Friday, 13 August 2010

திருகோணமலை

திருகோணமலை சிவபூமி, தென்கைலை என அழைக்கப்படுவது.ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றாக கோணேஸ்வரம் அந்நாட்டில் அமைந்துள்ளது. 'கத்தோலிக்கருக்கு எப்படி ரோம் உள்ளதோ அப்படி மிலேச்சருக்கு திருக்கோணேஸ்வரம் ' என போர்துகேசிய இராணுவ ஜெனரல் கூறியது பதிவு செயப்பட்டுள்ளது. (இங்கே 'மிலேச்சர்' என்பது கத்தோலிக்கர் அல்லாத இந்துக்களை குறிப்பிடுவது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்).
திருஞானசம்பந்தரால் கோயிலும் சுணையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலையமர்ந்தாரே' என்றும் 'குடிதனைப்ப்பெருக்கி நெருக்கமாய்த்தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே' என்றும் பாடல் பெற்ற ஸ்தலம். அருணகிரி நாதர் பாடிய ஸ்தலம். அஹஸ்தியர் ஸ்தாபனம் அமைந்த மாவட்டம். உலகத்திலேயே பெயர் பெற்ற இயற்கை துறைமுகம் அமைந்த இடம். தமிழர் தாயகத்தின் தலை நகர் என்று கொள்ளப்பட்ட இடம். இராவணன் ஆண்ட இடம் என்று கூறப்படும் நிலம்.

மேலும் சோழர் ஆதிக்கம் ஈழத்தில் கி.பி.10,11ஆம் நூற்றாண்டில் திகழ்ந்தபோது திருகோணமலையில்
அவர்களின் செல்வாக்கு விரவிக் காணப்பட்டது. பராந்தக சோழன், 'மதுரையும் ஈழமும் கொண்ட சோழன்' என்ற விருதைப் பெற்றிருக்கிறான். (Nilakanda Sastri, Epigrophia Indica,1955. Vol 1,No.1,pp 19-24). தற்போதைய கந்தளாயில் உள்ள தமிழ் குடியிருப்பு, 'சதுர்வேதி மங்கலம்' என அழைக்கப்பட்டது. அங்குள்ள சிவன் கோவிலில் இப்பொழுதும் சோழரின் பிரதிநிதி, இலங்கேஸ்வர சோழனின் கல்வெட்டு உள்ளது. (குணசிங்கம்.செ,கோணேசுவரம்..பேராதனைப் பல்கலைக்கழகம்,1972)
தமிழர்களின் தேசிய அடையாளங்களான சைவ சமயமும், தமிழ் மொழியும், தமிழ் கலை கலாச்சாரமும் திருகோணமலையில் கோலோச்சியிருந்திருக்கின்றன.
அந்தவகையில் திருகோணமலையில் பல புலவர்களும், தமிழ் அறிஞர்களும், கலைஞர்களும் தமிழ் மொழியையும்,தமிழ் கலைகளையும் பேணி வளர்த்திருக்கிறார்கள். வித்துவான் க.தம்பையாபிள்ளை, சட்டம்பி தம்பையர் சரவணமுத்துக் குருக்கள், கதிர்காமத்தம்பிப்புலவர், தி.த.கனகசுந்தரம்பிள்ளை, தி.த.சரவணமுத்துப்பிள்ளை, புலவர் வே. அகிலேசபிள்ளை, ஆறுமுகம், பூர்ணானந்தேஸ்வரக்குருக்கள், மாசிலாமணி, முத்துக்குமாரபிள்ளை, பீதாம்பரனார், சரவணமுத்துப்பண்டிதர், பெ.பொ.சிவசேகரனார், கலாநிதி,புலவர் சத்தியமூர்த்தி,தா,சி.வில்வராசா(திருகோணமலை கவிராயர்), தர்மு சிவராம்(பிரேமிள்), சித்தி அமரசிங்கம் (வெளியீட்டாளர்), மேலும் ஈழத்தில் தமிழின் முதலாவது நாவல் என பல காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த,'ஊசோன் பாலந்தை கதை' எழுதிய கிறித்துவப் பெரியார், மூதூர் வ.அ. இராசரத்தினம், தமிழ் காவியங்கள் படைத்த மூதூர் முஸ்லிம் புலவர்கள், கிண்ணியா கவிஞர் அண்ணல், அண்மையில் மறைந்த பண்டிதர், சைவப்புலவர் இ.வடிவேல் என்போர் இதில் அடங்குவர்.விரிவு கருதி நாடகத்துறையில் தடம் பதித்த பலரையும் நான் குறிப்பிடவில்லை. இன்னும் பலரும் விடு பட்டிருக்கலாம். பொறுத்தருளல் வேண்டும்.
இவர்களுள் தி.த.கனகசுந்தரம்பிள்ளை,அவர்தம் இளவல் தி.த.சரவணமுத்துப்பிள்ளை.('மோகனாங்கி' வரலாற்று நூல் ஆசிரியர்), தர்மு சிவராமு (பிரேமிள்)-தமிழில் புதுக்கவிதை பிதாமகர்களில் ஒருவர்,ஆனால் மரபுக் கவிதையிலும் ஆற்றல் மிக்கவர்- தமிழ் நாட்டிலும் பெரும் புகழ் மிக்கோர். இந்த வரிசையில் முதலாவதாக நாம் ,
'என்றும் எழிலுடன் எங்கள் தமிழன்னை
நின்று நிலவ நிறை தமிழில் -ஒன்றுதிருக்
கோணமலை கனக சுந்தரம் மாண்பணியை
ஏணாகக் கொள்வோம் எடுத்து'
என்று நா.சிவபாதசுந்தரனார் பாடிப்போற்றிய தி.த.கனகசுந்தரம்பிள்ளை அவர்களைப்பற்றி முதலில் பார்ப்போம்.

_ திருகோணமலை காசிநாதர் சிவபாலன்(முதுகலைமாணி/சர்வதேச உறவுகள்,சட்டவாளர்

1 comment:

  1. anbudaiyeer ungal mukavari enna? Ennaipattiyum eluthi iruntheerkal.Mikka makilchiyai Irunthathu.Nantri, thanai Eluthiyavar yaro?

    enathu email ID: sivakumaran.ks@gmail.com

    anban

    K s Sivakumaran 2587617

    ReplyDelete