Thursday, 19 August 2010

மேகங்களைச் சப்பித்துப்பி...


இங்கொரு வன மிருந்ததே... எங்கேயது?
பூமியில் விழுதுவிட்டெழுந்து
புதிய நகர (நரக)மாய் நிற்பது அதுகானோ-

இயற்கையின் வனப்புபேசிய இடங்களிலெல்லாம்
முகமற்ற செங்கற்களும்
வீழ்ந்துபோன வனத்தின் எச்சங்களும்-

இதயமற்ற அந்த நரகச் சுவர்களுக்குள்
ஒழிந்திருந்த பூதகணங்கள் தான்
பின்னர் மனிதரானதோ என்னவோ-

அந்தக் கண்களில் மின்னும்
கொடூரத்தைப் பாருங்கள்
இடைவெளியற்ற குழப்பங்களிடையே
அங்கு ஒலித்துக்கொண்டிருப்பதும்
அவைகளின் ஒழுங்கற்ற குரல்கள்தான்.

வானத்தை மகுடமாய்ச் சூடிக்கொண்ட
மரங்களிருந்த வனத்திலெங்கும்
மேகங்களைச் சப்பித்துப்பும்
இரக்கமற்ற கட்டடங்கள்

நீரோடைகள் தவழ்ந்த
மென் படுக்கையெங்கும்
உருகியோடும் தார் வீதிகள்

இயற்கையின் இதயத் துடிப்பு கேட்ட
வனத்திடை நின்று
இதயமற்ற பொருட்களால்
எழுந்து நிற்கிறதாம் இந்நகரம்-

அதீத காற்றிலும் தீயிலும்
தாக்குப்பிடித்து நின்று
ஊழியுள்ள காலம் வரையது
வாழுமென்று நம்பியிருந்தது எத்தனை கற்பிதம்

No comments:

Post a Comment