Thursday 26 March 2020

கலை இலக்கிய ஆளுமை ஆனந்தன்

மறந்து போகுமா

கலை இலக்கிய ஆளுமை ஆனந்தன்


ஆனந்தன் இறந்து 25 வருடங்களை எட்டி நிற்கிறது,ஆயினும் எல்லாம் நேற்றுப் போல் என் நினைவில் நீள்கிறது.அவன் எனக்கு அறிமுகமானது 1992 ல் நான் கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளராக வந்த பிறகுதான் ஒரு மூன்று வருடங்கள்தான் ஆனாலும் நிறைந்த நினைவுகளை என்னுள் விட்டுச் சென்றுள்ளான் .
1992ல் என்னைக் கண்டதும் என்னிடம் முதல் சொன்ன விடயம் அபோது சாருமதி மட்டக்களப்பிலிருந்து வெளியிட்ட "வயல்" சஞ்சிகையில் நான் பேராசிரியர் வானமாமலை பற்றி எழுதிய கட்டுரையை சிலாகித்த விதமும் அதில் நான் இன்னும் என்ன சொல்லியிருக்கலாம் என்பது பற்றியுமான விமர்சனப் பார்வை என்னை அவனுள் நெருகமாக்கியது.நான் அறிந்த மிகச் சிறந்த வாசகன் மாக்சியத்தை நேசித்த உண்மைத் தோழன்.விருப்பு வெறுப்புகள் அற்ற விமர்சகன் .
வாசகர் வட்டத்துக்காய் ஈழத்து நாட்டாரியல் பற்றி ஓருரை ஆற்றும் படி கேட்டு ஒரு நீண்ட உரையும் அதன் பின்னரான கலந்துரையாடலும் கிழக்கின் நாட்டார் மண் சார்ந்த மரபுகள் பற்றி அவனது அபிப்பிராயங்களும் அந்த இலக்கிய கலந்துரையாடலுக்கு மகுடம் சூட்டி நின்றன.
நான் எங்கு உரையாற்றினாலும் என் ரசிகன் அவன் என் உரையை சிலாகித்து சிலாகித்து கதை சொல்வான்.ஆனந்தனைப் போல எனக்கு இன்னொரு ரசிகனும் இருந்தான் சிவராம் இருவரும் ஒரு சேர என் வீட்டு முன் மண்டபத்தில் இஞ்சி பிளேண்டியையும் குடித்துக் கொண்டு சுவாரஸ்யமான இலக்கிய அரசியல் உரையாடல்கள்.
இஞ்சிப் பிளேண்டியென்றால் ஆனந்தனுக்கு உயிர் ஆனந்தன் வீட்டுக்கு எப்போ சென்றாலும் வத்சலா இஞ்சிப் பிளேண்டியோடு வந்து நிற்பா.மறந்து போகுமா இவையெல்லாம்.
மகள் அனாமிகாவோடு செல்லம் பொழிவதில் அவன் என்றுமே குறை குறை வைக்கவில்லை பிள்ளைகள் என்றால் அவர்கள் மொழியில் சொக்கிப் போவான் .அனாமிகாவை சீண்டிப் பார்ப்பதில் அலாதிப் பிரியம் அவனுக்கு இன்று அவனும் இல்லை அவன் நேசித்த என் மகளும் இல்லை ஆனந்தன் இறந்த போது அவள் துடித்துப் போனாள் கடந்து விட முடியாத நினைவுச் சுமை.
ஆனந்தன் மட்டக்களப்பு கொண்டாட வேண்டிய கலை இலக்கிய ஆளுமை
அவன் நினைவாய் எவ்வளவோ பேசலாம் பேசுவோம்.
மளையாள இசை மலையாள இலக்கியத்தில் மிகுந்த பரிட்சயம் உள்ளவன் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கும் ஆற்றலால் சில சிறுகதைகளை மொழி பெயர்த்துள்ளான் .இன்னும் அவன் இருந்திருந்தால் ஈழத்து இலக்கியத்துக்கு மேலும் வளம் சேர்த்திருப்பான்.மலையாள இசையை எனக்கு அறிமுகப் படுத்தியவனும் அவனே அவனிடமிருந்து மலையாள இசைப் பேழைகளை வாங்கி கொடுக்காநல் விட்டு அவன் நினைவாய் என் மட்டக்களப்பு வீட்டில்.இன்றும் அவன் நினைவுகளுடன் மலையாள இசையை விரும்பிக் கேட்கும் ரசிகனாய் நான் .
வீட்டுக்கு வரும் போதெல்லாம் என்னைப் பாடச் சொல்லிக் கேட்பான்
"சுகு அந்த ஆதம் காக்கா பாடலைப் பாடு" என்பான் கேட்டுக் கேட்டு சலிக்காத பாடல் அது
"ஆதம் காக்கா ஆதம் காக்கா
அவரைக் கண்டா சொல்லிடுங்கோ
பூவரசம் கன்னி ஒன்று
பூ மலர்ந்து வாடுதெண்டு"
மறந்து போகுமா அவன் நினைவு

No comments:

Post a Comment