Friday 15 October 2010

மறுபடியும்

ஆண்டு ஒன்று
ஆகவில்லை.

இன்று
நியாயம் பற்றி
பேசுவதற்கு
ஏது இடம்?

நியாயங்கள் புதைக்கப்பட்ட
குழியில்
நிமிர்ந்து வளர்ந்திருக்கு
அநியாய மரங்கள்.

விருட்சமாகி
வேரூன்றி
விழுதுகளுமல்லவா விட்டுள்ளன.

சொந்தங்கள் என்று
சொல்வதற்கும்
உறவுகள் என
உணர்த்துவதற்கும்
காலம் நேரம் பார்த்து
இராகு காலம் விடுத்து
மரண யோகம் தவிர்த்து
சுபநேரம் தேடி
சொல்லவேண்டியுள்ளதே?

தவறுதலாகவேனும்
பஞ்சாங்கம் பார்க்காது தொடங்கினால்
எடுத்த காரியம் எதுவென்றாலும்
நொடிப்பொழுதில்
முடிந்துவிடும்.

வீட்டு வாசலில் நின்று
உள்ளே செல்லாதே!
என மறுக்கப்படும்.
நம் ஊர்க் காற்றைக் கூடஅருகில் நிற்பவருக்குத்
தெரியாமல்  சுவாசித்துக்கொள்.

அறிந்தால்

உள்ளே இழுத்த காற்று
வெளியே வருவது சந்தேகம்.

காரணம்,
 சுபநேரத்தில்
நீ சுவாசிக்கவில்லை.

நீ வளர்த்த
பசுக்களைப்பார்.
ஆனால்
அத்தோடு திரும்பிவிடு.
மீண்டுமொரு தடைவ
பார்க்காதே.
பார்த்ததால்
உனக்குச் சகுனம்
பிழைத்துவிடும்.

ஓடித்திரிந்த
உன்
விளையாட்டு முற்றம்
புல் பூண்டுகளால்
மூடியுள்ளது
பி;ச்சைக்காரனின்
முகத்தை மூடிய
தாடியைப்போல.

சவரம்செய்ய
நினைக்காதே.
சகுனம் பிழைத்தால்
சவரக் கத்தி உன் உதட்டை
வெட்டிவிடும்.

இப்போதெல்லாம்
இருட்டுக்கள் என்பதே
மறந்தவிட்டது.

வானத்தில் நட்சத்திரங்கள்
பார்த்து
        நித்திரைக்குமுன்
நிலாவைக் காட்டி
உணவூட்டும்
அன்னையின்
எண்ணங்களெல்லாம்
மறுக்கப்பட்டுவிட்டன.

சேவல்
அதிகாலையில் கூவுகின்றது.
ஆனால்
கோழியின் கூவலாகத் தெரிகிறது.

உயர் கல்விக்காய்
வாழ்வில்
கால் நூற்றாண்டு
கரைந்தபோது
வெட்டுப்புள்ளி
வீழ்த்திவிடுகிறது.

எழுந்துநின்று
இனியென்ன செய்வது?
வேலைக்காவது
போவோம் என்றால்
நீண்ட வரிசை நெடுநாளாய்க்
காய்ந்த நிலையில் நிற்கிறது.

தலையில் கறுப்புத் தொப்பி
கையில் பட்டச் சுருள்.

சரி

மண்வெட்டியைத் தூக்கி
வயலுக்குச் செல்வோம் என்றால்…
கௌரவம் கலைக்கிறது.

ஓடியபோது
உனக்கேது காணி

அது…… அது….

அந்தப் பக்கமல்லவா?
திரும்பிப்போ.
என்கிறது மனசாட்சி.

இனிமேல்
கிளிக்கூடுகளும்
மைனாக் கூடுகளும்
செய்பவர்கள் வேண்டாம்.

அவற்றை
அடைத்துவைத்ததால்
அவை போட்ட
சாபங்கள்
பலிக்கத்  தொடங்கிவிட்டனவோ?

மாடுகளை
வண்டிலுக்காகவேனும்
அடிமைப்படுத்தாதே.

அவைகளும் சொல்லியிருக்கும்
தங்கள் வேதனைகளை.

கடற்காற்று  வேண்டாம்.
ஆற்றுக்காற்றே போதும்.
அதில் சுவாசிப்போம்.

சுறா மீன்களும் பாரை மீன்களும்
வேண்டாம்
யப்பானும், செல்வனும் இருக்கட்டும்.

தென்னங் கன்றுகள் நடவேண்டாம்.
பாதியில் பன்றிகள்
பதம் பார்த்துவிடும்.

கடி வெடி  வைத்தால்
முள்ளம்பன்றிகள்
பொறுக்கி மூலையில்
குவித்துவிடும்.
கழனியை ஊற்றாதே
கறி சமைக்க உதவும்.

வாழ்வில்,
கல்வியில்,
தொழிலில்,
உணவில்,
பேசுவதில்,
நடப்பதில்,
சிரிப்பதில்,
கதைப்பதில்,
நியாயங்களைக்
கேட்க நினைக்காதே.

இலவசமாக
எயாடெல் சிம் மட்டும்
ஏராளம் வாங்கலாம்.
இங்கு மட்டும்
அவை
மறுக்கப்படாது,      உனக்கு
தேசிய அடையாள அட்டை
இருந்தால்மட்டும்.

அட்டை இல்லையெனில்
அங்கு உன் நியாயங்கள்
ஏற்றுக்கொள்ளப்படாதவைகளல்லவா?

சளைத்துவிடாதே.

விழுவதெல்லாம்
மீண்டும் எழுவதற்கே
அன்றேல்
மரத்திலிருந்து விழுந்த
ஆலம்வித்து
மீண்டும் விருட்சமாகுமா?

எழுந்திரு

நியாயங்கள் என்றும் அழியாதவை.
கிடைக்கும்வரை சோராதே.


தூக்கணாங்குருவிக் கூட்டை
ஒருமுறை
சிந்தித்துப்பார்.
அதனால் முடியுமென்றால்
ஏன்
உன்னால்………

குரங்குகள் சிதைத்துவிடுமென்று
அவை
கூடுகட்டவில்லையா?
சிக்கலை விடுவித்துப்பார்.

திருப்தி தோன்றும்.

உன்னால் முடியாதது
ஏதுமிருக்காது.
இது நெப்போலியன் கூற்று.

“தர்மத்தின் வாழ்வுதனை
சூது கௌவும்     மறுபடியும்
தர்மமே வெல்லும்”



சேனையூர்.இரா.இரத்னசிங்கம்
2010-10-11

No comments:

Post a Comment