திராவிடப் பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற சக்தி வழிபாட்டினை கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற கண்ணகி அம்மன் வழிபாட்டிற் காண்கிறோம்.
12 ஆம் நூற்றாண்டிலே அரசோற்றிய 2 ஆம் கயபாகு மன்னன் கண்ணகி வழிபாட்டை இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொணர்ந்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது.
மானிடப் பெண்ணாக சோழ நாட்டிலே பிறந்த கண்ணகி பாண்டிய நாட்டிலே நீதி கேட்டுப் போராடி சேர நாட்டிலே தெய்வமாக மாறி வானகம் புகுந்தார்.
வானகம் சென்ற காட்சியை செங்குன்றத்திலுள்ள வேடுவர்கள் கண்டு சேரமன்னனிடம் கூற சேரன் செங்கூட்டுவன் இமயத்திலிருந்து கல் எடுத்து கங்கையில் கழுவி வஞ்சி மாநகரில் கண்ணகிக்கு சிலையெடுத்து பிரதிஷ்டை செய்தான். அப்பெருவிழாவிற்கு இலங்கையிலிருந்து சென்ற கயபாகு மன்னன் கண்ணகி சிலைகளைக் கையோடு கொணர்ந்து ஈழத்தில் கண்ணகி வழிபாட்டை ஆரம்பித்து வைத்தான்.
அது இன்று வரை நிலைத்து நிற்கிறது. வழிபாட்டில் முக்கிய அம்சம் வைகாசிச் சடங்கு கதவு திறந்தல் வைபவத்துடன் ஆரம்பித்து குளிர்த்தி பாடலுடன் இச்சடங்கு நிறைவடைதல் இன்று வரை நடைபெறும் மரபு ரீதியிலான நிகழ்வாகும். மட்டக்களப்பு தமிழகத்தில் 30 கண்ணகி ஆலயங்கள் இருந்ததாக ஊர் சுற்றுக் காவியம் கூறுகிறது. சேரன் செங்கூட்டுவன் இமயத்திலிருந்து கல்லெடுத்து கங்கையில் நீராட்டி அக்கல்லிருந்து கண்ணகியின் சிலை வடித்து தனது தலைநகர் வஞ்சி மாநகரின் கொடுங்கல்லூர் எனுமிடத்தில் பிரதிஷ்டை செய்து பெருவிழா எடுத்தான்.
அதற்கு இலங்கையிலிருந்து கஜபாகு மன்னன் கலந்து கொண்டதாக சிலப்பதிகார வரந்தருகாதை கூறுகிறது. கி. பி. 12 ஆம் நூற்றாண்டையுடைய கஜபாகு வேந்தன் அங்கிருந்து கண்ணகி சிலைகளைக் கொணர்ந்தான். அவன் இலங்கையில் எங்கு முதலில் கண்ணகிக்கு கோயில் எடுப்பித்தான் எனத் தெரியவில்லை.
எனினும், யாழ்ப்பாணத்திலுள்ள அங்கணாமைக் கடவையில் முதல் ஆலயம் எடுத்ததாக வரலாறு கூறுகிறது. கண்டி அரசன் 2 ஆம் இராசசிங்கன் காலத்தில் (1629 - 1637) பாடப்பெற்ற தம்பிலுவில் கண்ணகையம்மன் ஆலய ஊர்சுற்றுக்காவியத்தில் அப்பொழுது 30 கண்ணகி ஆலயங்கள் மட்டக்களப்பில் அமைந்திருந்ததாகக் கூறுகிறது. அப்பாடலில் அங்கணாமைக் கடவை என்ற இடம் முதலிடம் பெறுவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடு காட்டுப் பரவனி கல்வெட்டுக் குறிப்புக்களின்படி பட்டிமேட்டுக் கண்ணகி அம்மன் ஆலயம் 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம். ஊர் சுற்றுக் காவியம் மட்டு. மாவட்ட கண்ணகி ஆலயங்களை அடுக்கிக் கூறுகிறது.
பட்டிநகர், தம்பிலுவில் வீரமுனை காரைநகர் பவுசுபெறு கல்முனை கல்லாறெருவில் மகிழூர் செட்டிபாளையம் புதுக்குடியிருப்பு செல்வமுறு, மகிழடித்தீவு முதலைக்குடா... என ஊர் சுற்றுக் காவியம் கூறுகிறது.
கண்ணகி வழிபாட்டில் மழை காவியம் கடவாய் குயில், வசந்தன் முதலிய பாடல்களும் இடம்பெறுகின்றன. மழை பொழிந்து நாடு செழித்தோங்க இப்பாடலைப் பாடுவர்.
கஜபாகு வேந்தன் இலங்கைக்கு கண்ணகி வழிபாட்டைக் கொணர்ந்ததாக வரலாறு கூறுகிறது. அவன் வஞ்சிமாறகரிலிருந்து வரும்போது சந்தனக்கட்டையாலான கண்ணகி சிலையையும் கொணர்ந்து கண்டி தலதா மாளிகையில் வைத்து வணங்கினான். இன்னும் அதனை அங்கு காணலாம். சிங்கள மக்கள் கண்ணகியைப் பத்தினி தெய்யோ என அழைத்து வழிபட்டு வருகின்றனர். கண்டியில் முதலாவது பெரஹரா கண்ணகிக்கே எடுக்கப்பட்டது. கண்டி மாநகரின் இறுதி தமிழ் மன்னன் இராஜசிங்கன் காலத்திலேயே இது நடைபெற்றது.
பின்பு அது பெரஹரா வேறு வடிவம் பெற்றதாகக் கூறுவர். பத்தினித் தெய்வத்தை பத்தினித் தெய்யோ என இன்றும் சிங்கள மக்கள் வழிபடுவது இன உறவைக் காட்டுகிறது. திராவிடப் பண்பாட்டில் பெண் தெய்வ வழிபாட்டில் கண்ணகி வழிபாடு இறுதியாக இணைக்கப்பட்டதெனலாம். கண்ணகி ஒரு புதுத் தெய்வமாக சித்தரிக்கப்பட்டுள்ளாள். மட்டக்களப்பு தமிழகத்தில் காலங்காலமாக காளி, மாரி, துர்க்கை, பேய்ச்சி முதலிய பெண் தெய்வ வழிபாடுகளே அன்றிருந்தன.
தன் கணவன் அநியாயமாக கொலையுண்ட சேதியைக் கேள்வியுற்று கோபாவேசத்துடன் மதுரை வீதிகள் வழியாக பாண்டியனின் அரண்ம¨னையை நோக்கிச் செல்லும் கண்ணகியைக் கண்ட மதுரைப் பெண்கள்,
‘செம் பொற்சிலம்பொன்று கையேந்தி
நம் பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம்
வந்த திதுவென் கொல்’
என பயந்தும், வியந்தும் கூறுகின்றனர்.
கண்ணகியின் அசாதாரண கோலத்தைக் கண்ட அரண்மனை வாயிற் காப்போன் அரசனிடம் ஓடிச் சென்று... ‘மகிடனைக் கொன்று அவனது எருமைத் தலையை மிதித்து நின்ற கொற்றவையா? சப்தமரிதரில் இளையவளான பிடாரியா? இறைவனோடு ஆடிய பத்ரகாளியா? பயங்கர காட்டில் வாழும் காளியா? தாருகாசுரனின் நெஞ்சைக் கிழித்துக் கொன்ற துர்க்கையா? என்று கூறி வியக்கிறான். மொத்தத்தில் கண்ணகி புதுத் தெய்வமாக காட்டப்படுகின்றாள். கிழக்கிலங்கையில் வைகாசிச் சடங்கு இரு வேறு தினங்களில் நடைபெறுவது ஆமை ஊர் சுற்றுக் காவியத்தில்...
வைகாசித் திங்கள் வருவேனென்று மதுரைக் கிசைந்து விடை கொடுத்தாரே...’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி காரைதீவு முதலான ஆலயங்களில் வைகாசி மாதத்தில் வரும் திங்கட்கிழமையை மையமாக வைத்து குளிர்த்திச் சடங்கு கொண்டாடப்படுகிறது. சில ஆலயங்களில் வைகாசிப் பூரணையை மையமாக வைத்து சடங்கு கொண்டாடுவர்.
அகிலம் போன்றும் சுவாமி விபுலானந்த அடிகள் காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய தருவான வேம்பு மரத்தின் கீழிலிருந்து கூர்மதி விரி சிந்தனை பெற்றதாகக் கூறுவர்.
இத்தலவிருட்சமான வேம்புமரம் பல நூற்றாண்டுகளை கடந்தது என நம்பப்படுகிறது. இன்றும் அது உள்ளது. சுவாமி விபுலானந்தர் கண்ணகியம்மனின் தீவிர பக்தர் அவர் அம்மன் மீது பல பாடல்களைப் பாடியுள்ளார். அணியரங் கற்புக்கு அருங்கலமே நல்ல வணிக குலத்துரித்த மாதே அணிநடையும் தூய சிலம் பணியும் செல்வியே காரைநகர் தாயே என்னைக் காத்தருள் வாய் என ஒரு பாடல்.
இவ்வருட வைகாசித் திருக்குளிர்ச்சிச் சடலங்கு ஜுன் 1 ஆம் திகதி ஆரம்பமாகி 09 ஆம் திகதி செவ்வாய் அதிகாலை குளிர்ச்சி பாடலுடன் நிறைவடையும். முதல் நாளான திங்கட்கிழமை கடல் தீர்த்தம் எடுத்துவந்து திருக்கல்யாணக் கல் ?னிரிw. கூடவே கதவு திறத்தலும் நடைபெறும். மறுநாள் மாலை 7.00 மணிக்கு சடங்கு பூஜையும், ஊர் சுற்றுக் காவியம் பாடுதலும் நடைபெறும். புதன்கிழமை முதல் 7 ஆம்திகதி ஞாயிறு வரை மதியம் 1 மணிக்கும், மாலை 7 மணிக்கும் சடங்குப் பூஜை ஊர் சுற்றுக் காவியம் பாடுதலும் இடம்பெறும்.
8ம் திகதி திங்கள் பிற்பகல் 3.00 மணிக்கு பொங்கலுக்கு நெற்குத்தும் வைபவம் இடம்பெறும். மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு குளிர்ச்சி பாடுவர்.
இக்காலப் பகுதியில் ஊருக்குள் மக்கள் மச்சம், மாமிசம் புசிக்க மாட்டார்கள். மஞ்சள் தட்டமாட்டார்கள். மாவிடிக்க மாட்டார்கள். மிகவும் பயபக்தியுடன் வழிபடுவார்கள். ஊர்சுற்றுக் காவியம் பாடுகையில் அம்மனுக்கு முன் வெள்ளை விரித்து உடல் போட்டு கப்புகனார் உடுக்கையோடு ஊர்சுற்று காவியம் படிப்பார். ஒவ்வொரு பாடலுக்கும் உற்சாகத்துடன் உடுக்கை அடிப்பர். முடிவில் வாழிபாடி வணங்குவர். இது மரபு ரீதியிலான சடங்கு.
பூஜை காலத்தில் பச்சைகட்டுதல் நிகழ்வும் இடம்பெறும். பழைமையை இன்றும் பயபக்தியுடன் கைக்கொள்ளும் சடங்கில் பங்குபற்றி வாழ்வில் உய்வோமாக!
விரி. சகாதேவராஜா -தினகரன் 30-05-200
No comments:
Post a Comment