று இருப்பதும் இதற்குச் சான்றுபகர்கிறது. நெல்வயல்களுக்குள் கால்மைலுக்குக் குறைந்த இடைவெளியில் சங்கிலித் தொடர்போல் இருபத்திநான்கு சிறு ஊர்கள் வலமாக, வளையமாகக் காணப்படுகின்றன.



இந்த ஊர்களில் தமிழ் உழவர்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களிடம் சுதேசவைத்தியக்கலையும், நாடகம், நாட்டியம், வாய்ப்பாடு போன்ற சங்கீதக் கலைகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து வளர்ந்தோங்கி வந்தன.



மாரி காலங்களில் பெரும் சத்தமாகக் கத்தும் தவளைகளின் ஒலியுடன், சுற்றி இருக்கும் ஊர்களில் கூத்துப் பழக்கும் கொட்டகைகளில் இருந்து எழும் மிருதங்கங்களின் ஒலியும் சேர்ந்து ஒலிக்கும்.



வேர் பிடுங்கி குளிசை தயாரிக்கும் பரியாரிமாரும், வயல்களில் நெல் விளைவிக்கும் உழவர்களும் கால்களில் சலங்கையணிந்து அரங்கேற்றும் மேடைகளில் ஜல் ஜல் என்று தாளந்தீர்ந்து நடித்துப் பார்வையாளர்களை மகிழ்விப்பார்கள்.



மருந்தீந்து பிணியகற்றும் பரியாரிமார்கள் சிறந்த புகழ்பெற்ற
பெற்றோர்கள் இட்ட இயற்பெயர் மறைந்து பாத்திரப் பெயருடன்
வாழ்ந்தனர், இன்னும் வாழ்பவர் பலருளர்.



சினிமா வந்தது. அரச உதவியுடன் ஆங்கில வைத்தியம் வந்தது. செழித்து வளர்ந்தோங்கி வந்த இரு கலைகளும் அருகி மறைந்தன. பிரிட்டிஷ் ஆட்சி இருக்கும் வரையும் கிண்ணியாவில் வசித்த மகாத்தாஜியார் என்ற கனவான் தம்பலகாமம் அருகிலுள்ள கடலை அரசிடம் இருந்து குத்தகையாகப் பெற்று கடலுக்குக் காவல் போட்டு பலமுறை முத்துக் குளிப்பை நடத்தினார்.



இந்தக் கடலின் மேற்புறம் முத்துக் குளிப்பையொட்டி முத்து நகர் என்ற பெயருடன் ஒரு நகர் தோன்றி வளர்ந்து வந்தது. தம்பலகாமம் வடக்கில் கடலருகே உள்ள நெல்வயலுள் முத்துச் சிப்பிகளைக் கொண்டு குவித்து அறுத்து முத்தெடுத்து விட்டுச் சிப்பிகள் உயர்ந்த ஊரான இடம் கடலருகே சிப்பித்திடல் என்ற காரணப் பெயருடன் இன்றும் உள்ளது. தம்பலகாமத்திலுள்ள வயல்வெளிகளில் செந்நெல் அமோகமாக விளைந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வந்தர்கள் ரூபா நோட்டுத்தாளை எடுத்து வந்து தம்பலகமத்தில் மாதக்கணக்கில் தங்கி தரகர்களை வைத்து நெல் வாங்கி மூட்டைகளாகச் சேர்த்துக் கடல் வழியாகவும் ரயில் மூலமாகவும் யாழ்ப்பாணம் கொண்டு போவார்கள். முத்துக் குளிக்கும் காலங்களிலும், நெல்வயல்களில் அறுவடை நடைபெறும் காலங்களிலும் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரம் தொழிலாளர்களும் வந்து கூடுவார்கள்.



தம்பலகமப் பற்றிலுள்ள கிண்ணியா, ஆலங்கேணி, உப்பாறு, முனையிற்சேனை, நெடுந்தீவு, குறிஞ்சாக்கேணி, காக்காமுனை, சூரன்கல், கந்தளாய் போன்ற ஊர்களுக்குத் தம்பலகமம் தலைமை தாங்கித் தொழில் ஈந்து வருவதால் தம்பலகமத்தை தாய் ஊரென்றும் அருகிலுள்ள ஏனைய ஊர்களைச் சேயூர்கள் என்றும் அழைப்பது
வழக்கமாகும்.



மேற்படி சேயூர்களில் ஒரு பத்திரம் எழுதுவதானால் திருத்தம்பலகாமப் பற்றைச்சேர்ந்த கிண்ணியா, ஆலங்கேணி, கந்தளாய் என்று எழுதுவதே வழக்கமாகும்.

கண்தழையே கந்தளாய் ஆனது


பண்டையில் திருமலை இராஜ்யத்தை ஆட்சி செய்த வன்னி அரசர்கள் ஆளும் வசதி கருதித் திருக்கோணமலைப் பிரதேசத்தை மூன்று பற்றுக்களாகப் பிரித்தனர்.


மாவட்டத்தின் மத்திய பற்றின் தலைமை இடமான தம்பலகமத்துக்குத் தெற்கே பதினான்கு மைல் தூரத்தில் கந்தளாய் ஊர் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு பண்டைக்காலத்தில்
சதுர்வேத மங்கலம் என்ற பெயர் இருந்தது. நான்மறை ஓதும் வேதியர்கள் வாழ்ந்து வந்ததால் இந்தப் பெயர் காரணப்பெயராக வந்ததாக அறிய முடிகிறது. இந்த ஊரில் பெரிய குளம் ஒன்றை அமைப்பதாக அநுராதபுர அரசி ஆடக சௌந்தரியுடன் விவாக ஒப்பந்தம் செய்து கொண்ட குளக்கோட்டு மன்னர், அரசியின் துணையுடன் இங்கு கட்டிய பெரிய குளத்துக்குத் திருக்குளம் என்ற பெயரே வழக்கில் இருந்து வந்தது.



பிற்காலம் அநுராதபுரத்தில் இருந்து அரசோச்சிய புவனேயகயவாகு என்னும் மன்னன் சமணனாக மதம்மாறி திரிசங்கபோதி என்ற மற்றுமோர் நாமத்தை பெற்றான் என்று திருக்கோணாசலப் புராணம் கூறுகின்றது.


இவ்வேந்தன் சைவ ஆலயங்களை இடித்தழிக்கும் நோக்கில் படைகளுடன் காட்டு வழியே சதுர்வேதமங்கலத்தை நோக்கி வந்தபோது, அவனது தீய எண்ணத்துக்கு தெய்வ தண்டனையாக திடீரென அவன் கண்கள் பார்வை குன்றி குருடாகியது.


மன்னனும் படைகளும் ஆறாத்துயரத்தில் ஆழ்ந்து அவ்விடத்திலேயே கூடாரமிட்டுத் தங்கினர். கவலையில் மூழ்கிக்கிடந்த அரசனின் கனவில் ஒரு முதியவர் தோன்றி உன் தீய எண்ணத்துக்குத் தகுந்த தண்டனை பெற்றாய் ஆயினும் இறைவனைத் துதித்து தர்மசீலனான குளக்கோட்டன் அமைத்த நன்னீர்க் குளத்தில் தீர்த்தமாடினால் உன் துயர் அகலும் என்று கூறி மறைந்தார்.




அப்பெரியாரின் கூற்றுக்கமைய பக்திப்பரவசம் அடைந்த அரசன் திருக்குளத்தில் தீர்த்தமாடிய போது அதிசயிக்கத்தக்க விதமாகக் கெட்டுப்போன கண்பார்வை மீண்டும் ஒளிவீசி பிரகாசித்தது.


கெட்டுப்போன கண் தழைத்த காரணத்தால் திருக்குளம் என்று வழக்கில் இருந்த பெயர் மறைந்து
கண்தழை என்ற காரணப்பெயரே வழங்கலாயிற்று.


அடுத்துள்ள சதுர்வேத மங்கலம் என்ற பெயரும் மறைந்து, கண் தழை என்ற பெயரே ஊருக்கும், குளத்துக்கும் வழங்கப்பட லாயிற்று. இப்பெயரே காலப்போக்கில் திரிந்து கந்தளாய் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


நோக்கு கண் விளங்கக் கண்ட
நுவலரும் கயத்துக்கன்பால்
தேக்கு கண்டழையாமென்னச்
சிறந்ததோர் நாமம் நாட்டிக்
கோக்குல திலகனாய குளக்
கோட்டு மன்னன் செய்த
பாக்கியம் விழுமிதென்னா
வியந்தனன் பரிந்து மன்னோ.

(திருக்கோணேஸ்வர புராணம்)



பிரமாண்டமான நீர்த்தேக்க அணைக்கட்டின் இருபுறங்களிலும் பாலை, வீரை, தேக்கு, முதிரை போன்ற மரங்கள் வானுயர வளர்ந்து அணைக்கட்டை அழகு செய்தன. அணைக்கட்டின் உச்சியில் நின்று பள்ளத்தாக்கைப் போல் தெரியும் கந்தளாய் என்ற ஊரைப் பார்த்தால் ஊரில் நெடிந்துயர்ந்து நிற்கும் தென்னைமர உச்சியில் காலைவைத்து விடலாம் போல் தோன்றும்.



இன்று இது போன்ற அரிய பல சரித்திரங்கள் மாற்றப்பட்டுவிட்டன. அணைக்கட்டோரங்களில் நின்று அழகு செய்த வான் தருக்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன.


பழைமையில் இந்தப்பகுதியில் இன்னொரு தெய்வீகச்சிறப்பும் காணப்பட்டது. அணைக்கட்டுக்கு பாதுகாப்பாக குளக்கோட்டனின் வேண்டுதலுக்கமையவே, நாராயண மூர்த்தியால் அணைக்கட்டோரம் விநாயகர் ஆலயம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.


இக்குளத்திலிருந்து குதித்தோடி வரும் பேராறு படிப்படியாக உள்ள கற்பாறைகளில் விழுந்து சலசலத்த ஓசையுடன் ஆலயத்தை வலமாக வளைந்து அஞ்சலி செய்து செல்வது பார்க்கப் பரவசமூட்டுவதாக இருக்கும்.


ஆற்றோரம் எங்கும் பலா மரங்கள் காய்களைச் சுமந்து கொண்டு நிற்கும் காட்சி மனதிற்கு உவகை ஊட்டுவதாக இருக்கும்.


இத்தகைய அழகுமிகு இயற்கைக்காட்சிகள் இன்றில்லை. ஆலயத்தை சுற்றிவளைத்து ஓடிய ஆற்றின் கிழக்குப் பகுதியைத் தூர்த்து குடியிருப்புக்களை உண்டாக்கிவிட்டார்கள். ஒரு காலத்தில் இந்த பழம் ஊரில் வேதம் ஓதும் மறையோர்கள் வாழ்ந்ததும் அதன் காரணமாக சதுர்வேத மங்கலம் என்ற காரணப்பெயர் இருந்ததும் அடியோடு மாறிவிட்டது. நாடு சுதந்திரமடைந்த பின் துரித வளர்ச்சி அடைந்து கந்தளாய்ப் பட்டினம் என்ற பெயரே நிலை கொண்டுள்ளது.


1986 இல் கந்தளாய் நீர்த்தேக்கம் உடைத்துக்கொண்ட போது நாராயணமூர்த்தியால் ஸ்தாபிக்கப்பட்ட அணைக்கட்டு விநாயகர் ஆலயம் முற்றாக அழிக்கப்பட்டாலும் சைவப்பெருமக்கள் ஆலயத்தைத் திரும்பக்கட்டி இருப்பது பாராட்டுக்குரியதாகும்.


கந்தளாய் நீர்தேக்கத்தை அமைத்தவன் இரண்டாம் அக்கிரபோதி என்று இலங்கைச் சரித்திரம் கூறுகிறது. ஆனால் இம்மன்னனுக்கு முன்முப்பத்திமூன்று வருடம் ஆட்சிசெய்த முதலாம் அக்கிரபோதி மின்னேரியாக் குளத்தைக் கந்தளாயுடன் இணைக்க ஒரு கால்வாயையும் வெட்டினான் எனச் சரித்திரம் முன்னுக்குப்பின் முரணாகக் குறிப்பிடுகிறது.


கந்தளாய்க் குளம் இருந்தபடியால் தானே முதலாம் அக்கிரபோதி கால்வாய் வெட்டி வந்தான் என்றும் ஆகிறது. முதலாம் அக்கிரபோதி கந்தளாய்க்கு கால்வாய் வெட்டி வந்தான் என்ற சரித்திரத்தின் கூற்று முதலாம் அக்கிரபோதியின் ஆட்சிக்கு முன்பும் கந்தளாயில் குளம் இருக்கிறது என்பதை ருசுப்படுத்துவதாக உள்ளது.



திருமலை இராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்த சதுர்வேத மங்கலத்தை இன்றைய கந்தளாயை தென்னிலங்கை வேந்தன் ஒருவன் வென்றான். அவன் வென்றரசன் என்றே அழைக்கப்பட்டான்.


ஏற்கனவே இருந்த கந்தளாய் குளத்தின் கிழக்குப்புற அணைக்கட்டுடன் தானும் ஒரு குளத்தை அமைத்தான் இவன். அந்தக்குளம் வென்றரசன் குளம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.


அணைக்கட்டின் உச்சியில் நின்று குளத்தின் நீர்ப்பரப்பைப் பார்த்தால் கடல்போலவும், கட்டின் அடிவாரத்தில் நின்று அணையின் உச்சியை நோக்கினால் கட்டு பெரிய மலை போலவும் தெரியக்கூடியதாகக் குளம் பிரமாண்டமானதாக அமைக்கப்பட்டதெனக் காவியம் கூறுகிறது.





இந்தக்குளத்தின் அணைக்கட்டை முதல்முதலாக பார்ப்பவர்கள் வியப்பிலாழாமல் இருக்கமுடியாது. இயந்திர சாதனங்கள் அற்ற அந்தக்காலத்தில் இப்படி ஒரு பிரமாண்டமான அணையை அமைக்க இலட்சக்கணக்கான சனங்கள் தினந்தோறும் வேலை செய்தாலும் பல்லாயிரம் வருஷங்களாவது செல்லுமே என்ற எண்ணம் எவருக்கும் வரவே செய்யும் .



இந்த அணைக்கட்டில் தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரத்தின் சுற்று ஆராதனைகளாக வேள்வி, பொங்கல், மடை போன்ற வழிபாடுகள் பல இலட்சம் ரூபா செலவில் வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம்.


இந்தக்குளத்து வேள்வி ஆராதனைகளிலும், தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரர் ஆலயத்திலும் ஊழியம் புரிந்து கோயிலால் மாதச்சம்பளம், வயல்மானியம் பெறும் நாற்பத்தைந்துக்கும் மேற்பட்ட தொழும்பாளர் குடும்பங்கள் திருக்கோணமலை மாவட்டம் முழுவதும் பரந்து வாழ்ந்துவருகின்றனர்.



தம்பலகாமம்.க.வேலாயுதம்

ஆலய வழிபாடு, தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலயம்.....


தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயிலில் இரு பிரிவுகளாக அமைந்த வழிபாடுகள் காலங் காலமாக நடைபெற்று வருகின்றன.வரலாற்றுப் புகழ்மிக்க இக்கோயிலை, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஜெயதுங்க வரராசசிங்கன் என்னும் மன்னன் கட்டினான் என்றும் தம்பலகாமத்திற்கு மேற்கேயுள்ள "ஸ்வாமிமலை' என்னும் இடத்திலிருந்து ஆதிகோண நாயகர் திருவுருவையும் ஏனைய பரிவாரத் தெய்வங்களையும் மேளதாளத்துடன் கொண்டு வந்து இக்கோயிலில் பிரதிஷ்டை செய்தான் என்றும் திருகோணாசலப் புராணம் கூறுகிறது.
.
குளக்கோட்டு மன்னனால் திருகோணமலையில் நிறுவப்பட்ட திருக்கோணநாயகர் ஆலயம், பறங்கியரால் அழிக்கப்பட்ட பிறகு, சிதைந்து போன இவ்வாலய வழிபாட்டு முறையைச் சீர் செய்து இந்தியா சென்று தொழும்பாளர் குடும்பங்களை அழைத்து வந்து திருகோணமலை மாவட்டத்திலுள்ள பல இடங்களிலும் குடியமர்த்தி அவர்களுக்கு மானியமாக வயல் நிலங்களையும் வழங்கி, ஆதி கோணநாயகர் கோயில் வழிபாடு குறைவின்றி நடைபெற இம்மன்னனே காரணமாவான் எனத் திருக்கோணாசலப் புராணம் சான்று பகருகிறது.


தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயிலில் இரு பிரிவுகளாக அமைந்த வழிபாடுகள் காலங் காலமாக நடைபெற்று வருகின்றன. இக் கோயிலில் நடைபெறும் நித்திய பூசை, அபிஷேகம், விழா போன்றவை உருவ வழிபாடாகும். கந்தளாய்க் குள மகா வேள்வி, தம்பலகாமம் நாயன்மார் திடலில் நடைபெறும் மடை வைபவம் "கள்ளிமேடு ஆலையடியில் நடைபெறும் பத்தினித் தேவி விழா' மாகாமத்தில் இடம்பெறும் மூர்க்காம்பிகா விழா போன்றவை வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் திறந்த வெளிச் சுற்று ஆராதனைகள் ஆகும். இவை அருவ வழிபாடாகும். இவ்வழிபாடுகள் குறைவின்றி சீராக நடைபெற வேறு வேறான ஆராதனைகளும் விதி முறைகளும், பத்ததிகளும் ஊழியம் புரியத் தொழும்பாளர்களும் உள்ளனர். இக் கிரியைகளை மேற்கொள்ள "கட்டாடியார்' என அழைக்கப்படும் பூசகர்களும் உள்ளனர்.

இவைகள் அனைத்தும் சொன்ன விதி முறைப்படி தவறாமல் நடைபெற வேண்டும் என்றும் இவற்றில் குறைபாடுகள் நேரின் "நாட்டு மக்கள் விளைவழிந்து துன்பமுற்று சோர்வார்கள் என்றும் கோணேசர் கல்வெட்டு கூறுகிறது.

.
வெயில், மழை வேண்டி பட்டு நேர்ந்து கிரிகை, ஆராதனைகள் செய்தால் அவைகளை அற்புதமாக அருளும் கோணேஸ்வரர் வழிபாட்டுக்கு இருபாகை முதன்மைக் குருக்கள்மார் இன்றியமையாதவர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். ஊர் மக்கள் வேண்டுகோளுக்கு அமைய இக் குருக்கள்மார் ஆதிகோணநாயகருக்கு சிவப்புப் பட்டுச் சாத்தி செய்த கிரியைகள், ஆராதனைகள் அதிசயத்தக்க வகையில் வெயிலைத் தந்ததை மக்கள் அனைவரும் நன்கறிவர். இது போலவே மழையின்றி பயிர்கள் வாடியபோது பச்சைப் பட்டுச் சாத்தி செய்த கிரிகை, ஆராதனைகள் வேண்டிய அளவு மழையைத் தந்ததையும் மக்கள் மறந்து போக நியாயமேயில்லை. இக் குருக்கள்மார் மகுடாகம முறையிலேயே தமது ஆராதனைகளை மேற்கொண்டனர். இன்று இம்முறையைப் பயின்றவர்கள் மிக அரிதாகவே உள்ளனர். குறிப்பாகச் சொல்லப் போனால் இன்று தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயிலில் சிவாகம முறையிலேயே வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
.
மாறாத புனல் பாயும் திருக்குளத்தையும் வயல் வெளிகளையும் வருந்திச் செய்த மாமன்னன் குளக்கோட்டன், தான் தொடங்கி வைத்த கோணேஸ்வரர் வழிபாடு என்றும் தடைப்படாமல் நடைபெற வேண்டும் என்ற உயர் நோக்கில், தன் குல குருவான வசிட்டரிடம் "நெல் விளைவிப் போர் வேண்டும் போது வெயில் மழையை அருளும் இரங்கிய நிலையில் இறைவனை வடிவத்துத் தருமாறு வேண்டினான்.

.
மன்னனின் வேண்டுகோளை செவி மடுத்த வசிட்ட பெருமான், விவசாயிகள் வேண்டும் போது மழை வெயிலை, அருளும் வகையில் "வலக்காலைத் தூக்கி இரு கரங்களுடன் நின்ற நிலையில், ஆதி கோணநாயகரின் திருவுருவை "நரவடிவில்' அமைத்து உருவ அருவ, வழிபாடாக மகிடாகம கிரிகை முறைகளையும் ஆக்கி அரசனுக்கருளினார் எனத் திருக்கோணாசலப் புராணம் கூறுகிறது.

.
தொன்மைக் காலத்திலிருந்து இக் கோயிலில் ஒரு வரையறையறையான ஒழுங்கு முறையில் மேற்கொள்ளப்பட்ட பூசை முறைகள், ஆண்டுத் திருவிழாக்கள், வேள்வி, மடை போன்ற கிராம தேவ பூசைகள் மீண்டும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்து இன்று மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று வருகிறது. இக் கோயிலில் கடமையாற்றும் சகல தொழும்பாளர்களும் சமூகம் தந்து தத்தமது பொறுப்புக்களைக் குறைவின்றி மேற்கொள்ள வேண்டும் என்றும் மகுடாகம முறையிலேயே சகல கிரிகைகளும் நடைபெற வேண்டும் என்றும் இம்முறை அருகியிருந்தால் இந்தியாவிலிருந்தாவது இந்த வழிபாட்டு முறை தெரிந்த அர்ச்சகர்களை அழைத்து வந்து அவர்களூடாக இவ் வழிபாட்டு முறையை மீண்டும் புத்துயிர் பெற்றெழச் செய்ய வேண்டும் என்றும் மக்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.
.
ஆதி கோண நாயகப் பெருமான் அருளால் தற்பொழுது இக் கருத்துக்களை நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரு நல்ல சூழ்நிலை தோன்றியுள்ளது. தற்பொழுது நடைமுறையிலுள்ள தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயில் தர்மகர்த்தா சபையினர் இக் கருத்துக்களை பெரிதும் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக பொதுமக்கள் தொழும்பாளர்கள், தர்மகர்த்தா சபைத் தலைவர், உப தலைவர் செயலாளர் உட்பட உறுப்பினர்கள் சிலரும் கூடிய ஒரு கருத்தரங்கு ஆலய மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
.இவ்வாண்டுத் திருவிழா நடைபெற்ற பின்னர் மக்கள் கருத்தரங்குகளைக் கூட்டி இக்கோயிலில் பழைமையில் பேணப்பட்ட பொருள் பொதிந்த நன்மை பயக்கக் கூடிய வழிபாட்டு முறையை நடைமுறைக்கு கொண்டு வருவதெனவும் ஆதியில் இருந்ததைப் போல ஆதி கோண நாயகர் திருவுருவை மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்வதெனவும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இது எமது கிராமத்திற்கு மட்டுமின்றி முழு நாட்டுக்கும் நன்மை பயக்கும் ஒரு நற்செயலாகும் என்பதில் சிறிதளவேனும் ஐயமில்லை.
{வீரகேசரி நிருபர்}