Thursday, 19 August 2010

அ. ச. பாய்வா கவிதைகள்

தாமரை உடுத்திய பகல்



தாமரையை உடுத்திப்
படுத்திருந்த பகலில்
நீள் நகங்களால் வறாண்டி
சபைக் கூச்சத்தில்
முத்தம் உடைத்தவள்
நீயாகத் தானிருக்கும்
நிச்சயமாக...,
மெளனத்தை
மதுபானமாய் நிரப்பி
இல்லாத மொழியில்
வசனம் அமைத்து
உன் பூஜையறையில்
எனைப் பூக்களாய்
அடுக்கினேன்
நிலாப் பொந்துகளில்
இரவு பதுங்குகிற
ஒரு நாளில்...!!


யாரோ எழுதிய சொல்



தடிப்பு மண்ணில்
தயாரிக்கப்பட்ட
திண்மப் பொருளாய் கிடக்கிறது
மனசு,
வாழ்க்கையைப் பிதுக்கி
கோழைத்தனத்தை
வெளியேற்ற
நிகழ்கின்ற முயற்சியில்
ண் விழுகிறது
சும்மா வீசுகிற காற்றில்
யாரோ எழுதி விடுகிறார்கள்
எனக்குப் பின்னாலும்
ஒரு பெண் வேண்டுமாம்
நான் ஜெயிக்க...


இளநீர்க் காலங்கள்
 


எனதூர்
மண்சாலையில்
சப்பாத்து அணிந்த கால்களால்
சில நேரம்
நடந்து போவாள்
என் கோடையைத்
தூக்கி நிமிர்த்துகிற
இளநீர்க் காலமாய்...
இனியென் மனக்கண்ணில்
ஓர் அழகிய வழக்குப்
பதிவாகும்
என தூக்கம் கலைத்தவள்
என்...


‘மொழிவாழ விதி செய்வோம்’
 


மரபென்றும் புதிதென்றும்
இரண்டாகப் பிளவுண்டு
முரண்பட்டு நிற்பதென்ன தோழா - இரண்டும்
தமிழின்இரு கண்ணென்று
தவறாது நாமேற்று
அமுதாகக் கவிசெய்வோம் வாடா

ஒன்றைப் படைப்பாக்க
இயலாதோர் அஃதொன்றை
நன்றெனச் சொன்னது மில்லை - மன்றில்
உளவியல் இதுதான்
உண்மையும் இதுதான்
களமதில் வீண்பேச் செதற்கு

மரபுக்கு யாப்பலங்
காரமே ஆதாரம்
சீரடி தொடையொன்று நீளும் - மரபிலா
புதுக்கவிதைக் கிதுபோன்று
பலமொன்று மில்லைத்தான்
புதுமைதான் அஃதின்பலம்

நதிகட்குப் புதுச்சதங்கை
ட்டுகின்ற நட்டுவனார்
புதுக்கவிதை யாளரெனிற் பொய்யுமில்லை - விதியறிந்து
பாவென்றும் பலவென்றும்
பண்ணோடு பாடுங்கவிக்
கோவந்த மரபாளர் தாம்.

எண்ணத்தை வண்ணமாய்
உடனாக்கி வைக்கின்ற
பண்புதான் மரபுக்கவி - ஒன்றைச்
சொல்லும் முயற்சியிலே
சுகங்காணுங் கோலந்தான்
பொல்லாத புதுமைக் கவி

மொழியும் இலக்கணமும்
கைவரப் பெற்றோரின்
அழகியற் செதுக்கலே மரபு - வழிமீறி
புலமைத் துணையின்றி
புதுச்சொல் லாட்சியிலே
உலவுங் கவிதையே புதிது.

இலக்க ணத்தைப்பேண
இடுசொல்லை வீணாக்கிப்
பலமற்றுப் போவதுந்தான் மரபு - சொல்லைச்
சிக்கன மாய்ப்பேணிச்
சுருக்கென்று கருத்தாழத்
தைக்கின்ற சூட்சுமந்தான் புதிது

என்ன விருந்தாலும்
ஈதிளையோர் காலமென
எண்ணி இணங்கிடுதல் அறிவு - இன்னொன்று
நல் மரபிற் காலூன்றிப்
படைக்காத இலக்கியமும்
அல்லலுறும் என்பதுவும் தெளிவு

புதிதும் நன்மரபும்
இலக்கியமே யானாலும்
புதுக்கவியே இனி மகுடஞ் சூடும் - பேதமற்று
அழியாது மரபதனை
ஆதரித்தல் எம்கடனே
மொழிவாழ விதிசெய்வோம் வா

No comments:

Post a Comment