Friday, 13 August 2010

சுவாமி விபுலானந்தர்

தோன்றிற் புகழொடு தோன்றுக” என்ற வள்ளுவ வாக்குக்கு இலக்கணம் அமைக்கவென அவதரித்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் ஈழத்திரு நாட்டின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த காரைதீவு எனும் கிராமத்தில் 1892ம் ஆண்டு அவதரித்த போது இந்த பிஞ்சுச் சூரியன் எதிர்காலத்தில் உலகம் போற்றும் பேரறிஞனாக முத்தமிழ் வித்தகனாக உலகின் முதல் தமிழ்த்துறை பேராசிரியராக விளங்கப்போகிறார் என சோதிடம் எழுத எந்த சோதிடனுக்கும் தெரியாமல் போய்விட்டது. அகத்தியம் தந்த அகத்தியன், கம்பன், வள்ளுன், இளங்கோ, பாரதி எனும் செம்மை சான்ற புலவர்கள் போல் அடிகளாரும் எதிரகாலத்தில் திகழவிருக்கிறார் என எவருக்குமே புலப்படாமல் போனது ஆச்சர்யமான விடயமே!
மதுரை தமிழச் சங்கப் பலகையில் சரியாசனமிட்டு ஈழத்துப் பூதந் தேவனாரும் அன்று தமிழக் கவதை படைத்தாராம். அதன் பின்னர் தற்கால் வளர்ச்சிக்கு ஏற்ப பல்கலைக்கழகங்கள் தோன்றி, அங்கு தமிழுக்கு முதலிடம் வழங்கப்பட்ட போது அத்தகைய நேரத்திலும் ஈழத்து விபுலானந்தர் இந்தியப் பெரியார்களுடன் சரியாசனமல்ல முதலாசனமே பெற்றார். தமிழ் நாட்டிலேயே முதல் முதல் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைக்கென தனியானதொரு பிரிவு அமைக்கப்பட்டு அதற்கு பொறுப்பாக ஒரு தமிழ்த்துறை பேராசிரியரை தமிழ் கூறும் நல்லுலகம் தயாரான போது அதற்கு தகுதியானவராக ஈழத்து விபுலானந்தரே முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் சங்கப் பலகையில் சரியாசனம் பெற்ற ஈழத்து பூதஞ்சேந்தனாரையும் விட பல்கலைக்கழகத்தில் முதலாசனம் பெற்ற அடிகளார் ஒருபடி மிஞசி விட்டார் என்றால் அது மிகையாகாது. எனவே தோன்றிற் புகழொடு தோன்றுக என்ற வள்ளுவர் வாக்குக்கு இலக்கணம் வகுத்தவர் எனலாம்.
சுவாமி விபுலானந்தர் உலகத்திலேயே முதலாவது தமிழ்த்துறை பேராசிரியர் எனும் உன்னத ஸ்தானத்தை அடைந்துள்ளார் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ள படித்தவர்கள் கூட இன்று தயங்குகின்றார்கள். 1931ம் ஆண்டு சிதம்பரத்து அண்ணாமலைச் செட்டியாரின் வேண்டுகோளின்படி சுவாமி விபுலானந்தர் தமிழ்த் துறைப் பேராசிரியர் எனும் பதவியை ஏற்ற போது இந்தியாவின் எந்த பாகத்திலும் எந்த பல்கலைக்கழகத்திலும் தமிழ்த்துறைக்கென தனியானதொரு பிரிவோ, தனியானதொரு பேராசிரியர் பதவியோ இருக்கவில்லை. எனவே இந்தியாவில் முதல் தமிழ்த்துறைப் பேராசிரியர் எனும் தகமையை பெற்றதால் உலகத்திலேயே முதலாவது தமிழ்த்துறைப் பேராசிரியர் எனும் தகமையையும் கூடவே அடிகளார் பெறுகின்றார் என்பதில் சிறிதளவில் ஐயமில்லை.
1927ம் இராமநாதபுரத்து அரசரது தலைமையில் மதுரையிலே ஒரு விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதனது நோக்கம் சிதம்பரத்தில் ஓர் பல்கலைக்கழகம் வேண்டுமா? என்பதை ஆராய்ந்து ஓர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதே. அக் குழுவின் முன் மதுரையில் ஓர் பல்கலைக்கழகம் வேண்டும் என்ற கருத்தை வென்றெடுக்க ஒருவரை நியமிக்கவென சென்னை பல்கலைக்கழகம் நினைத்தபோது இந்தியாவிலே எத்தனையோ தமிழறிஞர்கள், வல்லுனர்கள், விரிவுரையாளர்கள் இருந்த போதும் அவர்களை விட்டுவிட்டு முதல் தமிழ்த்துறை பண்டிதரான சுவாமி விபுலானந்தரையே சென்னை பல்கலைக்கழகம் தேரந்தெடுத்து அழைத்தது. இதுவே அடிகளாரின் மேன்மையையும், கல்விச் சிறப்பையும் துலாம்பரமாக எடுத்துக்காட்டுகின்றது. இக் குழுவின் முன் முதன் முதலாக சாட்சியமளித்த பெருமையும் எமது அடிகளாரையே சாரும். அது மட்டுமன்றி, இக்குழு சிதம்பரத்தில் ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென தனது விசாரணையின் முடிவில் வேண்டுகோள் விடுப்பதற்கு அடிகளாரின் பரிந்துரைப்பும் அவர் காட்டிய ஆதாரங்களுமே கணிசமான பங்கைச் செலுத்தின என்பதற்கு ஆதாரமாக அப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் பதவியை அடிகளாருக்கே வழங்கியதன் மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆரம்பிப்பதற்கு ஆணிவேராக இருந்த சேர். அண்ணாமலைச் செட்டியார் அப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்த்துறைப் பேராசிரியர் பதவியை ஏற்கும்படி சுவாமி விபுலானந்த அடிகளாரையே கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளுக்கிணங்க ஈழத்து விபுலானந்தரும் 1931ம் ஆண்டு ஆடி மாதத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியர் எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதவியை ஏற்று கிழக்கிலங்கை காரைதீவை உலக வரலாற்றுடன் இணைத்தது மட்டுமன்றி தமிழ் இலக்கிய வரலாற்றிலும் முதல் தமிழ்ப் பேராசிரியர் என்ற பெருமைமிக்க அந்தஸ்த்தை பெற்றுக்கொண்டார்.
இந்தியாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகந்தான் முதன் முதல் தமிழ்த்துறைக்கென தனியானதொரு பிரிவை உருவாக்கி அதற்கென தனியானதொரு தமிழ்ப் பேராசிரியரையும் நியமித்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அடிகளார் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ்த்துறை பேராசிரியர் எனும் பதவியை ஏற்கும் போது சென்னை பல்கலைக்கழகத்தில் கூட தமிழிற்கு தனயான பிரிவோ, தனியான பேராசிரியரோ கிடையாது. எனவே அடிகளார் இப் பெருமைமிக்க பதவியை ஏற்கும் போது இவருக்குச் சமமாக எவருமே இத்தகையதொரு பேராசிரியர் பதவியை இந்தியாவில் எந்த பல்கலைக்கழகத்திலும் வகிக்கவில்லை. எனவே எமது அடிகளாரே உலகின் முதலாவது தமிழ்த்துறைப் பேராசிரியர் எனும் பதவியை வகித்து தமிழ்த்துறைக்கும், ஈழத்திற்கும் பெருமை தேடித்தந்தார் எனலாம்.
அடிகளார் வாழ்ந்த காலத்திலும் அதற்கு முன்னரும் ஏராளமான தமிழறிஞர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அடிகளார் ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியர் எனும் பதவியை முறைப்படி ஏற்ற போது இவருக்குச் சமமாக தமிழ்த்துறைப் பேராசிரியர் எனும் பதவியை எவரும் எந்த பல்கலைக்கழகத்திலும் அந்தக் காலத்தில் ஏற்றிருக்கவில்லை என்பதே முக்கியமான உண்மையாகும். இவர் காலத்தல் வாழ்ந்த ரா. பி. சேதுப்பிள்ளை சுவாமி விபுலானந்தரின் கீழ் உதவி விரிவுரையாளராக கடமையாற்றினார். சோமசுந்தர பாரதியார், அடிகளாரின் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானவர். தே. பொ. மீனாட்சி சுந்தரனார் 1944ம் ஆண்டிலேயே அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியரானவர். இராகவையங்கார் 1944ம் ஆண்டிலேயே திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்து தமிழ்த்துறைப் பேராசிரியரானவர். ச. வையாபுரிப்பிள்ளை 1951ம் திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்து தமிழ்த்துறைப் பேராசிரியரானவர். டாக்டார். ராசமாணிக்கனார் மதுரை தியாகராஜக் கல்லூரியிலேயே தமிழ்த்துறை தலைவராக இருந்தார்.
எனவே அடிகளாரின் காலத்தில் வாழ்ந்த எவரும் 1931ம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அடிகளார் தமிழ்த்துறைப் பேராசிரியர் பதவியைப் பெற்றபோது அதைப் போன்ற ஒரு பதவியை பெற்றிருக்கவில்லை. சுவாமி விபுலானந்தர். தமிழ்ப் பேராசிரியர் பதவியை வகித்த பின்னரே இந்தியாவிலே ஏனைய அறிஞர்கள் அப்பதவியை பல்லைக்கழகங்களில் பெற்றார்கள். எனவே தமிழ் கூறும் நல்லுலகம் தமிழ்ப் பேராசிரியர் ஒருவரை பல்கலைக்கழகத்தில் நியமிக்க முனைந்த பொழுது இந்தியாவில் பரந்து கிடந்த எத்தனையோ தமிழ் அறிஞர்களை விட்டுவிட்டு ஈழத்து விபுலானந்தரையே தேர்ந்தெடுத்தார்கள் என்றால் எமது அடிகளாரின் பெருமை உலகளாவியது என்பதில் எவருக்கும் அபிப்பிராயபேதம் இருக்க முடியாது.
எனவே எமது ஈழத்து சுவாமி விபுலானந்தரே உலகில் முதல் தமிழ்த்துறை பேராசிரியர் என்பதில் எள்ளளவேனும் ஐயமில்லை

No comments:

Post a Comment