Monday, 16 August 2010

மறுகா இதழ்

மறுகா இதழ்
  மட்டக்களப்பின் நவீன இலக்கியமாகட்டும், மரபு இலக்கியமாகட்டும் ஒரு பாய்ச்சலினூடாகவே வளர்ந்து வந்திருக்கிறது. இப் பாய்ச்சலுக்கு மாற்று சஞ்சிகைகளின் வருகை காரணமாகும்.

அந்த வகையில் மட்டக்களப்பில் இருந்து குறிப்பாக ஆரையம்பதியில் இருந்து புதிய உடைப்பை ""மறுகா'' இதழ் ஏற்படுத்தி வருகின்றது. அண்மையில் வெளிவந்திருக்கும் மறுகா இதழ் 6 இதற்கு சான்று பகர்வதாக உள்ளது. இவ் இதழில் ""நான்கு பெண்களுடனான உரையாடல்'' முக்கியமானதாக அமைகிறது..

காத்திரமாகவும் நுட்பமாகவும் பெண் மொழியை விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட இந்த ஆரோக்கியமான உரையாடல் தமிழ் மொழியில் இதுவரை வெளிவராத ஒன்றாகவே காணப்படுகிறது. கவிஞர் த. மலர்ச்செல்வன் மிக நுட்பமாக அதை நகர்த்தியிருக்கிறார். ""மறுகா'' இதழில் கட்டுரைகள் எட்டு காணப்படுகின்றன. பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு ""மூன்றாம் பாலினம் நவரசம் திரைப்படம் பற்றிய ஓர் அறிமுகக் குறிப்பு'' பற்றிய கட்டுரை மூலம் பெண் நிலை நோக்கில் கட்டவிழ்ப்பு செய்திருக்கிறார். ""நவரசம்'' சந்தோஷ் சிவனினால் சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த படமாக இருந்தாலும் சித்திரலேகா மௌனகுருவினால் பேசப்பட்டிருக்கும் விடயம் படத்தினூடாக புதிய பாடு பொருள் புதிய பார்வை இக்கட்டுரை நமக்கான உலகம் இன்னும் விரியவில்லையே என ஏக்கம் கொள்ளச் செய்கின்றது. உண்மையில் மிகக் காத்திரமான படைப்பு. அதுபோல் ""பெண் மொழியும் முரணும்'' அத்வைதாவின் கட்டுரை இன்னுமொரு வகையில் முக்கியமான படைப்பு. ஆண்கள் பெண்களின் உடலைப் பாவித்து படைத்தல் பற்றி, சாரு நிவேதிதாவின் கடல் கன்னியையும் ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரலையும் முன்வைத்து உடல் அரசியலை மலினப்படுத்தும் ஆண் வக்கிரத்துவத்தை கேள்விக்கு உட்படுத்துகிறார்..

இன்றைய சூழலில் இக் கட்டுரை மிக முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தும். அடுத்து தமிழ் நதியின் கையறு காலம் கட்டுரையில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் தமிழ்ப் பிரதேசங்களை தமிழ் நதியின் வாழ்வியல் அனுபவத்தின் ஊடாகவும் கேள்வி வாயிலாகவும் அந்தந்த பிர÷தசங்களை வினாவுகிறார். அடுத்து பெண்ணியப் பார்வையில் சொல்லும் பொருளும் என்ற வ. கீதாவின் பெண் சொற்களுக்கான அகராதி பற்றிய கட்டுரை இதுவரை யாரும் தொடாத விடயம். நல்ல முயற்சி. அதுபோல் ""தாய் நிலமும் தாய் மொழியும்'' என்ற குட்டி ரேவதியின் கட்டுரையில் எப்போதுமே போர் பெண்களுக்கு எதிரானவையாகவும் ஆண்களால் வருவிக்கப்படுவதாகவும் இருக்கின்றது..

மிக முக்கியமானதும் இன்றைய சூழலுக்கு ஏற்ற படைப்பாகவும் இக்கட்டுரை மிளிர்ந்துள்ளது. இவ்விரு படைப்பாளிகளும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். மிக முக்கியமான ஆளுமைகள். இவர்களை கவிஞர் மலர்ச்செல்வன் தன் சஞ்சிகைக்கு எழுத வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாக தமிழக சிற்றிதழ்களான காலச்சுவடு, தீராநதி, உயிர்மை போன்ற இதழ்களில் இங்குள்ள எழுத்தாளர்கள் கவிஞர்கள் எழுதும் நிலை போல் அங்குள்ள எழுத்தாளர்களை கவிஞர்களை இங்குள்ள சஞ்சிகைகளில் எழுத வைத்திருப்பது ஆரோக்கியமான விடயம். இது தமிழ் இலக்கியத்தை இன்னொரு தளத்திற்கு கொண்டு செல்லும் செயல். மேலும் கட்டுரைகளில் முல்லையில் ""தமிழர் உணவு முறையில் பெண்'' என்ற கட்டுரை எல்லாப் பெண்களும் வாசிக்க வேண்டிய ஒன்றாகும். தமிழர்கள் இன்று தங்கள் உணவு முறையை கைவிட்டு புரியாணிக்கு தாவி தங்களது உணவு அடையாளத்தை இழந்து வருகின்ற சூழல் இன்று. அத்தோடு நவீன உணவு முறைகள் நஞ்சை விதைத்து நோய்களை விலை கொடுத்து வாங்கும் சூழல். ஆனால் தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைமை நோய் தீர்க்கும் மருந்து..

""பாலூண் குழவி பசுங்குடா பொறாதென நோயுண் மருந்து தாயுண்டாங்கு'' என்ற சங்கப்பாடல் மகப்பேறு கண்ட பெண் தன் குழந்தைக்காக உணவையே மருந்தாக உண்பதை எடுத்துக் காட்டுகின்றது. இக் கட்டுரை முக்கியமானதும் அவசியமானதுமாகும். மேலும் நானும் எனது படைப்புலகமும் என்ற மண்டூர் அசோகாவின் கட்டுரை தனது இலக்கிய வாழ்வை நினைவு கூருகிறது. அதுபோல் பெண்ணியõவின் கவிதை தொகுப்பு பற்றி சலனியின் விமர்சனக் கட்டுரையும் இவ்விதழில் அடங்கியுள்ளன..

மறுகாவில் கவிதைகள் நிறைந்தே காணப்படுகின்றன. பெண்ணியா, சலனி, தமிழ் நதி பஹிமா ஜஹான், த. உருத்திரா, ஆழியாள், வெண்ணிலா (இந்தியா) தி. கலைமகள், முல்லை என மிகக் காத்திரமான நவீன கவிதையனிகள் மறுகாவை ஓளியூட்டுகின்றனர். மொத்தத்தில் மறுகா இதழ் 6, காத்திரமாக வெளிவந்துள்ளது. ஆசிரியரை பாராட்ட வேண்டும். இருந்தும் இவ் இதழில் சிறுகதைகள் இடம்பெறாமை குறைபாடாகவே தெரிகிறது

No comments:

Post a Comment