.
மோகனாங்கி என்பது ஈழத்தவரால் எழுதப்பட்ட இரண்டாவது புதினமும், தமிழில் எழுதப்பட்ட முதலாவது வரலாற்றுப் புதினமும் ஆகும். 1895 ஆம் ஆண்டில் இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்த த. சரவணமுத்துப்பிள்ளை என்பவரே இப் புதினத்தை எழுதினார். எழுதியவர் ஈழத்தவர் ஆயினும், இதன் கதைக் களமும், எழுது வெளியிட்ட இடமும் தமிழ்நாடே. இப் புதினத்தை எழுதும்போது சரவணமுத்துப்பிள்ளை சென்னை மாநிலக் கல்லூரியில், கீழைத்தேயச் சுவடிகள் நிலையத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இக் காலத்தில் இவர் மேற்கொண்டிருந்த வரலாற்று ஆராய்ச்சியே இவரை இந்த வரலாற்று நூல் எழுதத் தூண்டியதாகக் கருதப்படுகின்றது.சென்னை இந்து யூனியன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியான இந்த நூல், தஞ்சையிலும், திருச்சியிலும் நாயக்க மன்னர்கள் ஆட்சிபுரிந்த காலத்தைப் பகைப்புலமாகக் கொண்டது. இவ்விரு பகுதிகளின் ஆட்சியாளரிடையே நிகழ்ந்து வந்த அரசியல் போட்டிகளைப் பின்னணியாகக் கொண்டு இப் புதினத்தின் நிகழ்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.
சொக்கநாதன், மோகனாங்கி என்னும் இருவருக்கிடையேயேன காதல் வாழ்க்கையையை எடுத்துக்கூறும் இக்கதையில் இடையிடையே கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. இது, புதினத்துக்குரிய இலக்கணத்துக்கு ஒவ்வாததாக அமைவதாகச் சிலர் எடுத்துக் காட்டியுள்ளனர். தவிரவும், புதினத்தில், கடுமையான தமிழில் நீளமான வசனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் சில ஆய்வாளர்கள் குறைகூறியுள்ளனர்.
No comments:
Post a Comment