Wednesday, 25 August 2010
பாண்டிருப்பு தீப்பள்ளயம்
நன்றி திரு.விரி.சகாதேவராஜாஇற்றைக்குபல நூறு வருடங்களுக்கு முன்னர் மாருதசேன அரசனின் மகன் எதிர்மன்ன சிங்கம் என்னும் அரசன் மட்டக்களப்புப் பிரதேசத்தை சம்மாந்துறை என்னும் இடத்தில் இராஜதானியாக அமைத்து திக்காதிபதிகளை நியமித்து ஆட்சி புரிந்து வந்தான்.
அக்கால கட்டத்தில் வடநாட்டில் உள்ள கொங்கு நகரிலிருந்து வைசிய குலத்தைச் சேர்ந்த தாதன் என்னும் விஷ்ணு பக்தர் இலங்கையில் உள்ள புனித தலங்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம், கதிர்காமம் போன்ற தலங்களை தரிசிக்கும் நோக்கத்தோடு வந்து தரிசித்த பின்னர் அந்த ஆலயங்களில் தங்கி பஞ்ச பாண்டவர்களுடைய வரலாற்றைப் பாடிக்காட்டி குமணை வழியாக நாகர்முனை என்று அழைக்கப்பட்ட திருக்கோயிலை வந்தடைந்தார்.
திருக்கோயில் முருகன் ஆலயத்தினைப் பரிபாலிப்பதற்குச் சென்ற திக்கதிபதியாக இருந்த நற்பிட்டிமுனையைச் சேர்ந்த வீமாப்போடி என்பவரிடம் தாதன் கொண்டு வந்த மகாபாரத வரலாற்றைப் பாடிக் காட்டி பக்தர்களைப் பரவசப்படுத்திய தன்மையைக் கண்ட திக்கதிபதி வீமாப்போடி அவரை அணுகி குசலம் விசாரித்து தனது பகுதியில் திரெளபதை அம்மன் ஆலயம் அமைத்து மகாபாரதத்தின் சிறப்புக்களை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் பெருமைகளையும் விளக்கிக் காட்ட வேண்டும் என்று கேட்டதன் பிரகாரம் தாதன் மனமகிழ்ச்சியோடு அம்மனின் ஆலயம் அமைய வேண்டிய இடத்தை தெரிவு செய்யும்படி வேண்ட அவரும் மனமகிழ்வு கொண்டவராய் கடலை அண்டியதும், ஆல், அரசு, கொக்கட்டி போன்ற மரங்கள் அடர்ந்து காணப்பட்ட ஆலஞ்சோலை என்னும் இடத்தை (தற்போதைய பாண்டிருப்புக் கிராமம்) தெரிவு செய்து கொடுத்தார். பாண்டவர்களுக்கும், திரெளபதை தேவிக்கும் ஆலயம் அமைக்கப்பட்டதனாலேயே பாண்டிருப்பு என்று பெயர் வந்தது.
அவ்விடத்திலே இருந்து கொக்கட்டி மரத்தடியில் அட்ஷரத்தைப் பதித்து திரெளபதை அம்மன் சிலையையும், விஷ்ணு சிலையையும் வைத்து வணக்கமுறைகளை கொண்டு வணங்கி பூசைகளையும் நடத்தினார். தாதன் வகுத்த பூசைகள் வருடம் ஒருமுறை பதினெட்டு நாட்கள் புரட்டாதி மாதம் அமாவாசையில் வரும் செவ்வாய்க்கிழமை அல்லது அமாவாசையை அண்டி வரும் செவ்வாய்க்கிழமை கொடியேற்றி பதினெட்டாவது நாள் வெள்ளிக்கிழமை தீமிதிப்பு நடைபெறும்.
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் உற்சவத்திலே ஏழாம் நாள் பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து கிருஷ்ண பகவானை எழுந்தருளப்பண்ணுதலும், பன்னிரெண்டாம் நாள் காளியானக் கால் வெட்டுதல் (பாண்டிருப்பு வடக்கில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் மருதமுனைக்கு அருகாமையில் இருக்கும் கொஸ்தாப்பர் வளவில் இருந்து மேற்படி கல்யாணக் கால் வெட்டிக் கொண்டு வருவது சிறப்பான நிகழ்ச்சியாகும்). மேற்படி நிகழ்வின் போது தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து இந்நிகழ்ச்சியை சிறப்பிப்பது விசேட அம்சமாகும்.
அடுத்து தோரண அலங்காரப் பூசையும், பதினாலாம் நாள் மகா விஷ்ணுவை தோத்திரம் செய்யும் பூசையும், பதினாறாம் நாள் புதன்கிழமை வனவாசம் செல்லும் நிகழ்வும், பதினேழாம் நாள் அருச்சுனர் சிவபெருமானைத் தியானித்து தவம் செய்து பாசுபதாஸ்திரம் பெற்றுவர தவத்திற்குப் போகும் நிகழ்ச்சியும் இடம்பெறும்.
பதினெட்டாம் நாள் வெள்ளிக்கிழமை தீமிதிப்பு வைபவம் கடலில் குளித்து, மஞ்சள் பூசி தீக்குழியை வலம் வந்து கமுகம்பூ, அரிசி கலந்து அக்கினியில் இட்டு தர்மர், பூசகர் ஏனைய கொலுவிருக்கும் அனைவரும் தீமிதிக்கும் வைபவம் பார்ப்போர் மனதில் பக்திப்பரவசம் ஊட்டும் நிகழ்ச்சியாகும். இவ்வைபவத்தில் நாட்டின் பல பாகங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து அம்மனின் அருள் பெற்றுச் செல்வார்கள்.
பத்தொன்பதாம் நாள் சனிக்கிழமை பால் வார்ப்பு நிகழ்ச்சி இடம்பெறும். அதனைத் தொடர்ந்து மகாவிஷ்ணு மீண்டும் எழுந்தருளி நகர் வலம் வந்து ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தைச் சென்றடையும் நிகழ்ச்சி இடம்பெறும். இந்தப் பதினெட்டு நாட்களும் மகா பாரத பாராயணம் அறிஞர்களால் நடத்தப்படுதல் விசேட அம்சமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment