நேரம் இரவு 11 மணியும் சில வினாடிகளும்.
நான் புத்தகங்கள் பரவிக் கிடக்கும் எனது மேசையில் முழங்கைகளை ஊன்றியவாறு எழுந்தமானமாக யோசித்துக் கொண்டிருந்தேன். இடையிடையே பரவிக் கிடக்கும் புத்தகங்களில் பார்வையை பரவிக் கொண்டேன்.. பெரிய இரைச்சலாக பெய்துகொண்டிருந்த மழை சற்று முன்னர்தான் சிறு தூறலாக சுருங்கியிருந்தது. எங்கும் மழை காலதிற்கேயுரித்தான பூச்சிகளின் சத்தங்கள், மனிதச் சத்தங்கள் அற்ற அந்த வேளையின் அமைதியை கிழித்துக் கொண்டு காதுகளில் ரிங்காரமிட்டுக் கொண்டிருந்தன. அந்தச் சத்தம் கூட ஏதோ இனிமையாகத்தான் இருந்தது.
ஒழுங்கற்று பரவிக் கிடக்கும் அந்த புத்தகங்களை அடுக்கிவைக்க வேண்டுமென்று ஒவ்வொரு நாளும் நினைப்பேன் ஆனால் காலையில் எழுந்ததும் அதில் உள்ள ஏதாவது ஒரு நூலின் சில பக்கங்களில் மூழ்கியதும் எல்லாம் மறந்துவிடும். அவ்வாறு இல்லாவிட்டால் ஏதேதோ எண்ணங்களில் மூழ்கி அன்றைய காலையை இழந்துவிடுவேன். ஒருவகையில் புத்தகங்களை அடுக்கிவைக்க வேண்டுமென்ற எனது எண்ணமும் எனது வாழ்வு குறித்த திட்டமிடல்களுக்கும் நெருங்கிய ஒற்றுமையுண்டு. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை இந்த புத்தகளையெல்லாம் அடுக்கிவைக்க வேண்டும். இப்படி நினைத்துக் கொண்டிருந்ததில் சில நிமிடங்கள் செத்துவிட்டன..
பகல் சற்று அதிகம் தூங்கியதால் நித்திரையும் வரவில்லை. சரி ஏதாவது வாசிப்போமே, என்று மேசையில் கிடந்த சில நூல்களில் பார்வையை செலவிட்டேன். ‘அமைப்பியல் வெளிச்சத்தில் தேசியத்தை விளங்கிக் கொள்ளல்’ ‘டாலர் தேசம்’ ‘பின்நவீனத்துவம் பித்தும் தெளிவும்’, ‘அர்த்த சாஸ்த்திரம்’ , ‘சோளகர் தொட்டி’, சார்த்தரின் ‘சொல்’ இன்னும் என்னென்னவோ - எதிலும் மனம் பெரியளவு ஒத்துப்போகவில்லை. சமீபநாட்களாக ஏற்பட்ட சில அரசியல் நிகழ்வுகள் ஒருவகையான மனச்சோர்வையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருந்ததால் பெரியளவில் எதிலுமே ஈடுபாடுகாட்ட முடியாமல் இருந்தது. என்ன செய்வது என்று எண்ணிக் கொண்டிருந்தபோதுதான் அந்த நூல் பட்டது. அது நான் சில தினங்களுக்கு முன்னர் வாசிப்பதற்கென எடுத்துவைத்துவிட்டு முன்னுரையோடு நிறுத்திக்கொண்ட கன்னட எழுத்தாளர், யஸ்வந் சித்தாலவின் ‘ஒரு பெண் கதையாகிறாள்’ - இப்போது படிப்பதற்கு பொருத்தமான இருக்கலாம் என்று நினைத்தேன். ஒரு வகையில் அதன் தலைப்பும் எனது தெரிவுக்கு காரணமாக இருந்திருக்கலாம். ஆண்கள் எப்போதுமே அருகில் ஒரு பெண்துணை இருந்தால் நல்லதென்று எண்ணிக்கொள்வார்கள் என்று நிட்சயமாக என்னால் சொல்ல முடியும். பெண்ணை முப்பது கிலோ சதையாக பார்க்கும் விவேகானந்தர் போன்ற பெரிய மணிதர்களுக்கு அந்த ஆசை இல்லாமல் இருந்திருக்கலாம். மற்றும்படி எல்லோருக்கும் அது உண்டு. பெண்களுக்கு அப்படியொரு ஆசை இருக்கிறதா? என்பது பற்றி என்னால் சொல்ல முடியாது. எனது அந்த நேரத்து தனிமையுணர்வை போக்குவதற்கு அந்த தலைப்பு தேவைப்பட்டிருக்கலாம்.
2
அதிலும் சில பக்கங்களைத்தான் படித்தேன். மணி பன்னிரெண்டாகிவிட்டிருந்தது. அப்போதும் மழை சாதுவாகத் தூறிக் கொண்டுதான் இருந்தது. என்னைப் போன்ற சாதாரண மணிதர்களுக்கு இது சாமம் ஆனால் போராளிகளுக்கு? சதா அடுத்தவர்களின் வாழ்வுக்காகவே தங்களை இழந்து கொண்டிருப்பவர்கள் தூங்க முடியுமா? அவர்களெல்லாம் தூங்கிவிட்டால் என்னைப் போன்ற சமாணியர்களின் நிலைமை என்னவாகும். சிறிது நேரம் சீமென்ட் தரையில் கண்களை இறுக மூடிக்கொண்டு படுத்துக்கொண்டிருந்தேன்.. தரையில் பட்டதும் மேனி சில்லிட்டது, அணிந்திருந்த டிசேர்ட்டையும் தாண்டி. பல்வேறு எண்ணச் சிதறல்கள் மனதில். கடந்த பத்து வருடங்கள் இப்படித்தான் இப்படியேதான் சமூகம், அரசியல் என்ற இரண்டு சொற்களுடாக கழிந்திருக்கிறது. காகிதங்களோடு கழிந்த இந்த வாழ்வில், புத்தகங்கள் நிரம்பியதைத்தவிர வேறு எதுவே நடந்தாகத் தெரியவில்லை. ஏதோவொரு மனித நடமாட்டமற்ற தீவொன்றில் விட்டப்பட்டது போன்ற உணர்வுதான் இப்போதெல்லாம் மனதை அரித்தெடுக்கின்றது. என்ன செய்வது இதற்குள்தானே! வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது என்று மனதைத் தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும். சமூகம் குறித்து பெரிய நம்பிக்கைகளோடு வருபவர்களுக்கெல்லாம் இதுதான் நிலைமையோ என்னவோ. இப்பொழுதுதான் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விளங்குகின்றது. புதுமைப்பித்தனது இறுதிக்காலம், மனநோயில் வாழ்ந்த தமிழ்ஒளி , வான்கோவின் தற்கொலை எல்லாவற்றிற்கான மூலமும் இங்குதான் இருக்கிறது. இங்கு மட்டுமேதான் இருக்கவும் முடியும். இருந்தும் மனித குலத்தின் மீட்சிக்காக சிந்திக்கும் மணிதர்கள் பயந்து ஓடிப் போய் விட்டார்களா என்ன? அவர்கள் இருக்கிறார்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் மட்டும்தானே இந்த உலக உருண்டை ஒரேயடியாக அநியாயத்தின் பக்கமாக சுற்றுவதை தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத சக்திகள்.
3
நேரத்தைப் பார்த்தேன் மணி ஒன்றை கடந்துவிட்டிருந்தது. அடுத்த அறையில் எனது தாயாரும் சகோதரியும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். நானும் இன்னும் சில நிமிடங்களில் நன்றாக தூங்கத்தான் போகிறேன். ஆனால் இந்த பின் இரவிலும் தூங்குவதற்கு இடமில்லாமல் மர நிழலிலும் ஆற்றங்கரைகளிலும் ஒதுங்கி எந்த நேரமும் எறிகணை வடிவில் வரப்போகும் மரணத்தை எதிர்பார்த்திருக்கும் அந்த உறவுகள் குறித்து நான் என்ன சொல்வது. அவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு ஏதேனும் வார்த்தைகள் இருக்கின்றனவா? அதுவும் என்னைப் போன்ற முதுகெலும்பற்ற மணிதர்கள் என்னதான் செய்ய முடியும். நானே கூனித்திரிகிறேன் இதில் எங்கு மற்றவர்களின் வாழ்வை நிமிர்த்துவது. ஏதோ அவ்வப்போது எழுதுவதன் மூலம் கொஞ்சம் குற்றவுணர்விலிருந்து விடுபட முடிகிறது.
இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும் போது படார் என்று புரடியில் ஒரு அடி விழுந்தது எங்கிருந்து அடி விழுந்தது என்று பார்க்க முடியாதளவிற்கு சில விநாடிகள் தலை கிறுகிவிட்டது. ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் கொண்டு திருப்பிப் பார்த்தால் நம்மட சாரு நிக்கிறார். என்ன அண்ணண் திடிரென்று சொல்லாம கொள்ளாமல் என்றேன். இங்கால ஒரு பிள்ளை உண்ணத சங்கீதம் சொல்லித்தரச் சொன்னதுப்பா, சொல்லிக் கொடுத்திட்டு வாறேன், என்ன கொஞ்சம் நேரம் எடுத்திச்சி, அப்பறம் உன்னையும் பார்த்துகிட்டு போவோமே என்று....’ பிள்ளைகளுக்கு மட்டும்தானா அண்ணன் சொல்லிக் கொடுக்கிறனிங்கள்? பெடியங்களுக்கு..... என்று இழுத்தேன் If have any request I can do but that is depend on my interest.
நூன் அடுத்து என்ன கதைக்கலாம் என்று யோசிக்கும் முன்னரே, என்ன நீ ரொம்ப அப்சட்டா இருக்கிறமாதிரி கிடக்கு என்னாப்பா பிரச்சனை? எல்லாம் சமகால அரசியல் பற்றித்தான். எதிலும் ஈடுபாடு காட்ட முடியாமல் இருக்கிறது அண்ணன். எண்ணடா மசிரு போலிட்டிக்ஸ் எந்தநேரமும் உளறிக்கிட்டிருக்கிங்க எவ்வளவு பிரச்னை இருக்கிறது நம்மளச் சுற்றி. அலிகளோட பிரச்சனை, ஹோமோ செக்ஸ், லெஸ்பியன், எத்தனையோ இளம் விதவைகள் துணையில்லாமல் இருக்கிறாங்க ஆனா நீங்க கொஞ்சப் பேர் எந்த நேரமும் அரசியல் அரசியல் என்று ஊழையிட்டுக் கொண்டிருக்கிறிங்க அதுவும் எனக்கு இந்த தமிழ்நாட்டு தேசியவாதிகள கொஞ்சம் கூட பிடிக்கிறதில்லை Always they talk about Tamil nationalism, stupid. nation is a imagine, man.. உன்னட்ட மேன் அப்பவே சொன்னனான் இல்லையா வந்து நம்மட postmodernist டீம்ல சேரச் சொல்லி, இப்ப ஒரு புளுபில்ம பாத்துகிட்டு கொஞ்சம் பீயரையும் போட்டுகிட்டு ஆத்தலா நித்திரை கொண்டா காலையில வேளைக்கே எழும்பி கொஞ்சம் நீட்சே படிக்கலாம். இப்படியெல்லாம் முடியுமா உங்கட தேசியவாதிகளிட்ட, மார்க்சியவாதிகளிட்ட. எந்நேரம் பாத்தாலும் மக்கள் மக்கள். றாழ ளை மக்கள் அயnஇ அது கொஞ்சம் அதிகாரத்துவ சக்திகள் கட்டமைத்திருக்கிற சொல்.
நான் என்ன பேசுவதென்று தெரியாமல் குழம்பிப்போன நிலையில், அண்ணே கொஞ்ச நாளாகவே உங்களிட்ட கேக்கவேணும் எண்டு நினைச்சனான். சந்தர்ப்பம் கிடைக்காமல் போயிட்டு. உங்கட பேர் கொஞ்சம் வித்தியாசமா இருக்கே உங்கள மாதிரியே. உங்கட சொந்தப் பேரா அண்ணே இது.
அதுப்பா சாரு மஜும்தார் தெரியுமா? அவருட பேரில்ல அரைவாசியையும் சாருநிவேதிதா தேவிட பேரில அரைவாசியையும் லிங் பண்ணினதுதான். நீங்க லிங் பண்ணிரதுல கிலாடிதான் அண்ணே. நீங்க சொன்ன மஜும்தார் அவரா? ‘வர்க்க எதிரியின் இரத்தத்தில் கைகளை நனைக்காதவன் ஒரு புரட்சியாளனே அல்ல’ அப்படியின்னு சொன்னவரா அண்ணே. ஆமாப்பா அவருதான். நான் உங்கள என்னவோ என்று நினைச்சன் அண்ணே, உங்களுக்கும் புரட்சியில் எல்லாம் ஈடுபாடு இருக்குது என்ன?. இருக்குத்தான் ஆனாப்பா அதக் கொஞ்சம் கட்டவிழ்க்க வேண்டியிருக்குது அப்பறமாத்தான் அது பற்றி நம்ப பேசலாம். எதையுமே உரியாம எங்கள மாதிரி போர்ஸ்ட் மொடனிஸ்ட்களால கதைக்க முடியாது.
‘1927 ஆம் ஆண்டு, இடம், சினாவின் ஹப்பு இராணுவக் கல்லூரி. புரட்சிகர எழுத்தாளர் லூசுன் செஞ்சேனையின் முன்னால் பேசிக் கொண்டிருக்கிறார் - நீங்களோ இலக்கியம் பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றீர்கள் நானோ உங்களது துப்பாக்கி வேட்டோசையை கேட்க விரும்புகின்றேன். புரட்சிக்கு புரட்சியாளர்கள் தேவையே தவிர எழுத்தாளர்கள் அல்ல’ - கம்பீரமாக ஒலிக்கின்றது வார்த்தைகள்.
இந்த மழைக்குள்ள ஏன்டா குளிரில படுக்கிறா ஏதும் விரிச்சிப்போட்டு படன், என்ற குரல் கேட்டு விழித்துப் பார்த்தேன், தளகணியோடு அம்மா. மணியை பார்த்துவிட்டு அப்படியே சீமென் தரையில் தூங்கிப் போய்விட்டேன் போலும். இந்த கொஞ்ச நேரத்தில் ஏதேதோவெல்லாம் உருண்டோடியது போன்று மங்கலான ஞாபகம் ஆனாலும் சரியாக ஒன்றும் விளங்கவில்லை.
- யதீந்திரா
No comments:
Post a Comment