Monday, 6 September 2010

தம்பலகாமம்.க.வேலாயுதம்



{வாழ்வியல் ஆவணம்}
வெளியீடு –ஈழத்து இலக்கியச்சோலை,திருகோணமலை.



திருக்கோணமலை மாவட்டம் தன்னகத்தே கொண்ட பல கிராமங்களுள் ஒன்றான பழம் பெரும் கிராமமே தம்பலகாமம்.


திருக்கோணமலையில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் பாதையில் பத்தாவது கல் தொலைவில் இடது பக்கமாகத் திரும்பி ஒன்றரைகல் சென்றால் வருவது தம்பலகாமம்.


தம்பலகாமம் கிராமத்துள் கால் பதித்ததும், நம் கண்ணில் முதல் படுவது, பார்க்குமிடமெங்கும் வயல்வெளிகள், காலத்துக்குக் காலம் பசுமை நிறைந்து மரகதக் கம்பளம் விரித்தது போன்றும், செந்நெற்கதிர்கள் பூத்தும், நெற்கதிர்கள் மணிகள் நிறைந்து தலைசாய்ந்து காற்றினூடே அலை அலையாய் களனி நிரம்ப பொற்கதிர்கள் பரப்பும் எழிலும், தண்ணீர் தேங்கி நிற்கும்போது பெரும் குளமாகவும் காட்சிதரும்.



சற்றே தலை நிமிர்ந்து பார்வையை மேலே செலுத்து வோமேயானால், அங்கே ஆலயத்தின் வானுயர்ந்த கோபுரம் கண்ணிற் படும். அதுதான் ஆதி கோணைநாயகரின் ஆலயமாகும்.



கி.மு ஆறாயிரம் ஆண்டளவில் இராவணனால் வணங்கப் பெற்று, கால ஓட்டமாற்றத்தில் பல மன்னர்களின் திருப்பணியாலும், ஆலய புணருத்தாரணத்தாலும் பொலிவு பெற்று, பாரெல்லாம் கீர்த்தி பெற்று, திருமூலரால், ஞானசம்பந்தரால், அருணகிரிநாதரால் பாடல் பெற்று இருந்த திருக்கோணேஸ்வரம், 1624 ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் முதலாம் நாளாகிய புதுவருடத்தன்று, போர்த்துக்கேயரால் தகர்த்தப்பட்டுத்
தரைமட்டமாக்கப்பட்டது. அவ்வேளையில் அங்கு திருத்தொண்டு செய்து கொண்டிருந்தவர்கள் புனிதத் திருவுருவச் சிலைகளை நாலாபக்கமும் கொண்டு சென்று மண்ணிலும், கிணற்றிலும், காட்டிலும் போட்டு மறைத்து வைத்தனர். சில விக்கிரகங்கள் தம்பலகாமத்திற்கு மேற்கேயுள்ள ~~சுவாமிமலை|| என்று அழைக்கப்படும் இடத்தில் ஒழித்து வைத்து வழிபட்டனர். ~~கோணமலைக் கிழங்கு|| பெற தம்பலகாமம் வாசிகள் ~சுவாமிமலைக்| காட்டிற்கு செல்வது வழக்கம். அப்படிச் சென்ற காலை ஒருநாள், சுவாமிமலையில் விக்கிரகத்தோடு செப்பேடொன்றையும் கண்டெடுத்தனர். உடனே எடுத்துச்; சென்று சிவாலயத்தில் பிரதிஸ்டை செய்து வழிபடலாயினர். இவ்வாலயம் 340 ஆண்டுகட்கு முன்பு புதுப்பிக்கப்பட்டதென்றும், இவ்வாலயத்தில் இருக்கும் பழைய கோணேசர் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரென்றும், மாதுமையம்மை பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, சோழர் காலம் என்றும் ஆராட்சியாளர் கூறுகின்றனர்.




தம்பலகாமத்தில் ஆதி கோணைநாயகரைப் பிரதிஸ்டை செய்து வைக்கப்பட்ட இவ்வாலயம், கி.மு பதினெட்டாம் ஆண்டளவில் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் காலத்தில் நிறுவப்பட்டதென அறியக்கிடக்கிறது.



கோவில் குடிகொண்டிருப்பதன் காரணமாக இந்த இடத்தை ~~கோவில் குடியிருப்பு|| என்று அழைப்பர். ஆதிகோணைநாயகரை வணங்கித் திரும்புவோமேயாகில் நேராகவும், இடமாகவும் இருபாதைகள் பிரிந்து தம்பலகாமம் கிராமத்தை ஊடறுத்துச் செல்கின்றன.



இடை இடையே தென்னை மரச் சோலைகளும் சூழ, சுற்றிவர வயல்களைக் கொண்ட திடல் திடலாய்க் காட்சி அளிக்கும் குடியிருப்புக்களும், அழகுவிருந்தளித்து, வருபவர்களை அன்போடு வரவேற்கும் காட்சி காண்பதற்கினியதே.



இக்கிராமத்தில் உள்ளதிடல் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயருண்டு. கள்ளிமேட்டுத்திடல், வர்ணமேட்டுத் திடல், நாயன்மார்த்திடல், கரச்சித்திடல், சிப்பித்திடல், கூட்டாம்புளி, நடுப்பிரப்பந்திடல், குஞ்சடப்பன்திடல், முன்மாரித்திடல் எனப் பெயரிடப்பட்டுள்ளன.



இதன் இயற்கையமைப்பு இப்படிக் காணப்பட்ட போதிலும், இக்கிராம மக்கள், புராணரீதியாக குளக்கோட்டு மகாராஜாவின் வேண்டுகோளின் பேரில், கந்தளாய் குளத்தைக் கட்டிய பூதங்கள், மண் அள்ளிப்போட்ட கூடையைத் தட்டி விட்டதனாற்தான் இப்படித் திட்டுத் திட்டாக அமைந்துள்ளது என்று கருதுவர். 



இக்கிராமத்தை அண்டி ~~கப்பற்றுறை|| என்று ஓர் இடமும் உண்டு. இது பண்டைய நாட்களில் பல நாட்டில் இருந்தும் வருகை தந்த கப்பல்கள் கட்டி, வணிகம் நடத்திய துறைமுகமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. அஃது மட்டுமன்றி, இங்கு முத்தும் குளித்த இடமாகவும் கருதப்படுகின்றது. இதற்குச் சான்றாக, அங்கு சிப்பிகள் குவிந்து கிடப்பதை இன்றும் காணலாம். சுருங்கக் கூறின், இது ஒரு வணிகத் துறைமுகத்தைக் கொண்ட ஒரு பழம் பெரும் கிராமமென்றால் மிகையாகாது.




இக்கிராமம் இறைவழிபாட்டை மட்டும் கொண்ட கிராமமன்று. இங்கு ஆடல், பாடல், நாட்டுக்கூத்து, சிலம்பம், சீனடி போன்ற கலைகளும் சிறந்து விளங்கின. நாட்டுக்கூத்திற் சிறந்த அண்ணாவிமாரான கணபதிப்பிள்ளை போன்றோரும், பண்டிதர்களான சரவணமுத்து, புலவர் சத்தியமூர்த்தி போன்றோரும் இந்த மண்ணின் மைந்தர்களே.



இந்த மண் பல சான்றோர்களைக் கொண்டிருக்க வேண்டும். அவர்களது விபரம் அறியக் கூடாமல் இருப்பது நமது துரதிஸ்டமே. இல்லையெனில் ~~வெருகல் சித்திர வேலாயுத காதல்|| என்ற நூல் எப்படி பாடப்பட்டிருக்கும். இதனைப் பாடியவர் தம்பலகாமத்தின் வேளாளமரபிலுதித்த ஐயம் பெருமான் மகன் வீரக்கோன் முதலி என்பவராவர். இந்நூல் கண்டி நகராண்ட முதலாம் இராசசிங்கன் காலமான 16 ஆம் நூற்றான்டின் பிற்பகுதியில் பாடப்பட்டதென அறியக்கிடக்கிறது. (ஈழத் தமிழ் இலக்கியம் பக்கம் 35, 36, 37) இத்தகைய பெருமைமிகுந்த கிராமத்தில் குஞ்சர் அடப்பன் திடலில் முதுபெரும் எழுத்தாளரும், ஊடகவியலாளருமான க. வேலாயுதம் என்பவர் பிறந்தார்.




இக்கிராமத்தில் திடல்களின் பெயர்கள் அதன் காரணத்தின் பெயரிலேயே வைக்கப்பட்டன. ~~ஆதிகோணேஸ்வர ஆலய கங்காணம் என்னும் அதிகாரப் பணியாளரின் உதவிப்பணியாளர் அடப்பன் வேலையை குஞ்சர் என்ற பெயரை உடையவர் செய்து வந்தார். குஞ்சர் மிகவும் செல்வாக்குடன் பிரசித்த நிலையில் விளங்கியதால், ஆதிகோணேஸ்வர ஆலயத்துக்கு சமீபமாக உள்ள குஞ்சர் வாழ்ந்த ஊர்ப் பிரிவுக்கு, குஞ்சர் அடப்பன் திடல் என்ற பெயரே வழங்கலாயிற்று.|| இவ்வாறு ~~என் இளமைக்கால நினைவுகள்|| என்ற கட்டுரையில் திரு வேலாயுதம் அவர்கள் எழுதியுள்ளார். தொடர்ந்தும் தன் பிறப்பைப்பற்றி எழுதும் போது ~~இந்த ஊர்பிரிவில் கல்கியின், பொன்னியின் செல்வனின் தந்தை சுந்தரசோழரைப் போன்ற உருவ அமைப்பும் தேககாந்தியும் உள்ள வே. கனகசபைக்கும் பெரும் நிலச் சொந்தக்காரரான பெரிய வீர குட்டியாரின் நடுமகள் தங்கத்துக்கும் திருமண நிகழ்வால் 1917 ஆம் ஆண்டு நான் பிறந்தேன் என ஜாதகம் கூறுகிறது|| என்று எழுதியுள்ளார். இவரது தந்தையாரான கனகசபை எல்லாக் காரியங்களிலும் வல்லவராக இருந்தார். குறிதவறாமல் துப்பாக்கியால் சுடுவதிலும் வல்லவர்.



இவரது தாயாரின் மூத்தசகோதரி அபிராமிப்பிள்ளையின் கணவர் பத்தினியார். இவர் ஒரு பிரசித்த சுதேசவைத்தியர், பரியாரியார். சிறுவன் வேலாயுதம் தன் பாடசாலை தவிர்ந்த நேரமெல்லாம் நாயன்மார் திடலிலுள்ள இவனது பெரிய தாயார் வீட்டிலேயே தங்குவான். பெற்றோரைவிட, இவரது பெரிய தாய் தந்தையரே இவனை வளர்த்து வந்தார்கள் என்றால் மிகையாகாது, அந்த அளவிற்;கு இவர் மேல் அன்பாகவும் பாசமாகவும் இருந்தார்கள். 



அதே போன்று வேலாயுதனும் தன் பெரிய தாய் தந்தையரோடு பிரியமாகவும், அன்பாகவும், பாசத்தோடும் இருந்தான். இவனது தாயாரின் தந்தை, இவன் தந்தை, மாமா எல்லோரும் இவனது பெரிய தாய் தந்தையோடுதான் வாழ்ந்தார்கள். இது ஒரு கூட்டுக் குடும்பமாகவே இருந்தது. வேலாயுதம் இவனது பெரியம்மா பெரியப்பா விருப்பப்படி வைத்தியமும் கற்று வந்தார்.



இந்தக் காலகட்டத்தில்தான் இந்தியாவில் இருந்து ஆர்மோனிய வித்துவான் சின்னையா சாய்வும், மிருதங்க வித்துவான் மதாறிசாவும், பிற்பாட்டுக்காரர் கறீம்பாயும், தம்பலகாமம் வந்து நாயன்மாதிடலில் தங்கினார்கள். இவர்கள்
வேலாயுதத்தின் பெரியப்பா பெரியம்மா குடும்பத்தோடு நெருங்கிப் பழகியதன் காரணமாக, ஒரு குடும்ப உறவினராக மாறிவிட்டார்கள். இதன்
காரணமாக உள்@ர்க்காரர் சிலரையும் சேர்த்து ஒரு டிக்கட் டிராமா நடத்தினார்கள். திறமைசாலிகள் எனப் பெயரும் பெற்றார்கள். இதையடுத்து வேல்நாயக்கர், எஸ்.ஆர்.கமலம் ஆகியோர் வந்து சேரவே கோயில் குடியிருப்பில் தரமான பல டிராமாக்கள் நடைபெற்றன.




இந்தக்காலகட்டத்தில் தான் இவரது மாமா கதிர்காமத்தம்பி மதுரை நகரிலிருந்து வாங்கி வந்த ஆர்மோனியப் பெட்டியில் சின்னையா சாய்புவைக் குருவாகக் கொண்டு, வாசிக்கப் பழகினார். காலப்போக்கில் வேலாயுதமும் வாசித்துப் பழகுவதில் சேர்ந்து கொண்டு வாசித்தார். நல்ல தேர்ச்சியும் பெற்றார். வேலாயுதம் அவர்களின் குடும்பம் ஒரு சங்கீதக் குடும்பம், இவரது பெரிய தாயாரின் மகன் வேலுப்பிள்ளை, ஓர் சிறந்த ராஜபாட் நடிகன், ஒத்திகை இன்றி திடீரென்று நாடகம் நடிக்கும் ஆற்றல் கொண்டதன் காரணமாக, அனைவரும் அவரையே நாடி வருவர். இவர் நடிகர் மட்டுமன்றி ஒரு அண்ணாவியாருங் கூட. அத்தோடு ஆர்மோனியமும் வாசிப்பார். இவர் பழக்கிய கண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரமசிங்கன் என்ற சரித்திர நாடகத்தில் குமாரகாமியின் தங்கை ரஞ்சித பூஷணியாக வேலாயுதத்தை நடிக்க வைத்தார். இந்த நாடகத்தின் அனுபவத்தைப் பற்றி அவரது கட்டுரையின் வாயிலாகத் தருவதே சாலச்சிறந்தது.



இவர்கள் நாடகம் பழக்கப்படும் போதும், அரங்கேறும் நாடகத்துக்கு வருவது
போல், ஆண், பெண் பார்வையாளர்கள் அதிகமாகவே வருவார்கள். அண்ணாவியார் வேலுப்பிள்ளையின் வேண்டுதலின் பேரில், அதிகமாக நாடகங்களுக்கு வேலாயுதம் அவர்களே ஆர்மோனியம் வாசிப்பார். ஆரம்பத்தில் சனத்திரளைக் கண்டு பயந்த போதும் நாளடைவில் பயம் நீங்கி ஆர்மோனியம் வாசிப்பதில் வல்லுனர் ஆனார். கிண்ணியாவில் நடைபெறும் கல்யாண வீட்டுச் சமாவுக்கு (பாட்டுக்கச்சேரி) இவர்களை வண்டியில் அழைத்துச் செல்வார்கள். அங்கும் வேலாயுதம் அவர்களே ஆர்மோனியம் வாசிப்பார். அதையே அங்குள்ள முஸ்லீம் வாலிபர்களும் விரும்பினார்கள். இதைவிட, நளதமயந்தியில் தமயந்தியாகவும், மயில் இராவணனின் தங்கை தூரதண்டிகையாகவும் நடித்துள்ளார். அண்ணாவிமார்கள் திடீரென நடத்திய பவளக்கொடி நாடகத்தில், அர்ஜூனனின் மகனாக நடித்துள்ளார். எல்லா நாடகங்களிலும் வெற்றிகரமாகவே நடித்துள்ளார். இவரது ஆர்வம் நாடகத்திலும், இசையிலும் இருந்ததன் காரணமாக கூத்தாடித்திரிவதிலேயே காலம் கடந்ததேயன்றி, படிப்பில் கவனம் செல்லவில்லை. இவரால் ஐந்தாம் வகுப்புவரைதான் படிக்கமுடிந்தது. பெரும் பணக்காரரான இவரது மாமா கதிர்காமத்தம்பி, நன்றாகப் படிக்கும் ஆற்றல் உள்ள இவரை, இங்கிலாந்துக்கு அனுப்பிப் படிப்பிக்க எவ்வளவே பிரயத்தனம் செய்தார்.
மகனை பிரிய விரும்பாத இவரது அன்னையார், தன் சகோதரனின் அனைத்து முயற்சிகளையும் முறியடித்து, மகன் வேலாயுதத்தை தன்னுடனேயே தக்கவைத்துக் கொண்டார்.
அக்காலை, அவர் சந்தோசப்பட்ட போதும், பிற்காலத்தில் அதையிட்டு வேதனைப்பட்டார்.




திருவள்ளுவர், கம்பர் போன்ற மகான்கள் எத்தனை வகுப்புப் படித்தார்கள் என்று சொல்ல முடியுமா? என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு வகுப்பு ரீதியாக கற்காவிட்டாலும் முயன்று பார்க்கலாம் என்று எண்ணியே காலத்தைக் கழித்து விட்டார். கூத்துக்கலையின் ஆர்வத்தால் உந்தப்பட்டு கல்வியில் நாட்டம் குறைந்த போதும், இயல்பான இலக்கிய ஆற்றல் அவரை விட்டு மறையவில்லை. கலையில் தன் ஆற்றலால் எவ்வளவுக்கு மிளிர்ந்தாரோ அந்த அளவிற்கு இலக்கியத்திலும்,எழுத்து முயற்சியிலும் தன்னை வளர்த்துக் கொண்டார், உயர்த்திக் கொண்டார். 



~~மைந்தனைப் பறிகொடுத்து
மார்பினில் அறைந்தரற்றும்
பைந்தமிழ் அன்னைக் கிந்தப்
பாரினில் துணையுமுண்டோ
எந்தையே தமிழருக்காய்
இயன்றிடப் பாடுபட்ட
தந்தையே நின் பிரிவால்
தவிக்குதே தமிழர் நெஞ்சம்||



தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வன்னிய சிங்கம் அவர்கள் மறைந்த போது அவர் நினைவாக எழுதிய இது போன்ற மூன்று கவிதைகள் சுதந்திரனில் வெளிவந்தன. இதுவே வேலாயுதம் அவர்களின் இலக்கிய பிரவேசத்தில் முதல் அடி-படி. இவரது எழுத்துக்களுக்கு சுதந்திரன் முதற்கொண்டு, தினபதி சிந்தாமணிவரை களமமைத்துக் கொடுத்து அறிமுகப்படுத்தி வைத்து ஊக்கமளித்தவர், பத்திரிகைத்துறை மேதாவி அமரர் திரு.எஸ்.ரி.சிவநாயகம் என்பதை நன்றியோடு நினைவு கூர்ந்துள்ளார்.



இருந்தும் தனது அனேகமான கவிதை கட்டுரைகளை வெளிக்கொணர்ந்து தனது எழுத்தாற்றலை வளர்க்க உதவியது வீரகேசரி - மித்திரன் பத்திரிகைகளே என்பதை அவர் மறக்கவில்லை. ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு மேலாக வீரகேசரியில் தம்பலகாமம் பகுதி நிருபராகவும் அவர் சிறப்பாகக் கடமையாற்றினார். செய்திகளைச் சுடச் சுடத் தெரிவிப்பதில் அவர் அசகாய சூரனாக விளங்கினார். அவர் நிருபராகக் கடமையாற்றிய காலத்தில் ~~தம்பலகாமச்|| செய்திகளுக்கு ஒரு தனி மதிப்பு இருந்தது. வெறுமனே செய்திகளை மட்டும் எழுதாமல், கிராமத்தின் அத்தியாவசிய தேவைகளையும் அவற்றை எவ்வாறு தீர்க்கலாம் என்பதற்குரிய வழிவகைகளையும் கட்டுரைகள் மூலமாக தமிழ் கூறும் உலகிற்கு எடுத்துரைத்தார்.




தம்பலகாமம் மக்கள் அகதிகளாக சூரங்கல், கிண்ணியா போன்ற இடங்களில் அவலமாக வாழ்ந்த போது அதை வெளிச்சம் போட்டு வெளியுலகிற்குக் காட்டி உடனடியாக நிவாரணம் கிடைக்க வழி செய்தார். தம்பலகாமம் பொது வைத்தியசாலையில் இந்திய அமைதிகாக்கும்படை முகாம் அமைத்திருந்த போது அதை எதிர்த்து எழுதி, அங்கிருந்த முகாமை உடன் அகற்றி ஆவன செய்தார். தொலைபேசி இணைப்பு தம்பலகாமத்திற்கு விரைந்து கிடைப்பதற்கும் இவரது எழுத்தே காரணமாக அமைந்தது. இவ்வாறு சமூக நோக்கோடு அவர் செயற்பட்ட காரணத்தால், இலங்கை இராணுவ விசாரணை ஒன்றிற்கும் முகம் கொடுக்க வேண்டி நேர்ந்தது.




இவரது முதலாவது கதை, இந்திய குமுதம் சஞ்சிகையில் வெளிவந்தது. அதுமட்டுமன்றி இதற்கான சன்மானத்தை இவ்விதழின் இலங்கை ஏஜன்சி மூலம் இவருக்குக் கிடைக்கும்படி அனுப்பிவைத்தார்கள். அந்தக் கதை ~~சொல்லும் செயலும்|| என்பதாகும். அதுமட்டுமன்றி குமுதம் பக்தி இதழ் இவர் அனுப்பிவைத்த ஆதிகோணேசர் ஆலயத் திருவுருவை அழகிய முறையில் அதன் அட்டையில் பிரசுரித்து வெளியிட்டுள்ளது. இவரது ~~ஆடகசௌந்தரி|| என்ற கட்டுரையையும் குமுதம் வெளியிட்டுள்ளது.



திரு கரிகாலன் அவர்கள் ஆசிரியராக இருந்த காலச்சுடர் ~~தூய உருவில் உத்தமிகள், ~~சன்டியன் கதிராமர்|| போன்ற கதைகளையும், போட்டிக் கவிதைகளையும் பிரசுரித்திருந்தது. ஆத்ம ஜோதி என்ற இதழில் இவரது ~~உத்தமி|| என்ற கதையும், ஆன்மீகக் கட்டுரைகளும் வெளிவந்தன. இவரது ~~பேய்கள் ஆடிய இராமாயணம்|| என்ற கதையை சிந்தாமணி படங்களுடன் வெளியிட்டிருந்தது. ~~ஒரு பேயை நேருக்கு நேர் கண்டவரால், பேயின் கோரமுகத்தை விபரிக்கமுடியவில்லை|| என்ற கதை, வீரகேசரியில் படங்களுடன் வெளிவந்த போது, உள்ளூர் வாசகர் மட்டுமன்றி, வெளியூர் வாசகர்களும் இது உண்மையான கதையென்றே நம்பினர். சிலர் இவரைச் சந்திக்கும் போதெல்லாம் அந்தக்கதையில் வந்த பாத்திரமான ~~மாட்டுக்கார மாணிக்கம்|| இப்போதும் உயிருடன் இருக்கின்றானா? என்று வினாவியும் உள்ளார்கள்.




இவரது கவிதையாற்றல் அளப்பரியது. இயற்கையில் கண்ட காட்சிகளை தன்னை மறந்து ரசிப்பார். அந்த லயிப்பில் உலக வாழ்வின் நடைமுறை உண்மைகளைக் கலந்து அழகிய உரைநடை போன்று கவிதையில் தருவார். இயற்கை விநோதத்தில், இறைவனின் சிருஷ்டியை நினைத்து வியப்பார்.
இவர்களுக்கு நிறையப் பசுக்களும் எருதுகளும் உண்டு. வயல் அறுவடையானதும், இந்த மாட்டு மந்தைகளை, அந்த வயல் வெளிகளுக்கு மேச்சலுக்காக ஓட்டிச்செல்வார்கள். மேய்ப்பவர்களோடு இவரும் சென்று விடுவார். அப்படியான வயல் வெளிச் சூழலில் உதித்த கவிதைகள் அனேகம்.




ஒரு சமயம் இலுப்பையடி வெட்டுவான் களத்து மேட்டில் நின்ற வண்ணம், இயற்கையை ரசிக்கின்றார். ~~இந்த பரந்த உலகத்தையும் உயிர்களையும் தோற்றுவித்து, எந்த வித ஊதியமும் இன்றி ஒருவன் அலுப்புச் சலிப்பின்றி செயல்படுகின்றானே|| என்று இறைவனின் அற்புதப் படைப்பை எண்ணி வியக்கிறார். அடுத்த கணம் அவர் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுத்தது.


~~ஊதியம் கருதா ஒரு தொழில் நடக்குது
ஆதியில் நடந்த அவனியின் தோற்றம்
வேதனை கஷ்டம் விம்மல்கள் மகிழ்ச்சி
சோதனை பலவாய்த் தோன்றியதுலகம்||


என்று முதல் பாடலாகக் கொண்டு ~~அற்புத செயலே அவனியின் இயக்கம்|| என்ற தலைப்பில் பத்துப்பாடல்களை எழுதியுள்ளார். இப் பாடல்கள் வீரகேசரியின் புத்திரனான மித்திரனில் வெளிவந்தது. இவரது கவிதை உள்ளம் வெறுமனே இயற்கைக் காட்சிகளை மட்டும் ரசிக்கவில்லை. அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றிச் சூழவுள்ள உயிரினங்களின் அசைவுகளிலும், ஒன்றை ஒன்று கொத்திக் குலாவி கொஞ்சிமகிழ்வதைக் காணும்போதும், கற்பனை ஊற்றுப் பெருக்கெடுத்து அற்புதக் கவிதைகளாக ஓடத் தயங்கவில்லை. வீட்டு முற்றத்திலும், குப்பை மேட்டிலும், கொத்தி இரைதேடும் பேடும் சேவலும் இவர் பார்வையில் படுகிறது. பொழுது போனதும், நல்ல கணவன் மனைவிபோல் கூட்டில் தங்கி, காலையில் ஜோடியாக வெளிவருவதைக் கண்டார். இந்த ஜீவன்களிடையே மறைந்து கிடக்கும் ஐக்கிய உறவு அவர் உள்ளத்தில் படுகின்றது. உலகத்து நடைமுறைச் செயற்பாடுகளும் அவர் கண்முன் தோன்றி மறைகின்றது. கவிதை சுரக்கின்றது அந்த ஜோடிகள் பேசுகின்றன.




பெண்கோழி 

நெஞ்சடைக்கக் கொக்கரித்து
நீங்கள் இடும் கூச்சலினால்
பஞ்சணைபோல் கூடுதனில்
படுத்துறங்கும் என் துயிலைக்
கொஞ்சமேனும் நோக்காது
குழப்புகிறீர் என் துரையே.


சேவல் 

அஞ்சுகமே! என்னுடைய
அழகான பெண் மயிலே!
மிஞ்சி ஒளி வீசி வரும்
வெய்யோன் வரவுதனை,
வஞ்சனை எதுவுமின்றி
மாந்தர்க் குணர்த்துகிறேன்.


கோழி 

கடமை கடமை என்று
கத்துகிறீர் கண்ணாளா!
மடமையால் மானிடர்கள்
மறந்துநம் உதவிகளை,
கடையர் போல் நமைக்n;கொன்று;று
கறிசமைத்து உண்பவர்காண்.


சேவல் 

அவர் அவர் செய்வதற்கு
அதன் பலனைக் காண்பார்கள்.
கவனமாய் நம் கடமை
கழித்து விட்டால் கண்மணியே,
தவம்வேறு ஏன் நமக்குத்
தர்மம் தலை காக்கும்........



~~தர்மம் தலை காக்கும்|| என்ற தலைப்பில் எழுதிய மேற்கண்ட கவிதைகள் வீரகேசரியில் பிரசுரமாகி வெளிவந்தன. இந்த தர்க்கக் கவிதையைப் பாராட்டிப் பாராட்டுகள் தெரிவித்திருந்தார்கள் பலர். இது போன்று இன்னொரு சம்பவம்.


வட்டத்தனை வயல் பகுதி நெளிந்து வளைந்து கங்கை போல் ஓடிவரும் பேராறு, கண்ணையும் மனதையும் கொள்ளை கொள்ளும் சூழல். அங்கு கிளைபரப்பி நிற்கும் மருத மரங்கள், கூட்டம் கூட்டமாக வந்தமர்ந்து கொஞ்சு மொழி பேசும் பச்சைக் கிளிகள், மாலை ஆனதும் வயல்களில் உள்ள கதிர்களை இரவுச்சாப்பாட்டிற்காக அறுத்துக் கொண்டு சுவாமிமலைக்காட்டில் தங்கும் ஆலமரத்துக்குக் கொண்டு போவதையும், விடிந்ததும் கிளிகள் கதிர் கொய்ய வட்டத்தனை வயல்வெளிக்கு வருவதையும் கண்டார். உள்ளத்தில் கற்பனை ஊற்றெடுத்தது. அழகிய காதல் கதை பிறந்தது.



ஜோடிக் கிளிகளில் ஆண் கிளி காச்சலால் வாடியது. பெண்கிளி அதனை மரத்திருத்தி வயலுக்கு வந்து கதிர் அறுத்துக் கொண்டு நின்றது. ~~பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்|| என்ற பழமொழிக்கமைய, நெல் அறுத்துக் கொண்டிருந்த கிளியின் கண்ணில், நெல் கதிருடன் மறைந்திருந்த முள் தைத்துவிட்டது. தன் கணவன் நோயுற்றிருக்கும் இவ்வேளையில் தனக்கு இப்படி ஒரு கேடு வந்து விட்டதே, எனறு எண்ணி அலறித் துடித்தது. (கத்திக் கதறியது).



சற்று தூரத்தில், தன் பேடையுடன் இரை பொறுக்கிக் கொண்டிருந்த ஆண் கிளி, பறந்து வந்து, முள் தைத்த பெண்கிளியின் கண்ணுக்கு மருந்திட்டு உபசாரம் செய்கிறது. இதைக்கண்ட அதன் பெண்கிளி கோபங்கொண்டு, சுவாமிமலைக் காட்டிற்குப் பறந்து சென்று, நோயுற்று மரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் ஆண்கிளியிடம், ~~உமது பெண்ணும் எனது ஆணும் வயலில் நடத்தும் சல்லாபங்களைப் பார்க்க முடியாமல் வந்து விட்டேன், என்று கோள் சொல்கின்றது. 


மாலையானதும் எல்லாக் கிளிகளும் பறந்து வந்தன. முள் தைத்த
கிளியும் தன் ஆண்கிளியிடம் வந்தது. இருவருக்கும் இடையே ஒரு ஊடல்

ஆண்கிளி :

 காய்ச்சலால் நான் இங்கு படுத்திருக்க
கதிர் கொய்ய வயலுக்குப் போயிருந்தாய்
வாச்சது சந்தர்ப்பம் என்று மகிழ்ந்து
மாற்றானின் உறவில் மயங்கினாய் போ


பெண்கிளி : 

என்ன புதிர்போட்டுப் பேசுகிறீர் அன்பே
ஏற்குமோ இத்துயர் வார்த்தையெல்லாம்
என்னைச் சிறுமையாய் ஏசிட உங்கட்கு
எவர் செய்த போதனை கூறிடுங்கள்.


ஆண்கிளி : 


அந்தக் கிளியின் பெண் வந்து என்னிடம்
அறிவித்தாள் உங்கள் லீலைகளை.
சொந்தம் இனி இல்லை, இங்கே வராமல்
தூர எங்கேயேனும் சென்று விடு


பெண்கிளி : 

கதிர் கொய்யும் போ
தெந்தன் கண்ணிலே முள்;பட்டு
கலங்கித் தவித்த வேளையிலே
உதவிக் கோடிவந்து உபகாரம் செய்த
உத்தமரைப் பழி கூறலாமோ?


ஆண்கிளி :

 அன்புள்ள என் மனைக் கிழத்தியே நீ என்
சஞ்சல மனதைப் போக்கி விட்டாய்.
பண்புள்ள ஆடவர் பழக்கத்தால் மாதர்க்குப்
பழுதொன்றும் வாராதென்று உணர்த்தி விட்டாய்.



இந்த உரையாடல் ~~பண்புள்ள ஆடவர் பழக்கத்தால் மாதர்க்கு பழுதொன்றுமில்லை|| என்ற மகுடத்தில் வீரகேசரியில் வெளிவந்தது. இது மட்டுமன்றி தம்பலகாமம் ஆதிகோணை நாயகர் பெருமான் மீதும் அருட்பாக்களும் பாடியுள்ளார். ஆதிகோணேஸ்வரப் பெருமான் ஆலயத்தில் திருவிழா காலங்களிலும், விசேஷ தினங்களிலும், சுவாமி முன் நர்த்தனம் ஆடும் பழக்கம் பண்டு தொட்டு இருந்து வருகிற கிரியை. முன்பு மாணிக்கமென்பாள் இவ்வாடலை ஆடியதால், இவளுக்கு மானியமாக நாலு ஏக்கர் வயல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வயற் காணியை ~~மாணிக்கத்தாள் வயல்|| என்றே அழைப்பர். இந்த நிகழ்வின்போது பாடப்படும் பாடல், திருஞானசம்பந்த நாயனாரால் திருக்கோணமலையில் குடிகொண்ட கோணேஸ்வரர்மேல் பாடிய தேவாரமான ~~கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே|| என முடியும் பதிகம் பாடப்படும். இந்தப் பாடலுக்குத்தான் அந்த நர்த்தகி அபிநயிப்பாள். கோயில் குடியிருப்பில் கோயில் கொண்ட பெருமானுக்கு, கடலுடன் சூழ்ந்த கோணமாமலை எனும் பதிகத்தை பண் இசைத்துப்பாடி நடனமாடுவது சரியாகுமா? அப்படிப் பாடுவதானால் ~~கோயில் குடியிருப்பு அமர்ந்தாரே|| என்று பாடுவதுதானே சரியாகும்? அவர் உள்ளம் இதற்கு விடைகாண விழைந்தது. தெய்வ அருளால் திருத்தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரர் கோயிலுக்கு புதிய பதிகத்தைப் பாடினார். அவற்றைத் தொகுத்து ~~தம்பலகாமம் கோணைநாயகர் கோயில் பதிகம்|| என்ற தலைப்பில் ஒரு நூல் வடிவாக அச்சிட்டு வெளியிட்டிருந்தார் ஆதிகோணேஸ்வரர் ஆலய கணக்கப்பிள்ளை திரு. கோ. சண்முகலிங்கம் அவர்கள்.



எழுத்துத் துறையில், என்று கால்பதித்தாரோ, அன்றில் இருந்து இன்றுவரை, தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்கள். இவருடைய கட்டுரைகள் தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, மித்திரன் போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்தும் வெளிவந்தன. வந்து கொண்டுமிருக்கின்றன. தன் மனதிற்குச் சரியென்ற கருத்துக்களை சொல்லத்தயங்கியதே கிடையாது. ~~அமெரிக்காவைக் கண்டு பிடித்தவர் கொலம்பஸ் அல்ல|| என்ற கட்டுரையை தினகரனில் எழுதியிருந்தார்.



ஈடு இணையற்ற ஈழவேந்தன் இராவணன்மேல் மாறாப்பற்றும் பாசமும், குன்றாத மதிப்பும் கொண்டவர் வேலாயுதம் அவர்கள். ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் நேயமுடன் கற்ற மாவீரன். தன் மனவைராக்கியத்தாலும், அசைக்க முடியாத பக்தியாலும், இறைவனையே நேரில் கண்டு, பல வரங்களும், வீரவாளும் நீண்ட ஆயுளும் பெற்றவன் இராவணன் - மனம் பொறுக்க முடியாதோர் அவன் மீது மாசு கற்பித்த போது பொறுக்கமுடியாமல், மனம் பொங்கியெழ தர்க்கமுடன் பல கட்டுரைகள் எழுதித்தள்ளியவர் வேலாயுதம். வித்தைக்கதிபதி இராவணன், எனவே அவனை வித்தியாதரன் என அழைப்பார் என்றும் ~~தமிழன் வீரம் கண்டு காழ்புணர்வு கொண்டோர்கள் தமிழனுக்கு வைத்த பெயர் அரக்கன்||என்று வீராவேசமாக கடடுரை புனைத்தார் பத்திரிகையில

No comments:

Post a Comment