Saturday 21 August 2010

களுதாவளை

ஊர்ப் பெயர் விளக்கமும் :- ஆலயத் தோற்றமும்
இடங்களுக்கு பெயர் வைக்கும் போது அவை காரணப் பெயர்களாக அமைந்து விடுவதே பெரும்பான்மையான வழக்கு, யாழ்பாடி பரிசு பெற்ற மணற்றிடர் யாழ்ப்பாணம் ஆயிற்று, மூன்று கோணம் உள்ள மலை திரிகோணமலை என்றும், திருக் கோண மலை என்றும் பெயர் பெற்றது. மட்டு மட்டும் களப்பாள் இருந்தது மட்டுக்களப்பாயிற்று, புலியின் ஆண்ட தீவு புலியந்தீவு, செட்டிகள் பாளையம் இட்ட இடம் செட்டியாளையம், திமிலர் வாழ்ந்த இடம் திமிலர் தீவு, கொக்கட்டி மரங்கள் நிறைந்த இடம் கொக்கட்டிச்சோலை, புன்னை மரங்கள் நிறைந்த இடம் புன்னைச் சோலை, ஆலமரங்கள் நிறைந்த இடம் ஆலை அடிச் சோலை, மண்டு மரங்கள் நிறைந்த இடம் மண்டூர், பனிச்சை மரங்கள் நிறைந்த இடம் பனிச்சங் கேணி, பனிச்சை அடி முன்மாரி (காயாங்கேணி), களுவன் குடியிருந்த இடம் களுவன் கேணி, வீரர்கள் வாழ்ந்த முனை வீரமுனை இவ்வாறு இடங்களின் பெயர்கள் காரணப் பெயராக அமைந்திருப்பது போல களுதாவளையின் பெயரும் காரணப் பெயராகவே அமைந்துள்ளது. எனினும் அதற்கான விளக்கங்கள் வேறுபடுகின்றன. கள்ளு - தா - வெள்ளையா என்று கேட்ட சொற்றொடர் இக்கிராமத்தின் பெயரானதாக சிலர் கூறுவர். தென்னை மரத்தில் இருந்து தென்னங் கள்ளு பெறப்படுகின்றது பனங் கள்ளு மட்டக்களப்பு மாவட்டத்தில் வழக்கில் இல்லை தென்னங் கள்ளு பெறுவதற்கு தென்னை மரங்கள் தேவை அதனை விற்பதற்கும், குடிப்பதற்கும் மக்கள் தேவை, மக்கள் வாழ்கின்ற இடத்திற்கு அது தோற்றம் பெற்ற உடனையே பெயர் ஒன்று ஏற்பட்டு விடும் எனவே இக்காரணப் பெயரின் விளக்கம் பொருத்தமானமாக தெரியவில்லை. காளி தேவாலய என்ற பெயர் மருவி களுதாவளை என்று மாறியதாகவும் சிலர் கூறுவர். காளி, பொற் கொல்லர்களின் குல தெய்வம் களுதாவளையில் பொற் கொல்லர் பரம்பரை வாழ்ந்தமைக்கான சான்றிதழ்கள் எதுவும் இல்லை. களுதாவளையின் தென்மேற்கு மூலையில் மட்டக்களப்பு வாவிக்கு அப்பால் பிரசித்தி பெற்ற பத்திர காளி கோவில் ஒன்று உண்டு அங்கு பொற் கொல்லர்கள் வாழ்கின்றனர். அவ் இடத்திற்கு போர் ஏறு தீவு (போரதீவு) என்று பெயர் வழங்குகின்றது. எனவே இதுவும் வலு இழந்த விளக்கமாகின்றது.
பூமியின் தோற்றம் பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. சூரியனில் இருந்து பிரிந்த அக்கினிப் பிழம்பு படிப்படியாக குளிர்ந்து கற்பாறையாக மாறி. பௌதிக இராசாயன உயிரினவியல் தாக்கங்களுக்கு உள்ளாகி மெல்ல மெல்ல சிதைவடைந்து தாவரங்கள் உயிரினங்கள் வாழக் கூடிய சூழ் நிலை உருவானதாக கூறுவர். அந்த வகையில் கல்லுத் தோன்றிய காலத்தில் வாழ்ந்த மனிதர்களை ஆதிவாசிகள் என அழைக்கின்றோம். வேட்டையாடி வாழ்ந்த ஆதிவாசிகளை வேடர்கள் என பெயரிட்டனர். உலகின் ஆதிவாசிகள் இவர்களே என்பதை ஆய்வாளர்கள் ஏற்றிக் கொள்கின்றனர். வேடர்கள் தமது வெற்றிக்கு வாய்ப்பாக கடவுளை வழிபட்டமை தெரிய வருகின்றது. வெற்றிலைச் சடங்கு என்பது வேடர்களின் வழிபாட்டு முறைகளுள் ஒன்று. பெரிய மரங்களின் கீழ் உள்ள சிறிய பற்றைக் காடுகளை வெட்டி அகற்றிய பின் வெற்றிலையால் மடை பரவி ஆடிப்படி தெய்வ வழிபாடு நடத்தினர். ஆலயங்;கள் என்ற அமைப்போ விக்கிரகங்களோ காணப்பட்டதாக தெரியவில்லை சங்க இலக்கிய பாடல்களில் கூறப்படும் 'வேலன் வெறியாட்டு' என்பதோடு இதனை ஓப்பிடலாம். களுதாவளைப் சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலயம் பற்றி கூறுகின்ற களுவை நகர் களுதேவாலய கல்வெட்டு ஊர்ப்; பெயருக்கான விளக்கத்தை உறுதியாகவும் தெளிவாகவும் கூறுகின்றது. இக் கல் வெட்டு கையெழுத்துப் பிரதியாக உள்ளது. இலங்கையில் வரலாற்றுத் துறை பேராசிரியராக விளங்கும் சி. பத்மநாதன் அவர்கள் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் 1994 ஆண்டு வெளிட்ட இலங்கையின் இந்துக் கோயில்கள் தொகுதி - 1 நூலில் 174 - 184 வரையில் உள்ள பக்கங்களில் இக் கல்வெட்டை வெளியிட்டு உள்ளார். இந்நூலின் தொகுப்பாசிரியராகவும் இக் கல் வெட்டின் பதிப்பாசிரியயராகவும் பத்மநாதன் அவர்களே செயற்பட்டு உள்ளார். கல் வெட்டுப் பாடல்களை ஆராய்ந்து பொருள் விளக்கம் எழுதியவர் இணுவையூர் பண்டிதர் கா. செ. நடராஜா அவர்களாவார். ஈழத்து இலக்கிய வளர்ச்சி பற்றிய நூல் ஒன்றை வெளியிட்டவரும் இவரே ஆவார். இவர்கள் இருவரும் ஏற்றுக் கொண்டுள்ள இக் கல் வெட்டினை ஆதாரமாகக் கொண்டு பார்க்கும் போது களுதாவளையின் பெயர் களுவைநகர் என்பது தெரிகின்றது. அன்று நாழிகை ஒன்பதிலே களுவைநகர் 'களுதேவ ஆலயமாம் வெற்றிலைச் சடங்கு செய்யும் இடம் இதுதான் என்று கண்டு. இன்று இதில் நாம் கடமையைக் கருதி அங்கு தங்கினரே' என்று கல் வெட்டுப் பாடலில் கூறப்பட்டு உள்ளது. இதன்படி களுவை நகர் களுதேவாலயம் என்ற இருபெயர்கள் கூறப்படுவதை அவதானிக்கின்றோம். வேடர்களின் பெயர்களில் நம்பி, வேலன், களுவன் என்பவை பிரசித்தமானவை. காடடர்ந்த பிரதேசத்தில் வேட்டையாடித் திரிந்த களுவன் என்ற வேடர் தலைவன் தான், சுற்றிப் பார்த்த இடங்களிலே கடவுள் வழிபாட்டுக்கு பொருத்தமான ஒரு இடத்தினைக் கண்டான். வெற்றிலைச் சடங்கு செய்வதற்கு ஏற்ற விதத்தில் அதனை தயார் பண்ணினான் வேட்டையில் தடங்கல்கள் ஏற்படும் போதும் கோதாரி எனப்படும்.
தொற்று நோய்கள் ஏற்பட்ட போதும், தங்கள் குழுக்களில் உள்ளோரின் மனைவிமாரின் சுகப் பிரசவத்தின் போது 'வெற்றிலைச் சடங்கு' என்னும் வெற்றிலைச் சடங்கு செய்தனர். ஊது குழல், கொம்பு வாத்தியம், சங்கு, தவில் போன்றவற்றை ஒலித்துக் கொண்டு உரு ஏறி ஆடிப்பாடி சடங்கினை நடத்தினர். களுவனுடைய வணக்க தலமான இதனை களுதேவாலய என்ற பெயரால் அழைத்தனர். இந்த இடம் மட்டக்களப்பு வாவிக்கு அருகே அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்திருந்தது. இந்தக் காலத்திலே களுதாவளையில் கடற்க்கரையை அண்மித்திருந்த பகுதியில் தென்னந்தோப்புகளே இருந்திருக்கின்றன. மணற்பிரதேசமான இது வளமான தென்னைச் செய்கைக்கு வாய்ப்பாக இருந்துள்ளது. இப் பொழுது மக்கள் குடியேறியுள்ள காணிகளின் பழைய உறுதிகள் அவை தென்னந் தோட்டங்கள் என்பதை நிரூபிக்கின்றன. கோவிந்தன் வத்தை வன்னியன் வத்தை, சோனிட வத்தை, பாம்லண்ட தோட்டம் என்ற பெயர்கள் பழைய உறுதிகளில் காணப்படுகின்றன. இந்த தென்னந் தோட்டங்களில் அதன் பராமரிப்புக்காக சில குடும்பங்கள் வாழ்ந்தன. அந்த குடும்பங்களில் இருந்து பெருகியவர்களே இக்கிராமத்தில் வாழ்கின்றனர். சனப் பெருக்கம் அதிகரித்து வர அவர்களது தேவைகளும் அதிகரித்தன. அயலில் இருந்த கடலிலும், ஆறு குளம் என்பவற்றிலும் மீன் பிடிக்கத் தொடங்கியவர்கள் ஆற்றங் கரையோரமாக உள்ள காட்டை அழித்து களனிகளாக்க தொடங்கினர் காடுகள் அழியத் தொடங்கியதும் விலங்குகளும் பறவைகளும் குறையலாயின. வேடர்களின் வேட்டைக்குரிய வாய்ப்பு அருகத் தொடங்கியது. மக்கள் நடமாட்டம் அதிகரித்ததும் வேடர்கள் தமது இருப்பிடத்தையும் மாற்றலாயினர். தேற்றத்தீவு குடியிருப்பு என்று இப்பொழுது அழைக்கப்படும். இடம் பூர்வீகமான ஒரு குடியிருப்பு என்று கருதவேண்டியுள்ளது. இங்கு மண்முனைப் பற்றில் வன்னிமையின் சந்ததிக்ள மிகச் செல்வாக்கோடு வாழ்ந்திருக்கின்றனர். அவர்களின் வாரிசுகள் இன்றும் அங்கு வாழ்கின்றனர். வேடர்கள் இடம் பெயர்ந்தாலும் வேடர்களின் வழிபாட்டு இடம் களுதேவாலய என்ற பெயரில் வழங்கி வந்தது. கலியுகவரதனாகிய கந்தப்பெருமானை கதிர்காமத்தில் வழிபடச் செல்வோர் கால் நடையாகச் செல்வதே வழக்கம். அக்காலத்தில் வாகன வசதிகளோ மிகக் குறைவு யானை வண்டில், குதிரை வண்டில், மாட்டு வண்டில், என்பவற்றை வசதி உள்ளோரே வைத்திருந்தனர். எனினும் கதிர்காமம் செல்லும் பாதை இவற்றில் பிரயாணம் செய்வதற்கு ஏற்றதாக செப்பனிடப்படவில்லை. அதனால் கள்வர்களுக்கும் விலங்குகளுக்கும் பயந்து அடியார்கள் கூட்டம் கூட்டமாக யாத்திரை மேற் கொண்டனர். பகற்பொழுதில் பாதை யாத்திரை மேற்கொண்டு இரவில் தங்கி இழைப்பாறிச் செல்வதே வழக்கம் ஆல், அரசு, வேம்பு, நாவல், இலுப்பை, புளி கூழாவம்மி, கொன்றை அடம்பு என்பனவாய குளிர்தரு நிழல் மரங்களின் ஊடாக கதிர்காம பாதை யாத்திரைப் பாதை அமைந்திருந்தது. அப்பாதையில் களுதேவாலய என்று அழைக்கப்பட்ட இடம் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. முற்யகாலத்தில் முதிவர்களே கதிர்காம யாத்திரை மேற்கொண்டனர். தமது நிலபுலங்களையும் சொத்துப்பத்துக்களையும் பங்கிட்டு, கொடுக்க வேண்டியவர்களுக்கு முறைப்படி கொடுத்த பின் கோவிலுக்குச் சென்று அமுது கொடுத்து உருத்திராட்சை மாலை தரித்து பற்றுக்கள் எல்லாவற்றையும் துறந்து முருகப் பெருமானை மட்டும் பற்றி பிடித்துக் கொண்டு துறவிகள் போன்று புறப்படுவர். அவர்கள் கதிர்காமம் சென்று திரும்பி வந்து தாம் மாலை போட்ட இடத்தில் உருத்திராட்ச மாலையினை கழற்றும் வரை அவர்களை பெயர் சொல்லி அழைப்பதில்லை. அப்பாச்சாமி, அம்மாச்சாமி, பெரியசாமி, சின்னச்சாமி என்று எல்லோரும் சாமிகளாகிவிடுவர். இந்தச் சாமிகள் கதிர்காம யாத்திரை செல்லும் போது, வேடர்கள் வெற்றிலைச் சடங்கு நடாத்திய இடத்தில் தங்குவது பாரம்பரியமான வழக்கு. துப்பரவு செய்யப்பட்ட இடமாக இருந்தமையாலும் ஆறு குளம் என்ற நீர் வசதிகள் இருந்தமையாலும் அடர்ந்த மருத மரச் சோலையின் குளிர் நிழல் நிறைந்திருந்தமையாலும், இயல்பாகவே அவ்விடத்தில் காணப்பட்ட அருட்பிரவாகத்தினாலும் பயம் இன்றி அவ்விடத்தில் தங்கிச் சென்றனர். இவ்வாறு கதிர்காம யாத்திரை செய்தோர் அவ்விடத்தில் பூசை வழிபாடுகளையும் செய்வது வழக்கமாயிற்று கொக்கட்டிச்சோலையில் இருந்து புறப்பட்ட குருமார் இருவர் இவ்விடத்தில் தங்கினர்.
நாளாந்த கருமங்களை முடித்து சிவலிங்க பூசை செய்தனர். அப்பொழுது அவர்கள் பூசை செய்த இடத்திற்கு தென்மேற்கே ஆவரை மரத்தண்டையில் நாகம்மை இருப்புக் கண்டனர். குளத்திலே தோய்ந்த உலர்ந்த ஆடை தரித்து சிவலிங்க பூசை செய்த அவர்கள் தாம் பூசை செய்த இடத்தில் பூவினுள் மறைந்திருந்த சிவலிங்கம் ஒன்றைக் கண்டனர். அதனை தம்முடன் எடுத்துச் செல்ல முயன்றனர். அது முடியாமல் போயிற்று அடியார்கள் 'நிதி வளர சன்னதி தான்தோன்றுமீசன் ஆலயம் பதிவளர நடத்தி வரும் நாளையிலே விற்பரமாம். குருலிங்கமக் குருவோடு பண்பாரம் இருவருமாய் கதிரை நகர் நடந்தவாறே செல்லும் வழி தனிலே அன்று நாழிகை ஒன்பதிலே களுவை நகர் களுதேவாலயமாம் வெற்றிலைச் சடங்கு செய்யும் இடம் இதுதான் என்று கண்டு. இன்று இதில் நாம் கடமையைக் கருதி தங்கினரே. தங்கிய பின் நாகம்மை தென்மேற்கில் ஆவரை மரத்தண்டையில் இருப்புக் கண்டார். கண்டதுவும் காலைக் கடன் முடித்து உடன் பார்ப்போம் என் குளத்தில் இறங்கி பின் தோய்ந்து உலர்ந்து சிவலிங்க பூசை செய்வதென தெட்கைக் கட்டு திறக்கலானார். திறந்து இவர் இருவரும் செய்து சிவலிங்க அட்சதைகள் முடித்த பின்பு திரிலிங்க சிவபூசை செய்த குருபத்திரம் பூ இவற்றுடனே லிங்கம் ஒன்றை பூமியின் கண் வைக்கலானார். வந்து இவர் களுவை நகர் பார்க்கும் போது லிங்கம் அங்கு பூவால் மறைந்திருத்தல் கண்டு மதிமயங்கி மாறி நின்று வணங்கலுற்றார்.'
இக்கல் வெட்டுப் பாடல் மூலம் இதனை நாம் அறிகின்றோம். மகிமை வாய்ந்த சிவலிங்கம் பற்றி கேள்வியுற்ற ஊரவர்கள் விரைந்து வந்து அவ்விடத்தில் ஒன்று கூடினர். நில மட்டத்தில் இருந்த சிறிய சிவலிங்கத்தை அரிக்கஞ்சட்டி ஒன்றினால் மூடி இலைகுழைகளால் மறைத்துக் கட்டி கொத்துப் பந்தல் இட்டனர். அன்று தொடக்கம் இவ்விடத்தில் பொதுமக்களின் வழிபாடு ஆரம்பமாயிற்று ஆரம்பத்தில் இது சிவலிங்க வழிபாடாகவே தோற்றம் பெற்றது. வெள்ளிக் கிழமையில் பொங்கல், பூஜைகள் இடம் பெற்றன. அற்புதங்களும் அதிசயங்களும் அருட்பிரவாகமும் பெருகப் பெருக அடியார் கூட்டமும் அதிகரித்தது. ஆலயமும் ஒலைக் குடிசை, களிமண், கோவில், கற்கோவில் என்று மாற்றம் பெறலாயிற்று. ஆவரை மரத்தடி நாக தம்பிரான் வழிபாடும் இதனோடு இணைந்து கொண்டது. நாகதம்பிரானுக்கு பூஜையின் போது பால் பழம் கரைத்து வைத்தனர். நில மட்டத்தில் இருந்த சிவலிங்கத்தை அடியார்களின் தரிசனத்திற்காக உயர்த்தி வைக்கும் முயற்சி ஒன்று நடைபெற்றுள்ளது. குருக்கள்மாரின் உதவியுடன் அதனை தோண்டிக் கிளப்ப முற்பட்டனர். அது சலம் பொறுக்க நீண்டு சென்றதாக கல்வெட்டு கூறுகின்றது. இஷ்டலிங்க தாரியாம் சங்கமக்குருமாரில் நீலவண்ணிக் குருவும் பெரிய பிள்ளைப் பண்டாரம் என உற்ற சோளிய வேளாளராம் இவர். இருவர் தமையும் வரவழைத்து பேசும் போது இட்டலிங்கம் பூமிமேல் சலம் பொறுக்க போனவாறு விளக்கலுற்றார் என்பதால் அறிய முடியும். இவ்வாறான செய்திகளை எல்லாம் அறிந்த மணியாள் பூபால வன்னிமை என்பவர் இங்கு வந்து மணியாள பூபால வன்னிமை தான் பார்க்கும்போத இஷ்டலிங்கம் என வணங்கு இலங்கை தன்னிடத்தில் ஈசனிட ஆலயங்கள் உண்டு பாரும் மூலசக்தி விநாயகர் ஆலயந்தான் பிள்ளையார் கோயிலிது அதுவாக. சிவபிரானைப் பணியும் என்று இயம்பினார் வன்னிமையும் இயம்பினாரே.
சிவலிங்கத்தை பிள்ளையாராக வழிபடும் படி கூறியதாக இக் கல்வெட்டுப் பாடல் வரிகள் கூறுகின்றன. இவ்வாறு களுவன் வெற்றிலைச் சடங்கு செய்த இடத்தில் அமைந்த இவ்வாலயமும் களுதேவாலய என்ற பெயராலேயே வழங்கப்படலாயிற்று கண்டி சிங்கள மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இப்பிரதேசத்தில் களுதேவாலய என்பது. மருவி மருவி களுதாவளை என்றாயிற்று. லிங்கத்தின் பெயரும் பிள்ளையாரின் பெயரும் ஒன்றிணைந்து சுயம்பு லிங்கப் பிள்ளையார் என்று ஆலயத்தின் பெயர் அமைந்தது. இதனால் களுவை நகர் என்று வழங்கிய கிராமத்தின் முன்னாள் பெயர் மறைய அதனோடு நெருங்கிய தொடர்பு கொண்ட பெயரான களுதாவளை என்பது கிராமத்தின் பெயராயிற்று இப் பொழுது களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலயம் என்ற பெயர் நிலை பெற்றுவிட்டது. எனவே கிராமத்தின் பெயரும் ஆலயத்தின் பெயரும் காரணப் பெயர்களாகவே அமைந்துள்ளமை. கல்வெட்டின் மூலம் உறுதி செய்யப்படுகின்றது. தகுந்த ஆதாரங்கள் இன்றி இதனை மறுத்துரைப்பது மதியீனமாகும்.
களுதாவளையில் ஆதி வாசிகளான வேடர்கள் செல்வாக்கு இருந்தது என்பதற்கு அகச் சான்றுகள் சில உள தேற்றாத்தீவு குடியிருப்பு என்றும் சிறிய கிராமம் இன்றும் தனித்துவமாக விளங்குகின்றது. மட்டக்களப்பு வாவிக்கும் கிராமிய குளத்திற்கும் இடையே மேட்டு நிலப்பகுதி ஒன்று காணப்படுகின்றது. வயது முதிர்ந்த பெரு விருட்சங்களான மரங்கள் நிறைந்த சிறிய கிராமம் இது. இற்றைக்கு சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் இக்கிராமம் அடர்ந்த காட்டினுள் அமைந்திருந்தது. வெற்றிலை தோட்டங்கள் செய்கை பண்ணப்பட்டமைக்கான உயர்ந்த மேடுகளும் காணப்படுகின்றன. ஆதி வீரபத்திரர் ஆலயம் ஒன்று அண்மைக் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் இவ் வழிபாடு வெற்றிலைச் சடங்கு போன்று நடை பெற்று வந்துள்ளது.
இங்கு வாழ்ந்தோர் பொருளாதார வளமுள்ளவர்களாக இருந்தமையும் தெரிகின்றது. மாடு, ஆடு பட்டிகளோடு நெற் களஞ்சியமான பட்டறைகளோடு வாழ்ந்துள்ளனர். மண்முiனைப் பகுதியை அதிகாரம் செய்த வன்னிமைகளின் சுந்ததியினர் இங்கே வசித்துள்ளனர். செட்டிபாளையம் ச, ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் (நடை பெறும்) ஞாயிற்றுக் கிழமை இரவு நடைபெறும், பூரண கும்பச்சடங்கிற்கு இங்குள்ள மக்களே நெல் கொண்டு செல்கின்றனர். இது பாரம்பரிய நடைமுறை ஆதி வாசிகள் குடியிருப்பு பொது மக்களின் குடியிருப்பாக மாறியிருக்க வேண்டும். இக்கிராமத்திற்கு கிழக்கே பன்குளம் என்னும் பெயரில் கிராமியக்குளம் அமைந்துள்ளது. இக் குளத்தின் வடமேற்கு மூலையில் கன்னி நாவற் திடல் என்று ஒரு இடத்திற்கு பெயருண்டு. சுமார் அரை ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கி மேட்டு நிலம் இற்றைக்கு சுமார் இருபத்தி ஐந்து (1978) வருடங்களுக்கு முன்னர் வரை இவ்விடத்தில் பெரிய நாவல் மரங்களும் விழுதுவிட்டுப் பரந்து ஆல மரங்களும் காயான் பற்றைகளும் நிறைந்திருந்தன. மட்டக்களப்பில் வீசிய பயங்கர சூறாவளிக் காற்றினால் இவ்விடத்தில் நின்ற மரங்களும் முறிந்து வீழ்ந்தன. வெங்காயம், மிளகாய், கத்தரி ஆகிய பயிர்கள் செய்வதற்காக இவ்விடம் துப்பரவு செய்யப்பட்டது. வேடுவர்களின் கன்னிப் பெண் ஒருத்தி இந்த நாவல் மரத்திடலில் குடியிருந்தமையால் கன்னி நாவல் திடல் என்ற பெயர் ஏற்பட்டதாக கூறுவர். இப் பன்குளத்தின் வடகிழக்கு மூலையில் வலைகட்டி, முயல், பன்றி, மான் முதலிய மிருகங்களை வேட்டையாடியதால் வலைகட்டி, வலையிறவு என்ற பெயர்கள் வழங்கியதாக சொல்கின்றனர். களுதேவாலய கல்வெட்டில் ஆலயத்தின் தோற்றம் பற்றி கூறுகையில் இத்தகைமை கோயிலுக்கு வடபாலகா வலைக்கட்டி வேடுவர்கள் வணங்கினார்கள் என்று கூறப்பட்டு இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அத்தோடு கோவிலுக்கு தென்புறமாக ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தின் நீர்ப்பம்பி அமைந்திருக்கும் இடத்திற்கு அண்மையில் குளக் கட்டில் இருந்து சுமார் 50 மீற்றர் கிழக்கே வடக்கு தெற்காக ஒரு கட்டு அமைந்துள்ளது. களுதாவளைத் துறைக்குச் செல்லும் குளக் கட்டினையும் மாவடி ஒழுங்கையுடன் நீண்டு செல்லும் கட்டினையும் இந்தக் கட்டு தொடுத்து கிடக்கின்றது. இதனை புதிதாக அமைக்கும் முன்பு பழங்காலத்தில் அவ்விடத்தில் ஒருகட்டு அமைந்திருந்து. அது தூர்ந்து போனமைக்கு சான்றுகள் காணப்பட்டன. வேடன் கட்டு என்று அதற்கு பெயர் வழங்கியது. வேடன் கட்டிற்கும் குளக் கட்டிற்கும் இடைப்பட்ட பகுதி. ஆத்தியடித்திடல் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இத்திடலில் விழுது விட்டுப் பரந்த ஆலமரங்களும் காயான் பற்றைகளும் காரை வனங்களும் நிறைந்திருந்தன. குளக்கட்டில் ஆத்தி மரங்கள் அநேகம் காணப்பட்டன. கன்னா நாவற்திடல், ஆத்தியடித்திடல் என்ற பெயர்களை நாம் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும். வேடர்களின் செல்வாக்கினால் பயிரிடப்பட்ட வெற்றிலைச் செய்கையும் பொது மக்களின் கைக்கு மாறி இன்று வரை இங்கு நிலைத்து நிற்கின்றது. களுதாவளை மக்கள் இவ் வெற்றிலையை மங்கலப் பொருளாகவும், புனிதமுள்ளதாகவும், சீதேவியாகவும் போற்றுகின்றனர். களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் நாளாந்த பூiஐயில் வெற்றிலை முக்கிய இடம் பெறுகின்றது. விசேட பூiஐகள் திருவிழாக்களின் போது வெற்றிலையும் பாக்கும் சேர்ந்து தாம்பூலமாக பெரியதோர் வட்டாவில் மடை வைக்கின்றனர். இதுவும் வேடர்களின் வெற்றிலைச் சடங்கின் எச்ச சொச்சம் எனலாம். தமிழர்கள் பூமிக்கு நானிலம் என்று பெயர் இட்டனர். மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி என்றனர். இங்கு வாழ்ந்தோர் தினை விளைவித்து தேன் குடித்து வேட்டையாடினர். இங்குள்ளோரை வேடர் என்றனர். காடும் காடு சார்ந்த இடமும் முல்லை எனப்பட்டது. இங்குள்ளோர் மந்தை மேய்த்து பால், தயிர், இறைச்சியுண்டு வாழ்ந்தனர். இவர்களை இடையர் என்றனர். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் எனப்பட்டது. இங்கு உழுதுண்டு வாழ்ந்த இவர்களை உழவர் என்றனர். கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப் பெயரிடப்பட்டது. உப்பு விளைவித்தும் மீன்பிடித்தும் வாழ்ந்த இவர்களை பரதவர், நுழையர் என்றனர். தமிழ் நாட்டில் பாலை என்ற நிலம் இயற்கையில் காணப்படவில்லை பல ஆண்டுகள் தொடர்ச்சியாக மழை இல்லாத போது முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் அவற்றின் இயல்பு நிலையில் இருந்து மாறி பாலை நிலமாகும். என்பதை
முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பழிந்து நடுங்கு துயர் உறுத்து
பாலை என்பதோர் படிமம் கொள்ளும்.
என்று கூறப்பட்டுள்ளது.
பருவ மழை பெய்ததும் பாலையாக காட்சி தந்த நிலம் பழைய படி குறிஞ்சி முல்லையாக மாறும். குறிஞ்சி நில வேடர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த குடியிருப்புகளை குறிஞ்சி என்றனர். இந்தியாவில் பாஞ்சாலங் குறிச்சி. என்ற பெயரில் இடங்கள் உள்ளன. களுதாவளையில் 1ம் குறிச்சி, 2ம் குறிச்சி 5ம் குறிச்சி, 4ம் குறிச்சி என்ற பெயரில் கிராமம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏனைய கிராமங்களில் வட்டாரம் பிரிவு சதுர்க்கம் கோட்டம் என்ற பெயர்கள் வழங்க களுதாவளையில் குறிச்சி என்ற பெயர் நிலைத்து நிற்கின்றது. வேடர்களின் குடியிருப்புகளை அண்மித்த இடங்களில் கொத்தியாபுலை மண்டபத்தடி என்னும் பெயர்களும் வழங்குவதுண்டு. களுதாவளையிலும் கொத்தியாபுலை, மண்டபத்தடிக் காடு என்ற இடப் பெயர்கள் வழங்கி வந்தன. படிப்படியாக அவை இன்று மறைந்து வருகின்றன.
களுதாவளையில் தந்தை வழி மரபை அடிப்படையாகக் கொண்டு வடசேரி தென்சேரி என்ற வாரம் பிரிந்து நின்று கொம்பு முறித்து விளையாடியமைக்கு ஆதாரங்கள் பல உள. இக் கொம்பு முறி விளையாட்டு பல நாட்களுக்கு தொடர்ந்து நடை பெற்று வந்தது. சிறப்பான இவ் விழாவினைக் காண சாய்ந்தமருது நாகமுனை (நற்பிட்டி முனை) சேனைக்குடி, எருவில், மகிளுர், போரதீவு, நாதனை முதலிய இடங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். இங்கு வந்தோரில் அழகான பெண்களை இவ்வூர் ஆடவர்கள் மணந்து கொண்டதாகவும் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. 'போரேறி நகர் நாதனை ஈறாம் மரபார்கள் குறிஞ்சி வேடர் வருவதானார். எல்லை நாள் இவர் வந் காலம் கேளீர் தொள்ளாயிரத்து நாலாம் ஆண்டு ஆனிமாதம் பத்தொன்பதாம் திகதி புதன்கிழமை' கி.பி. தொள்ளாயிரத்து நாலாம் ஆண்டு ஆனிமாதம் பத்தொன்பதாம் திகதி புதன்கிழமை கொம்பு முறி விளையாட்டுப் பார்க்க நாதனை வேடர்கள் களுதாவளைக்கு வந்தனர். என்பது கல்வெட்டில் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இற்றைக்கு (2002) ஆயிரத்தி தொண்ணூற்றெட்டு (1098) வருடங்களுக்கு முன்னர் கொம்பு விளையாட்டு மிக பிரசித்தி பெற்றிருந்தது. என்பது உறுதி செய்யப்படுகின்றது.
கல்வெட்டு ஆதாரப் படி ஊர்ப் பெயருக்கும் ஆலயத் தோற்றத்திற்கும் இவற்றையே விளக்கமாக கூற வேண்டியுள்ளது

No comments:

Post a Comment