Monday, 16 August 2010

திருக்கோணமலை

பள்ளிக்கூட மாணவனாயிருந்தபோது "திருக்கோணமலைக் கவிராயர்" எனும் புனைபெயர்கொண்ட எங்களூரின் பெயரறியப்பட்ட கவிஞர் ஒருவர் பற்றி அறியக்கிடைத்தது.

அவர் பற்றி அப்பாவின் தலைமுறையினர் பகிர்ந்துகொண்ட நினைவுகளும், அவரது ஆளுமை குறித்த வர்ணனைகளும் அக்காலத்தில் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது.

வியப்படையவைக்கும் துணிச்சலும் சொல்லாளுமையும் முட்டிமோதிப்பொங்கும் வாழ்க்கைமுறையும் கொண்ட அவர், யாராவது "திருகோணமலை", "திருமலை' என்று ஊர்ப்பெயரை உச்சரித்தால் கடும் சீற்றம் கொள்வாரெனவும் பெருங்கோபத்தோடு பேசுவார் எனவும் கேள்விப்பட்டேன்.

அந்தக்காலப்பகுதியில்தான் திரு-கோணமலைக்கு நடுவில் "க்" வரவேண்டுமா என்பதுபற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.

ஏ எல் முடித்த கையோடு கழகப்புலவர் என்று அடைமொழியால் இனங்காட்டப்படும் பெ. பொ. சிவசேகரம் அவர்களது கட்டுரை ஒன்று படிக்கக்கிடைத்தது. அது திருக்கோணமலை என்ற பெயர்வரக் காரணங்களாக எவை இருக்க முடியும் என ஆராய்ந்தது.

ஏற்கனவே சிந்தனையில் ஓடிக்கொண்டிருந்த இந்த விசயம் சின்ன ஆய்வு ஒன்றைக்கோரலாயிற்று.

முதலில் இந்த ஊரின் பெயர் எப்படி வந்திருக்க முடியும் என்று அறிவது அவசியமாகப்பட்டது. இதுதான் பெயர்க்காரணம் என்று அறுதியிட்டு கூற முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஊகம்.

சில காரணங்களை வரிசைப்படுத்தலாம்.



பெயர்க்காரணம் 1:

"திரிகோணமலை" என்று பெயர் இருந்திருக்கலாம். மூன்று புறம் மலை அப்படி ஏதாவது காரணம்.

பெயர்க்காரணம் 2:

கிழக்குத்திசையை குணதிசை என்று சொல்வர். "குணக்கு மலை" மருவி குணமலையாகிக் கோணமலையாகியிருக்கலாம்.
பிறகு கோவில், சைவம் வழியே "திரு" வந்து சேர்ந்திருக்கலாம்.

தமிழகத்திலும் இலங்கையிலும் நிறைய ஊர்ப்பேர்களில் சைவம் வந்து "திரு" வை ஒட்டியது.

பெயர்க்காரணம் 3:

"கோகர்ணம்" என்றொரு ஆதிப்பெயர் இவ்வூருக்கு உண்டு. அது திரு கோகர்ணம் ஆகி பின் மருவியிருக்கலாம்.

இன்னும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இவற்றில் தெளிவாக ஒரு விசயம் புலப்படுகிறது. "திரு" பிறகுதான் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
இவ்வூர் புகழ்பெற்ற , பாடல் பெற்ற சிவத்தலம் ஒன்றைக்கொண்டிருக்கிறது.

சம்பந்தர் வேறு "திருக்கோணமாமலை அமர்ந்தாரே" என்று பாடிவைத்த்ருக்கிறார்.

அருணகிரி நாதர் இப்படி பாடிவைத்திருக்கிறார்: (அவர் பாடியது இந்தத் திருக்கோணமலையைத்தான் என்பதற்கான எந்த உத்தரவாதத்தையும் என்னால் தரமுடியாது ;-))


நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே


"திரு" ஒட்டப்பட்ட ஏனைய ஊர்ப்பேர்களைக் கவனிக்கலாம் என்று தோன்றியது.


திரு + ஆனைக்கா = திருவானைக்கா
திரு + கேதீச்சரம் = திருக்கேதீச்சரம்
திரு + கைலாயம் = திருக்கைலாயம்
திரு + சிறு + அம்பலம் = திருச்சிற்றம்பலம்

திரு ஒட்டப்பட்ட ஊர்களிலெல்லாம் இந்த "திரு" தமிழ்ப்புணர்ச்சி விதிகளின் படித்தான் ஒட்டியிருக்கிறது.

உயிரெழுத்தொன்று மெய்யோடு புணருமெனில் வருமெய் மிகும் என்பது இலக்கணம்.

தெரு + கோடி = தெருக்கோடி என்பது நல்ல எடுத்துக்காட்டு.


ஈழத்தின் வடக்கு கிழகுப்பிரதேசங்களில் பல ஊர்ப்பெயர்கள் இவ்வாறு புணர்ச்சி விதிகளின் படித்தான் அமைகின்றன.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கூனித்தீவு என்று...

புணர்ச்சி விதிகளின்படி "க்" மிகுந்து "திருக்கோணமலை" என்றே அமையவேண்டும் என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவே படுகிறது.


சரி, இலக்கணங்களும் விதிகளும் இருந்தாலே அதற்கு மாறான மக்களின் நடைமுறை ஒன்று இருக்க்கக்கூடும் என்ற சந்தேகம் நமக்கெல்லாம் வந்தாகவேண்டுமல்லவா?

மக்கள் எப்படி இந்த ஊரை அழைத்திருப்பார்கள் என்று தேடலாம் என்று வெளிக்கிட்டேன்.


கொஞ்சம் மூத்த தலைமுறை இவ்வூரை "திருக்கணாமலை" என்றே சோல்வார்கள்.

அத்தோடு பிறமொழிக்காரரும் ஐரோப்பிய வல்வளைப்பாளரும் தமிழ் இலக்கணத்தைப்பார்த்தா ஊர்ப்பேரை ஊகித்து தமது கொச்சையில் வரைபடம் செய்திருக்க முடியும்?

ஆட்கள் என்னத்தை பயன்படுத்தியிருப்பார்கள் என்பதை பிறமொழிப்பேர்களில் ஊகிக்க முடியுமா என்று தேடலானேன்.

சிங்களம்: திருக்குணாமலய
ஆங்கிலம்: ட்ரின்கமலீ (trincomalee)

இந்த இரண்டு பெயர்களிலும் "க்" மிகுவதை தெளிவாகவே அவதானிக்க முடிகிறது.
அத்தோடு தமிழ் மக்கள் யாழ்பாணம் என்றோ மட்டகளப்பு என்றோ "தமிழ்த்தன்மை" இல்லாத வழக்கொன்றைக்கொண்டிருக்கவில்லை.



பிறகு ஏதோ ஒரு புள்ளியில் இந்தப்பெயர் தமிழ்த்தன்மைய இழந்து திருகோணமலை ஆகியிருக்க வேண்டும்.
தம்பலகாமம் தம்பலகமுவ ஆன காலமோ தெரியாது :-)

அடிக்கடி இப்படி ஒரு வடமொழிச்சொல் போன்று இதை உச்சரித்து ஆட்களுக்கு இதுவே பழகிப்போயிருக்கவும் வேண்டும்.

தவறான வடிவம் பழகிப்போக சரியானவடிவம் இப்போது உறுத்தலாக இருக்கிறது.

"திருசிற்றம்பலம்" என்று தொடர்ந்து சொல்லிவந்தால் "திருச்சிற்றம்பலம்" உறுத்தத்தொடங்கும்.

எனக்கென்னமோ திருக்கோணமலை என்று தமிழ்த்தன்மையோடு க் மிகச் சொல்வதே சரியெனப்படுகிறது. அப்படியே பயன்படுத்தியும் வர முயல்கிறேன்.

நண்பன் சத்தியன் இல்லை என்று அடம்பிடிக்கிறான். அவனிடம் எனது நம்பிக்கையை மறுக்கும் ஆதாரங்கள் உண்டு.

எஸ். சத்தியதேவன் பின்னூட்டமிட அழைக்கப்படுகிறார் ;-)



நூலகத்தில் செயற்றிட்டம் ஒன்றுக்கு திருக்கோணமலை என்று பெயர்வைக்கப்போக பத்மநாப ஐயர் விளக்கம் கேட்டு எழுதியதில்தான் இந்த பிரச்சினை இப்படி அலுவலகத்திலிருந்து வலைப்பதிவு எழுதவேண்டிய படி அருட்டலுக்குள்ளானது.

ஐயர் அனுமதித்தால் அவரது மின்னஞ்சலை இங்கே பின்னூட்டமாக இடுகிறேன்.


பகிடி என்ன என்றால், எனது நெருங்கிய நண்பர் ஒருவர் என் கருத்தை மதித்து, சாதாரண உரையாடல்களிலும் மின்னஞ்சல்களிலும் கூட "திருக்கோணமலைக்கு போறியா?" "திருக்கோணமலையால வந்தாச்சா" என்று எழுதுவார். எனக்கே அந்தரமாக இருக்கும். நான் பஞ்சியில் "க்" போடாமல் திருகோணமலை என்றே எழுதியும் பேசியும் விடுவதுண்டு.

இலகுவான பயன்பாடும், வினைத்திறன் மிக்க பயன்பாடுமே இலக்கணங்களைத்தோற்றுவிக்கும். ஆட்களுக்கு பொருந்தாத இலக்கணத்தை வைத்து என்ன செய்வது?

ஆனால் சம்பந்தமில்லாமல் இலக்கணப்பிழை விட்டுக்கொண்டிருக்கக்கூடாது என்ன?


எனக்கிருப்பதெல்லாம் இது தொடர்பாக ஒரே ஒரு கவலைதான் இப்போது.
கூகிளில் திருகோணமலை என்று தேடினால் திருக்கோணமலை என்று இருக்கும் தகவல்கள் வராமல் போய்விடக்கூடுமா என்பதே அது (மறுதலையாகவும்)

No comments:

Post a Comment