Saturday, 15 July 2017

கல்வியாளரும் இலக்கிய வாதியுமான திருமிகு.D.G.சோமசுந்தரம்

கல்வியாளரும் இலக்கிய வாதியுமான திருமிகு.D.G.சோமசுந்தரம்

மூதூர் பிரதேசத்தில் கல்வி மறு மலர்ச்சிக்கு வித்திட்டவர்களில்
ஒருவர்.சம்பூர் மகாவித்தியாலையத்தின் பெருமை மிகு வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்.
மட்டக்களப்பு குறுமண் வெளியில் சோமசுந்தரத் தேசிகர் அவர்களின் மகனாக பிறந்த அன்னார் களுதாவளை மகா வித்தியாலையம்,பட்டிருப்பு மகா வித்தியாலையம் ஆகியவற்றில் ஆசிரியராகவும் பின்னர் தோப்பூர் மகாவித்தியாலையம் ,மூதூர் மத்திய கல்லூரி,சம்பூர் மகா வித்தியாலையம் திருகோணமலை புனித வளனார் வித்தியாலையம் ,ஆகியவற்றில்அதிபராக சிறப்பாக பணியாற்றி கல்வியதிகாரியாக கடமையாற்றி ஓய்வு பெற்றவர்
இவர் ஒரு இலக்கிய வாதியும் கூட மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர்.செய்யுள் இலக்காணத்தின் அடிப்படையில் முறை சார் இலக்கியம் படைக்கும் திறன் மிக்கவர்.
அன்றைய தினபதி,சிந்தாமணி பத்திரிககளில் இவரது இலக்கியப் படைப்புகள் பல வெளி வந்துள்ளன.''வெற்றியின் வழி'' எனும் இவரது கவிதைத் தொகுப்பு ஈழத் தமிழ் இலக்கிய மரபில் ஒரு வேறுபட்ட முகம் காட்டி நிற்கிறது.

பல்கலைச் செம்மல் கலாபூசணம் வில்லுப்பாட்டு.கா.வீரசிங்கம்

பல் கலைச் செம்மல் என்று சொல்வதற்கு எல்லாத் தகுதிகளும் பெற்றவர்

சேனையூர் கிராமம் தந்த மா கலைஞன்


நடிப்பு,நாடக எழுத்து,ஒப்பனை,நாடக இயக்கம் என நாடக அரங்கின் எல்லாத் துறைகளும் அவருக்கு அத்துப் படி.
பாரம்பரியமான புலவர் பரம்பரையின் வாரிசு வைத்தியர் பூசாரி என தொடரும் பரம்பரை அறிவின் தொடர்ச்சி .
மூதூர் பிரதேசத்தில் முதன் முதல் வில்லுப் பாட்டை அறிமுகப் படுத்திய பெருமை இவரையே சாரும்.அன்றய நாட்களில் இவர் வில்லுப் பாட்டு இல்லாமல் கோயில் திருவிழாக்கள் நடந்ததில்லை எனலாம்.
நடிகனாக மேடையில் ஏற்ற பாத்திரங்களில் சிவாஜிக்கு சவால் விடும் நடிப்பாற்றல்,கர்ணனாக,அரிச்சந்திரனாக,சிவனாக என எத்தனை பாத்திரங்கள் என்றும் நடிப்பின் மூல பாடமாய்.
கவிஞர்,பாடகர் ஆடல் வல்லாளர்.நாதஸ்வரம் வாசிக்கும்திறன் தச்சு வேலை,மேசன் வேலை கற்றவர்.சிற்பங்கள் படைக்கும் கலைஞன்.
என்ன தெரியாது இவருக்கு இத்தனை ஆற்றல் கொண்டவர்கள் பிறப்பது அரிது
கோடியில் ஒருவருக்குத்தான் இத்தகைய திறன்கள் வாய்க்கும்.
கண்பார்த்தால் கை செய்யும் என்ற நம்பிக்கை கொண்ட படைப்பாளி .நடிப்பில் சிவாஜியாய் பாட்டில் செளந்தரராஜனாய்,கவியில் கம்பனாய் வாழும் மகா கலைஞன்.
கலாபூசணம்,ஆளுனர் விருது என பல விருதுகளுக்கு சொந்தக் காரர்

சேனையூர்இயற்றை தன் அருட்கொடைகளினால் அள்ளித் தெளித்திருக்கும் வண்ணக் கோலம் எங்கள் சேனையூர். முல்லை, மருதம், நெய்தலொடு குறிஞ்சியின் காடுகளுடன் விரியும் அழகு நிலம் மாவலியாறும் கடலும் ஒருசேர சங்கமித்து சிற்றாறாய் பெருகி எம்மூரை வட்டமிட்டு களியோடைகளாய் காட்சிப்படும் எங்கள் ஊர் கரையோரம் எங்கும் கண்ணா மரங்களின் கூடல் கண்ணாவும் களியோடையும் எங்கள் மண்ணின் அழகின் உச்சங்கள்.

ஆற்றோரம் எங்கும் அழகிய குடியிருப்புக்கள், குடியிருப்புக்கள் தோறும் சிறிய சிறிய துறைகள். துறைகளையண்டி சேம்பும் வெருகும் விளைந்து நிற்கும் புன்னைமரங்கள் பூப்பூத்து சொரியும். பறவைகள் தங்கள்

சரணாலயமாய் கூடுகட்டி குஞ்சுகளுடன் வாழும். மந்தியொடு சிறுவன் குரங்குகள் மகிழ்ந்து விளையாடும். பின்னர் சீறிக்கொண்டு சினந்து கீச்சிடும். வில்லாய் வளைந்த கண்ணா விழுதுகள் கால்களாய் நீண்டு காடாய் பெருகும். யுத்தகாலத்தில் எத்தனை உயிர்கள் இங்கு தப்பிப் பிழைத்தன. தஞ்சமளித்த தனிப்பெரும் சோலை.
வளவுகள் ஒவ்வொன்றும் வளத்தின் சாட்சி. தென்னையும் மாவும் தேனுறு பலாவும், புன்னையும் வாழையும் வானுறு கமுகும் என்னமாய் இருக்கும். எவ்வளவு அழகு வாயில்கள் தோறும் பவளமல்லியும், நந்தியவட்டையும் செவ்வரத்தையும், வாடாமல்லியும், அடுக்குமல்லியும், நித்திய கல்யாணியும் நித்திலமாய் பாய்விரிக்கும். சேனையூர் எங்கும் அழகின் ஆட்சி.

ஒரு பிரதேசத்தின் வரலாறு என்பது வெறுமனே எழுத்தாதாரங்களுடன் மட்டுப்படுத்தப்படுவதல்ல. வரலாறு பற்றிய நவீன ஆய்வுகள் மக்கள் வாழ்வியலையும் பண்பாட்டையும் தொண்மை வரைவியல்களையும் கணக்கில் எடுத்துக்கொள்வதாயுள்ளவை. பழ மரபுக் கதைகள், நம்பிக்கைள், பாடல்கள், பழமொழிகள் என்பனவற்றின் கூட்டாக வரலாறு இன்று பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆபிரிக்க மக்களின் வரலாறு அண்மைக்காலங்களில் இந்த அணுகுமுறையிலேயே வரைவு செய்யப்படுகின்றன. சேனையூர் மக்களும் பல்லாயிர வருச வரலாற்றுக்கு சொந்தக்காரர்களே. இப்பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்கள், தமிழர் மரபைப் பேணுகின்ற நடுகற்கள், கிறிஸ்து சகாப்தத்தோடு தொடர்புடைய புராதன குளங்கள், கறுப்பு - சிவப்பு மட்பாண்டங்கள், குன்றுகளை அண்டிக் காணப்படுகின்ற மனித நாகரிகத்தின் எச்சங்கள் என்பன சேனையூரின் பழைமையை பறைசாற்றி நிற்கின்றன.
உலக நாகரிகங்கள் எல்லாமே நதிக்கரைகளிலும் ஆற்றோரங்களிலும் களிமுகங்களிலும் முகாமிட்டு வளர்ந்துள்ளன. சேனையூரின் நாகரிகமும்
ஊற்றடியில் ஊற்றிட்டு களியோடையில் காலூன்றிய நாகரிகமாகவே வளர்ந்துள்ளது. மாவலியாறும், வங்காள விரிகுடா கடலும் சங்கமிக்கும் ஆறு சேனையூருக்கு வளம் சேர்த்து வரலாற்;றை உறுதிப்படுத்தி நிற்கிறது.
வரலாறு என்பது, புனைவு அல்ல. அது மக்கள் வாழ்வை அடையாளங்களிலும் பண்பாட்டிலும் வெளிப்படுத்த வேண்டும். சாண்டில்யன் கதைகள் எல்லாம் வரலாறு அல்ல. அவை வரலாற்று புனைவுகள். கற்பனைகள். கற்பனைகள் ஒரு போதும் வரலாறாகிவிட முடியாது. அதுபோல் இட்டுக்கட்டுவதும் வரலாறாகிவிட முடியாது.

“பரிவாரமுடனே எல்லாளன் வந்து இறங்கினான் அன்று இலங்கை துறையில்
படைகளை நகர்த்தி வருகிற போது இடையில் கண்டான் எம்மூர்தன்னை
மருத மரங்களின் விரியுடை சேனையை பெரு மன்னன் கண்டு தாகம் தணிய தண்ணீர் அருந்தி களைப்பது நீங்கி பூத்துக்குலுங்கி பூமணம் வீசி மாங்குயில் பாடி மகிழ்ந்திடும் ஊரில்
ஆற்றம் கரையில் அழகிய மருதநிழலில் களைத்து கிளைத்து கருநடை நடந்து வந்த தன் சேனை குலைந்து போகாமல் கொண்டுவந்து மருத நிழலில் வைத்தான் அன்று
மருத நிழலில் சேனையை வைத்தால் மருதடிச்சேனை எனும் பெயராயிற்று
மருதடிச்சேனை என வழங்கிய அப்பெயர் குன்றிக் குறுகி சேனையூராகி சென்றது பலகாலம் நின்று நிலைத்தது அந்தப் பெயரே” தொன் மங்களினூ டு இங்கு வரலாறு பயணிக்கிறது.

தௌ;ளு தமிழ் சொல் உச்சரிக்கும் போதே உவகை உச்சிவரை முட்டும் முன்னோர்கள்
எம் முன்னோர்க்கும் முன்னோர்கள்
வாழ்ந்து வந்த எங்கள் வளம் கொழிக்கும் கிராமம்
ஏழைகட்கு வாழ்வளிக்கும் வளத்தை வாரி தான் சுமந்து உப்பு நீர் கடலிருந்து உட்புகுந்து வளைந்து நெளிந்து
முப்புறமும் சூழ்ந்து எப்பொழுதும் அரணாக இயற்கை தந்த கொடை
பழந்தமிழ் மணம் வீச பண்பாடு சுமந்து
பண்போடு கலாசார பெருமைகாத்து முத்தமிழ் கலை வளர்த்து புத்தெழுச்சியோடு
உத்வேகம் கொண்ட உயிர்த்துடிப்புள்ள கிராமம்”
சேனையூரின் வரலாற்றையும் பண் பாட்டையும் பறைசாற்றி நிற்கிறது இக்கவிதை.

“மீகாமனுக்கு மிக்க வரம் கொடுத்து நாகமணி வாங்க நயந்தாய் அருள்தருவாய்”
வரிகள் மீகாமப் பரம்பரையினரின் இருப்பையும் வரலாற்றையும் உறுதிப்படுத்துகின்றன.
சோழப் பேரரசு இலங்கையில் ஆதிக்கம் செலுத்திய பொழுது, அவர்கள் செல்வாக்குக்கு உட்பட்டதாயிருந்தமையை பல சான்றுகள் நிரூபிக்கின்றன. வீரபத்திரன் கோயிலில் இன்று காணப்படுகின்ற கல் தூண்களோடு பொலநறுவை சிவாலயம் போன்ற அமைப்பு இருந்தது. அவை அகறப்பட்டு இன்று தூண்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. 1979ம் ஆண்டு இதனை ஆய்வுசெய்த பேராசிரியர் இந்திரபால இது சோழர்கால சிவன் கோயில் என்பதை உறுதிப்படுத்திச் சென்றார்.
தொடர்ந்து, போர்த்துக்கீசர் வருகை ஒல்லாந்தர் வருகை என்பனவற்றோடு சேனையூர் வரலாறு தொடர்புபடுகிறது. இவையெல்லாம் தனியனாகப் பார்க்க வேண்டிய விசயங்கள்.
ஒல்லாந்தர் இலங்கையில் ஆட்சிசெய்த பொழுது அந்தந்தப் பிரதேசத்;தில் இருந்த நிர்வாக முறைகளை உள்வாங்கிக்கொண்டு ஆட்சி செய்தனர். கோணேசர் கல்வெட்டு கொட்டியாரத்திலிருந்த ஏழூர் அடப்பன் பற்றிப் பேசுகிறது. அந்த ஏழூர்களில் சேனையூரும் ஒன்றாக இருந்திருக்கிறது. சேனையூரில் கடைசிவரை அடப்பன் முறை பயன்படுத்தப்பட்டிருந்தது. கடைசி அடப்பனாக திரு.குமாரவேலி அவர்கள் இருந்தார்கள். 1970களில் அவர் இறக்கும்வரை அடப்பன் என்றே அழைக்கப்பட்டார். உதாரணமாக விளக்கீடு நடைபெறும் நாளில் சம்பூர் பத்திரகாளி கோயிலிலிருந்து அம்மன் முகம் வீடுவீடாக காணிக்கைக்காக எடுத்துவரப்படும் போது பறை மேளத்தோடு இணைந்ததாக அந்த வரவு இருக்கும். முதலில் அடம்பனார் வீட்டுக்குச் சென்று பறையடித்துதான் காணிக்கையை தொடங்குவார்கள். இது ஒரு மரபின் தொடர்ச்சி.
பிரித்தானியர் இலங்கை வந்த பொழுது இலங்கையெங்கும் பாடசாலைகளை அமைத்தனர். மெதடிஸ்த மிசனரிமார் இந்த பணியினைச் செய்தனர். 19ம் நூற்றாண்டில் இப்பாடசாலைகள் அமைக்கப்பட்டன. அப்படி அமைக்கப்பட்ட பாடசாலையே சேனையூர் மெதடிஸ்த மிசன் பாடசாலை. (இன்றைய கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயம்)
பிரித்தானியர் காலத்திலேயே பொலிஸ் விதான் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கொட்டியாரப் பிரதேசத்தின் பழமையான புராதன கிராமங்களிலேயே இம்முறை பயன்பாட்டுக்கு வந்தது. அந்தவகையில் பொலிஸ் விதான் மருதடிச்சேனை என்ற முறைமை 1960களில் கிராமசேவையாளர் முறை அறிமுகப்படுத்தப்படும் வரை அமுலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. கடைசி பொலிஸ் விதானையாராக இருந்த திருவாளர சிவபாக்கியம் அவர்கள் வீட்டில் “பொலிஸ்விதான் மருதடிச்சேனை” என்ற அறிவிப்பு பலகையை நான் பார்த்திருக்கிறேன்.
இலங்கையின் வரலாற்றுப் பதிவுகளில் செப்பேடுகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. சேனையூர் வர்ணகுலப்பிள்ளையார் கோயில் வரலாற்றுப் பதிவை பொன்னாச்சியின் செப்பேடு உணர்த்தி நிற்கிறது. யுத்த சூழ்நிலையில் செப்பேடு காணாமல் போனாலும், இச்செப்பேடு பற்றி திருகோணமலை கோயில்களின் திருத்தல வரலாறு என்ற நூலில் பண்டிதர் வடிவேல் அவர்கள் இதனை சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
சேனையூரின் வரலாற்றை மேலும் உறுதிப்படுத்தும் பண்பாட்டியல் அடையாளமாக சேனையூர் நாகதம்பிரான் ஆலயம், சேனையூர் வீரபத்திரன் ஆலயம், சேனையூர் சம்புக்களி பத்தினி அம்மன் ஊற்றடிப் பிள்ளையாரும் அதனோடிணைந்த புவனேஸ்வரி அம்மனும் வரலாற்றின் வழிவருவனவே.
சேனையூரில் சிறப்பாக காணப்பட்ட வதனமார் வழிபாடு ஒரு முக்கியமான பண்பாட்டடையாளம். அதனோடு வீடுதோறும் கொடுக்கப்படும் சமையல் வேள்விகள் என்பனவும் நம் கலாசார மரபுகளே.
வயல் வாழ்வோடு, இணைந்து வரும் வன்னித்தெய்வ வழிபாடு, குளக்கட்டு பத்தினி வைரவர் பொங்கல் , குளத்துமேட்டு பொங்கல் என்பனவெல்லாம் ஒரு புராதன சமூகத்தின் சமூக குறியீடுகளாய் இன்றுவரை விளங்கிச்சென்றன.
இங்கு பாரம்பரியமாய் தொடர்கின்ற வைத்திய முறைகள் பல பரம்பரையினர் இன்றுவரை இத்துறையில் தொடருகின்ற பயணம் நம் தொன்மையின் அடையாளங்களே.
பொங்கல்
, தீபாவளி எனவரும் பண்டிகைகளும் பண்டிகைகளினுடு சிறப்புப்பெறும் விளையாட்டுக்கள், விழாக்கள், கும்மி, கோலாட்டம், வசந்தன் என களி நடமிடும் கலைகள் என நீளும் நம் கலைமரபுகள்

Thursday, 3 April 2014

அன்புமணி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி-01 கிராமத்தில் வசித்த நாகலிங்கம் அவர்கள் வைரமுத்து இராசையா, பொன்னர் தங்கப்பிள்ளை தம்பதியினரின் புதல்வராவார். மட்டக்களப்பு ஆரயம்பதி இராமகிருஸ்ண வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியையும், இடைநிலை, உயர்தரக்கல்வியை மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரியிலும் பெற்றார். இலங்கை நிர்வாகசேவையின் ஓய்வுபெற்ற அதிகாரியான இவரின் மனைவி பார்வதி நாகலிங்கம். இவர் இளைப்பாரிய கல்லூரி ஆசிரியை. பிள்ளைகள்: நா.அன்புச்செல்வன், நா. அருட்செல்வன், நா. சிவச்செல்வன், நா. தீரச்செல்வன, நா. பொன்மனச் செல்வன், நா. பூவண்ண செல்வன்

1952ல் கல்வித்திணைக்கள இலிகிதராக தனது தொழிலை ஆரம்பித்து 1981ல் இலங்கை நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, களுவாஞ்சிக்குடி உதவி அரசாங்க அதிபர், மட். கச்சேரி தலைமையக உதவி அரசாங்க அதிபர், வடக்கு, கிழக்கு மாகாண சபை உள்துறை உதவிச் செயலாளர் முதலிய பதவிகளை வகித்து ஆளுநர் செயலகத்தின் சிரேஸ்ட உதவிச் செயலாளராகப் பணிபுரிந்தார். ஓய்வு பெற்ற பின்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி கதிராமன் அவர்களின் செயலாளராக பணியாற்றினார்.

இராசையா நாகலிங்கம் ‘அன்புமணி’ எனும் புனைப்பெயரிலே அறிமுகமானவர். இவரின் முதல் ஆக்கம் ‘கிராம்போன் காதல்’ எனும் தலைப்பில் இந்தியாவிலிருந்து வெளிவரும் கல்கி இதழில் 1954இல் பிரசுரமானது. அன்றிலிருந்து இன்றுவரை 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், ஆய்வுக் கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவற்றை இவர் எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளிவரும் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் மற்றும் இலங்கை வானொலி போன்றவற்றிலும் பிரசுரமாகியும், ஒலிபரப்பாகியுமுள்ளன. அன்புமணி, அருள்மணி, தமிழ்மணி ஆகிய பெயர்களிலும் எழுதியவர்.

இவரால் இதுவரை சுயமாக ஏழு புத்தகங்கள் எழுதி வெளியிடப்பட்டுள்ளன.

இல்லத்தரசி (சிறுகதை) 1980 – உதயம் பிரசுரம், மட்டக்களப்பு
வரலாற்றுச் சுவடுகள் (சிறுகதை) 1992 – உதயம் பிரசுரம், மட்டக்களப்பு
ஒரு தந்தையின் கதை (நாவல்) 1989 – உதயம் பிரசுரம், மட்டக்களப்பு
ஒரு மகளின் கதை (குறுநாவல்) 1995 – அன்பு வெளியீடு
தமிழ் இலக்கிய ஆய்வு 2007 – சென்னை, மணிமேகலைப் பிரசுரம்
எட்டுத் தொகை பத்துப்பாட்டு நூல்கள் 2007 – சென்னை, மணிமேகலைப் பிரசுரம்
பதினெண் கீழ்கணக்கு நூல்கள் 2007 – சென்னை, மணிமேகலைப் பிரசுரம்
 

அன்புமணியின் இலக்கியப் பணியில் தன்னுடைய நூல்களை மாத்திரம் வெளியிடுவதில் கரிசனைக் காட்டாது பிற எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதிலும், வெளியீட்டுக்கும் இவர் உதவியுள்ளார். இவரின் அன்பு வெளியீட்டகம் மூலம் வெளியிட்டுள்ள சில நூல்களின் விபரங்கள் வருமாறு:

மகோன் வரலாறு – தங்கேஸ்வரி
குள கோபடன் தரிசனம் – தங்கேஸ்வரி
நூறு வருட மட்டு நகர் அனுபவங்கள் – ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ்
மட்டக்களப்பில் ஒரு மாமனிதர் ஜோசெப்வாஸ் – ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ்
வாழ்க்கைச் சுவடுகள் (சுயசரிதம்) – ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ்
நீருபூத்த நெருப்பு (நாடகங்கள்)- ஆரையூர் இலவர்
மேலும் கனடாவிலுள்ள ‘ரிப்னெக்ஸ்’ பதிப்பகத்தின் மூலமாக இலங்கையில் வரலாற்றுப் புகழ்பெற்ற பல முக்கிய நூல்களை மறுபதிப்பு செய்து வெளியிடுவதிலும் இவரின் பங்களிப்பு காணப்படுகின்றன. இந்த அடிப்படையில் கனடாவில் பதிப்பித்துள்ள சில நூல்களின் விபரம் வருமாறு:-

சீ. மந்தினி புராணம் – வித்துவான் ச. பூபாலலிங்கம்
மாமங்கேஸ்வர பதிகம் – வித்துவான் அ. சரவணமுத்தன்
சனிபுராணம் – வித்துவான் அ. சரவணமுத்தன்
அன்புமணி அவர்கள் களுவாஞ்சிக்குடி உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய காலகட்டங்களில் சைவமாமணி விஸ்வலிங்கம் எழுதிய ‘மண்டூர் பிள்ளைத் தமிழ்’ எனும் நூலினையும், தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் சு. ஸ்ரீகந்தராசா எழுதிய ‘சந்ததி சுவடுகள்’ எனும் நூலினையும் ஆரையூர் நல். அலகேசமுதலியார் எழுதிய ‘ஆரையூர் கோவை’ எனும் நூலினையும் வெளியிட காரணகர்த்தாவாக இருந்துள்ளார். அதேபோல இலங்கையில் மூத்த பெண் எழுத்தாளர் ந. பாலேஸ்வரி எழுதிய ‘தத்தை விடு தூது’ எனும் நூலினையும், எஸ்.எல்.எம். ஹனீபா எழுதிய ‘மக்கத்து சால்வை’ எனும் நூலினையும் மட்டக்களப்பு செபஸ்டியன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடுவதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கியுள்ளார்.

அன்புமணியின் கலை இலக்கிய சேவையின் இவரால் வெளியிடப்பட்ட ‘மலர்’ இலக்கிய சஞ்சிகை ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. 1970ஆம் ஆண்டு முதல் 1972ஆம் ஆண்டு வரை ‘மலர்’ பத்து இதழ்கள் விரிந்தன. ஈழத்து சஞ்சிகை வரலாற்றில், ‘மலர்’ கிழக்கு மாகாணத்தில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் பல இளம் எழுத்தாளர்களுக்கு களமமைத்துக் கொடுத்து அவர்களை வளர்த்து விட்டிருக்கின்றது.

அன்புமணியின் நாடகப் பணியும் குறிப்பிட்டுக் காட்டக் கூடியதொன்றாகும். கல்லூரியில் கற்கும் காலத்திலிருந்தே பல நாடகங்களில் முக்கிய வேடங்களில் இவர் நடித்துள்ளார். அதே போல கல்லூரி காலத்தில் ஓரரங்க நாடகங்களிலும் இவர் பிரபல்யம் பெற்றிருந்தார். கல்லூரி வாழ்க்கையில் ஏற்பட்ட நடிப்பு ஆர்வம் பிற்காலத்தில் இவரை ஒரு நடிகராக, நெறியாள்கையாளராக, நாடக ஆசிரியராக இனம்காட்டியது. இந்த அடிப்படையில் ஆரையம்பதியில் 1952ஆம் ஆண்டில் ‘மனோகரா’ எனும் பொது மேடை நாடகத்தின் முலம் ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். ‘அமரவாழ்வு’, ‘ஏமாற்றம்’, ‘பிடியுங்கள் கலப்பையை’ போன்ற ஓரரங்க நாடகங்கள் இவரால் தயாரித்து, நடித்து, மேடையேற்றப்பட்ட நாடகங்களாகும்.

1962ஆம் ஆண்டு இவரால் எழுதப்பட்ட ‘தரைகடல் தீபம்’ எனும் நாடகப் பிரதியாக்கத்திற்கு ‘சாகித்தியமண்டலப்’ பரிசு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. பின்பு இந்நாடகம் பல இடங்களில் மேடையேற்றப்பட்டது. அதே போல இவரின் ‘சூழ்ச்சிவலை’ எனும் மேடை நாடகமும் ஜனரஞ்சகத் தன்மை பெற்றிருந்தது.

962ஆம் ஆண்டு முதல் இலங்கை வானொலியில் அவர் பல நாடகங்களை எழுதியுள்ளார். 1967ஆம் ஆண்டு ‘நமது பாதை’ எனும் தொடர் நாடகம் 3 மாதங்கள் தொடர்ச்சியாக ஒலிபரப்பாகியதன் மூலம் தனக்கென ஒரு இரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

ஒரு நடிகர், நெறியாள்கையாளர், நாடக ஆசிரியர் ஆகிய ‘அன்புமணி’ ஒரு நாடக விமர்சகருமாவார். அதுமட்டுமன்றி பிரதேச, மாவட்ட, தேசிய ரீதியில் பல நாடகப் போட்டிகளில் நடுவராகவும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

‘தமிழ்மணி’ – இந்து சமய விவகார அமைச்சு – 1992
வடக்கு, கிழக்கு ஆளுனர் விருது – 2001
‘கலாபூசணம்’ – 2002
‘பல்கலை வித்தகர்’ – சிந்தனைவட்டம் 2008
இவை தவிர பிரதேச, மாவட்ட, மாகாண மட்டத்தில் பல்வேறுபட்ட இலக்கியச் சங்கங்கள் இவருக்குப் பொன்னாடை போர்த்தியும், கௌரவப் பட்டங்கள் வழங்கியும் கௌரவித்துள்ளன - See more at: http://www.arayampathy.com/news.php?id=2944#_

திருமலை தந்த மூத்த பெண் படைப்பாளி

காயத்திரி நளினகாந்தன்
அண்மையில் நாம் இழந்த ஈழத்து இலக்கியவாதி எழுத்தாளர் ந.பாலேஸ்வரி அவர்கள் பற்றிய சிறப்புப் பதிவுகள் ஈழத்து இலக்கிய வரலாற்றின் வளர்ச்சிக்கு பெரும்பங்களிப்பையும் ஈழத்து நாவல் இலக்கியத்தின் முன்னோடியாகவும் வாழ்ந்தவர்“தமிழ்மணி”யும்இசிறுகதைச்சிற்பியுமான அமரர் நல்லரெட்ணசிங்கன்; பாலேஸ்வரி ஆவார். .அன்னார் 200க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் 12 நாவல்களையும் படைத்துள்ளார்.1929.12.07 இல் அவதரித்த இவர் அந்நாட்களில் வீரகேசரி தினகரன் கல்கி குங்குமம் சுடர் மித்திரன் ஈழநாடு போன்ற பத்திரகைளிலும்இகோணைத்தென்றல் போன்ற பல சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்களை வெளியிட்டிருந்தார். திருக்கோணமலையை பிறப்பிடமாகக்கொண்ட இவர் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்ற ஆசிரியராக உருவாகி திருக்கோணமலையின் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றியதோடு திருக்கோணமலை விக்னேஷ்வரா கல்லூரியின் உதவி அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றார். அம்மையாரின் இலக்கிய பிரவேசமானது 1957 ஆம் ஆண்டு ‘வாழ்வளித்த தெய்வம்” எனும் சிறுகதையை தினகரன் பத்திரிகையில் எழுதியதன் மூலம் ஆரம்பமானது இவரது முதலாவது சிறுகதைத்;தொகுதியான “சுமைதாங்கி” 1973 ஆம் ஆண்டு வெளிவந்தது. வீரகேசரி சிந்தாமணி கல்கி தமிழின்பம் போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்த ஆறு கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் ‘சுமைதாங்கி” “இது தான் உலகம”; “டெரலின்ஷேட்” “nஐந்தியின் தந்தி” ஆகிய ஆறு கதைகள் கொண்;ட தொகுப்பாக இது வெளிவந்திருந்தது. இதில் சுமைதாங்கி எனும் சிறுகதை மலேசியாவில் இருந்து வெளிவரும் “தமிழ்மலர்’பத்திரிகையில் மறுபிரசுரம் செய்யப்பட்டு பாரட்டு பெற்ற சிறுகதையாகும். இவரது கதைகள் இலங்கையில்மட்டுமின்றி இந்தியா மலேசியா பாரிஸ் முதலியநாடுகளின் தமிழ்ப்பத்திரிகைகளில் வெளிவந்தன. இதில் இது தான் உலகம் என்னும் சிறுகதை கல்கி நடாத்திய போட்டியில் முதற்பரிசு பெற்று பாராட்டப்பட்டமை இவருக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்தது. மேலும் இவரது இன்னொரு சிறுகதைத்தொகுதியான “தெய்வம் பேசுவதில்லை”(2000) சென்னை காந்தளகம் பதிப்பாக வெளிவந்திருந்தது இச்சிறுகதைத்தொகுதியில் 1960 ஆம் ஆண்டு தொடக்கம் 1980 ஆம் ஆண்டு வரை பாலேஸ்வரி எழுதிய 29 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.”தொடுவானம”; “தெய்வம் பேசுவதில்லை” “வைராக்கியம்” “நெஞ்சில் நிறைந்தவள்” “போய்விடுங்கள்” “எழுதவேமாட்டேன்” என்பன மேற்கூறப்பட்ட தொகுதியில் அடங்கும் முக்கியமான சிறுகதைகளாகும்.சஞ்கைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்த கதைகளை இவர் இதில் தொகுத்து வெளியிட்டிருந்தார். இவரது நாவல் இலக்கியப்படைப்புக்களை நோக்கும் இடத்து இலங்கையின் முதலாவது பெண் நாவலாசியரியர் என்ற பெருமைக்குரியவரான இவர் 12க்கு மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளமை குறிப்பிடதக்கது. இவர் “சுடர் விளக்கு”(1966) என்னும் நாவலை முதல் முதலில் வீரகேசரியில் எழுதியதன் மூலமாக நாவல் இலக்கியத்துறையில் தடம் பதித்தார். சுடர் விளக்கு(1966) பூiஐக்கு வந்தமலர் (1972) உறவுக்கப்பால்(1975)கோவும் கோயிலும் (1980) உள்ளக்கோயில் (1983) பிராயச்சித்தம் (1984) உள்ளத்தினுள்ளே (1990) தத்தை விடுதூது (1992) மாது என்னை மன்னித்து விடு (1993)எங்கே நீயோ நானும் அங்கே(1993) அகிலா உனக்காக(2002)நினைவு நீங்காதது(2003) ஆகியவை இவர் எழுதிய நாவல்களாகும். இதில் பூசைக்கு வந்த மலர் குறுகிய காலத்தினுள் மீள்பிரசுரம் செய்யப்பட்டமை இவருடைய நாவலின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. தமிழக பெண் எழுத்தாளர்களான லக்சுமி சிவசங்கரி போன்றவர்களுடன் சமமாக மதிக்கப்படடுகின்ற ஈழத்துப்பெண்ணெழுத்தாளர்களில் முதலானவரும் முதன்மையானவருமான அம்மையார் அவர்கள்; தென்னிந்தியாவில் நாவல் இலக்கியத்தில் பெண்ணியம் பற்றிய பேசப்படுவதற்கு முன்னரே பெண்ணியம் பற்றி தமது எழுத்துக்களில் பதிவு செய்துள்ளமை வரலாற்றில் பதியப்பட வேண்டிய அம்சமாகும் இவரது சிறுகதைகளும் நாவல்களும் இவர்காலத்து சமூகத்தின் வெட்டு முகமாக அமைந்த காதல் தியாகம் சமூகத்திற்கு தொண்டு செய்ய நினைப்பது தமது பிரதேச புலம் மற்றும் யுத்தத்தின் அவலம்இ மறுமணம் ஆணாதிக்கச்; சிந்தனை மற்றும் பெண் சுதந்தரம் போன்றவற்றை தமது இலக்கியத்தினூடாக பதிவாக்கியுள்ளதோடு சிறப்பாக “ஆசியNஐhதி” சிறுகதையின் மூலம் திருக்கோணமலை நகரில் நடந்த இனப்படுகொலையினை நாசுக்காகவும் புத்திசாதுரியமாகவும் ஆவணப்படுத்தியுள்ளமை ஆசிரியரின் புலமையையும் சாதுரியத்தையும் பறைசாற்றியுள்ளது மேலும் பாத்திரவார்ப்புக்ளிலும் யுத்தத்தின் கொடூரங்களை சித்தரித்துள்ளார் இது தான் உலகம் எனும் இவரின் படைப்பானது பல்கலைக்கழக மாணவர்களினால் ஆய்விற்குட்படுத்தப்படுவது இங்கு குறிப்பிடதக்கது. இவரது படைப்புக்களில் இவரின் ஆழமான அனுபவமும்; கலையுணர்வும்; இழையோடியிருப்பதை காணலாம். மேலும்; இலக்கியப்படைப்புக்களுக்காக பல விருதுகளையும் இவர் தனதாக்கி கொண்டார் குறிப்பாக 1992ம் ஆண்டு இலங்கை சாகித்திய மண்டலம் இவருக்கு “தமிழ் மணி” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது 1999 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விருது இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிறுகதைச்சிற்பி கலாபூசணவிருது ஆகியவற்றுடன் 2010 இல் மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கிய ‘தமிழியல் விருது” என்பன இவரை கௌரவித்துள்ளது. மேலும் அன்னார் இலக்கியத்துறையுடன் மட்டும் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளாது சமூகப்பணியிலும் ஈடுபடுத்திக்கொண்டமை இவரது சிறப்பாகும். இலங்கையில் 1947 முதல் மூத்த இசை வரலாறு கொண்ட திருமலை தெட்சணகானா சபையின் ஸ்தாபகர் இராNஐஸ்வரி அவர்;களின் சகோதரியும் ஆன இவர் அவரின் மறைவுக்கு பின்னர் 1981 ஆம் ஆண்டு முதல் தெட்சணகானா சபையின் தலைவியாக இறுதிவரை சேவை ஆற்;றினார். இவரது காலத்திலேயே தெட்சணகானா சபை பெருவளர்ச்சி கண்டது குறிப்பாக நிலையத்திற்கானகட்டிடத்தை பெற்றுத்தருவதில் அரும்பாடுபட்டு உழைத்தார்.பல வருடங்களாக திருகோணமலையின் இசை நடன ஆசிரியர்கள் பலர் இவ்நிறுவனத்தின் மூலமாகவே உருவாகிவருகின்றமை குறிப்பிடதக்கது. .மேலும் இவரது சகோதரனே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நேமிநாதன் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு ஈழத்தின் முதல் நாவலான மோகனாங்கியை படைத்த தி.த சரவணமுத்துப்பிள்ளையின் உறவினரான இவர் ஈழத்து பெண் நாவலாசிரியர்களில் முதன்மையானவர் என்பது சிறப்பான வரலாற்றுப்பதிவு ஆகும். இவ்வாறு பல சாதனைகளையும் சேவைகளையும் செய்த ந.பாலேஸ்வரி அம்மையார் அவர்கள் 27.02.2014 அன்று சிவபதமடைந்தார்.இவரின் இழப்பு இவரது கணவரான நல்லரெட்ணசிங்கன் அவர்களுக்கும் திருகோணமலைக்கும் மட்டுமின்றி இலங்கையின் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். இவரது மறைவை ஓட்டி இவரது ஆத்மசாந்தி பிராத்தனையும் நினைவுப்பேருரையும் எதிர்வரும் 30.03.2014 அன்று ஸ்ரீ சண்முக மகளிர் கல்லூரியில் நடைபெற குளக்கோட்டன் இதழகம் திருக்கோணமலை தமிழ் சங்கம் மற்றும் தெட்சணகானா சபையும் இணைந்து நடைபெற்றது

பாலுமகேந்திரா

பாலுமகேந்திரா எனும் சகாப்தம்: பாலநாதன் மகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட பாலு மகேந்திரா இலங்கை மட்டக்களப்பு அருகே உள்ள அமிர்தகழி கிராமத்தில் 1939-ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதில் இருந்தே புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வந்த பாலுமகேந்திரா, பின் திரைப்பட ஒளிப்பதிவாளராக உருவெடுத்தார். புணே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவில் பட்டயப் படிப்பை முடித்தார்.
1973-ஆம் ஆண்டு மலையாளத் திரையுலகில் ஒளிப்பதிவாளராக தன் கலைப் பயணத்தை தொடங்கினார்  பாலுமகேந்திரா. "பனிமுடக்கு', "கலியுகம்', "பிரயாணம்' ஆகிய தொடக்க கால படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. 
பாலுமகேந்திராவுக்கு திரைக்கதை எழுதுவதிலும் அதீத ஆர்வம் இருந்தது. 1978-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் "கோகிலா' எனும் திரைப்படத்தை கன்னடத்தில் இயக்கி, ஒளிப்பதிவு செய்தார். தமிழகத்தில் கன்னட மொழியிலேயே வெளியான இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. மேலும் தமிழகத்தில் 100 நாள்களைக் கடந்து ஓடிய முதல் கன்னடப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு திறனை கண்டு வியந்த நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மகேந்திரனிடம் "முள்ளும் மலரும்' படத்துத்தில் ஒளிப்பதிவாளராக பாலுமகேந்திராவை சிபாரிசு செய்தார். 1978-ஆம் ஆண்டில் வந்த இப்படம் இன்றளவும் தமிழின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தமிழ்த் திரையுலகில் இயக்கம், ஒளிப்பதிவு, திரைக்கதை என பல துறைகளிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பாலுமகேந்திரா, பிரதாப் போத்தன், ஷோபா நடிப்பில்  1979-ஆம் ஆண்டு "அழியாத கோலங்கள்' என்ற படத்தை இயக்கினார். இப்படத்தை தொடர்ந்து "மூடுபனி', "மூன்றாம் பிறை', "வீடு', "சந்தியா ராகம்', "வண்ண வண்ண பூக்கள்', "நீங்கள் கேட்டவை', "உன் கண்ணில் நீர் வழிந்தால்' "ரெட்டைவால் குருவி' "ராமன் அப்துல்லா', "மறுபடியும்', "ஜூலி கணபதி', "சதிலீலாவதி', "தலைமுறைகள்' என தமிழ், தெலுங்கு, கன்னடம் என 22 படங்களை இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ளார். மற்ற இயக்குநர்களின் உருவாக்கத்தில் தயாரான 28 படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். 
5 முறை தேசிய விருதுகள்: ரசனை மிக்க சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற பல படங்களை இயக்கிய பாலுமகேந்திரா, தேசிய அளவில் பல விருதுகளை பெற்றுள்ளார். சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதை "கோகிலா', "மூன்றாம் பிறை' ஆகிய இரு படங்களுக்கும் பெற்றார். "வண்ண வண்ண பூக்கள்', "வீடு' இரு படங்களும் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை பாலுமகேந்திராவுக்கு பெற்றுத் தந்தன. குடும்ப நலம் சார்ந்த சிறந்த திரைப்படத்துக்கான விருதை "சந்தியா ராகம்' தேடித் தந்தது.
இதைத் தவிர ஃபிலிம்பேர் விருதுகள், கர்நாடக மாநில அரசின் விருதுகள், கேரள அரசின் மாநில விருது, ஆந்திர அரசின் நந்தி விருது என பல விருதுகளை பெற்றுள்ளார் இயக்குநர் பாலுமகேந்திரா.
சிறுகதைகள், கவிதைகள், உரைநடை என எழுத்துலகிலும் தன் கவனத்தை செலுத்தி வந்தார். புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளை மையமாக வைத்து உருவான "கதை நேரம்' சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி பரவலான பாராட்டுகளை பெற்றது.
சினிமா பட்டறை என்ற பெயரில் சென்னை, சாலிகிராமத்தில் சினிமா குறித்த பயிற்சி பள்ளியை தொடங்கி ஏராளமான மாணவர்களை உருவாக்கி வந்தார் பாலுமகேந்திரா. பாலா, வெற்றிமாறன், ராம், சீனுராமசாமி, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் என பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்தவர்கள், தற்போதைய தமிழ் சினிமாவின் நம்பகமான படைப்பாளிகளாக விளங்கி வருகின்றனர்.
கடைசிப் படம்: ஒளிப்பதிவு, இயக்கத்தில் மட்டுமே இதுவரை கவனம் செலுத்தி வந்த பாலுமகேந்திரா, முதல்முறையாக நடிக்கவும் செய்தார். இயக்குநர் சசிகுமார் தயாரித்த "தலைமுறைகள்' படத்தை இயக்கியதோடு, அதன் முதன்மை கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்தார். கடந்த டிசம்பர் மாதத்தில் வெளிவந்த இப்படத்தின் கடைசி காட்சியில் வயோதிகம் காரணமாக பாலுமகேந்திரா இறப்பதாக காட்சி அமைந்திருக்கும்.
இறுதிச் சடங்கு: சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திரா சினிமா பட்டறை வளாகத்தில் பாலுமகேந்திராவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பாலுமகேந்திராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதிச் சடங்குகள் போரூர் மின் மயானத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.14) காலை நடைபெறுகிறது. பாலுமகேந்திராவுக்கு மனைவி அகிலா, மகன் ஷங்கி மகேந்திரா ஆகியோர் உள்ளனர். ஷங்கி மகேந்திராவும் ஒளிப்பதிவாளராக உள்ளார்

Monday, 28 May 2012

செட்டியூர் கண்ணகை அம்மன் ஆலயம் - சடங்கும் வழக்குரையும் 02


onday, June 13, 2011

செட்டியூர் கண்ணகை அம்மன் ஆலயம் - சடங்கும் வழக்குரையும் 02

வைகாசி பொறந்தாலே( பிறந்ததும்) வெயில் நீங்கி இதம் குளிரும் குளிர்த்திப்பாடல்களால் நிலம் நனையும் என்று ஆதங்கப்பட்டு வாழும் ஈழத்திருநாட்டார்.

கிராமங்கள் தோறும் கண்ணகை அம்மன் கோயிலும் அதன் திருவிழாவாக பெயர் பெறும் சடங்குமுறைகளும் சிறப்புப்பெயர் கொண்டழைக்கின்றோம்.
தமிழ் இலக்கிய வரலாற்றின் மரபிலக்கியங்களாக இந்த சிற்றிலக்கியங்களின் நீட்சியாக அம்மன் பாடல்கள் மண்சார் வெளிப்படையாகவும் காணப்படுகின்றன. இங்கு குளித்திப்பாடல்கள், காவியப்பாடல்கள், தாலாட்டு, மான்மியம், ஊஞ்சல் என்று பலவகையான பொக்கிசங்களாக மரபுவழிச் சின்னங்களாக இருக்கின்றன.

"அன்று தொட்டுப் பாண்டியநாடு மழைவறங்கூர்ந்து வறுமை எய்தி வெப்பு நோயும் குருவும் தொடரக்கொற்கையிலிருந்த வெற்றிவேற்செழியள் நங்கைக்குப் பொற்கொல்லராயிரவரைக் கொன்று களவேள்வியால் விழாவோடு சாந்திசெய்து, நாடுமலிய மழைபெய்து நோயுந் துன்பமும் நீங்கியது"
- சிலப்பதிகார உரை

இந்த சிலப்பதிகாரத்திலேயே கண்ணகி காரணமாக வெம்மைநோய் வந்துநீங்குதல் பற்றி கூறப்பட்டுள்ளது. வைசூரி, குக்கல், வெப்பு, சின்னம்மை, வயிற்றுக்கடுப்பு, கண்ணோய, பெருஞ்சுரம், மங்கமாரி போன்ற சூட்டுநோய்கள் கண்ணகி அம்மனின் கோபத்தினால் பரவுவதான எண்ணப்பாடு ஐதிகம் இங்கு உள.

இதனால் காளியின் அம்சமான கண்ணகித் தாயிக்கு நேர்த்திக்கடன் செய்தலை வழக்கமாகக் கொண்டு வழிபாடு செய்தல் இன்றும் இருக்கும் மரபு.

இதற்காக மற்றும் குழந்தைப்பேறு, மாங்கல்ய வரன் என்றும் பல்வேறு வேண்டுதல் என்றும் அவைகளுக்கெல்லாம் நேர்த்தி வைத்து மடிப்பிச்சை எடுத்தல், காவடி எடுத்தல், அலகிடுதல், கற்பூரச்சட்டி எடுத்தல் என்றும் சடங்கு காலத்தில் பொன்னாலும் வெள்ளியிளாலும் செய்யப்பெற்ற கண்ணுருவங்குளம் கண்மணிகளும் அம்மனுக்குக் காணிக்கையாகச் சமர்ப்பித்தல் அடயாளப்பொருட்கள் என்றழைப்பர்.

இரவுவேளையிலும் நேர்த்திக்கடன் செலுத்த வந்த ஆசான்

அடயாளப்பொருட்களை பெறுவதில் மக்கள்

திராவிடப்பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற சக்தி வழிபாட்டினையே கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற கண்ணகியம்மன் ஆலயங்களில் காணலாம்.

நமக்கு செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலயமே மிகப்பிரசித்திபெற்று விளங்குகிறது. எங்கள் ஊரில் ஒவ்வொரு ஆலயம் இருந்தாலும் இக்கண்ணகி அம்மன் ஆலயம் மிகச்சிறப்புப் பொருந்தியது காரணம் இவ்வாலயத்தில் கிரான்குளம், குருக்கள்மடம்,செட்டிபாளையம், மாங்காடு, தேத்தாத்தீவு, களுதாவளை ஆகிய ஊர்களைச்சேர்ந்தவர்களும் ஒன்றாகச் சேர்ந்து சடங்குகளை நடத்துதே.

இச்சடங்கு காலகட்டத்தில் கிராமங்களில் மஞ்சள் தட்டக்கூடாது; மாவிடிக்கக்கூடாது2 புலால் உண்ணக்கூடாது; இப்படி பலத்த பாரம்பரிய கட்டுப்பாடுகள் உள்ளன.அவை இன்றும் பண்பாடு ரீதியாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றமை அம்மனிலுள்ள பயபக்தியைக் காட்டுகிறது என்றே சொல்லத்தோன்றுகிறது.

கண்ணகை அம்மன் சடங்கு என்றாலே மனசுக்கு என்னமோ இதமான மகிழ்ச்சியான உணர்வு இப்பிரதேச ஊர்மக்களுக்கு வருவது இயல்பு. காரணம் கண்குளிரும் மனம் மகிழும் பல நிகழ்வுகள் நடந்தேறுவதே.

முதல்நாள் - கதவு திறத்தல்

முதல் நாள் கதவு திறத்தல் என்று அழைப்பர். அம்மன் கோயில் சடங்கு ஆரம்பம் என்பதைக்குறிக்கும் நாள். இந்நாள் எப்போ வரும் என்று ஏங்கிக் கேட்டு அம்மாவைக் குடைதலே இவ்விழாவின் சந்தோசத்தை அதிகரிக்கும். எங்கட செட்டியூர் கண்ணகை அம்மன் ஆலயச்சடங்கின் கதவுதிறத்தல் கிரான்குளம் மக்களால் நிகழ்த்தப்படும்.

சடங்கு

சடங்கு என்ற சொல் அம்மனுக்கு நடக்கும் பூசையைக்குறிக்கும். இங்கே உடுக்கு வாத்தியங்களோடு அம்மன் காவியம் பாடுதல்,உடுகுச்சிந்து பாடுதல் அம்மானைக்காய், சிலம்பு என்பவற்றை கிலுக்குதல் (குலுக்குதல்), குரவைபோடுதல், அவ்வேளையில் ஆலத்தி எடுத்தல் என்பனவைகளும் அடங்குகின்றன.
நாள்தோறும் மதியம்(பகல்), இரவு பூசைகள் சடங்குப்பூசையாக கொள்ளப்படும்

கல்யாணக்கால் சடங்கு

கல்யாணக்கால் சடங்கு தேற்றாத்தீவு மக்களுக்கு உரிய சடங்காக அமைகிறது செட்டிநகர் கணணகை அம்மன் ஆலயத்தில்.
கல்யாணக்காலினை பூவரசுகம்பம் ஒன்றினை ஆலயமண்டபத்தினுள் நட்டு ஆடை அலங்காரம் அணிகலன்காலால் ஒரு பெண்ணென கோலம் செய்து கண்ணகை அம்மனாகப் பாவித்து கோவலனார்க்கு திருமணம் செய்துவைத்தல் அதற்குரிய பாடல்களோடு வழிபட்டு சடங்கு செய்தல் இன்றும் வழக்கு.


குளுத்தி
தினமும் முறையான சடங்கு நடந்தேற இறுதிநாளில் நடைபெறும் நிகழ்வே "குளுத்தி" என்று அழைப்பர். குளித்தியிரவு சடக்கும் சடங்கிலே பொங்கலிடுதல் முதன்மையாகவும் பொங்கல் விழா முடிவுற சுண்ணமிடித்தல் இதமான நிகழ்வாக அமையும். பின்னர் குளுத்திப் பாடல் படிக்கத் தொடங்கி அம்மனின் கோபங்கள் தணியச்செய்து "வாழி" எனும் பாடல்கள் பாடப்படும். அம்மனை வரம்வேண்டிப் வாழ்த்தும் சேர்ந்து பாடும்பாடல்களாக அமையும்.
கடைசியில் "பாணக்கம்" வழங்கப்படும் இதனை குளுத்திப்பாணக்கம் என்றழைப்பர். இது ஓர் அமிர்தமாக சுவையேறியதாக இருக்கும்.
இவ்விழா செட்டியூர் கண்ணகை அம்மன் ஆலயத்தில் களுதாவளைவாழ் மக்களால் நிகழ்த்தப்படுகிறது.


வழக்குரை


மட்டக்களப்பிலே கண்ணகி கோயில்களில் கண்ணகி வரலாற்றுரைப்பதாக அவள் பெயராலோ, இளங்கோவடிகள் பெயராலோ, அவள் உரைத்த வழக்கின் பெயராலோ கொண்டமைந்த "வழக்குரை" என்றும் "வழக்குரைக் காவியம்" என்று அழைக்கபடும் காவியம் தினந்தோறும் பகலில் பாடுவது சிறப்பு.
மட்டக்களப்பின் இலக்கியச் செல்வமாக இந்த வழக்குரைக் காவியமானது சிலம்பிலே காணும் கண்ணகியை பிறப்பிலிருந்தே தெய்வநிலைசேர்ந்து வளர்ந்துவரும் ஒன்றாய் பல வேறுபாடுகள் கொண்ட கதையாய் உடையதாய் காணப்படுகிறது.

இன்று காலையில் பாடும் போது..


வசந்தன் ஆடல்

"வசந்தன்", "வசந்தன் கூத்து" என்று அழைக்கப்படும் கூத்து மரபு இன்றும் வழக்கில் உள்ளது. அனேகமாக கண்ணகை அம்மனின் சடங்கிலே இவ்வாடல் நிகழ்த்தப்படுவது வழக்கம்.
செட்டியூர் கண்ணகை ஆலயத்தில் தேற்றாத்தீவு மக்களின் பூசை நாளில் தேற்றாத்தீவு பிள்கைகளால் ஆடப்படுவது இயல்பும் சிறப்பும்.தண்ணீர்ப்பந்தல்


ஒவ்வொரு கிராமத்திலிருந்து நடைநடையாக வரும் அடியார்களுக்கு வெயிலில் தாகத்தைப்போக்கும் முகமாக வீட்டுக்கு முன் வேலியோரங்களில் தண்ணீர் குடங்கள் வைத்திருக்கும் தன்மை இம்மக்களின் தொன்றுதொட்டு வாழவைக்கும் தன்மையை எடுத்துக்காட்டி நிற்கும். இதைவிட சந்திகளிலும் கோயில்களிலும் தாகசாந்தி செய்யும் நிலையமாக தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டிருக்கும்.

மடிப்பிச்சை எடுத்தல்

மடிப்பிச்சை எடுத்தல் அம்மன் ஆலயம் என்றாலே பெண்களுக்கு நேர்த்திக்காகவும் அம்மனுக்கு வேண்டுதலுக்காகவும் வீடு வீடாய் சென்று ஒற்றைப்படை இலக்கத்தில் 5 அல்லது 7 அல்லது 9 வீடுகளுக்குச் சென்று "கண்ணகை அம்மன் பேரால மடிப்பிச்சை போடுங்கோ" என்று அம்மனுக்கு தமது சேலையின் முந்தனையில் எடுத்து வேப்பிலையின் துளிரிலைகளை தலையில் சூடி கையிலும் எடுத்துக்கொண்டு நெல்லைச் சுமந்து வெற்றுக்கால்களுடன் கோயிலுக்கு சென்று அவற்றை கொடுத்தல் இப்பொழுதுகளிலும் நடைபெறுகிறது.
இம்மடிப்பிச்சை எடுப்பதற்கு சிறுபிள்ளைகளும் ஆயத்தம்கொள்வது அவர்களுக்கு அளப்பரிய சந்தோசத்தை ஏற்படுத்தும்.
இன்று காலையே நமது மருமகளொருத்தி ஆரம்பிச்சுட்டாள் பாருங்கதோரணம் கொண்டுவருதல்


கோயில் அலங்கார வேலைகளில் ஈடுபடும் இளைஞர்


கடைத்தெரு

மனதை உருக்கும் பறவைக் காவடிகள்


காலையில் காவடி எடுத்தல்செட்டியூர் கண்ணகை அம்மன் காவியம் நேற்று (12-06-2011) எமது சண்.இன்பராஜனால் பாடப்பட சிவகுரு தணிகசீலனால் இசைக்கோர்வை செய்யப்பட்டு இந்து இளைஞர் மன்ற செயலாளர் த.விமலானந்தராஜாவினால் அம்மன் ஆலயத்தில் வெளியிடப்பட்ட இறுவட்டிலில் உருவான பாடலை கேளுங்கள்.
இன்று இரவு குளுத்தி நிகழ்வுடன் இனிய நாட்கள் விடைபெறும் அடுத்தவருடம் வரை தித்திக்கும் நினைவுகளுடன்.

இங்கு செட்டிபாளையம் கண்ணகை அம்மன் படங்களைக் பாருங்கள்


உசாத்துணை நூல் : மட்டக்களப்புத் தமிழகம் வித்துவான் வீ.சி.கந்தையா

Download As PDF  

சடங்கும் வழக்குரையும் 01

கண்ணகை அம்மன் என்றாலே மட்டக்களப்புக்கு மிகவும் சிறப்பும் பெருமையும் அமைவது மகிழ்ச்சி.
கண்ணகி என்று சிலம்பினுள் வரும் இங்கே கண்ணகை என்ற சிறந்த பொருளாக திரிபுற்றது காண். கண்- நகை என்ற இரு சொற்களின் சேர்க்கையான கண்ணின் ஒளி கண்ணுக்கு அணிகலன் ஆக பொருள்பொதிந்து வழிபாட்டுக்கும் சடங்கு என்ற பதங்களால் ஆன கிராமத்து மண்ணின் பெருமையும் சிறப்புமாய் அமைகின்றது. "சடங்கு" என்றுரைத்தல் அம்மன் கோயில்களில் நடக்கும் பூசையினைக் குறிக்கும் இதனால் கண்ணகையம்மன் சடங்கு என்று அழைக்கப்படும் இவ்விழா வருடந்தோறும் வைகாசி வளர்மதி நாட்களில் இடம்பெறும்.
கதவு திறத்தல், என்ற சொற்பதத்தால் ஆரம்ப விழா முதல்நாள் சடங்காக அமையும். நாள்தோறும் மதியம்(பகல்), இரவு பூசைகள் சடங்குப்பூசையாக கொள்ளப்படும். உடுக்கு வாத்தியங்கும் சிலம்பு ஓசையும் சேர்ந்து அம்மன் காவியம் உடுக்குச் சிந்து பாடுதல், கல்யாணக் கால் சடங்கு, என்பனவும் இங்கு சிறப்பானவை. சடங்கு நாட்களில் நேர்த்திக்கடனாக பல சிறப்பான பக்திபூராக அடியார்கள் வழிபடுவர் அம்மனை.
செட்டிபாளையம் அம்மன் கோயில் என்றாலே எங்கள் பிரதேசத்தில் ஊரில் வெகு சிறப்பாக ஒரு கொண்டாட்டம். இங்கு கண்ணகை அம்மன் காவியம் சிறப்பு இங்கு போய் காண்க இந்த பாடல்
இப்பாடல் எமது மண்ணின் சிறப்புப் பொருந்திய ச.இன்பராஜன் அவர்கள் பாட இசைச்சேர்க்கை ஒலிப்பதிவை தணிக சீலன் அவர்கள் உருவாக்கத்தில் அமைந்தது சிறப்பே..

Download As PDF