Saturday 28 March 2020

மண் சுமந்த மா கலைஞன் செல்லையா அண்ணாவியார்

மண் சுமந்த மா கலைஞன்
செல்லையா அண்ணாவியார்

பேராசிரியர் சி.மெளனகுரு அவர்களது முகநூல் பக்கத்தில் செல்லையா அண்ணாவியார் பற்றிய பதிவொன்றை வாசித்தமை இன்று வரை அந்த பாதிப்பிலிருந்து விடு படாமல் மனம் என்னவோ செய்து கொண்டிருக்கிறது.

அழுதும் அது வடிகாலாய் அமையவில்லை.
செல்லையா அண்ணாவியார் ஈழத்து கலையுலகம் காலம் தோறும் கொண்டாட வேண்டிய கலைஞன்.அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்கிற மகிழ்வோடு அவர் என்ன செய்ய்தார் என்ற கேள்வியும் பலருக்கு எழலாம்.

பேராசிரியர் வித்தியானந்தனின் கூத்து மீட்டுருவாக்க செயல் நெறிக்கு நிகழ்த்துகை உருவம் கொடுத்தவர் நம் அண்ணாவியார்.அறுபதுகளில் ஓங்கி ஒலித்த கூத்து மீளுருவாக்க செல் நெறியில் மத்தளமும் தன் குரலுமாக பேராதனையில் தமிழின் தனித்துவ கலாசார மரபின் கம்பீரம் மிக்க கலைஞனாய் உலா வந்தவர்.

தொண்ணூறுகளில் நான் கிழக்கு பல்கலைக் கழக விரிவுரையாளரான பின் அதுவும் 1995ல் கலை கலாசார பீடம் வந்தாறுமூலைக்கு இடம் மாறிய பின் அவருடனான தொடர்பு மிக நெருக்கமாகி என் பாட்டனை பார்ப்பது போன்ற உணர்வு கலந்த நாட்கள் அவை.

அடிக்கடி பேராசிரியர் மெளனகுரு சேரை பாக்க வரும் செல்லையா அண்ணாவியார் எனக்கும் நெருக்கமானார்.அவருடனான உரையாடல்கள் நீண்டன பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வித்தியானந்தனுடன் கூத்துப் பழக்கிய நாட்களையும் பேராசிரியர் சிவத்தம்பி ,பேராசிரியர் கைலாசபதி ஆகியோருடன் கொண்ட மதிப்பையும் பேசி பேசி மகிழ்ச்சி கலந்த நாட்களை ஒரு குழந்தையை போல கொண்டாடி மகிழ்வார்.
பல வேளைகளில் மத்தளத்தை தூக்கிக் கொண்டு பல்கலைக் கழகத்திற்கு வந்து விடுவார் எங்கள் துறை வாசலில் பசுமையாய் படர்ந்த வேப்ப மர நிழலில் படிக் கட்டில் அமர்ந்து மத்தளம் வாசித்து ராசணேசன் வரவுப் பாடலை பாடி மத்தளம் அடித்த அந்த நினைவுகளில் நான் இப்போது நினைத்தாலும் கரைந்து போகிறேன்.

அவர் எனக்கு அறிமுகமாகும் போது ஒரு ஏழைக் கலைஞனாகவே அறிமுகமானார் அவ்வப் போது என்னால் முடிந்த உதவியை செய்து கொண்டே இருந்தேன் அவர் எப்போது வந்தாலும் வெறுங் கையோடு அனுப்பியது கிடையாது.

நான் இலங்கை நாடகக் குழு உறுப்பினராக இருந்த காலத்தில் ஒரு தொகைப் பணத்தை உதவித் தொகையாக பெற்றுக் கொடுக்க முடிந்தமை மனதுக்கு திருப்தியாய் அமைந்த தருணம் அது.

உலக நாடக விழா நடை பெறும் காலங்களில் அவர் வரவு எங்களுக்கு உற்சாகத்தை தந்தது.நுண்கலைத் துறை வழங்கும் தலைக்கோல் விருதும் ஒரு தொகைப் பணமும் கொடுத்து கெளரவித்தோம்.

அவர் மரணம் அவர் வாழ்ந்த சிறிய குடிசையிலேயே முடிந்து போனது அவருக்கான இறுதிச் சடங்கில் கலந்து கொண்டமையும் அஞ்சலி செலுத்தியமையும் பல்கலைக் கழகத்தின் சார்பில் உரிய மரியாதை செலுத்தியமையும் இன்றும் ஈரம் கசிந்த நினைவுகளாய்.
நான் பீடாதிபதியாக கடமையாற்றிய நாட்களில் எங்கள் பீடத்துக்கான கலை அரங்கு ஒன்றை கட்டுவதற்கான அனுமதியைப் பெற்று கட்டத் தொடங்கி இருந்தேன் அந்த அரங்கிற்கு செல்லையா அண்ணாவியார் பெயர் வைக்க நினைத்திருந்தேன் ஆனால் அது முடியு முன்னே நான் புலம் பெயர வேண்டியதாய் ஆயிற்று.

அந்த மா கலைஞனை கொண்டாடும் விதமாக அவர் நினைவுகளை மீட்டெடுக்கவும் ஒரு ஆவணமாகவும் அடுத்த சந்ததிக்கு கையளிக்கவும் ஒரு சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டு கெளரவிக்க வேண்டும்.
இந்த முயற்சிக்கு நம் கல்வி உலகம் முன் வர வேண்டும்

No comments:

Post a Comment