Saturday 28 March 2020

கலா பூசணம் கலா வித்தகர்செ.விபுணசேகரம்


கலா பூசணம்
கலா வித்தகர் செ.விபுணசேகரம்

என் இடை நிலக் கல்வியின் பாடசாலை நாட்களில் வழிகாட்டியாய் என் ஆதர்ச ஆசானாய் என் கை பிடித்து நல் வழி காட்டிய ஆசான் சேனையூர் மத்திய கல்லூரியில் அவர் கற்பித்த நாட்கள் மறக்க முடியாதவை.
தமிழும் சமய பாடமும் அவர் நாவில் கொஞ்சி விளையாடும் அவர் சமய பாடம் படிப்பிக்கும் அழகே தனிச் சிறப்பு வாய்ந்தது.தேவாரம் ,திருவெம்பாவை இசையோடு பாடி தனி அர்த்தத்துடன் எங்கள் செவிக்கு விருந்தாகவும் அறிவுக்கு ஆழமாகவும் செறிந்து நின்ற செம்மையான கல்வி அனுபவம்.
அவர் கற்பித்தலில் பதியமிட்ட திருவருட் பயன் இன்னமும் மாறாத நினைவுகளாய் உள்ளன
''கண்டவற்றை நாளும் கனவில் கலங்கிடும்
திண்டிறலுக்கு ஏதோ செயல்''
என வரிசையாய் எல்லாப் பாடல்களும் மனப் பாடமாய் அதன் பொருளும் .
எனக்கு முதன் முதல் சங்கீதத்தை அதன் நுட்பங்களை அறிமுகப் படுத்தியவர் இசையின் மீதான காதல் அங்கிருந்துதான் அர்த்தமுள்ளதாய் மாறுகின்றது
''கானரீங்காரம் செய்யும் கரு வண்டே நீ
தேனூறும் வாயாலே தில்லை நாதனிடம்
என்னிலை சொல்லு நீ ''
என்ற தமிழ் கீர்த்தனை இப்போதும் என் இசைக்கான அடிப்படை அறிவாய் நீண்டு நிற்கிறது.
சமூகம் கலை இலக்கியம் அரசியல் என தன் பங்களிப்பை தான் வாழும் சமூகத்துக்கு முக்கிய பங்காற்நிலையம்,
கட்டைபறிச்சான் சிறி முருகன் இசைக்கழகத்தை ஸ்தாபித்து அதனூடாக பல இசைக் கலைஞர்களையும் உருவாக்கி ஊக்கப் படுத்திய இசையாளன் .ஆர்மோனியத்தை அழகுற வாசிக்கும் ஆற்றலாளன்.
கட்டைபறிச்சான் சிறிமுருகன் விளையாட்டுக் கழகத்தின் மிகச் சிறந்த கரப் பந்தாட்ட வீரர்களில் ஒருவர்.கட்டைபறிச்சான் சிறிமுருகன் சன சமூக நிலையம்,கட்டைபறிச்சான் இந்து இளைஞர் மன்றம் ஆகியவற்றில் தீவிர செயல்பாட்டாளனாய் இயங்கி சமூக வழிகட்டியாய் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாய் விளங்கியவர்.
கட்டைபறிச்சானில் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் திருமிகு செல்வராஜா அவர்களின் மகனாக அண்ணாவியார் மரபின் ஒரு கண்ணியாக கருவிலே திருவுடையாராக பிறந்து கல்விப் புலத்தில் புகழ் பூத்த பாராட்டுக்களை பெற்றவர்.
ஆசிரியராக அதிபராக கல்வியதிகாரியாக பணியாற்றி இன்றும் தன் தமிழ்ப் பணியை கைவிடாது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருபவர்.
கொட்டியாரத்தின் முதல் இளம் சைவப் புலவராகவும் கலாபூசணம் ,ஆளுனர் விருது,வித்தகர் விருது என பல விருதுகள் பெற்று தான் வாழும் மண்ணுக்கு பெருமை சேர்த்தவர்
என் ஆசானுக்கு வாழ்த்துகளோடு நான்.
ஒரு மகா கலைஞனை ஆளுமையை வாழ்த்துவோம்

பாலசுகுமார்

No comments:

Post a Comment