Wednesday, 25 August 2010

எழுத்தாளரும் தொழிலதிபருமான – கல்லாறு சதீஸ்

 
ஈழத்தில், கிழக்கு மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது சுவிஸில் வாழ்ந்துவரும் திரு. கல்லாறு சதீஸ் அவர்கள் வித்தியாசமான சிந்தனையாளர்! தனது எழுத்துக்களின் பதிவுகளாக ‘பனிப்பாறைகளும் சுடுகின்றன” சொர்க்கங்களும் தண்டிக்கின்றன” ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கின்றார். இவைதவிர ஈழத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் வெளிவரும் பிரப‌ல்யமான பத்திரிகைகளிலெல்லாம் எழுதி வருகின்றார்.
சிறுகதைகள்தான் இவரை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது என்றாலும்! உருவகக் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என பல திசைகளிலும் இவரது பேனா பரந்து நிற்கின்றது. இது மாத்திரமல்ல நலிந்த எழுத்தாளர்களுக்கு உதவுவதிலும், தாயகத்து எழுத்தாளர்களை ஊக்குவிப்பதிலும்கூட தன்னால் இயன்றவரை பங்காற்றுகின்றார்!.
தான் பதினேழு வருடங்களாக பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து விருப்பு ஓய்வு பெற்றுவிட்டு இப்பொழுது ‘இலாபமையம்” என்னும் தொழில் நிறுவனத்தை தானே உருவாக்கி மக்களுக்கு சேவையாற்றி வருகின்றார்.
அந்த வகையிலின்று இலக்கியத்துறையில் இளம் வயதிலேயே பலதரப்பட்ட வாசகர்களாலும் உற்று நோக்கப்படும் படைப்பாளியான திரு.கல்லாறு சதீஸ் அவர்களை சந்திக்கின்றோம். பலருக்கும் தெரியாத அவரின் உட்பக்கத்தை இன்றைய நேர்காணல் மூலமாக அனைவரும் தெரிந்துகொள்ள முயற்சிப்பதே இந்த நேர்காணலின் நோக்கமாகும்.

கேள்வி : சதீஸ் அவர்களே தங்களின் எழுத்துப் பணிகளின் ஆரம்பம் பற்றி அறிய ஆசைப்படுகின்றோம்?
பதில் : எனது எழுத்துப் பணியின் ஆரம்பமென எடுத்துக்கொண்டால் அது இலங்கையிலேயே ஆரம்பிக்கப்பட்டது. ஒரு வேதனையான கீழ் நிலையில் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, முறிக்கப்பட்டு, கிடத்தப்பட்டிருந்ததை, அந்த வேளையிலே எனது உணர்வுகளை வெளியே சொல்வதற்கான ஒரு ஊடகமாகத்தான் நான் எழுத்துத்துறையைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் அதுதான் என்னை இன்று உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தி வைத்திருக்கின்றது.
கேள்வி : தங்களின் முதலாவது சிறுகதை எந்த ஆண்டு? எந்தப் பத்திரிகையில் பிரசுரமானது? பத்திரிகையில் உங்களது எழுத்துக்களைப் பார்த்தபோது உங்களது உணர்வுகள் எப்படி இருந்தது?
பதில் : எங்கிருந்து ஆரம்பமானது என்பதை முதலில் சொன்ன பதிலில் கூறியுள்ளேன்! அது 1987ம் ஆண்டு. எனது வேதனைகளையும், ஏமாற்றங்களையும், ‘ந‌வீன ஏமாற்றம்’ என்னும் தலைப்பில் சிறுகதையாக வடித்தேன். அந்தக கதை மித்திரன் வாரமலரில் வெளியானது. நான் எழுதியதை அச்சுருவில் பத்திரிகையில் வெளிவந்திருந்ததைப் பார்த்தபோது ஏற்பட்ட பரவசமும் அதைத் தொடர்ந்து வந்த விமர்சனங்களும் என்னை மேலும் எழுத‌த் தூண்டியது. காலம் ஒத்துளைத்தது தொடர்ந்து எழுதி வருகின்றேன்.
கேள்வி : தாங்கள் சிறுகதைக்காக எடுத்துக்கொள்ளப்படும் கருக்கள் பலரும் சிந்தித்திருக்காத வகையில் கையாளப்பட்டிருக்கின்றன! உதாரணத்திற்கு பனிப்பாறைகளும் சுடுகின்றன என்னும் கதையில் ஒரு தாய்க்கும் கல்லூரி ஆசிரியைக்குமான சம்பாசனையும் சொர்க்கங்களும் தண்டிக்கின்றன” என்னும் சிறுகதைத் தொகுப்பில் வரும் ‘மிச்சம்” என்ற சிறுகதையின் கரு! இப்படியாக அனேகமாக எல்லாக் கதைகளையும் குறிப்பிடலாம். இந்தக் கருக்கள் எல்லாம் உண்மைச் சம்பவங்களா? அல்லது உருவாக்கப்பட்ட‌னவா?
பதில் : இதில் பாதி உண்மையும் பாதி கற்பனையும் கலந்து, நிஜமும் ‍கற்பனையுமான கலவைகள்தான் அனேகமான கதைகள்! நான் எழுதுவதற்கு ஏற்கனவே ஆரம்பித்திருந்தாலும் ‘பனிப்பாறைகளும் சுடுகின்றன’ என்ற கதைதான் என்னை இலக்கிய உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய கதையாகும்.! தமிழ் இலக்கியப் படைப்பியல்த் துறையில் கண்டு கொள்ள முடியாத பல பிரச்சனையை! எங்கள் கலாச்சாரத்திற்கு மாறுபாடான அந்தக் கருத்தை! ஜரோப்பியர்களின் வாழ்வு முறையில் நடைமுறையில் இருக்கின்றது! அவை இரண்டையும் சந்திக்க வைத்து ஒரு தமிழ்த் தாய்க்கும் ஒரு வெள்ளைக்கார ஆசிரியைக்குமான உரையாடலாக உருவாக்கினேன்! கதையின் முற்பகுதியைப் படிக்கின்றபோது வாசகர்கள் சற்று அதிர்ச்சியடைகின்றார்கள்! சுற்றுலாவிற்குச் செல்லும் உங்கள் மகளிடம் கருத்தடை மாத்திரைகளைக் கொடுத்து அனுப்புங்கள்” என அந்தத் தாய்க்கு அந்த ஆசிரியை அறிவுறுத்துகின்றார்!. இந்தக் கருத்தை எங்கள் கலாச்சாரத்தை பண்பாட்டை மீறாமலும், அவர்களின் கருத்துக்களைச் சிதைக்காமலும், பக்குவமாகச் சொல்லியிருக்கின்றேன். நான் சொல்லிய விதத்தைப் படித்தவர் ‘இப்படியும் நடக்குமா? என என்னோடு பகிர்ந்துகொண்டார்கள். அதன் பின்னர் அது அனேகமான வாசகர்களால் தேடிப் படிக்கப்பட்டது! இது எனது எழுத்துப்பணிக்கு கிடைத்த வெற்றியாகவே நான் கருதுகின்றேன்.
கேள்வி : ஒரு எழுத்தாளனின் கற்பனை அவனையும் அறியாமல் எங்கோ நடந்த உண்மைச் சம்பவங்களாகக்கூட இருந்துவிடுவதுண்டு! அல்லது பின்னால் நடந்துவிடுவதுமுண்டு! அப்படியாக நீங்கள் கதைக்காக உருவாக்கிய பாத்திரங்களை எங்காவது சந்தித்திருக்கின்றீர்களா? அல்லது யாராவது இது என் வாழ்வில் நடந்த கதை என்று உங்களிற்குக் கூறியிருக்கின்றார்களா?

பதில் : இப்படியாக பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன! எனது கற்பனையில் எங்காவது ஒரு பொறி தட்டும் அதை நான் கதையாக உருவாக்கிவிடுவேன். பின்நாட்களில் என்னைச் சந்திக்கின்ற முன் பின் தெரியாதவர்கள் அப்படியான ஒரு சம்பவம் எனது வாழ்க்கையில் நடந்திருக்கின்றது அல்லது எனக்குத் தெரிந்தவர்களின் வாழ்க்கையில் நடிந்திருப்பாதாகக் கூறியிருக்கின்றார்கள் ‘மிச்சம்” என்ற கதையைப்பற்றிக் கேட்டிருந்தீர்கள் அந்தக் கதையின் கருவை உங்களுடைய சிறுகதை ஒன்றில் இருந்துதான் எடுத்தேன்! ஆனால் நீங்கள் கதை சொல்லிய பாணியை மட்டுமல்ல கதையின் முடிவைக்கூட எனது கற்பனைக்கு மாற்றினேன். நீங்கள் மிச்சமாவதை வீணடிக்கின்றார்கள் என முடித்திருந்தீர்கள். நானோ மிச்சமாவதை மிச்சம் பிடிக்கிறார்களென முடித்திருந்தேன்! இப்படியாக கதைக்காக எடுக்கும் கருக்கள் எங்காவது சிறு பொறியாகக் கிடைக்கும் பின்பு கதையாக்குவது எனது கற்பனையே!

கேள்வி : தங்களுடைய இரண்டு புத்தகங்களின் பெயர்கள்கூட ‘பனிப்பாறைகளும் சுடுகின்றன! “சொர்க்கங்களும் தண்டிக்கின்றன” ஒரே பாணியில் வித்தியாசமான முறையில் வைக்கப்பட்டிருக்கின்றதே? இது எப்படி?

பதில் : இதன் அடிப்படை என்னவென்றால் நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். என்பது போன்ற ஒரு தோற்றத்தை வெளியில் ஏற்படுத்திக்கொள்கின்றோம்! ஆனால் நாங்கள் அனுபவிக்கின்ற வாழ்க்கை அப்படியானதல்ல.அண்மையில் நீங்கள் வீரகேசரியில் எழுதிய ‘ஜரோப்பாவில் வாழ்ந்தாலும் நாங்களும் கடன்காரர்களே!” என்ற கட்டுரையைப் படித்தேன், அது எல்லோருக்கும் பொதுவானதுதான்! நாங்கள் பணம் கொட்டுகின்ற தேசத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் கூட எங்களுக்கும் பணப் பற்றாக்குறை இருக்கின்றது! எங்களால் எந்த நேரமும் சிரித்துக்கொண்டிருக்க முடியவில்லை! எங்கள் மனதிற்குள்ளும் ஏராளம் மனக் கவலைகள் இருக்கின்றன! அப்படியான மகிழ்ச்சிக்கும் துயரத்திற்குமிடையில் மாட்டிக்கொண்டிருப்பதை உணர்த்தும் விதமாகத்தான் ‘பனிப்பாறைகளும் சுடுகின்றன” சொர்க்கங்களும் தண்டிக்கின்றன” போன்ற தலைப்புகள் வைக்கப்பட்டன. எங்களின் இந்த வாழ்க்கை வெளியே சொர்க்கமாகப் பார்க்கப்பட்டாலும் நாங்கள் சில தண்டனைகளையும் அனுபவிக்கின்றோம் என்பதுதானே உண்மை!
கேள்வி : ஒரு படைப்பாளியின் முதல் நூலை அநேகமாக ஏனைய படைப்பாளிகள் அங்கீகரித்து விடுவதில்லை! அப்படி அங்கீகரித்தாலும் எழிதாகப் பாராட்டுவதில்லை! தங்களுடைய இரண்டு நூல்களுக்கும் தமிழ்நாட்டின் பிரபலமான கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வாழ்த்துரை வழங்கியிருக்கின்றார். அதுமாத்திரமல்ல சுனாமி நிதிக்காக தாங்கள் தயாரித்த குறும் தட்டு ஒன்றிற்கு பாடல்கள் முழுவதையும் இலவசமாக எழுதித் தந்திருந்ததுடன் அதன் வெளியீட்டு விழாவிற்கு சுவிஸிற்கும் வருகை தந்து சிறப்பித்திருக்கின்றார். அவருடைய அறிமுகம் பற்றிக் கூறமுடியுமா?

பதில் : புலம் பெயர்ந்து நான் சுவிஸிற்கு வந்த பின்பும் என்னால் வழமையைப்போல இயங்காமல் இருக்க முடியவில்லை! அந்த வகையில் 1990களின் ஆரம்பத்தில் குறும்படம் ஒன்றை உருவாக்க முயற்சி செய்தேன். அந்தப் படத்திற்கான பாடலை சினிமாப் பாடல்களைப் போல அமைக்க எண்ணி அது தொடர்பான ஆலோசனையைப் பெறுவதற்காகத்தான் நான் முதன் முதலில் 1992ல் கவிப்பேரரசு அவர்களுடன் தொடர்பு கொண்டேன். அந்தக் குறும்படத்தை என்னால் முழுமையாக தயாரித்து முடிக்க முடியவில்லை. அதற்காக நான் கவலைப்படவில்லை! காரணம். நான் எடுத்துக்கொண்ட ஒரு முயற்சியில் தோல்வியடைந்தாலும் ஒரு நல்ல நண்பரை தேடிக்கொண்டதில் வெற்றி அடைந்திருக்கின்றேன் என்னும் சந்தோசமே!
கேள்வி : நான் அறிந்த வரையில் கவிஞர் திரு. வைரமுத்து அவர்கள் பணத்தோடும் கவிதைகளோடும் மட்டுமே நட்பு வைத்துக் கொள்வார் என்றுதான் அநேகமானவர்கள் சொல்லியிருக்கின்றார்கள் உங்களுடைய பதில் நான் அறிந்தவற்றுக்கு மாறுபட்டதாக இருக்கின்றதே?
பதில் : கண்டிப்பாக! எல்லா மனிதர்களுக்கும் பணம் வேண்டும். பணத்தை உழைக்கின்ற வழியும் திறமையும் அவரிடம் இருக்கின்றது! தான் கற்ற தமிழின் ஊடாக அந்தப் பணத்தை உழைக்கின்ற வாய்ப்பு அவருக்கும் கிடைத்திருக்கின்றது! உழைக்கின்றார்! அதில் என்ன தவறு காணமுடியும்? ஆனால் அந்தப் பணத்தை அவர் எல்லா இடங்களிலும் பெற்றுக் கொள்வதில்லை. அவருடைய தமிழ் எனக்கு பல வகைகளில் பயன்பட்டிருக்கின்றது. அதற்காக என்னிடத்தில் அவர் ஒரு சதமேனும் பெற்றுக்கொண்டதில்லை! தனக்குக் கிடைத்த பல பரிசுகளைக்கூட எனக்குத் தந்திருக்கின்றார். அவர் என்னிடத்தில் மிகுந்த அன்போடும், நட்போடும், தனது உடன்பிறவா சகோதரன் எனச் சொல்லிக்கொள்கின்ற அழவிற்குப் பழகுகின்றார்! நான் இன்னுமொன்றை இங்கு கூறவேண்டும் அவர் எழுதிய ‘ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்” என்ற நூல் உருவாகுவதற்குக் காரணமே கல்லாறு சதீஸ்தான் என தனது மகன் கபிலனிடம் என்னைப்பற்றி உயர்வாக சொல்லியிருக்கின்றார்.
கேள்வி : தாங்கள் எழுதிய கதை ஒன்று ஜேர்மன் மொழியில் மொழிபெயர்க்கப் பட்டிருப்பதாகவும். சுவிசில் தாயாராகிக் கொண்டிருக்கும் சுவிஸ் மொழியிலான திரைப்படம் ஒன்றிற்கு தாங்கள் பாடல் எழுதியிருப்பதாகவும் அறிந்தேன். அதுபற்றிக் கூறுங்கள்.

பதில் : ஒவ்வொரு படைப்பாளிக்கும் இருக்கின்ற மிகப்பெரிய ஆசை தன்னுடைய படைப்பு ஒன்று பல்கலைக் கழகத்தில் ஒரு பாடமாக ஆக்கப்படமாட்டாதா? என்பதாகும். எனக்கும் அப்படியான ஆசை இருந்தது. என்ன ஆச்சரியம் பாருங்கள் ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் என்னுடைய கதை ஒன்று மாணவர்களுக்குரிய பாடத்திட்டத்தில் ஆய்விற்காகச் சேர்க்கப்பட்டிருக்கின்றது! அது புலம்பெயர் மாணவர்களுக்குரிய வெளிநாட்டுப் பாடத்திட்டத்தில் அடங்குகின்றது. அதைப் படிக்கின்ற மாணவர்கள் பலர் என்னோடு தொடர்பு கொள்கின்றார்கள்! என்னைச் சந்திக்கின்றார்கள்! என்னோடு நட்பைப் பேணிக்கொள்கின்றார்கள்! இது எனக்குப் பெருமையாக இருக்கின்றது.
கேள்வி : பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டப் புத்தகம் எப்படியானது? இணைக்கப்பட்ட உங்களின் அந்த கதையின் பெயர் என்ன? என்பதை நாம் அறியலாமா?

பதில் : முழுக்க முழுக்க இலங்கைத் தமிழர்களைப்பற்றி மட்டுமே எழுதப்பட்டு 500 பக்கங்களைக்கொண்ட அந்த நூலின் தலைப்பு ‘ஆலயங்களும் தமிழர்களும் அவர்களது தாயகமும்” என்பதாகும். இதில் ஜேர்மன், சுவீஸ் பேராசிரியர்கள் இலங்கைத் தமிழர்களைப்பற்றி மட்டுமே எழுதியிருக்கின்றார்கள். அந்தப் புத்தகத்தில் என்னுடைய சொர்க்கங்களும் தண்டிக்கின்றன!” என்னும் நூலில் வரும் ‘எதிரி யார்?” என்னும் சிறுகதையே பதிவாகி இருக்கின்றது.இப்படியான தொடர்புகளே சுவிஸில் திரைப்படம் எடுப்பவர்களில் சிலரை என்னை நாடிவர வைத்தது. அவர்கள் தயாரிக்கவிருக்கும் ஒரு திரைப்படத்திற்கான பாடல்களை எழுதியிருக்கின்றேன். படம் எப்பொழுது திரைக்கு வரும் என்பது தெரியாது. ஆனால் பாடல் எழுதியதற்கான ஊதியத்தைத் தந்துவிட்டார்கள்.
கேள்வி : தங்களது இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் இரண்டு பதிப்புகள் பதிப்பிக்கப் பட்டிருக்கின்றன! இது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றதா?
பதில் : இரண்டு பதிப்புக்கள் மட்டுமல்ல. மிக அதிகமான எண்ணிக்கையில் பதிவானதென்றும் அதன் பிதிப்பாசிரியர் நண்பர் ரவி-தமிழ்வாணன் அவர்கள் அநேகமான செவ்விகளிலெல்லாம் சொல்லியிருக்கின்றார்.
கேள்வி : தங்களுடைய முதல் சிறுகதைத் தொகுதியான ‘பனிப்பாறைகளும் சுடுகின்றன” என்னும் நூலுக்கு தமிழ்நாடு ‘லில்லி தேவசிகாமணி” நினைவான இலக்கியப்பரிசு கிடைத்திருக்கின்றது. அதற்கான பரிசுத்தொகையை தமிழ்நாட்டின் ஒரு நலிந்த எழுத்தாளருக்கே நன்கொடையாக வழங்கியிருந்தீர்கள்! அவரை எப்படி அறிந்திருந்தீர்கள்? அவ‌ரது எழுத்துக்கள் மூலமாகவா? அல்லது நேர்முக அறிமுகமா?
பதில் : பரிசு கிடைத்ததும் அந்தப் பணத்தை சுவிஸ் நாட்டுக்கு வரவைப்தா? அல்லது தமிழ்நாட்டிலேயே ஏதாவது நல்ல காரியங்களுக்குப் பயன் படுத்துவதா? எனச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, படுதலம் சுகுமாரன் என்னும் நலிந்த படைப்பாளி ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார் என்பதனை பத்திரிகைகள் மூலமாகத்தான் அறிந்தேன். அவர் கறுப்பா? சிவப்பா? என்பதுகூட எனக்குத் தெரியாது! உடனேயே என்னுடைய பரிசுப்பணத்தை படுதலம் சுகுமாரன் அவர்களுக்கு அனுப்பிவைக்கும்படி பரிசு வழங்கிய அறக்கட்டளையினருக்கு கடிதம் எழுதியதோடு நில்லாது மேலும் நானும் எனது நண்பர்களுமாக கொஞ்சப் பணத்தைச் சேகரித்து அவருக்கு அனுப்பிவைத்தோம். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் உயிர் பிழைக்கவே மாட்டார் என வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்ட சுகுமாரன் பிழைத்துவிட்டார். பின்பு நான் அவருடன் தொலைபேசியில் மட்டுமே உரையாடியிருக்கின்றேன்.
கேள்வி : ச்தீஸ் ஈழத்து எழுத்தாளர்களில் தங்களுக்கு பிடித்தமான ஏழத்தாளர் யார்? ஏன்?
ப‌தில் : நான் ஆரம்பத்திலேயே கூறியிருக்கின்றேன். நான் இருந்த இடம் பற்றி! அங்கு இருந்த காலத்தில் செ.கணேசலிங்கனின் பல நூல்களைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மகனுக்குத் தந்தை எழுதுவது போல நம்பிக்கை ஊட்டும் விதமாக அவர் எழுதிய ‘குமரனுக்குக் கடிதங்கள்” போன்ற பல நூல்களுடன் செ.யோகநாதன் போன்றவர்களுடைய நூல்களையெல்லாம் படித்ததில் அவர்களுடைய எழுத்தின்மீது எனக்கு ஒரு காதல் ஏற்பட்டது என்றுகூடச் சொல்ல‌லாம்! இப்படியாக இன்னும் சிலரைக் குறிப்பிட முடியும்.
கேள்வி : தாங்கள் தற்பொழுது தனியாக ஒரு தொழில் நிறுவனத்தை ஆரம்பித்திருக்கின்றீர்கள்! அது பற்றிக் கூறமுடியுமா?
பதில் : இலக்கியத்துறைதான் என்னை இந்த தொழில்த் துறைக்கும் தள்ளிவிட்டிருக்கின்றது என்று கூடச் சொல்ல‌லாம்! ஒரு முறை கவிப்பேரரசு அவர்கள் என்னுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது அன்போடு கேட்டார் சதீஸ் நீங்கள் மாதம் எவ்வளவு சம்பாதிக்கின்றீர்கள்? என்று நான் எனது சம்பளத்தைச் சொன்னேன். இவ்வளவுதானா? என திரும்பக்கேட்டார். இங்கு இதுவே ரொம்ப அதிகம் என்றேன். அவர் சொன்னார் சதீஸ் நீங்கள் இன்னும் உழைக்க வேண்டும். நீங்கள் வாழ்கின்ற நாடு இலங்கையோ, இந்தியாவோ, சோமாலியாவோ அல்ல? சுவிற்சிலாந்தில் வாழ்கின்றீர்கள்! இது பணத்தைச் சொரிகின்ற நாடு. நீங்கள் இன்னும் உழைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். எனக்கூறி நான் முயற்சிக்காமல் இருப்பதற்கான சில காரணங்களையும் விளக்கினார். அவர் கூறியது எனக்குச் சரியாகப் பட்டது. அந்த நேரத்தில் எனக்கு சுவிஸ் நாட்டின் குடியுரிமையும் கிடைத்ததால் நான் மேலும் படிப்பதற்கான வசதியை ஏற்படுத்தித் தந்தது. இத்தோடு அவர் எனக்கு எழுதிய ஒரு கடிதத்தில் சதீஸ் ‘தர்ம வழியில் பொருள் ஈட்டுங்கள்’ என அடிக்கோடிட்டு எழுதியிருந்தார். அந்த நேரத்தில் எனது சிந்தனையில் உருவாகியதுதான் இப்பொழுது நான் ஆரம்பித்திருக்கும் இந்த‌ ‘இலாப மையம்” என்னும் தொழில் நிறுவனம்.
கேள்வி : இந்தத் தொழில் தாங்கள் எதிர்பார்த்தபடி போதிய வருவாயைத் தருகின்றதா? மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகின்றதா?

பதில் : எனது நிறுவனம் என்பதனால் நேரத்தைப் பார்க்காமல் உழைக்கவேண்டி இருக்கின்றது. அதற்கேற்ப போதிய வருவாயும் கிடைக்கின்றது. எனது வருவாயைவிட மனதிற்கு மிகுந்த சந்தோசத்தைக் கொடுக்கின்றது. காரணம், மொழிப் பிரச்சனை காரணமாக அரசாங்கத்திற்கு வரியாகவும், வட்டியாகவும் மிக அதிகமான பணத்தை எமது மக்கள் செலுத்துகின்றார்கள். எனது இலாப மையத்தின் சேவை அவர்களை வருடத்திற்கு ஆயிரக்கணக்கான சுவீஸ் பிராங்குகளை மிச்சப்படுத்த வைக்கின்றது. இப்படியாக பல வழிகளிலும் மக்களுக்கு சேவை புரிகின்ற மையமாக இருப்பதனால் அவர்களும் மகிழ்ச்சியடைகின்றார்கள் நானும் மகிழ்ச்சியடைகின்றேன்.
கேள்வி : தங்களுடைய‌ தொழில், இலக்கியப் பணிகளுக்கு தடையாக இருப்பதுண்டா? அல்லது இலக்கியப் பணி தொழிலுக்குத் தடையாக இருப்பதுண்டா? எதில் மன நிறைவு அடைகின்றீர்கள்?

பதில் : இல்லை இரண்டிற்கும் நான் தனித்தனியான நேரங்களை ஒதுக்கிக் கொள்கின்றேன். சில சமயங்களில் முக்கியம் கருதி வேலையை தள்ளிவைப்பதும் உண்டு. இருந்தாலும் வேலைகள் தடைப்பட்டதில்லை. இரண்டும் எனது இரண்டு கண்களைப் போன்றது.
கேள்வி : இலக்கியப் பணியில் தங்களது அடுத்த கட்டம்?

பதில் : ஒரு நாவல் ஒன்றை உருவாக்குவதற்கான ஆரம்ப வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றேன். அடுத்த வருடம் அதை எதிர்பார்க்கலாம்!
கேள்வி : தங்களது குடும்பம் பற்றி?

பதில் : எனது துணைவியார் அவர்கள் இங்கு ஜேர்மன், சுவிஸ் ஆகிய இரு மொழிகளையும் கற்று மொழிபெயர்ப்புச் சேவை செய்வதற்குரிய சான்றிதழ்களைப் பெற்றிருக்கின்றார். தனது படிப்பை மக்களுக்கு பயன்பெற வைக்கவேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம். தற்சமையம் நாங்கள் ஆரம்பித்திருக்கும் தொழில் மையத்திற்கு நிர்வாக இயக்குந‌ராக இருக்கின்றார். எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள்.
நல்லது சதீஸ் அவர்களே தங்களது நேரத்தையும், சிரமத்தையும் பொருட்படுத்தாது, பொறுமையாக எங்கள‌து கேள்விகளுக்குப்  பதிலளித்ததற்கு தமிழ்விசை சார்பாக எம‌து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்

No comments:

Post a Comment