புனைவுகள் மெல்ல எழத் தொடங்கிவிட்டன.
நட்சத்திரங்களின் எரிப்பில்
பிணம் அவியுமென்ற
காலங்கடந்த நூற்றாண்டுப் பேச்சு
இன்று
கடிவாளம் பூட்டிக்கொண்டு
புதுக்குதிரையில் வந்துள்ளது.
நான்
புரவிகளின் புழுதியுடன் வாழ்ந்தவன்.
குளம்பொலிகளின்
பேரோசையில் கண்ணயர்ந்தவன்.
சாவின் பிளிறலில் கைகோர்த்தவன்.
எந்தப் புனைவிலும்
நான் வாழ்வேன்.
நீ என்ன செய்வாய்?
புனைவுகளைப் பெருக்கிக்கொண்டு
காலத்தின் கோடுகளை மட்டுமே
அழிக்க முடியும்.
அல்லது
கடலின்மீது நடந்து
கதையளப்பாய்- பின்
நீ வென்றதாய் புகழ் பாடுவாய்-
இதுதான் நீ கற்றது.
நாம் நாமாகவே இருக்கின்றோம்.
இன்னும் விட்டுப்போகாத
நம்பிக்கையுடன்
காத்துக்கொண்டு....
உங்கள் புனைவுகள்
எம்மை ஏதும் பண்ணா.
எந்தப் புனைவிலும்
நான் வாழ்வேன்.
காலம் எம்பக்கமும் வீசும்
புனைவுகளை நாமும்
உற்பவிப்போம்.
நீ?....
சிறகுகளை வளர்த்தெடுத்து
எந்தக் கடல் தாண்டுவாய்
சொல்.
சொல்.
இன்று
சிறகுகள் தொலையும் காலத்தில்
நான் எரிநெருப்பில் வளர்கிறேன்.
நான்
நான்
பிடுங்கப்பட்ட சிறகுகளுடன் வாழ்வேன்
நீ என்ன செய்வாய்?
நான் நெருப்பு
சாவின் முடிச்சுகள்
இறுக்கப்பட்ட வியூகத்திற்குள்
மெல்ல நகர்கின்றன.
ஆயிரம் கோட்டைகளைத் தகர்த்து
இரத்த ஆற்றில் பாய்ந்தவனுக்கு
இந்தச் சின்னஞ்சிறு குட்டை
பெரும் இமயமா?
ஒரு நொடிப்பொழுதிலே
தகனப் பொறியாகும்
ஒரு வெறுமைக்கு
நீங்கள் இத்தனை காலம்
ஆனது
வெட்கம்.
நான் அசைக்க முடியாத
பெரும் முடி.
ஆயிரமாயிரம் சேனைகளை வைத்துக்கொண்டு
...................................................................
“ச்சா(ய்)”
ஒருநொடிப்பொழுதில்
வீழ்த்துவதை விட்டுவிட்டு
இத்தனை காலம் ஆனது ஏன்?
நான் பெருவெளி.
எனக்குத் தெரியும்
ஒன்றுமேயில்லாத வெறுமையை
நீங்கள் இத்தனை காலமும்.......
நான் பெரும் முடி.
ஏதுவாகவும் தோன்ற முடியும்.
“சொல்வதைக் கேளுங்கள்”
ஒன்றுக்குள்ளேதான் வாழ்வு.
எனக்குத் தெரியும்
எதைஎதை எப்படி......
நான் நெருப்பு.
நான் காற்று.
கனக்கும் கணத்தில் தெரிகின்ற உனது மொழி
சொரியலாய் இரைகிறது-
"ஆள் இரை”.
எல்லாம் கடந்து
வெறுமையின் மனத்தை
உசுப்ப முடியாது
மண்டியிட்டு நிற்கின்றான் போர்வீரன்.
தூசு படர்ந்த இராச்சியத்தின்
படர்ந்துகிடந்த சிறுகொடியாய்
ஒவ்வொரு கணத்தையும்
வெற்றிகொண்டு
குளிர்விறைப்பில்
ஆவி பறந்து
விறைப்பற்றுக் கிடந்த உடலுக்கு
சொரியலாய் இரைகின்ற "ஆள் இரை”
ஒருபொருட்டா?
எங்கும் கடந்து
எதிலும் படர்ந்து
எனக்குத் தெரியும் உனது மொழி.
எனது மொழி
உனக்குப் புரியா.
நான் வாழ்வின்
கூர்விளிம்பில்
நடப்பவன்.
நீ.....
பாசி படர்ந்த
பாறைகளின் பின் ஒழிப்பவன்.
எனக்குத் தெரியும்
உனது மொழி
No comments:
Post a Comment