Tuesday 24 August 2010

திருக்கோவில் கல்வெட்டு







'தேசத்துக் கோவில்' என்று அழைக்கப்படுகின்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் இலங்கையில் அமைந்துள்ள மிகப்பழமை வாய்ந்த முருக தலங்களுள் ஒன்றாகும். இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் என்னும் ஊரில் இவ்வாலயம் அமைந்துள்ளது, பண்டைய நாளில் இவ்விடம் நாகர்முனை என்று அழைக்கப்பட்டது.


இலங்கையின் பூர்வீகக் குடியினரில் ஒரு பிரிவினரான நாகர் குலத்தவர்களால் இவ்வழிபாட்டுத்தலம் தோற்றுவிக்கப்பட்டதாக அறியமுடிகிறது. கி.மு 1ம் நூற்றாண்டில் அனுராதபுரத்தைக் கைப்பற்றி ஆட்சிபுரிந்த தமிழ் மன்னர்களால் சிறியதொரு ஆலயமாக நிர்மாணிக்கப்பட்டு, பின்னர் கி.மு 2ம் நூற்றாண்டில் மனுமன்னனாலும்(எல்லாளன் (கி.மு 145-101) ) ,அதைத்தொடர்ந்து சோழ மன்னர்களாலும் பராமரிக்கப்பட்டு வந்ததாக வரலாற்றுத் தகவல்கள்மூலம் அறிய முடிகிறது.


பிற்பட்ட காலத்தில் வன்னியர் ஆட்சியில் மீண்டும் புதுப் பொலிவு பெற்று விளங்கிய இவ்வாலயம் மட்டக்களப்பு தேசத்தில் (அம்பாறை உள்ளடங்கிய மட்டக்களப்பு) முதன்மையான திருப்படைக் கோவிலாக விளங்கி வருகிறது.


திருக்கோவிலில் மூன்று கல்வெட்டுக்களும் இன்னும் பல கல்வெட்டை ஒத்த சிதைவுகளும் காணப்படுகின்றன.


முதலாவது கல்வெட்டு - தம்பிலுவில் அம்மன் கோயிலில் கிடைக்கப்பெற்றது. இது ஏறக்குறைய ஐந்து அடி உயர தூணாகும். அதனிரு பக்கங்களிலும் 38 வரி பொறிக்கப்பட்டுள்ளது. மற்றைய இருபக்கங்களிலும் ஒரு சூலாயுதமும், ஒரு மயிலும் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டின் ஆரம்பத்தில் சூரிய, சந்திர வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது 15ம், 16ஆம் நூற்றாண்டுக்குரியதாகக் காணப்படுகின்றது.


இரண்டாவது கல்வெட்டு - இது 2 அடி நீள அகலமான ஒரு கல்லிற் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் தமிழ் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.


மூன்றாவது கல்வெட்டு - இது 4 அடி உயரமும், 8 1/2 அங்குல அகலமும் உடையதாக கல்லிற் செதுக்கப்பட்டுள்ளது. இது 18ஆம் நூற்றாண்டைச் சோந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது

No comments:

Post a Comment