Wednesday 25 August 2010

கொக்கட்டிச்சோலை

.



ஈழத்திலே சிவ வழிபாடு வரலாற்றுக்கு முந்திய தொன்மை மிக்க வழிபாடாகக் காணப்பட்டுள்ளது. நாடெங்கும் சிவத்தலங்கள் காணப்பட்டுள்ளன. புராண இதிகாச கதைகளின் மூலமும், ஆய்வு வெளிப்பாடுகளின் மூலமும் சிவவழிபாட்டின் தொன்மையைக் காணக் கூடியதாயுள்ளது. விஜயன் வருகையோது இலங்கை வரலாற்றை ஆரம்பிப்போர், அவன் வரும்பொழுது ஈழத்திலே பல ஈஸ்வரங்கள் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளன. ஈழத்திலுள்ள புராதன சிவாலயங்களுள் கொக்கட்டிச்சோலை என்னும் இடத்திலுள்ள தான்தோன்றீஸ்வரம், பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டதாகக் காணப்படுகின்றது. பல நூற்றாண்டுகளாக இடையறாது வழிபாடுகள் நடைபெறும் கோவிலாகவும் இக்கோயில் விளங்குகின்றது.

ஈழத்தின் கிழக்கு மாகாணமான மட்டக்களப்பினை அமைந்துள்ள இக்கோயில், புராண இதிகாச, வரலாறுகளோடு பின்னிப்பிணைந்து காணப்படும் சிறப்புடையது. கல்முனைக்கள் செல்லும் பிரதானவீதியில், ஐந்துமைல் தூரத்தில், மேற்குநோக்கில் மண்முனைத்துறை வழியாகச் செல்லும் பாதையொன்றுண்டு. இப்பாதையில் நான்கு மைல் தூரத்தில் கொக்கட்டிச்சோலை என்னும் இயற்கை எழில் மிக்க கிராமமுண்டு. இக்கிராமம், முல்லையும், மருதமும் ஒருங்கே கொண்ட சிறப்புமிக்க நிலப்பிரதேசத்தைத் தன்னகத்தே கொண்டது. இந்த அழகிய கிராமத்திலேயே தான்தோன்றீஸ்வரம் என்னும் சிறப்புமிக்க சிவன்கோயில் காணப்படுகின்றது. தேசத்துக் கோயில்கள் என்று கிழக்கிலங்கை மக்களால் பாராட்டப்படும் ஏழு கோயில்களுள் கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றீஸ்வரமும் ஒன்றாகக் குறிப்பிடப்படுகின்றது. இக்கோயில் வீரசைவ மரபுகளின் இருப்பிடமாகக் காணப்படுகின்றது.

இக்கோயில் காலத்திற்குக் காலம் திருப்பணிகள் செய்யப்பட்டுப் புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது. ஆதியிலிருந்த கோயில், பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக விளங்கியுள்ளது என்பதை ஐதீகங்கள் மூலம் அறிய முடிகின்றது. ஆதியிலிருந்தகோயில் செங்கல்லினால் கட்டப்பட்டிருந்தது என்பதைத் தவிர, ஆலயம் பற்றி வேறு ஆதாரக் குறிப்புகளைகப் பெறமுடியாதுள்ளது. இக்கோயில் 1946 ஆம் ஆண்டிலே புனரமைக்கப்பட்டபோது, விமானமுடன் கூடிய கர்ப்பக்கிருகம். அர்த்தமண்டபம், அலங்கார மண்டபம் என்பனவும், தெற்குப் பக்கத்திலே அம்மன் கோயிலும் அமைந்திருந்தன. இவையாவும் தொன்மையுடையனவாகக் காணப்பட்டபோதிலும், இவற்றின் காலத்தை அறிவது கடினமாகவே காணப்படுகின்றது. கோயிலின் விமானம், திராவிடக் கட்டிடக்கலையின் அம்சங்களும், மலையாள தேசக் கட்டிடக் கலையின் அம்சங்களும் கலந்த ஒரு சிற்ப முறையினைக் கொண்டதாகக் காணப்படுவதாக ஆய்வாளர் கூறுவர். இவ்வாறான சிற்பமுறை கி.பி. 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுகளுக்குரியது. இதன் அடிப்படையில் நோக்கும்போது இக்காலப்பகுதிக்கு முற்பட்ட காலப்பகுதியைக் கொண்டதாகவே தான்தோன்றீஸ்வரத்தின் வரலாறு இருக்க வேண்டும்.

இவ்வாலயம் புனரமைக்கப்பட்டபோது, பரிவாரதேவர்களான பிள்ளையார், முருகன், வள்ளி, தெய்வயானை, விஷ்ணு, நாகதம்பிரான், நவக்கிரகங்கள் ஆகியோருக்கான ஆலயங்கள் புதிதாக அமைக்கப்பட்டன. இவற்றோடு மகாமண்டபம், சபாமண்டபம் ஆகியனவும் கட்டப்பட்டன. ஆதியில் இருந்த கோயிலுக்குக் கோபுரம் காணப்படவில்லை. எனவே புனருத்தாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது, புதிதாக இராசகோபுரம் கட்டப்பட்டது. இக்கோயிலிலுள்ள கொடித்தம்பம், ஏறக்குறைய அறுபது அடி உயரமானது. இத்தம்பம் நாக மரத்தால் செய்யப்பட்டது. இதற்கு இருபது பிரிவுகளாகச் செப்புத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்பாகத்திலே விநாயகரின் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள பழைய இரண்டு ரதங்களும் மிகப் புராதனச் சின்னங்களாகக் காணப்படுகின்றன. இத்தேரிலுள்ள சிற்ப அமைப்புமுறைகளைக் கருத்தில் கொள்ளும்போது, இத்தேர்கள் மிகத் தொன்மையானவையாகக் கருதப்படுகின்றன. மட்டக்களப்பின் அதிபனாயிருந்த தருமசிங்கன் (கி.பி. 958) என்பவன், சோழநாட்டுச் சிற்பிகளை வரவழைத்துக் கோயிலுக்குரிய மூன்று தேர்களை உருவாக்கினான் என்பது ஐதீகம். இத்தேர்கள் அமைப்பிலும், கலைவண்ணத்திலும் மலையாளதேச சிற்பமுறையைக் குறிப்பதாகக் காணப்படுகின்றது. தருமசிங்கனுடைய ஆட்சிக்காலத்தைக் கருத்தில் கொள்ளும்போது கி.பி. 9 ஆம் நூற்றாண்டுகள் முற்பட்ட தொன்மையுடையதாக இக்கோவிலின் வரலாறு காணப்படுகின்றது.

இக்கோயிலின் தல வரலாறு பலரோடு தொடர்புபட்டுக் காணப்படுகின்றது. கோயிலுக்குரிய திருப்படைப்பத்ததியிலும், தலவரலாறு தொடர்பான ஐதீகங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இக்கதைகள் வரலாற்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்டவையாகக் காணப்பட்டாலும், கற்பனைச் செறிவுடன் கூடிய புனைகதைகளையும் காணக் கூடியதாயுள்ளது. சிங்கள வரலாற்று நூலாகக் காணப்படும் மகாவம்சக் குறிப்புகளையும் கோயில் திருப்படைப்பத்ததியிலுள்ள கதைகள் பலவும் உலகநாயகி, தர்மசிங்கன், மாகோன், விமலாதர்மன் ஆகியோரோடு தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரத்தை அடிப்படையாகக்கொண்டு பல பாடற்தொகுதிகள், காலத்திற்குக் காலம் ஆக்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் திருப்படைப்பத்ததி என்னும் தொகுதியில் அடங்கியுள்ளன. இவற்றுள் திருப்படைப்பத்ததியின் மூலம் ஆலயத்தைப்பற்றியும், அதனோடு தொடர்புடைய பல்வேறு விடயங்களையும் அறியக் கூடியதாயுள்ளது. ஏட்டுவடிவில் நெடுங்காலமாக நிலவி வந்த, திருப்படைப்பத்ததியிலுள்ள பாடல்கள், கல்வெட்டு என்னும் இலக்கியமரயைச் சேர்ந்தவை. குளிக்கல்வெட்டு, பெரிய கல்வெட்டு, பங்கு கூறங் கல்வெட்டு, ஆசாரிகள் கல்வெட்டு, நாதன் கல்வெட்டு, திருப்படைக்களஞ்சியம் என்பவை அவற்றுட் பிரதானமானவை. ஏனைய கல்வெட்டைப்போன்று இக்கல்வெட்டுகள் பிரபலமாகவில்லை. திருப்படைப்பத்ததியில் ஆதிகாலம் முதல் ஒல்லாந்தர் ஆட்சிக்காலம் வரை ஏற்பட்ட வளர்ச்சியும், வரலாற்றோடு தொடர்புடைய வேறு பல அம்சங்களும், ஐதீகங்களும், பாமரத்துவமான கதைகளும், புனைகதைகளும் கலந்து காணப்படுகின்றன. இவற்றோடு அரசர்களைப்பற்றிய குறிப்புகள், ஒவ்வொரு பிரதேசங்களின் பிரதானிகளாகக் காணப்பட்ட வன்னியரைப்பற்றிய விடயங்கள், சமுதாயப்பிரிவுகள், சமுதாயவழமைகள், சந்ததிமுறைகள் பற்றிய குறிப்புகள் என்பனவற்றையும் திருப்படைத்ததிப்பாடல்களிலே காணலாம்.

கோயிலின் ஆரம்பம் பற்றி இருவிதமான ஐதீகங்கள் நிலவுகின்றது. இவற்றுள் ஒன்று, கொக்கட்டியார் என்பவரோடு தொடர்புடைதாகக் காணப்படுகின்றது. பண்டைக் காலத்தில் இந்தியாவிலிருந்து கதிர்காமத்தைத் தரிசிக்க முத்துலிங்கர், கொக்கட்டியார் என்னும் இருவர் யாத்திரையை மேற்கொண்டு இலங்கைக்கு வந்தனர். அவ்வாறு வரும்பொழுது, கொக்கட்டிச்சோலையெனத் தற்காலத்திலே வழங்கப்படும் இடத்தில், கொக்கட்டியார் சிவபதம் அடைந்தார். அவரைச் சமாதியிருத்திய பின், முத்துலிங்கர் கதிர்காமயாத்திரைவைத் தொடர்ந்தார். அப்பொழுது கொக்கட்டியாரின் சமாதியிலிருந்து ஒரு லிங்கம் தோன்றியது. இந்த லிங்கத்தை, அருகிலிருந்த கொக்குநெட்டிமரம் மறைத்திருந்தது.

ஒரு நாள் அவ்வழியால் தேன் எடுக்கச் சென்ற எயினர் இனத்தவரொருவர், சமாதியை மறைத்திருந்த கொக்குநெட்டிமரத்தை வெட்டியபோது, அம்மரத்திலிருந்து இரத்தம் சிந்தியது. இச்சம்பவங்களைச் சொப்பனத்தில் கண்டறிந்த கதிர்காமயாத்திரீகர்களில் ஒருவரான செட்டியார் ஒருவர். கொக்கட்டியார் சமாதியிருந்த இடத்திற்கு வந்து, அவ்விடத்தில் கோயில் எழுப்பித் திருப்பணிகளைச் செய்தார். இக்கோவிலையே கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் என அழைத்தனர். இந்தியாவிலிருந்து கதிர்காம யாத்திரைக்காக ஈழம் வருவோர். இத்தலத்தைத் தரிசிக்கும் வழக்கமும் தொன்றுதொட்டுக் காணப்பட்டது. இக்கோயிலில் ஆதியில், வேடமரபினரே பூசைகளைச் செய்துள்ளனர். இவ்வாறான குறிப்புகளைத் திருவேட்டைக் காவியம் என்னும் நூலிலே காணலாம்.

கொக்கட்டிச்சோலையிலே மூர்த்தி, சுயம்புலிங்கமாகக் காணப்படுவதால் ஏற்பட்ட தான்தோன்றீஸ்வரம் என்னும் கோயில் பெயர், கொக்கட்டிச்சோலை என்னும் ஊர்பெயர் இலையாவற்றையும் ஒன்றுசேர்த்துக் 'கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம்' என வழங்குவர். இங்கு எழுந்தருளியுள்ள பெருமானைப் பக்தர்கள். 'தான்தோன்றிய அப்பா' என அன்பாக அழைப்பர். கிழக்கிலங்கைப் பிரதேசமான திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் தவிர்ந்த கிழக்கிலங்கைக் கோயில்கள் பலவும், வேடர்களையும் கதிர்காமயாத்திரீகர்களையும் தொடர்புபடுத்தியவையாகவே காணப்படுகின்றன. ஈழ வரலாற்றில் ஆதியில் யாத்திரை காரணமாக வந்த அன்பார்கள். இறைவாக்கிற்கிணங்கக் கோயில்கள் பலவற்றைக் கட்டிய வரலாறு பரந்துபட்டுக் காணப்படுகின்றது. தான்தோன்றீஸ்வரம் பழம்பெருமைமிக்க கோயிலாகக் காணப்பட்ட போதிலும், இதன் தொன்மையைக் குறிக்கும் சாசனங்களோ அன்றித் தொல்பொருட் சின்னங்களோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

தான்தோன்றீஸ்வரத்தின் இன்னுமொரு ஐதீகம் உலகநாயகி என்பவரோடு தொடர்புடையது. குணசிங்கன் என்பவன் மட்டக்களப்பை ஆட்சி செய்த காலத்தில், கலிங்கதேசத்திலிருந்த குகசேனன் என்பவனுடைய மகளான உலகநாயகி என்பவள் கௌதமபுத்தரின் புனித தசனத்தையும் (பல்), தனது முன்னோர்கள் கைலாசத்திலிருந்து எடுத்துப் பேணி வைத்திருந்த சிவலிங்கத்தையும் பாதுகாப்பாக எடுத்துக்கொண்டு, தனது சகோதரனான உலகநாதன் என்பவனுடன் இலங்கைக்கு வந்தாள். அவ்வேளை இலங்கையை ஆட்சி செய்த மேகவர்ணன் என்னும் அரசனிடம் புத்த தசனத்தைக் கொடுத்தாள். அவ்வாறே, தான் வாழ்வதற்கு மக்கள் வசிக்காத காட்டுப்பிரதேசம் ஒன்றினைத் தரவேண்டுமென்று அரசனிடம் கேட்டுக்கொண்டாள். உலகநாயகியின் வேண்டுகோளை ஏற்ற அரசன், மட்டக்களப்பு அதிபனாகிய குணசிங்கனிடம், அவளது விருப்பத்தை நிறைவேற்றுமாறு அனுப்பி வைத்தான். குணசிங்கன், மண்முனை என்னும் நிலப்பகுதியை நிந்தமாக உலகநாயகிக்குக் கொடுத்து, அப்பிரதேசத்தைத் திருத்தி, அங்கு வாழ உதவி செய்தோடு, மாளிகை ஒன்றையும் அவர்கள் தங்க அமைத்துக் கொடுத்தான். இவ்வேளையில் உலகநாயகி, தனது சகோதரனான உலகநாதனின் உதவியோடு, இந்தியாவிலுள்ள சில குடும்பங்களையும் அங்கு வரவழைத்துக் குடியேற்றினாள். அத்துடன் மண்முனையில் ஆலயமொன்றினைக் கட்டி, அதிலே சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்தாள்.

களப்புமனை என அழைக்கப்பட்ட காட்டின் தென்புறத்திலே திடகன் என்னும் வேடர் தலைவன் காடு வெட்டும்பொழுது, அவ்விடத்திலே காணப்பட்ட கொக்குநெட்டி மரத்தை வெட்டும்பொழுது, அதிலிருந்து உதிரம் பெருகியது. அதனைக் கண்ட வேடன், தனது துணியால் வெட்டு வாயை மூடிக்கட்டி, உதிரப்பெருக்கைத் தடுத்தான். பின்பு அச்செய்தியை உலகநாயகியிடம் தெரிவித்தான். உலகநாயகியும் வேடன் கூறிய இடத்திற்குச் சென்று பார்த்தபொழுது, அவ்விடத்திலே சிவலிங்கம் இருப்பதைக் கண்டாள். உலகநாயகி அப்பிரதேசத்தைத் திருத்தி, வெளியாக்கிக் கோயிலொன்றையும் அமைத்து, அவ்விடத்திலே மக்களையும் குடியேற்றுவித்தாள். இக்கோயிலிலே பணி செய்ய, பட்டர்கள் மூவரையும், மாலைகட்டும் குடிகளையும் அழைத்துக் குடியேற்றினாள். பட்டர்களைப் பூசகர்களாக நியமித்தான். பட்டர்கள் கூறியவாறே, மாலைகட்டுவோர் நடக்கவே;ணடுமென்றும் கட்டளையிட்டாள். ஆலயச் செலவுக்காக வயல் நிலங்களை மானியமாகக் கொடுத்தாள். இவ்வாறான பல பணிகளைச் செய்த உலகநாயகி, மட்டக்களப்பு அதிபனாகிய குணசேனனின் தம்பியான கிரசானன் என்பவனை மணந்து, இருபிள்ளைகளைப் பெற்றாள். இவர்களின் சந்ததியினரே உலகிப்போடி குடி என அழைக்கப்படுகின்றனர்.

இக்கதையோடு இணைந்து காணப்படும் மண்முனைப்பற்று தனியான நிர்வாகப் பிரிவாகவே காணப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு சமுதாயப்பிரிவினரும் பல நூற்றாண்டுகளாகச் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். இக்கதையின் அடிப்படையில் நோக்கும்பொழுது, மண்முனைப்பற்றிலே உலகிப்போடி குடியினர் அதிகாரம் பெற்று விளங்கிய காலத்திலே தான்தோன்றீஸ்வரமும் வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை ஊகிக்க முடிகின்றது.

உலகநாயகி இலங்கைக்கு வந்த காலத்தில் இலங்கையை ஆட்சி செய்தவன் மேகவர்ணன். இலங்கை வரலாற்றிலே இவனது ஆட்சிக்காலம், கி.பி 302 - 332 வரையாகும். இவனுக்கு முன் ஆட்சி செய்த மகாசேனனுடைய ஆட்சிக்காலத்தில் கிழக்கிலங்கையில் சிவத்தலங்கள் காணப்பட்டதாகவும், ஏராகாவில்ல (எருவில்) என்னுமிடத்திலே காணப்பட்ட சிவாலயத்தைப்பற்றிய குறிப்புகளையும் மகாவம்சமும் குறிப்பிட்டுள்ளது.

இக்கதைகளினின்றும் வேறுபட்டதாகக் குளக்கோட்டனுடைய தொடர்பு காணப்படுகின்றது. நாடும், மக்களும் நலம் பெற வேண்டும். என்ற எண்ணத்தில், திருக்கோணேஸ்வரம், தான்தோன்றீஸ்வரம், திருக்கோயல் முதலான ஏழுகோயில்களைக் குளக்கோட்டன் அமைத்தான் என்பதைத் திருக்கோயிற் திருப்படைப்பத்ததியிலுள்ள பாடல்வரிகள் விளக்குகின்றன. அவ்வாறே களுதேவாலயக் கல்வெட்டிலும் குளக்கோட்டனின் திருப்பணியைப்பற்றி,

திருமனுநீதிகண்ட குளக்கோட்டு ராமன்
நிதிவளர சந்நிதி தான்தோன்றுமீசன் ஆலயம்
மதி வளர நடத்திவரும் நாளையிலே விற்பரமரம்
குருலிங்க சங்கமம் குருவொடு பண்டாரம்
இருவருமாய் கதிரை நகர் நடந்தவாறே

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கோயிலோடு தொடர்புடைய அரசனாக மாகோன் என்பவன் கருதப்படுகின்றான். இவன் 13 ஆம் நூற்றாண்டிலே இலங்கைமேற் படையெடுத்து வந்து பொலநறுவையைக் கைப்பற்றி 40 வருடங்கள் இலங்கையை அரசுபரிந்த காலிங்கமாகன் எனவும் கூறுவர். இவனுடைய ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்புப் பகுதி சமய சமூக கலாசாரங்களிலே சிறப்புப்பெற்றுக் காணப்பட்டுள்ளது. இம்மன்னனுடைய ஆட்சிக்காலத்தில் வீரசைவம் மட்டக்களப்பில் அறிமுகமாகி, செல்வாக்குப்பெற்றுக் காணப்பட்டது. தான்தோன்றீஸ்வரத்திலே, வீரசைவர்களின் செல்வாக்கு மாகோனுடைய காலத்திலேயே ஏற்பட்டதென்றும், இதன் காரணமாகவே தான்தோன்றீஸ்வரமும் இவர்கள் வசமாகியதெனவும் கருதலாம். இவ்வாறான பல கருத்துகளையும், தான்தோன்றீஸ்வரத்தோடு காணப்படும் தொடர்புகளையும் திருப்படைப்பத்ததியிலே அறியக்கூடியதாயுள்ளது.

இக்கோயிலின் நிர்வாக முறைகள் அனைத்தும் வழமைகளை அடிப்படையாகக் கொண்டே காணப்படுகின்றன. தான்தோன்றீஸ்வரம் பற்றிய கல்வெட்டுப் பாடல்களிலே கோயிலோடு தொடர்புடைய பல வன்னிமைகளைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. குகன் இராசவன்னிமை, பூபாலகோத்திர வன்னிமை என்னுமிரு வன்னிமையின் வம்சங்களைப்பற்றிய பெயர்கள் காணப்படுகின்றன. அன்னியர் ஆட்சியில் இவர்கள் தமது ஆட்சிப் பொறுப்புகளை இழக்க நேரிட்டபோதினும், ஆலயங்கள் தொடர்பான மரபுகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். எனினும் பிற்காலத்தில் மக்களின் செல்வாக்கே கோயில் நிர்வாகத்தில் அதிகம் காணப்பட்டது.

மட்டக்களப்பிலுள்ள ஏனைய கோயில்களைப்போலவே தான்தோன்றீஸ்வரத்திலும் கோயில்கருமங்களைச் செய்யும் பொறுப்பு வண்ணக்கர் என்போருக்குரியதாகக் காணப்படுகின்றது. 1976 ஆம் ஆண்டில், வண்ணக்கர் என்போர் கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க நியமிக்கப்பட்டனர். இது மரபுரீதியாகவே தொடரும் செயலாகும். இக்கோயிலுக்குரிய பணிகளைச் செய்ய, உலகிப்போடிகுடி, காலிங்கருடி, படையாண்டகுடி ஆகிய குடிகளிலிருந்து மூவர் வண்ணக்கராய் வரும் உரிமையைப் பெறுவர். இவ் வண்ணக்கர்கள் சீவியகாலம் வரை இப்பொறுப்பைத் தக்க வைத்துக்கொள்ளமுடியும். புதிய தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் அப்பொறுப்பை ஏற்பர்.

கோயிலில் தொண்டுகள் புரிவோரை ஊழியக்காரர் என்றழைப்பர். ஆலய ஊழியம் செய்யும் இவர்களுக்குத் தேரோட்டத்திலே முன்னுரிமை வழங்கப்படும். தேரில் விதானங்களை அமைப்பதுமுதல் அவற்றைச் சோடிக்கும் பெருமையையும் ஊழியக்காரரே பெறுகின்றனர். தேரிலே சுவாமி எழுந்தருளியதும், ஆலயப்பட்டரோடு, ஊழியர்களும் தேர்ந்தட்டின்மேல் ஏறி நிற்பர். மற்றவர்களுக்கு இவ்வுரிமை வழங்கப்படுவதில்லை. கோயில் நிர்வாகத்தோடு தொடர்புடைய வன்னிமைகள், வண்ணக்கர், ஊழியர் ஆகியோரைப்பற்றிய குறிப்புகளும் திருப்படைபத்ததியிலே கூறப்பட்டுள்ளது. இப்பாடல்கள் சமகால வழக்கங்களையும், ஆலஙத்தோடு தொடர்புடைய பல விடயங்களையும் தெரிவித்துள்ளன.

தான்தோன்றீஸ்வரத்தின் பூசைவழிபாடுகள் மிக ஒழுங்காக நடைபெறும். தினமும் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் இங்கு பூசை நடைபெறும். ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற விசேடதினங்களோடு, தைப்பொங்கல், தைப்பூசம், பங்குனி உத்திரம், வருஷப்பிறப்பு, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை ஆகிய நாட்களிலும், சிவராத்திரி, கந்தசஷ்டி, விநாயகர்சஷ்டி என்னும் விரதநாட்களிலும் இங்கு சிறப்பான பூசைகள் நிகழும். இக்கோயிலில் நிகழும் ஆண்டுத் திருவிழாவைத் தேரோட்டம் என்று அழைப்பர். ஆவணி மாதத்தில் வரும் முதலாம் பிறையன்று கொடியேர் விழா நடைபெறும். தேரோட்டம் பூரணைக்குப் பின் வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும். மறுநாள் திங்கட்கிழமை, சூகர(பன்றி)வேட்டையும், குடுக்கை கூறுஞ் சடங்கும் நடைபெறும். பின்னர் தீர்த்தம் ஆடப்படும். ஆண்டுத்திருவிழாக்கள் பஞ்சாங்க விபரங்களுக்கேற்ப ஒவ்வொரு வருடமும் பதினேழு திருவிழாக்கள், பதினெட்டுத் திருவிழாக்கள், பத்தொன்பது திருவிழாக்கள் என வேறுபடும்.

இங்கு நடைபெறும் திருவிழாக்களில் தேர்த்திருவிழா மிக விசேடமானது. மட்டக்களப்பு அதிபனாக விளங்கிய தருமசிங்கனால் செய்விக்கப்பட்ட மூன்று தேர்களில் இரண்டு தேர்கள் மட்டுமே தற்போது காணப்படுகின்றன. இவை சித்திரத்தேர் என்றும் பிள்ளையார் தேர் என்றும் அழைக்கப்படுகின்றன. இத்தேரோட்டத்தை அயனுரிலுள்ள மக்களும் திரண்டு வந்து கண்டு களிப்பர். சித்திரத்தேரின் அடித்தளத்திலே சிவபெருமானின் திருவிளையாடல்களைக் குறிக்கும் அழகுமிக்க சிற்பங்கள் பல செதுக்கப்பட்டள்ளன. இத்தேர் ஐந்து சில்லுங்களைக் கொண்டதோடு ஆறடிவிட்டங் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இச்சில்லுகளுள் ஒன்று தேரின் அடித்தளத்தின் நடுவிலுள்ளது. சித்திரத்தேரானது பதினாறடி நீளமும், அதேயளவு அகலமுங் கொண்டது. சுவாமி எழுந்தருளும் மேற்தட்டு இருபத்தியொரு அடி உயரத்தில் அமைந்துள்ளது. அதன் மேல் சித்திரவேலைப்பாடுகள் அமைந்த ஐந்து தளங்கள் காணப்படுகின்றன. இத்தேரில் உமாமகேஸ்வரர்கோலத்தில் சிவபெருமான் எழுந்தருளுவார் பிள்ளையார் தேர் சித்திரத்தேரைவிடச் சிறியது. இத்தேர் பன்னிரண்டு அடி நீளமும், அதே அளவு அகலமுங் கொண்டது. இதன் மேற்தட்டு பதினாறடி உயரத்தில், அமைந்துள்ளது. அதன் மேல் மூன்று விதானங்கள் உள்ளன. இத்தேரில் பிள்ளையாரும் முருகனும் எழுந்தருளுவர்.

தேரோட்டத்தின் மறுநாள், சூகரவேட்டை (சூகரம் - பன்றி) நடைபெறும். சுவாமிக்குத் தங்க நூலிழைத்த வஸ்திரம் தரித்து, இரத்தின மாலை அணிவித்து, முக்குடை பிடிக்கத் தங்கப் பல்லக்கில் எழுந்தருளப் பண்ணிச் சூகர வேட்டைக்குக் கொண்டு செல்வர். சூகர வேட்டையின்போது பல மரபுகள் கடைப்பிடிக்கப்படும். சூகர வேட்டையின்போது வேலாயுதத்தைப் பல்லக்கில் வைத்து வேளாளர் சுமந்து செல்வர். இருபாகையர் சுலோகம் படிப்பர். அடியார்கள் கவரி வீசுவர். ஆலய ஊழியர்கள் பதினெட்டுவரை வரிசைகளைச் செய்வர். இவ்வாறான சூழ்நிலையில் தேசத்து வன்னிமை முன்னே செல்லப் பிற வன்னிமைகள் பின்னே செல்வர். அடியார்கள் இவர்களின் பின்னே செல்வர். வேட்டை நடைபெறும் களத்திற்குச் சென்றதும் அனைவரும் இளைப்பாறுவர்.

இவ்வேளையில் ஆரியநாட்டுச் செட்டிகள் வேளாளரின் துணையோடு சுவாமியின் இரத்தினமாலையைக் களவெடுப்பர். இதனைக் கண்ட பண்டாரங்கள் தேசத்து வன்னிமைக்கு முறையிடுவர். திருடிய செட்டிகளையும், வேளாளரையும் பிடித்துத் தண்டிக்குமாறு வன்னிமை கட்டளையிடுவார். பண்டாரங்கள் அதனை நிறைவேற்றுவர். அதன் பின்பு இருபாகை முதன்மை ஈட்டி எடுத்துக் கொடுக்க, கனகசபைப் பண்டாரம் அதனைத் தொட்டுக் கொடுக்கச் சுவாமி சூகர வேட்டையாடுவார். வேட்டை முடிந்தபின் அவ்விடத்திலே அமைக்கப்பட்ட மண்டபத்திலே சுவாமி இளைப்பாறுவார். இச்சந்தர்ப்பத்திலே குடுக்கைகூறும் நிகழ்வு நடைபெறும்.

சுவாமியின் முன்பு தேசத்து வன்னிமையும், ஏனைய வன்னிமைகளும் வீற்றிருப்பர். இவர்களுக்குச் சமீபத்திலே வண்ணக்கர் மூவரும் அமர்ந்திருப்பர். அடியார்கள் இவர்களைச் சூழ அமர்ந்திருப்பர். இவ்வேளையில் படையாண்ட குலத்தவர் ஒருவர் குடுக்கை கூறும் கல்வெட்டை வாசிப்பார். பின்னர் தண்டனை பெற்ற செட்டிகளையும், வேளாளரையும் அவிழ்த்து மஞ்சள் நீர் தெளித்த பின்னர், இவர்கள் கூட்டத்தவரை வணங்கிச் செல்வர்.

இவ்வாலயத்தில் பிராமணர்கள் பூசை செய்வதில்லை. இலிங்கதாரிகளான சங்கமரே பூசை செய்கின்றனர். வீரசைவத் தொடர்புடையவர்களைச் சங்கமர் என அழைப்பர். சங்கமர்களின் முன்னோர்கள் மல்லிகார்ச்சுனபுரத்திலிருந்து வந்தவர்கள் என்பது ஐதீகம். இவ்வாறாகக் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர வரலாறும், அங்கு நடைபெறும் வழமைகளும் ஈழத்திலுள்ள ஏனைய கோயில்களினின்றும் வேறுபட்டதாகவும், வழமைகள், மரபுகள் தழுவியவையாகவும் காணப்படுகின்றன.

No comments:

Post a Comment