Wednesday, 18 August 2010

சீர்பாதர் சமுகத்தின் கண்ணகி வழிபாடு

சீர்பாதர் சமுகத்தின் கண்ணகி வழிபாடு

சீர்பாத சமூகத்தினர் மத்தியில் கண்ணகி வழிபாடு பிரதான வழிபாடாகவும், தொன்மையான வழிபாடாகவும் உள்ளது. கண்ணகி மதுரையை எரித்து. கயபாகு மன்னன் பத்தினி தெய்வத்திற்கு விழா எடுத்து சிங்கள மக்கள் “பத்தினி தெய்யோ” என வழிபடுவது இவையெல்லாம் ஆடி மாதத்திற்குரியவை. இதனைத்தவிர்த்து வைகாசி மாதத்திலேயே தழிழர்களுக்கு வழிபாடு செய்து வருகின்றனர். மண்ணுலகில் இருந்து கண்ணகியம்மன் விண்ணுலகம் சென்றதாக குளிர்த்திப் பாடல் கூறுகின்றது. ஆக வைகாசித்திங்களை(பூரணை) இறுதி நாளாகக் கொண்டு கோயில் திறப்பர் சில இடங்களில் திங்கள் நாள் என்ற அடிப்படையில் இறுதி நாளாகக் கொண்டாடுவர். உதாரணமாக துறைநீலாவணையில் பொதுவாக இச்சடங்கு வைகாசி மாதத்தில் நடைபெறுவதால் வைகாசிச்சடங்கு என்பர். 

சீர்பாதக் குலத்தவர்கள் வாழுகின்ற வீரமுனை, துறைநீலாவணை, 15ம் கிராமம், மகிழுர் போன்ற இடங்களில் கண்ணகி வழிபாடு நடைபெறுகின்றது. இங்கு கதவு திறப்பது பற்றி கோயில் நிருவாகத்தில் ஒரு கிழமைக்கு முன்பே அறிவித்து  ஊர்மக்கள் அவையில் கூடி சடங்கு பற்றி கலந்தாலோசிப்பார்கள் இது அவ்வாலயத்திலோ அல்லது வேறு ஆலயத்திலோ நடைபெறும் .

வைகாசி மாதப் பூரணையிலேயே அம்மன் குளிர்த்தி இடம்பெறும் குளிர்த்திச் சடங்கு “கதவு திறத்தல்” நிகழ்ச்சியுடன் ஆரம்பிக்கும் சில கிராமங்களில் கதவு திறத்தல் சடங்கிற்கான சாப்பாடு முதலியன தலைமை வண்ணக்கர் வீட்டிலும் நடைபெறும் கதவு திறப்பதற்கு முன்பு கட்டாடியார் என்று அழைக்கப்படும் பூசகர் முழுகி “மாத்து” உடுத்தி ஊர் முழுவதும் புனிதமான தீர்த்தம் தெளித்து ஊர் காவல் பண்ணும் சடங்கினைச் செய்வார் இதன் பின்பே பூசைப் பொருட்களை தட்டத்தில் வைத்து கோயில் திறப்பையும் அதில் வைத்து பயபக்தியுடன் வெளிப்பூசை செய்வார். அப்போது மடையும் வைப்பார். சில கிராமங்களில் கோயில் வீதி  காவல் பண்ணி கதவுதிறக்கும் முறையும் உண்டு.

1. கட்டாடிகளும் பூசை முறைகளும்
அம்மனுககு பூசை செய்பவர் கட்டாடியார் என அழைக்கப்படுவர். இவர் வெண்பட்டை இடுப்பிலே உடுத்தி பட்டுச்சால்வையினால் மார்பிலே ஏகாவடம் போட்டு பட்டுச்சால்வையிலே தலைப்பாகையும் கட்டிக் கொள்வார் கழுத்திலே உருத்திராக்க மாலையும் கையிலே சிலம்பும் அணிந்து மேனியெங்கும் திருநீறும் மஞ்சளும் பூசி பொட்டு இட்டு அம்மன் போலவே திகழ்வார் இடுப்பிலே வேப்பிலை சொருகியிருப்பார் இவர் கட்டாடியார் எனப்படுவார்.

2. உதவிக்கட்டாடியார் 
கட்டாடியாருக்கு உதவியாக உதவிக்கட்டாடியார் எனப்படும் உதவி செய்வோர் இருப்பர் இவர்கள் கோயில் நிருவாகிகளான வண்ணக்கர்களுடன் மடைவைத்தல் தொடக்கம் சகல கோயில் தொண்டுகளிலும் ஈடுபடுவர்.

3. சடங்கு வழிபாடு 
பந்ததி முறைப்படி செய்யப்படும் பூசை வழிபாடுகளில் சீர்பாத சமூகத்தினர் முக்கிய இடத்தை வகிக்கின்றனர். பலவகை பழங்களை நிவேதனமாக படைப்பர் இது மடை எனப்படும்.
வேப்பிலை கமுகம் பாளை தாமரைப்பூ முதலியவற்றைக் கொண்டு மடையை அலங்கரிப்பர் கற்பூர தீபம் ஏற்றிய பின்பு கதவு திறக்கப்படும் மந்திரம் இன்றி தீபாராதனை நடைபெறும் பூசகர் வாய்க்கு சீலை கட்டியே பூசை செய்வார்; அவரது கையில் இருக்கும் மணி ஒலிக்கும் அவர் உருவேறி ஆடிக்கொண்டே பூசை செய்வார் மாதர் ‘குரவை” ஒலி எழுப்புவர் அரோகரா சத்தம் உடுக்கு அடித்து உடுக்குச்சிந்து பாடுதல் சிலம்பு அம்மன் காய் கிலுக்குதல் ஆகியன பேரொலியாக ஒலிக்கப் பூசை நடைபெறும் பூசை முடிவுற்ற பின் உடுக்குச் சிந்து பாடப்படும் பூசை முடிவில் மக்களுக்கு திருநீறும் தீர்த்தமும் வழங்கப்படும் பத்தினி கோயில்களில் மஞ்சளை அரைத்து பொட்டிடுவர். மஞ்சளும் குங்குமமுமே உபயோகிப்பர் சந்தணம் உபயோகிப்பதில்லை

கிராம மக்கள் சேர்ந்து தோரணம் கட்டுவர் புதிதாக கம்புகள் வெட்டப்பட்டு விதி முறைப்படி திட்டமிடப்பட்டு அனுபவம் வாய்ந்தோரால் அழகாகக்கட்டப்படும். வேறு கிராமத்தில் இருந்து கட்டப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு ஏற்றப்படும் வழக்கமும் உண்டு. அங்கேயே கட்டப்பட்டு ஏற்றப்படும் நிகழ்ச்சியும் உண்டு. தோரணம் ஏற்றும் போது மடைவைத்து பூசை செய்து அம்மன் ஆலய முகப்பில் ஏற்றி வைக்கப்படும். 

கதவு திறந்து 3ம் நாள் அம்மன் ஊர்வலம் வருவது வழக்கமாக உள்ளது இதில் அம்மன் பல்லாக்கின் மீது வைத்து அலங்கரிக்கப்பட்டு மேள தாள வாத்தியங்கள் ஒலிக்க(சில ஊர்களில் பேண்டு வாத்தியங்களை கொண்டு இளைஞர்கள் நடனமாடிச்செல்வதும் உண்டு) அம்மன் ஊர்வலம் வரும் இதில் அவ்வூர் மக்கள் வளவு வாசலில் கும்பம் வைத்து அம்மனை வழிபடுவர் இவ்வாறு ஊர் சுற்றிய பின்னர் கோயிலை சென்றடையும். கதவு திறத்தல் முதலாக ஒவn;வாரு நாளும் மத்தியானம் இரவு என இருநேரம் மட்டுமே சடங்குகள் நடைபெறும். திருக்குளிர்த்திற்கு முன்பு கலியாண சடங்கு நடைபெறும் சில கிராமங்களில் கலியாணக் கால் வெட்டுதலுடனே  சடங்கு தொடங்குதலும் உண்டு.

பெரும் பாலான கோயில்களில் கலியாணக் கால் வெட்டுதல் நிகழ்வு குளிர்த்திக்கு முதல் நாளே இடம் பெறும் கட்டாடியார் பெண் போல சேலை உடுத்தி முக்காடிட்டு பறை மேளம் ஒலிக்க பெண்களின் குரலில்  “அரோகரா” என்று ஒலிக்க கலியாணக் கால் வெட்டும் இடத்திற்குச் செல்வார். முன்பே பார்த்து தீhமானித்த மரத்தடியிலே மடைவைத்து பூசை செய்யப்படும் பின்பு அம்மரம் கட்டாடியரால் வெட்டப்படும் பூவரச  மரம் அல்லது அரசமரம் போன்றவற்றில் கலியாணக்கால் வெட்டப்படும். வெட்டிக் கொண்டு திரும்பும் போது கட்டாடியார் உருவேறிய நிலையிலே ஓட்டமாக ஆலயம் செல்வார் 

கொண்டு வரப்பட்ட கல்யாணக் கால் மூலஸ்தானத்திற்கு முன் உள்ள கலியாண மண்டபத்தின் நடுவே இதற்கென அமைக்கப்பட்டிருக்கும் சிறு மேடையில் நடப்பட்டு அலங்கரிக்கப்படும் அழகான சரிகைச் சேலையினால் அக்கலியாணக் கால் அலங்கரிக்கப்படும் பெண் போன்ற தோற்றம் தரும் வகையில் கலியாணக்கால் அலங்கரிக்கப்பட்டு பூசை நடைபெறும்.
 
அம்மனின் வரலாறு கூறும் ஏடுகள் உள்ளன. ஆலயத்திலேயே ஒரு புறத்தே பூசை தவிர்ந்த நேரங்களில் வரலாறு கூறும் ஏடு படித்தல் இடம் பெறும். மடைவைத்து பூசை செய்து முறைப்படி தொடக்கப்பட்ட இவ் வைபவம் தொடர்ந்து நடை பெறும். பக்தர்கள் பயபக்தியுடன் குழுமி இருந்து கேட்பர் கலியாண சடங்கின் போது அம்மனின் கலியாண ஏடு படித்தல் இடம் பெறும் கலியாணச் சடங்கு முடிவுற ஏடு படித்ததுடன் கலியாணச் சடங்கு நிறைவுறும். குளிர்த்தியின் போது ஏடு படிக்கப்படும் இதற்கென சோடிக்கப்பட்ட மண்டபத்திலயே அம்மனைக் கொண்டு வந்து தீர்த்தச் சட்டியின் மேல் அமர்த்தி குளிர்த்தி ஆடும் போது இந்த ஏடு படிக்கப்படும். இருவர் மாறிமாறிப் படிப்பர். சடங்குகளில் அம்மன் தொண்டாகவும் நேர்த்திக்கடனாகவும் அன்பர்கள் அதைச் செய்வர் நீராடி மாத்து உடுத்து பெண்கள் தலையிலே வேப்பிலை சூடி, மடி கொய்து சீலை உடுத்துவர். அம்மடியிலே தம் வீட்டிலிருந்து சிறிது நெல்லும் வேப்பம் பத்திரத்தையும் போட்டு வீடுவீடாகச் சென்று மடிப்பிச்சை எடுப்பர் “கண்ணகி அம்மன் பேராலே மடிப்பிச்சை போடு” என்று கேட்டுப் பெறும் நெல்லை அம்மன் ஆலயத்திலே கொடுப்பர். மடிப்பிச்சை நெல், நேர்த்திக்கடன் நெல் என்பன ஆலய வீதியிலே காயவிடப்பட்டு உரல் நாட்டி குற்றப்படும் குளிர்த்தி பூசை அன்று பின்நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும் பெண்கள் கூடி குற்றிப்புடைத்து, அரிசி ஆக்கிக் கொடுப்பர். இந்நிகழ்ச்சியும் மடைவைத்து பூசை செய்து ஆரம்பிக்கப்படும்..
மேலே கூறியவாறு குற்றியெடுக்கப்பட்ட அரிசியினை அம்மனுக்காக பொங்கும் நிகழ்வே இது. விநாசகப்பானை ஏற்றும் நிகழ்வு குளிர்த்திச் சடங்கின் போது முக்கியமான ஒரு வைபவமாகும் புதிதாக வாங்கிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட மண் பானையிலே பொங்கப்படும் ஆலய முன்றலிலே புதிதாக அடுப்பு மூட்டி மடைவைத்து தீபாராதனை செய்து பானைகளை அடுப்பில் ஏற்றுவர். மூன்று பானைகள் வைத்தல் மரபு பானையில் பால் பொங்கும் வேளையில் நடுவிலுள்ள பால் பானையை மூலஸ்தானத்த்pற்கு கொண்டு போய் அம்மனுடைய மடையில் முக்கியமாக வைப்பர் ஆண்டு தோறும் விநாசகப்பானை புதிதாக வாங்கப்படும்.

மாட்டுப்பட்டி உள்ள கிராமங்களில் மக்கள் பாலைக் கோவிலுக்கு கொடுப்பர் ஆலயத்தில் இதற்கென பெரிய பானைகளும் அண்டாக்களும் வைக்கப்பட்டிருக்கும். பக்தர்கள் தமது பட்டியின் பாலைக் கொண்டு வந்து ஊற்றிப்  போவார்கள் இப்பாலைக் கொண்டே விநாசகப்பானை பொங்கப்படும். நேர்த்திக்கடனில் பொங்கும் எல்லோருக்குமே இப்பால் பகிர்ந்தளிக்கப்படும் இறுதியில் எல்லோரினதும் பானையிலுமே மூன்று அகப்பை அள்ளப்பட்டு அம்மனுக்கு படைக்கப்படும்; இதில் பொதிந்துள்ள சமத்துவக் கருத்து கவனத்தில் கொள்ளதக்கது சங்க காலத்தில் பக்தர்கள் பலவிதமான நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவர் இவ் மரபு சீர்பாத சமூகத்தினரிடையும் காணக்கூடியதாகவுள்ளது தீச்சட்டி ஏற்றல், மடிப்பிச்சை எடுத்தல், காவடி எடுத்தல், அலகு குத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், மடைப்பெட்டி கொடுத்தல், பிள்ளை விற்றல், அடையாளம் கொடுத்தல் என அவை பலவிதமாக அமையும்.

காவடி பால் காவடி, முள்ளுக்காவடி, பறவைக்காவடி என பல வகைப்படும். சிறுவர்கள் பால் காவடி எடுப்பர் முழுகிக் காவியுடுத்து உருத்திராட்ச மாலை அணிந்து தயாரானதும் பெரியவர்கள் பக்திப்பாடல்களை பாடி உடுகு அடித்து உரு ஏற்றுவர் பின் காவடியை தோளில் வைத்து அரோகரா சத்தத்துடன் பலர் தொடர்ந்து வர காவடி ஆலயத்திற்குள் செல்லும். இவ்விதமே முள்ளுக்காவடி எடுப்பர். முதுகிலே பல முட்கள் குற்றி எடுக்கப்படும் ஒருவர் செடிப் பிடித்து இழுக்க காவடி தாங்கியவர் தாளத்திற்கேற்ப ஆடுவர் தனியேயும் கூட்டமாகவும் மத்தாளம் சல்லரியுடன் தாளத்திற்கேற்ப ஆடியபடி காவடி ஆலயத்தை அடையும். இவ்விதமே பறவைக்காவடி போன்றவையும் எடுப்பவரின் உடலை வருத்துவனவாய் இருக்கும்; பறவைக்காவடி தேரில் தொங்குவதாயும் அமையும். அலகு குத்துபவரின் வாயில் ஊசி ஏற்றி அலகினைப் பொருத்துவர் மந்திர உச்சாடனத்துடன் அலகு குத்தும் போது பக்தர் உருவேறிய நிலையில் காணப்படுவார். பெரும்பாலும் பெண்களே அலகு குத்துவதுண்டு அலகு குத்திய பெண்கள் ஊர்வலமாக கோவிலை நோக்கிச் செல்வர்.

காவியுடுத்தி உருத்திராட்சம் அணிந்து கையில் தேங்காயுடன் பக்தர்கள் அம்மன் ஆலயத்தினை சுற்றிவருவர் இது அங்கப்பிரதட்சணம் எனப்படும். இவர்கள் எல்லோருமே காலைமுதல் உபவாசம் இருந்து நேர்த்தி முடிவுற்ற பின்னரே இளநீர் அருந்துவர். நேர்த்திக்கடன்களில் இதுவும் ஒன்று பெற்றோர் தமது சிறு குழந்தைகளை பூசாரியிடம் கொடுத்து விலை கூறச் செய்து பின்பு தாமே அக்குழந்தையை பெற்றுக் கொண்டு காணிக்கை செலுத்துவர். ஆலயத்திலே அடையாளப் பொருட்கள் விற்கப்படும் குறிப்பிட்ட நேர்த்திக்கடனுக்குரிய பொருட்கள் வெள்ளி, தங்கம் போன்றவற்றிலும் செய்து கொடுக்கப்படும் ஆலய முகப்பிலே அடையாளப் பொருட்கள் பாக்கு, பழம், வெற்றிலை போன்றவற்றுடன் வழங்கப்படும். வழங்கிய பின் பெட்டியில் வைத்து வெள்ளைத்துணியால் மூடி தலையில் வைத்து கோயிலை வலம் வந்து கொடுத்தவுடன் தீத்தம் தெளிர்த்து பெற்றுக் கொள்ளும் பூசகர் விபூதி பிரசாதம் கொடுப்பர் இவைதவிர ஆடு, மாடு, கோழி, தென்னங்கன்று, கமுகங்கன்று போன்ற பலவும் நேர்த்திக்கடனாக கொடுக்கப்படும்

No comments:

Post a Comment