Thursday 19 August 2010

எஸ்.ஏ.ஸ்ரீதர்


கோறளைப்பற்றுப் பிரதேச எழுத்தாளர்களில் எஸ்.ஏ.ஸ்ரீதர் அவர்களும் ஒருவராவார். பாடசாலைக் கல்வியைத் தொடரும் போதே தமிழின் மீது கொண்ட பற்றும் ஈடுபாடும் காரணமாக எழுத்துத் துறையிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவர் மட்டக்களப்பிலிருந்து 72 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள வாகரைப் பிரதேச எல்லைக்குட்பட்ட வெல்லையடிமடு என்னும் கிராமத்தில் 1984.04.28 அன்று அரியநாயகம் புஸ்பராணி தம்பதியினருக்கு மூத்த மகனாக பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்னர்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை வாகரை ஊரியன்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலே ஆரம்பித்தார். 1990களில் ஏற்பட்ட இனவன்முறை காரணமாக இடம்பெயர்ந்து வாழைச்சேனையிலே தங்கியிருந்ததுடன் இங்கே நிரந்தரக் இல்லிடத்தினையும் அமைத்து வாழ்ந்து வருகின்றார். இவர் தனது பாடசாலைக் கல்வியை மட்ஃ புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் தரம் 2 தொடக்கம் க.பொ.த சாதாரண தரம் வரை கற்றார். இக்காலத்தில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் இவரது திறமையைப் பாராட்டி ஊக்குவித்தனர். இக்காலத்திலே தான் கவிதைகள், கதைகள் எழுதும் முயற்சியில் ஈடுபட்டதுடன், தமிழ் மொழித்தினப் போட்டிகள் மாணவர் மன்றங்களில் தனது திறமைகளை வெளிக்காட்டினார்.
க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சித்தி பெற்ற இவர் தனது உயர்தரக் கல்வியை மட்ஃவாழைச்சேனை இந்துக் கல்லூரியில் கற்றார். உயர்தரம் கற்கும் போதே பாடசாலை மட்டத்தில் இடம்பெறும் கலை நிகழ்வுகள் தமிழ் தினப் போட்டிகள் என்பவற்றில் கவிதை கதைகளை எழுதி மேலும் தன்னை வளர்;த்துக் கொண்டார்.
6.2 இலக்கியப் பிரவேசம் இவரது தந்தையின் தாய் பொன்னம்மா சிறு வயதில் மகாபாரதம், இராமாயணம், கந்தபுராணம், நளன்கதை, அரிச்;சந்திரன் கதை எனப் பல கதைகளைக் கூறக் கேட்டதனால் ஏற்பட்ட ஆர்வமும் அதன் வழியே இவற்றைத் தேடி கற்க வேண்டும் என்ற ஆர்வமும் பிற்காலத்தில் ஆக்க இலக்கியத்தில் இவர் பிரவேசிக்க அடிப்படையாக இருந்தது.
மகாகவி பாரதியாரி;ன் கவிதைகளில் ஆழ்ந்த ஈடுபாடும் ஆர்வமும் கொண்ட இவர் பாரதியாரின் படைப்புக்களை கற்றதனால் ஏற்பட்ட அனுபவமும், தமிழ் மீது கொண்ட பற்றும் இவரை மேலும் பாரதியைப் போன்று கவிதைகள்; படைக்க வேண்டுமென்ற ஆர்வமிகுதியை எற்படுத்தியது எனலாம்.
‘புதிய ஆத்திசூடி’ யில் அறிமுகமான பாரதியின் படைப்புக்களும், அவர் ஆரம்பத்தில் பார்த்;த தமிழ் திரைப்படங்களும் அந்நாட்களில் மக்கள் மத்தியில் பரவியிருந்த முகமூடி வீரர் மாயாவியின் கதைகளும் இவரை எழுதத் தூண்டின. தரம் எட்டில் படித்த போது தான் இப்படியான கதைகளை எழுத ஆரம்பித்தார். இவ்வாறு எழுத ஆரம்பித்த போது அவரது நண்பர்கள் ஆர்வத்தை ஏற்படுத்தி எழுதுவதற்கு ஊக்கப்படுத்தினர். தொடர்ந்து ஒவ்வொரு வகுப்பிலும் கற்பித்த தமிழ்ப் பாட ஆசிரியர்களும் ஏனைய ஆசிரியர்களும் கொடுத்த ஊக்கம் காரணமாக ஓசை நயத்துடன் கூடிய கவிதைகளைப் படைக்க ஆரம்பித்தார்.
இவரது கதைக்கு மகுடம் சூட்டி இவரை ஒரு எழுத்தாளனாக வெளிக் கொணர்வதில் முன்னாள் அதிபரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நிமலன் சௌந்தரநாயகம் அவர்கள் ஆக்கமும் ஊக்கமும் வழங்கி உதவி செய்தார். கோறளைப்பற்று பிரதேச செயலகம் நடாத்திய முத்தமிழ் விழா போட்டியிலே எஸ்.ஏ.ஸ்ரீதர் எழுதிய ‘இராவணன் சீமையிலே’ என்னும் கவிதை மூன்றாவது பரிசினைப் பெற்றுக் கொண்டது. தொடர்ந்து 2001ஆம் ஆண்டு நடந்த முத்தமிழ் விழா கவிதைப் போட்டியிலே இவர் எழுதிய “வெள்ளை மலர்கள் விழி திறக்கட்டும்” என்னும் கவிதை முதற் பரிசினைப் பெற்றுக் கொண்டமையும் இக்கவிதை இளம்பரிதி சஞ்சிகையில்; வெளி வந்தமையும் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவ்விடயங்கள் இவரைப் பிரபல்யப் படுத்தியதுடன் மேலும் கவிதை எழுதுவதற்கான ஊக்கத்தை வழங்கியது.
க.பொ.த உயர்தரம் கற்கும் போது தனது தனிச் செயற்றிட்ட வேலைக்காக 2002 இல் ‘தனித்திருக்கின்றான் ஒரு தமிழன்’; என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இதுவே இவரது முதல் கவிதைத் தொகுப்பாகும்.
2001-2003 வரை இந்;துக் கல்;லூரியில் உயர்தரம் கற்றபோது “தமிழ் முரசு” என்னும் பெயரில் இதழ் ஒன்றினையும் தமிழ் சங்கம் ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும் அவரது எண்ணத்தை அப்போதைய கல்லூரி அதிபராக இருந்த மு.தவராஜா அவர்களிடம் தெரிவித்து ஆரம்பித்த போதும் ஏனைய மாணவர்களது ஒத்துழைப்பு குறைவாக இருந்தமையால் அம்முயற்சி கைவிடப்பட்டது. எனினும் தொடர்ந்து கல்லூரிப் படிப்பை நிறைவு செய்த பிற்பாடு 2004ஆம் ஆண்டு கல்லூரியின் அதிபர் திரு.மு.தவராஜா அவர்களின் ஒத்துழைப்புடன் பாடசாலையில் ‘தமிழ் இலக்கிய மன்றம்’ அமைக்கப்பட்டது. இம்மன்றத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி திருமதி.ஸோ.ஜெயரஞ்சித் அவர்களை இதழாசிரியராகக் கொண்டு ‘மகூலம்’ என்ற சஞ்சிகை வெளியிடப்பட்டது. இச்சஞ்சிகையினை வெளியிடுவதில் உரிய நெறிப்படுத்தல்களையும் வடிவமைப்பையும் எஸ்.ஏ.ஸ்ரீதர் அவர்களே செய்து உதவினார்.
புத்தகங்கள் வாங்குவதிலும்; வாசிப்பதிலும் ஆர்வம் கொண்ட இவர் ‘தமிழன் குரல்’ என்ற பெயரில் இதழ் ஒன்றினை ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக தமிழகத்தின் மூத்த படைப்பாளியான வல்லிக்கண்ணன் அவர்களின் வாழ்த்துச் செய்தியுடன் 2004 ஏப்ரலில் ‘தமிழன் குரல்’ இதழ் வெளிவந்தது. திரு.எ.ஜெயரஞ்சித், திரு.நிமலேஸ்வரன், திரு.முரளிதரன், மற்றும் செல்வி.சாந்தகுமாரி போன்றோர் இவ்விதழ் வெளியீட்டில் இவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர்.
வாழைச்சேனையில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் வசித்த எழுத்தாளர் திரு.ஆ.மு.சி வேலழகன் அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பு இவரின்; இலக்கிய ஆர்வத்துக்கு நல்லதொரு களத்தினை ஏற்படுத்தியது. திரு.ஆ.மு.சி.வேலழகனின் தொடர்பால் பல எழுத்தாளர்களின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. அவ்வகையில் அன்புமணி, சாந்தி முகைதீன், காந்தன் குருக்கள் என்போருடனான தொடர்புகள் கிடைத்தன. தமிழன் குரல் இதழின் முதல் வெளியீட்டிலே இவர்களெல்லாம் பங்கு கொண்டதுடன் இந்நிகழ்வு ஸ்ரீதருக்கு கௌரவத்தையும் உற்சாகத்தையும் பெற்றுக் கொடுத்தது.
‘தமிழன் குரல்’ இதழ் இரண்டாவது இதழிலிருந்து ‘இலக்கியா’ என்ற பெயர்மாற்றத்துடன் தொடர்ந்து நான்கு இதழ்கள் வரை வெளிவந்தது. இவ்விதழில் உள்@ர் மற்றும் வெளிய+ர் படைப்பாளிகள் இருபது பேர்வரை எழுதினர். ஆ.மு.சி.வேலழகன், அமரர்.செ.சிவானந்ததேவன், மு .தவராஜா, அன்பழகன் குரூஸ் போன்ற பலருடன் வாழைச்சேனையைச் சேர்ந்த இளைய தலைமுறைப் படைப்பாளிகளும் இவ்விதழில் எழுதினர்.
தமிழக எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்களது இறப்பு ஏற்படுத்திய பாதிப்பினால் அவர் இறந்து சில தினங்களிலே ‘இலக்கியச் சிந்தனை’ என்ற பெயரில் ஒரு இதழினை ஆரம்பித்து வெளியிட்டார். 2005ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பதினெட்டாம் திகதி முதலாவது இலக்கியச் சிந்தனை இதழ் வெளிவந்தது. இதன் தொடர்ச்சியாக மொத்தம் நான்கு இதழ்கள் வெளிவந்தன. பொருளாதார ரீதியான சிக்கல்களால் இவ்விதழ் தொடர்ந்து வெளி வருவதில் தடைகளை எதிர் கொண்டுள்ளன. ‘இலக்கியச் சிந்தனை’ இதழுக்கு முன்னைய இதழைவிட அதிக வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது. கலாநிதி.செங்கை ஆழியான், எஸ்.எல்.எம்.ஹனீபா, அந்தனி ஜீவா போன்றோரது பாராட்டுதல்களையும் இவ்விதழ் பெற்றது.
எழுத்துத் துறையில் ஈடுபட்ட ஸ்ரீதரின் படைப்பிலக்கியப் பணிகள் மூலம் பல்வேறு ஆக்க இலக்கியப் படைப்பாளிகளுடனான தொடர்புகள் ஏற்பட்டன. வல்லிக்கண்ணன், ஆ.மு.சி.வேலழகன், அன்புமணி (இரா.நாகலிங்கம்), டொமினிக் ஜீவா, அந்தனி ஜீவா, செங்கை ஆழியான் (க.குணராசா), காந்தன் குருக்கள் (கண்மணிதாசன்), ஆரையம்பதி தங்கராசா, கலாநிதி.செ.யோகராசா, சாந்தி முஹைதீன், த.மலர்ச்செல்வன், மு.தவராஜா, எஸ்.எல்.எம்.ஹனீபா, தாழை செல்வநாயகம், ஹெட்டி ஆராச்சி மெத்தியேஸ், ‘அரங்கம்’ தவராஜா, அன்பழகன் குரூஸ் போன்றோர் இவ்வகையில் அறிமுகமாயினர்.
வாழைச்சேனைப் பிரதேசத்திலே ஆக்க இலக்கியப் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தி அவர்களின் படைப்புக்களை வெளிப்படுத்தி அதற்கான களத்தினை வழங்கும் நோக்குடன் ‘வாழையூர் தமிழ்ச் சங்கம்’ உருவாக்கப்பட்டு பின் இதன் பெயர் ‘திருக்குறள் முன்னணிக் கழகம்’ என மாற்றப்பட்டது. இதனை உருவாக்குவதில் ஸ்ரீதரின் முயற்சியும் இதற்கு ஆ.மு.சி வேலழகன் அவர்களின் வழிகாட்டலும் விதந்து கூறத்தக்கன.
6.3 ஸ்ரீதரின் படைப்புக்கள் இவர் பல்வேறு படைப்புக்களைச் செய்துள்ளார். இவ்வகையில் பின்வருவன குறிப்பிடத்தக்கன.1. கவிதைகள்2. சிறுகதைகள்3. நாவல்கள்4. நாடகம்5. பாட நூல்6. இதழியல்
(அ) கவிதைகள்(i) அச்சில் வெளி வந்தவை1. வெள்ளை மலர்கள் விழி திறக்கட்டும் ( இளம்பரிதி 2001- கோறளைப்பற்றுப் பிரதேச கலாசாரப் பேரவை)2. தனித்திருக்கின்றான் ஒரு தமிழன் (2002 கவிதைத் தொகுப்பு)• ஒரு தமிழன் தனித்திருக்கின்றான்• தமிழரே தமிழைப் போற்றிடுவீர்• கனவு மெய்ப்பட வேண்டும்• பனைமரக் காட்டுத் தமிழன்• பார் சிறக்கச் செய்வீர்• உழவு செய்வோம்• தலை வணங்காதிரு• என்ன வினை செய்ததுவோ• விட்டு விடுதலையாகி நிற்பாய்• ஈழ மண்டல நாடெங்கள் நாடே• காந்தி• பாரதி• தமிழ் முழக்கம்• நன்மை செய்து வாழ்வோம்
3. இராவணன் சீமையிலே ( தமிழன் குரல் 2004 ஏப்ரல்)4. மனிதன் ( கானல் நீராகும் விழுமியங்கள் 2006 லுஆஊயு வெளியீடு)5. நான் மரணித்துக் கொண்டிருக்கின்றேன்.( இலக்கியச் சிந்தனை 2006)6. கையெழுத்துப் பிரதிகளாக உள்ளவை• தாய்பூமி• நம்பிக்கை• சிகரம்• என்று தணியும் இந்த தாகம்• தமிழா தமிழா• வாழ்க தமிழ்மொழி• தமிழுக்கு ஓர் வார்த்தை• வாழ்க தாயகம்• தரணி தமிழனின் கீழே• சக்தி இது தமிழின் சக்தி
இவரது கவிதைகள் பெரும்பாலும் தமிழ்மொழி, இனம், பண்பாடு குறித்த வெளிப்பாடுகளாகவே உள்ளன. இவரது உள்மன ஆசைகள், ஆதங்கள், தமிழின் மீது கொண்ட அன்பு முதலானற்றை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன. இவரது கவிதைகளிலே ஓசை நயம் சிறப்பாக அமைந்துள்ளனது. இவரது கவிதைக்கு உதாரணமாக இராவணன் சீமையிலே என்ற கவிதை பின்வருமாறு அமைந்திருந்துள்ளது.
“தென் தமிழ் நாட்டான் திராவிடம் காத்தான் பிறந்த எம் சீமையிலே! சிங்கள நாட்டான் எங்களை ஆண்டான் ஏனென்று தெரியவில்லை! அக ஞானியின் நாவினில்; சிவமெனத் தோன்றிய – எம் தமிழ் சீமையிலே அகதிகளாய் இங்கு எம்மவர் ஆகியதேனென்று தெரியலையே ஆரியப் பாவலன் எம் தமிழ்க் காவலன் அரக்கனென்று பழித்தான் சீரியப் பாவலன் கம்பனும் கூடவே அதனையொப்பி விழித்தான்! ஐம்பெருமீச்சரம் எம்தொன்மை விளக்கையில் அழிப்பது சரியில்லையே! பைந்தமிழ் நாட்டினில் தமிழர்க்கு இடமில்லை என்பதும் முறையில்லையே!”
(ஆ) சிறுவர் பாடல்கள்
(i) அச்சில் வெளிவந்தவை• என்ன பெயர் வைக்கலாம் ( தமிழன் குரல் 2004 ஏப்;ரல்)• சின்னவனே நான் சொல்வதைக் கேளடா (இலக்கியா 2004 மே )
(ii) கையெழுத்துப் பிரதியாக உள்ளவை • குழந்தைப் பள்ளி செய்வீர்• பட்டணம்• தென்னை• காலம் நமது கையில் • உலகம் எங்கள் வீடு
இவரது சிறுவர் பாடல்கள் எளிய தமிழில், சமூகப்பிரக்ஞையும் மொழிப் பற்றை ஊட்டுவதாகவும் அமைந்துள்ளன. தமிழ்க் குடும்பங்களில் குழந்தைகளுக்கு வேற்றுமொழியிலான பெயர்கள் வைப்பதை ‘என்ன பெயர் வைக்கலாம்’ பாடலும், சிறுவன் ஒருவனுக்கு அறிவுரை கூறும் பாங்கில் ‘சின்னவனே நான் சொல்வதைக் கேளடா’ பாடலும் நமது சமூகத்தில் பெருகியுள்ள முன்பள்ளிகளில் தமிழ் பின்தள்ளப்பட்டிருக்கும் நிலையில் முன்பள்ளியிலேயே குழந்தைகளுக்கு நமது மொழி, பண்பாட்டினை கற்றுக்கொடுக்க வேண்டும் என ‘குழந்தைப்பள்ளி செய்வீர்’ பாடலும் ஏனைய பாடல்கள் சிறுவர்களுக்கேற்றவாறு ஓசை அழகுடனும் விளங்குவதையும் அவதானிக்க முடிகிறது. (இ) சிறுகதைகள்(i) அச்சில் வெளிவந்தவை• நீலத்திரை கடல் மீதினிலே ( இலக்கியா 2004 மே)• இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் ( இலக்கியா 2004 ஜூன்)• இன்று நான் நாளை நீ ( இலக்கியா 2004 ஜூலை)
(ii) கையெழுத்துப் பிரதிகளாக உள்ளவை• பாட்டியின் கரங்கள்• தீ• போர் வீரன்• வர்ணங்கள்• தேவதைகள் இப்படித்தான்• அன்னதானம்• ஒத்தக் கொலுசு

பாட்டியின் கரங்கள்

எனது பாட்டியின் நினைவாக நான் எழுதிய சிறுகதை...
பாட்டியின் கரங்கள்
எனக்கொரு பாட்டி இருந்தாள்! உங்களுக்குத் தெரியுமா?...எனக்கென்று ஒரேயொரு பாட்டிதான் இருந்தாள். எனக்கு பத்து வயதாகும்போது அவளுக்கு எழுபது வயதாகிவிட்டது. எழுபது வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாகவே நடமாடிக் கொண்டிருந்த என் பாட்டி கிராமத்திலுள்ள அத்தை வீட்டுக்குச் சென்றுவிட்டாள்.
இரண்டு மாதங்களின் பின்னர் தகவல் வந்தது.
பாட்டி இறந்துவிட்டாள்.
காரியம் செய்ய சொந்தங்கள் கூடின. பாட்டிக்கு புதுப்புடவை கட்டி, தலைமாட்டில் எண்ணெய் விளக்கு வைத்து அமைதியாகத் தூங்கினாள் பாட்டி.
ஆனால் எல்லோரும் அழுதனர். இறந்து போன பாட்டியை நினைத்து. எத்தனை முறை அழுதிருப்பாள் பாட்டி உயிருடன் இருந்தபோது. ஊர் வழக்கப்படி –பாட்டி-சுடுகாட்டுக்கு தூக்கிச் செல்லப்பட்டாள். என் பெரியப்பா கொண்டு சென்ற தண்ணீர்ப் பானை உடைக்கப்பட்ட பின் பாட்டி-மடுவில் இறக்கப்பட்டாள். அசையாமல் பாடையை விட்டு-பன்பாயின் இருபுறமும் பலர் பிடித்து மெதுமெதுவாக பாட்டியை மடுவினுள் வைத்தனர். சிறிது நொடிகள் அமைதியாய் நின்றபடி அழுதபின் மூன்று பிடி மண் அள்ளி பாட்டியின் மேல் போட்டனர். கூட்டம் கலைந்தது.
பாட்டியின் சிரித்த முகமும்-மூடிய கரங்களும் என் கண்ணிலே அடிக்கடி தோன்றி மறைந்தது.
காரியம் முடிந்து சில தினங்களின் பின்னர்-கிராமத்தை விட்டு வீட்டுக்கு வந்துவிட்டோம்.
பாட்டியின் நினைவு சிறிது சிறிதாக எம்மை விட்டு அகன்று கொண்டிருந்தது. சில மாதங்கள் கழிய –பாட்டி என்னிடம் பேச விரும்புவதாய் எனக்குத் தோன்றியது. கனவிலே வந்தாள்!...சிரிப்பாள்!..மூடிய கரங்களை காண்பிப்பாள்.
தொடர்ந்தும் பாட்டி - மூடிய கரங்களை என்னிடம் காண்பித்தாள். காரணம் எனக்குத் தெரியவில்லை.
கரங்களை பாட்டியும் திறப்பதில்லை.
பரீட்சைக்குப் படித்து விட்டு - இரவுகளில் வெகுநேரத்துக்குப் பின்னர் தூங்கிப்போனாலும் - காத்திருந்து பாட்டி வருவாள்! அவசரமாகச் சிரிப்பாள். மூடிய கரங்களைக் காட்டுவாள்.
எனக்குப் பரீட்சை முடிந்தது.
குடும்பத்தோடு- கிராமத்துக்கு போகும் கட்டாயம் ஏற்பட்டது. கிராமத்தில் பாட்டி வாழ்ந்த காணித்துண்டை விற்று – என் தந்தையும் பெரியப்பாவும் பங்கு கொள்வதாய் பேச்சு. பெண்பிள்ளைகளுக்கு ஏற்கனவே நிறையக் கொடுத்து விட்டதால்… இதில் அவர்கள் பங்கு கேட்க முன் வரவில்லை.
வளவில் ஆங்காங்கே பாட்டி வளர்த்த மாமரங்கள் காய்த்து குலுங்கின. காய்களும், பூக்களும் சந்தோசித்தன. பாட்டியைப் போல!
வளவு விற்கு முன் வேலியாய் நின்ற பனைகளை வெட்டி விற்பதென்றும் முடிவானது. சில நாட்கள் கிராமத்தில் என் பொழுதுகள் கழிந்தது. பனைகள் வெட்டி வீழ்த்தப்பட்டன. இராவணன் வீழ்ந்த பின் அலறி வீழ்ந்த மண்டோதரிபோல் - தலைவிரி கோலமாய் - வெட்டிய பனைகள் உழவு வண்டியில் ஏற்றப்பட்ட பின் மீண்டும் நாங்கள் வீட்டுக்கு வந்தோம்.
கிராமத்தில் எனக்கு கனவு வரவில்லை.பாட்டியும் வரவில்லை. பாட்டியைப்பார்க்க வேண்டும். ஆசையாய் இருந்தது. வீட்டுக்குப் போனதும் பாட்டி வருவாள்.
எனக்கு நம்பிக்கை சிறிதாய் இருந்தது.
இரண்டு நாட்களை தாண்டிய பின்னரும் பாட்டி – என்னைப் பார்க்க வரவில்லை.
மூன்றாம் நாளில் - பாட்டி வந்தாள் - சிரிக்கவில்லை.அவள் அழுவதாயும் தெரியவில்லை. மூடிய கரங்களைத் திறந்து காட்டினாள். சிவப்பாய் என்ன அது?... கரங்களிலே!..கனவில் வண்ணங்கள் தெரிவது சாத்தியமா?... எனக்குச் சிவப்பாய் தெரிகிறதே!... இரத்தம்தான் அது.. பாட்டி போய்விட்டாள்.
பாவம் பாட்டி! பாட்டிக்கு ஏதோ ஆகிவிட்டது. அடுத்த பகலில் பாட்டி வந்தாள். கனவில் அல்ல. நான் தான் பகலில் தூங்குவதில்லையே!... சட்டமிட்ட கட்டத்துள் புகைப்படமாய் பாட்டி என் வீட்டு மண்டபத்துச் சுவருக்கு வந்தாள். பளிச்சென்ற முகம்.பாட்டியின் போட்டோவை மாட்ட சுவரில் ஆணியடிக்கும்போது!அப்பாவின் விரலில் சுத்தியல் பட்டு - இரத்தம் கசிந்தது. அதே இரத்தம்!... பாட்டியின் கரங்களில் தெரிந்த சிவப்பில்!.
பாட்டியின் படத்துக்கு மாலைபோட்டு பொட்டு வைத்து- ஊதுபத்தி கொளுத்துவது வழக்கமாகிவிட்டது. பாட்டி இப்போதெல்லாம் என் கனவில் வருவதில்லை. பாட்டி சாமியாகிவிட்டாள். சாமிகள்தான் என் கனவில் வருவதில்லையே!..
ஆனால் பாட்டியின் கரங்களில் ஏன் இரத்தம் வந்தது?... உங்களுக்குத் தெரியுமா?.

1 comment: