தமிழ் தொடர்பிலான கருத்தரங்குகள் எந்தப் பொருளில் எங்கு நடந்தாலும் கலந்துகொண்டு கட்டுரை படித்துத் தம் ஆய்வுத்திறமையால் அனைவரது உள்ளத்திலும் இடம்பிடிக்கும் இலக்கிய இணையர்கள் பேராசிரியர் அ.சண்முகதாசு அவர்களும் முனைவர் மனோன்மணி சண்முகதாசு அவர்களும் ஆவார்கள்.இவர்கள் இலங்கையை மையமிட்டு வாழ்ந்தாலும் உலக அளவில் அனைவருக்கும் அறிமுகமானவர்கள் ஆவர்.இவ்விரு பெருமக்களின் தமிழ்ப்பணிகள் குறிப்பிடத்தக்கபெருமைக்கு உரியனவாகும்.
சங்க இலக்கியம்,இலக்கணம்,மொழியியல்,நாட்டுப்புறவியல்,இலக்கியத் திறனாய்வு,பக்தி இலக்கியம்,வரலாறு,கல்வெட்டு எனத் தமிழின் அனைத்துப் பரிமாணங்களையும் உள்ளடக்கிய ஆய்வுப் புலங்களில் தடம்பதித்து ஆய்வுலகில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள இவர்களின் வாழ்க்கையை இங்கு அறிவோம்.
முனைவர்.அ.சண்முகதாசு அவர்கள் இலங்கையில் உள்ள திருகோணமலையில் 1940 ஆம் ஆண்டு சனவரி மாதம் இரண்டாம்நாள் பிறந்தவர்.பெற்றோர் திருவாளர்கள் அருணாசலம்-முத்தம்மாள் ஆவர்.இளமைக் கல்வியை திருகோணமலையில் உள்ள பிரான்சிசு சேவியர் பள்ளியில் பயின்றவர்(1945-51).பின்னர் வந்தாறுமூலையில்(செங்கலடி) உள்ள அரசு கல்லூரியில் பயன்றவர்(1952-57).பின்னர் சிவானந்த வித்தியாலயத்தில் பயின்றவர்(1957-59).
1963 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புத் தமிழை இளங்கலையில் பயின்றவர். இதில் வரலாறு,சமற்கிருதம் உள்ளிட்ட பாடங்களையும் பயின்றார்.முதல் வகுப்பில் தேறினார்.அதன் பிறகு இசுகாட்லாந்தில் உள்ள எடின்பரோ பல்கலைக்கழகத்தில் ( University of Edinburgh, Scotland, United Kingdom.) ஓராண்டு மொழியியல் பயின்றார்(1969 – 1970).1970-72 ஆம் ஆண்டில் மொழியியல் துறையில் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்."இலங்கைப் பேச்சுத் தமிழின் வினைவடிவங்களின் ஒலியன்கள்"(Phonology of the Verbal Forms in Colloquial Ceylon Tamil) என்பது இவர் தம் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பாகும்.
இதற்கிடையில் சண்முகதாசு அவர்கள் 1963 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக உரையாளராகப் பணிபுரிந்தார்.பின்னர் அதே நிறுவனத்தில் துணைப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.1965-68 இல் வட்டுக்கோட்டையில் உள்ள யாழ்ப்பாணக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.1975 முதல் யாழ்ப்பாண வளாகத்தில் இருந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர் பணிபுரிந்தார்.1976 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தம் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தார்.
1982 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் பொறுப்பு வகித்தார்.அடுத்த ஆண்டில் நைசீரியாவில் உள்ள இபாதன் பல்கலைக்கழகத்தில் மொழியியல் மற்றும் நைசீரிய மொழியியல் துறையில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தார்(University of Ibadan).1983 இல் சப்பான் டோக்கியோவில் உள்ள காகூசன் பல்கலைக் கழகத்தில் (Gakushuin University)வருகைதரு பேராசிரியராக பணிபுரிந்தார்.
1998 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்(பொறுப்பு) பணியையும் கவனித்தவர்.2007 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல நிருவாகப் பொறுப்புகளையும் கவனித்தவர்.2008 முதல் வருகைதரு பேராசிரியராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகின்றார்.
சண்முகதாசு அவர்கள் படிக்கும் காலத்திலும் பணிபுரிந்த காலத்திலும் பல விருதுகளை, பரிசுகளை வாங்கிப் பெருமை சேர்த்தவர்.1963 இல் ஆறுமுகநாவலர் விருது இலங்கைப் பல்கலைக் கழகத்தில் முதல் மாணவராகத் தேறிப் பெற்றவர்.1987 இல் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் தமிழ்மொழி இலக்கண இயல்புகள் என்ற தம் நூலுக்காகச் சபாரத்தினம் நினைவுப்பரிசு பெற்றவர்.யாழ்ப்பாணப் பல்கல்லைகழகத்தில் இருபத்தைந்தாண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்தமைக்கு இரண்டு முறை பணப் பரிசு பெற்றவர்.யுனெசுகோ விருது ஒன்றும்,இலங்கை அரசின் சாகித்ய ரத்னா விருது ஒன்றும் பெற்ற பெருமைக்கு உரியவர்.
இலங்கையில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் கல்விக்குழு, பாடத்திட்டக்குழு, மதிப்பீட்டுக்குழு எனப் பல நிலைகளில் பணிபுரிந்தவர். அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் அனுப்பும் முனைவர் பட்ட ஆய்வேடுகளை மதிப்பிடும் தேர்வாளராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.சிந்தனை என்னும் இதழின் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தவர்.
அக இலக்கியமும் அறிவியலும் என்னும் தமிழ்த்துறை வெளியிட்ட நூலின் பதிப்பாசிரியராக இருந்து கடமையாற்றியவர்.உலக அளவில் நடைபெற்ற பல உலகத் தமிழ்மாநாடுகளைக் கண்ட பெருமைக்கு உரியவர்.அவ்வகையில் சென்னை,பாரிசு,மலேசியா,சிங்கப்பூர்,தமிழகம் மொரீசியசு உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று கட்டுரை படைத்த பெருமைக்கு உரியவர்.பல நாடுகள் சுற்றி வந்தாலும் தமிழ் அரங்குகளில் தமிழர் ஆடையான வேட்டியணிந்து அமர்ந்து வீற்றிருப்பது இவர்தம் தமிழ் உணர்வுகாட்டும் சான்றாகும்.இலங்கை நாட்டுப்புறப்பாடல்களைப் பாடிக்காட்டி விளக்கும் ஆற்றல்பெற்றவர்.
இவ்வாறான தகைமையும் தமிழ்ப் புலமையும் வாய்ந்த பேராசிரியரை தமிழுலகம் அறிந்து வைக்க வேண்டிய அளவுக்கு அறியவில்லை என்பது ஒரு உண்மை. தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருதல் வேண்டும் என்பது பாரதிதாசனின் விருப்பம். குறைந்தது தமிழாய்ந்த தமிழர்கள் உரிய முறையில் போற்றிப் பாராட்டப்பட வேண்டும் என்பது அடியேனின் ஆசை.
ReplyDelete________________________________________