Wednesday 25 August 2010

மட்டக்களப்பில் வெற்றிலை செய்கை

மண்ணை இடமாற்றி மிக இலகுவாக செய்யப்படும் இத்தொழில் மிக கவனமாக கண்காணிக்கப்பட வேண்டியதொன்றாக உள்ளது. வெற்றிலைத்தோட்டம் (Betel Garden) என்றே அழைப்பர்.
வெற்றிலை பல மருத்துவத்துக்கு உதவக்கூடியது ஆனாலும் இது பெரும்பாலும் மெல்லப்படுதலுக்கே (chewing betel) பயன்படுகிறது. ஆனாலும் திருமண வைபவங்கள் கோயில் நிகழ்வுகளில் பிரதான இடம் வகிக்கிறது.
இதன் மருத்துவ பயன்கள் பற்றி நம்ம சங்கவி தனது பதிவிட்டிருக்கிறார். பாருங்க வெற்றிலையின் மகத்துவம்

இந்த வெற்றிலை நம்ம ஊரில் எப்படி செய்கை பண்ணப்டுவது என்று பாருங்க.

இவ்வாறு கொடி படருவதற்கு கம்புகள் வரிசைக்கிரமமாக நடப்படும் இக்கம்புகளினருகில் வெற்றிலைக்கொடி(வெற்றிலைக் கொழுந்து) வரிசைக்கிரமமாக நடப்படும் . நிரல் வரிசை "சீத்து" என்று அழைக்கப்படும். இரண்டு கம்பு வரிசைகளுக்கிடையில் "புருவம்"  என்று சொல்லுவர். இரண்டு சீத்துக்களுக்கிடைப்பட்ட வாய்க்கால் இதனை "மூட்டான்" என்றழைப்பர். 
 சற்று வளர்ச்சியுற்ற கொடி நாற்றுப்பருவம் பாருங்க...
பின்னர் வளர்ச்சியுறும் போது ஆரிக்கை கொண்டு கம்போடு சேர்த்து வெற்றிலைக்கொழுந்து  (வெற்றிலைக் கொடி) கட்டப்படும்.இதன்போது வெற்றிலையின் பற்றுவேர்கள் கம்பினைப் பற்றிக்கொண்டு வளரும். வளர்ந்த வெற்றிலை தோட்டம் பாருங்க..( ஆரிக்கை என்பது தென்னங்குருத்து என்று சொல்லப்படும் இளம் ஓலையினைக் வெயிலில் காயவைத்து நார்நாராக கிழித்து எடுக்கப்படும் நார்) ஒரு இசைப்பட்டதாரி நீர் பாச்சுகிறார் பாருங்க நம்ம நண்பன்தான்
இதன் குறிப்பிட்ட 12-20 நாட்களின் இடைவெளியில் அறுவடை அதாவது வெற்றிலை பறிக்கப்படும். இது கீழிருந்து மேல்நோக்கி மூன்று அல்லது நான்கு வெற்றிலைகள் கைகளினால் பறிக்கப்படும். பின்னர் இது வளர்ச்சியுற்று கொழுந்து கம்புகளின் உச்சியை அடையும் போது இதனை "அலம்பல்" என்று கூறப்படும் அதாவது கிளைவிட்ட மேலுள்ள கம்புகளில் கொழுந்து படர்வதைக் குறிப்பர். இதன் பின்னர் இக்கொழுந்து கீழ் இறக்கப்பட்டு பதிக்கப்படும். அதாவது மண்ணினுள் வெற்றிலைக்கொடி சுருட்டப்பட்டு மண் போடப்பட்டு மீண்டும் சிறிய உயரத்துக்கு கொழுந்து கம்போடு கட்டப்பட்டு மீண்டும் வளர்க்கப்படும். காட்சிகள்............
ஆரிக்கை
அலம்பலில் கொழுந்து
அலம்பலில் இருந்து கொழுந்து இறக்கப்படுகிறது....
இறக்கப்பட்ட கொழுந்து மீள கம்புடன் கட்டப்படுதலும் கொடி மண்ணுக்குள் மறைக்கப்படலும்


நீர் ஊற்றி வளர்க்கப்படும் வெற்றிலைக் கொழுந்து இரசாயனப் பசளைகளை ஏற்றுக்கொள்வதில்லை. இதனால் மாட்டெரு மூலம் இயற்கைப்பசளையையே இடப்படுவதால் வெற்றிலைத்தோட்டச் சொந்தக்காரர்கள் ஒவ்வொருவரும் மாட்டுக்கொட்டில்களில் மாடுகள் வளர்த்து இதிலிருந்து மாட்டெருவும் மண்ணடன் சேர்த்து தோட்டத்துக்கு இட்டு கொழுந்து வளர்க்கப்படும். இது நீர் வெற்றிலை என்பதால் தினமும் தோட்டத்துக்கு நீர் ஊற்றப்பட வேண்டும்.

மாட்டுக்டுகொட்டில் மாட்டெரு உற்பத்தி
ம்ம்ம்..........
இதுதான் நம்ம வெற்றிலைச்செய்கை. எமது கிராமத்தவர்களின் பிரதான தொழில்களில் இதுவும் ஒன்று. இத்தொழிலாலே எனது குடும்பப் பொருளாதாரப்பாரம் தாங்கப்படுகிறது. பாருங்க நம்ம அப்பாவும் மாமாவும் தோட்டத்தில் சாப்பிடுறாங்க
வேலைகளுக்கிடையில் இளைப்பாறும் உறவுகள்........


No comments:

Post a Comment