Monday 16 August 2010

திருக்கோணமலை தி. த. சரவண முத்துப்பிள்ளை

பெண்விடுதலை எழுத்துக்கள் என்றவுடன் ஆரம்பநிலை வாசிப்பு உள்ளவர்களுக்கும் உடனடியாக ஞாபகத்துக்கு வருவது பாரதிதான்.

பெண் விடுதலை பற்றி பாடிய முதல் தமிழ் கவிஞனாக அவன் கொண்டாடப்படுவதுண்டு.

பெண்விடுதலைப்பிரக்ஞை என்பது தமிழ் பிரதிகளில் பாரதிக்கு முன்னமே நிறைய இருந்திருக்கிறது.

பாரதியே நான் அறிந்தவரை அதனை அரசியலாக்கி, அதனை தெளிவாக முனைப்புறுத்தி, அதற்கென்றே பாடல்கள் எழுதியிருக்கிறான்.

ஆனால் பெண் விடுதலையை முனைப்புறுத்தி, பாரதிக்கு பலம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே எழுதப்பட்ட தூதுகாவியம் ஒன்றின் பிரதி என்னிடமிருக்கிறது.

எனது ஊரைச்சேர்ந்த திருக்கோணமலை தி. த. சரவண முத்துப்பிள்ளை அவர்களின் பிரதியே அது.
"தத்தை விடு தூது"

இங்கே தரப்பட்ட செய்யுட்பகுதிகள் யாவும் பொருட் தெளிவிற்காய் அசைபிரிப்புக்கள் நீக்கப்பட்ட நிலையிலுள்ளன.

"உண்பதுவும் உறங்குவதும்
ஊர்க்கதைகள் பேசுவதும்
பெண்கள் தொழிலாமென்றே
பேசிடுவாரொருசாரார்
பெண்களுக்குத் தம்பதியே
பெருந்தெய்வம் என்பார் சிலர்
பெண்களுக்கும் அடிமைகட்கும்
பேதமில்லை என்பார் சிலர்
பேதமைகாண் இவர் கொள்கை
பேர்த்தறிவாய் பசுங்கிளியே."



பாரதியாருக்கு பத்து வயது கூட ஆகியிருக்காத 1892 இல் திருக்கோணமலை சரவணமுத்துப்பிள்ளை அவர்களால் இச்செய்யுள் "தத்தை விடு தூது" காவியமாக தமிழ் நாட்டு லிப்பன் அச்சியந்திர சாலையில் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது.


தி.த. சரவணமுத்துப்பிள்ளை, அறிஞர் தி.த.கனகசுந்தரம்பிள்ளை அவர்களின் சகோதரராவார்.

இவரே முதல் தமிழ் வரலாற்றுநாவலாகிய "மோகனாங்கியை " வழங்கியவர்.
பிரதியொன்று வாசகர் கரங்களை வந்தடைந்தவுடனேயே அதன் காலம், மூலம் எல்லாம் அழிந்துவிடுகிறது என்ற கருத்து இருக்கிறது.
அப்படியாயின் "பழைய பிரதிகள்" எல்லாமே நெருப்பில் போடப்பட வேண்டியவைதான்.

இது வரலாற்றை மறுதலிக்கும் போக்கு.
வரலாற்றை மறுதலிக்கும் தத்துவங்களின் பால் என்னால் ஈடுபாடுகாட்ட முடியாதுள்ளது.

இப்பிரதியையும் அது வெளிவந்த காலத்தையொட்டியே வாசிப்புக்குட்படுத்துவதன் மூலம் நாம் நிறைய தெரிந்துகொள்ளலாம்.
பாரதியார் பயன்படுத்தும் படிமங்கள் இக்காவியத்தில் அப்படியே எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

இச்செய்யுள்களை பாரதியார் இளமைக்காலத்தில் பார்த்திருக்க வாய்ப்பு உண்டூ என்று கூறப்படுவதுமுண்டு.

"தத்தை விடு தூது " காதல் தோல்வியிலிருந்து எழுந்த ஓர் காவியம்.
சரவணமுத்துப்பிள்ளை ஓர் இளமாணிக் கலைப்பட்டதாரி.
ஆங்கில இலக்கியங்களை, நூல்களை படித்தறிந்தவர்.
தனது காதல் தோல்வியினை தர்க்கரீதியான ஆய்வுக்குட்படுத்தி, அதற்கான அடிப்படைக்காரணம் பெண்ணடிமைத்தனம்தான் என்ற முடிவுக்கு வருகிறார்.
அந்த முடிவிலிருந்தே இக்காவியத்தின் செய்யுட்கள் பெண்விடுதலை பேசத்தொடங்குகின்றன.

மேற்கண்ட செய்யுள் முழுக்க முழுக்க மரபுவழிச்சிந்தனைகளை கேள்விக்குட்படுத்தும் முயற்சி.
மிகத்தீவிரமான உடைத்துப்போடலை நிகழ்த்துகிறது.
சற்று ஆழமாக பார்த்தீர்களானால் புரியும்.


//பெண்களுக்குத் தம்பதியே
பெருந்தெய்வம் என்பார் சிலர்//


இந்த வரியின் தீவிரம் பாரதியாரில் இல்லை.
"மாதறறங்கள் பழமையைக்காட்டிலும் மாட்சி பெறச்செய்து" வாழச் சொல்லத்தான் அவனால் முடிந்தது.



"கூட்டிற் பசுங்கிளிபோல்
கோதையரை எப்பொழுதும்
வீட்டிலடைத்துவைக்கும்
விரகிலருக்கு யாதுரைப்போம்
பூட்டித்திறந்தெடுக்கும்
பொருளாக் கருதினரோ
கேட்டார் நகைப்பதுவும்
கேட்டிலரோ பைங்கிளியே
கிஞ்சுகவாய் பைந்தொடிபாற்
கிளத்தாய் பசுங்கிளியே"

இச்செய்யுளின் முதல் வரிகள் பாரதியின் படிமங்களோடு ஒப்பிடத்தக்கவை.



"அத்தி முதல் சிற்றெறும்பீறாக உயிர் யாவதிலும்
உத்தமராம் மாந்தரொருவரே பேசவலார்
சித்தமகிழ்ந்தே பிறர்பாற் தெரிவையரைப் பேசவிடார்
எத்தான் மறுத்தனரோ இசையாய் இளங்கிளியே
ஏது குற்றம் செய்தனர்கள் இசைவாய் பசுங்கிளியே"


பெண்களை மனிதர்களுக்கு சமமாகக்கூட மதிக்காத போக்கினை அப்படியே சொல்கிறது இச்செய்யுள்.

அடுத்த செய்யுள் பெண்ணின் தெரிவுச்சுதந்திரம் பற்றி பேசும்



"கண்ணை மறைத்தே கொண்டுபோய்
காட்டில்விடும் பூனையைப்போல்
பெண்ணை மனையடைத்துவைத்து
பின்னொருவர் கைக்கொடுப்பார்
கண்ணால் முன்கண்டுமிலர்
காதற்சொற் கேட்டுமிலர்
எண்ணாதுமெண்ணி இருந்தயர்வர் மங்கையர்கள்
இக்கொடுமைகு யாது
செய்வதிசையாய் பசுங்கிளியே"




"தம்மனைக்கோர் பசுவேண்டின்
தாம் பலகாற் பார்த்திருந்தும்
பின்னும் துணிவிலராய்
பேதுறுதன் மாந்தர் குணம்
என்னே மணவினையை இமைப்பொழுதிலே முடிப்பார்
சின்னபதிமை கொடு
சிறார் செய்மணம் போலுமரோ
தெரிவையட் கிம்மாற்றம்
சீர்கிளியே கூறுதியாய்"


பாரதியின் பெண்விடுதலைக்கவிதைகள் பிரேஞ்சு நூல்களின் தாக்கத்தில், அறிவுத்தளத்தில் வந்ததென்றால், சரவணமுத்துப்பிள்ளையிடம், காதல் தோல்வியிலிருந்து உணர்வுத்தளத்தில் வருகிறது.

சரவண முத்துப்பிள்ளையின் இந்தப்பிரதி நெருப்பில் போடப்பட வேண்டியதில்லை என்றாலும். தூக்கிவைத்து ஆடும் படியாக எந்தவித நேர்மையான் சிந்தனைகளையும் பெரிதாக வெளிப்படுத்திவிடவில்லை.
பாரதியின் செய்யுட்களைப்போலவே,

இன்றைய ஆண்கவிஞர்களின் பெண்ணியம் பேசும் பிரதிகளைப்போலவே உரித்துப்பார்த்தால் அடிப்படையில் ஆண்மைய நோக்கே எஞ்சி நிற்கும்.

இது பற்றி பேசும் போது இக்காவியத்தை வேறொரு கோணத்தில் விமர்சிக்கலாம்.

இக்கட்டுரை வெறும் அறிமுகம் மட்டுமே.

No comments:

Post a Comment