Friday, 13 August 2010

கொம்புமுறி விளையாட்டு

தமிழருகே  தனித்துவமான கலை, கலாசார, பாரம்பரியங்கள் இருக்கின்றன. அவை இன்று மறைந்து வருகின்றன. அன்று நடைபெற்ற பல விடயங்களை நமது முன்னோர்கள் சொல்லியே நாம் அறியவேண்டி இருக்கின்றது.



எமது பாரம்பரிய கலைகளை நாம் கட்டிக்காக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். பல விடயங்களை நாம் எமது முன்னோர்கள் சொல்லியே அறியவேண்டி இருக்கின்றது. எமது எமது எதிர்கால சந்ததியினர் எமது பாரம்பரிய கலை, கலாசாரங்களை எதிர்காலத்தில் தெரியாமல் இருப்பதற்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

தமிழருக்கே தனித்துவமான ஒரு விளையாட்டாக கொம்புமுறி விளையாட்டு விளங்குகின்றது. கொம்புமுறி விளையாட்டுக்கு பிரசித்தி பெற்ற இடமும் எனது கிராமம் களுதாவளை. கொப்புமுறி விளையாட்டு இடம் பெற்ற  இடம் கொம்புச்சந்தி என்று இப்போதும் எல்லோராலும் பயன்படுத்தப் படுகின்றது ஆனால் இங்கே இருக்கின்ற பலருக்கு கொம்புமுறி விளையாட்டு என்றால் என்ன என்று தெரியாது.

கொம்புமுறி விளையாட்டு தொடர்பாக நான் முன்னர் மேலோட்டமாக ஒரு இடுகை இட்டிருந்தேன்.  இந்த பதிவின் மூலம் கொம்புமுறி விளையாட்டு பற்றியும் எமது கிராமத்திலே எவ்வாறு கொம்புமுறி விளையாட்டு இடம் பெற்றது என்ற பல சுவாரஷ்யமான விடயங்களை வரலாற்று தகவல்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன்.

கண்ணகை மாநாய்கரின்  வளர்ப்பு மகள். மாசாத்துவரின் மருமகள். கோவலன் மனைவி. செட்டி குலத்திலே வளர்ந்த செட்டிச்சி அம்மை. மாவின் கனியாக வந்த மாறன் விழி மாற வழி செய்தவள்.  மாதவிக்குப் போன்தோற்ற கணவருடன் பூம்புகார் விட்டுப் புறப்பட்டு மதுரை சென்றாள்.  ஆயர் இடை சேரியில் கண்ணகியை அடைக்கலமாக வைத்து கண்ணகியின் ஒரு கால் சிலம்பு விற்க  சென்றான் கோவலன்.

தட்டான் ஒருவன் கோவலனை "சிலம்புத் திருடன்" என்று குற்றம் சாட்டினான். விதி வலியால் அறிவிழந்த  பாண்டிய மன்னன் தீர்க்கமாக விசாரணை செய்யாமல் கோவலனை மழுவிலே வெட்டிக் கொன்றான்.

தன் கணவன் கள்வன் எனும் குற்ற  சாட்டின் பேரில் கொலை செய்யப் பட்டத்தை அறிந்த கண்ணகை கடும் கோபமுற்றாள். ஒரு கையில் சிலம்பு மற்றொரு கையில் வேப்பம் குழை.  விரித்த தலை முடி  நீர் வடியும் கண்கள் . கோபா வேசமாக சென்று பாண்டியனோடு வழக்குரைத்த கண்ணகை இடது முலை திருகி எரிந்து பாண்டிநகர் எரித்தாள்.

அடைக்கலமாக இருந்த ஆயர்ப்பாடிக்கு வந்தபோது ஆய்ச்சியர்கள் வெண்ணெய், தயிர் முதலானவற்றை கண்ணகியின் வேப்பம் தனிவித்தனர். கண்ணகை சீரிய தோற்றம் மாறவில்லை. பொங்கிய சினம் தணியவில்லை. இளைஞர்கள் கண்ணகி கட்சி கோவலன் கட்சி என்று இரண்டு பிரிவாகப் பிரிந்து கொம்பு எனப்படும் வளைந்த தடிகள்  இரண்டினை ஒன்றோடு ஒன்று கொழுவி இழுத்து முறித்து விளையாடி கண்ணகை கட்சிக்கு வெற்றி கொடுத்து ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

இந்த வினோத விளையாட்டினை கண்ணுற்ற கண்ணகை கோபம் தணிந்து மணம் மகிழ்வுற்று சிரித்ததாகவும் கண்ணகையை மகிழ்சி அடைய செய்யும்  நோக்கிலே தோன்றி வளர்ச்சி அடைந்ததே இந்த கொம்புமுறி விளையாட்டு. இது விளையாட்டு என்று பேர் பெறினும் சமய சம்மந்தமானதும் இலக்கிய இராசனைக்குரியதும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலே வெற்றிலை செய்கையின் மூலம் புகழ் பெற்ற கிராமம் களுதாவளை கிராமம். பழம் பெருமை மிக்க இக் கிராமத்தின் வெற்றிலை தனி சுவை மிக்கது. "காலி  விளை பாக்கிற்கும் களுதாவளை வெற்றிலைக்கும் ஏலம் கிராம்பிட்கும் ஏற்றதுதான் உன் எழில் வாய்"  என்று நாட்டுப்புற பாடலிலே பாடும் அளவுக்கு பிரசித்தி பெற்றதுதான் இக் கிராமம்.

கண்ணகை வழிபாடு இந்தியாவிலே ஆரம்பமானது. சேரன் செங்குட்டுவன் இமய மலையில் கல்லெடுத்து கனக, கனக விஜயன் தலைமையிலே சுமந்து வர செய்து கண்ணகிக்கு சிலை செய்தான். கோவில் கட்டி விழாக் கொண்டாடினான். விழாவுக்கு சென்ற இலங்கை கஜபாகு வேந்தன் கண்ணகை சிலைகளையும், வழிபாட்டினையும் இலங்கைக்கு கொண்டு வந்ததாக சிலப்பதிகாரம் சொல்கின்றது.

கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்திலே கண்ணகை வழிபாடு பிரசித்தி பெற்றது.  கொம்புமுறி விளையாட்டு கண்ணகை அம்மனை முன்னிறுத்தியே நடை பெறும். அம்மை, கொப்பளிப்பான், கண்நோய், போன்ற நோய்களை "அம்மன் கோதாரி"  என்று அழைப்பது மட்டக்களப்பு பிரதேச வழக்கு.

மழை வளங்குன்றி, வரட்சி அதிகமான காலத்திலேயே இந்த நோய்கள் அதிகம் பரவும். மஞ்சலும், வேப்பிலையும் இதற்கு மருந்து. கண்ணகை அம்மனுக்கு விழா நடத்தினால் கண்ணகை மகிழ்சியுற்றால் மழை பொழியுமெனவும் கோதாரிகள் (நோய்கள்) குறையும் எனவும் மக்கள் நம்பினர். இதனாலேயே கண்ணகையை வேண்டி மக்கள் மழைக் காவியம் பாடினர்.

"கப்பல் திசை கேட்டது கரைக்குள் அடையாதோ
கட்டையினில் வைத்த பின மற்றுயிர் கொள்ளாதோ
உப்பளமத்தில்  பதர் விதைக்க முளையாதோ
உத்தரவு ஊமையனுரைக்க அறியானோ
இப்பிரவியர் குருடு இப்ப தெளியாதோ
எப்பமா மழை தருவ தென்றினி திருந்தாய்
தப்பினால் உலக முறுவார்கள்  துயர் கண்டாய்
தற்பரா பரனுதவு சத்தி கண்ணகையே"

என்பது மழைக் காவியத்தில் சில வரிகள்.

கொம்புமுறி விளையாட்டு நடத்துவதானாலும் கண்ணகையினுடைய அருளையும், கருணையும் பெற்று நோய் நொடியின்றி  மழைவளம் பெற்று வளமாக வாழலாம் என்று மக்கள் நம்பினர். அவர்களுடைய நம்பிக்கை நிறைவேரியமையினாலேயே இன்றும் கண்ணகை வழிபாடு நிலைத்து நிக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலே கொம்புமுறி விளையாட்டு பரவலாக நடைபெற்றிருக்கின்றது. களுதாவளையிலே மிக நீண்ட காலமாக இக் கொம்புமுறி விளையாட்டு சிறப்பாகவும், ஒழுங்காகவும் திட்டமிட்டும் நடைபெற்று வந்திருக்கின்றது. மட்டக்களப்பு தமிழகம் எனும் நூலில்  இது பற்றி விபரமாக குறிப்பிடப் பட்டுள்ளன.

கொம்பு என்ற சொல் பல்வேறுபட்ட கருத்திலே வழங்குகின்றது. பழங்காலத்தில் கொம்பு என்றோர் துளைக் கருவி இருந்தது. கொம்பு போன்று வளைந்த இதனை "ஊதிடு கொம்பு" என்றனர். கோடு, இரலை, ஆம்பல், வபிர், என்றும் அதனைக் குறிப்பிட்டனர்.

கோடு என்பது ஏரிக்கோடி, கோல், நந்து, மேன்மை, விலங்கின் கொம்பு, மரக் கொம்பு என்பனவற்றையும் குறிக்கும். "கொம்பு விளையாட்டு என்று சொல்லும்போது அது மரக் கொம்பினையே குறிக்கின்றது. அதிலும் இதற்கு என்று குறிக்கப்பட்ட அளவு, தகமை பெற்ற வளைந்த மரக் கொம்பே இதனால் கருதப் படுகின்றது.

கொம்புமுறி விளையாட்டு நடைபெறுவதற்கு இரண்டு கட்சிகள் தேவை ஒன்று கோவலன் கட்சி மற்றொன்று கண்ணகை கட்சி. கோவலன் கட்சியை வடசேரி என்றும், கண்ணகை கட்சியை தென்சேரி என்றும் குறிப்பிடுவர். வடசேரி, தென் சேரி  என்பவற்றை வடசேரி வாரம் தென் சேரி வாரம் என்று அழைப்பது மட்டக்களப்பு வழக்காறு.

மட்டக்களப்பு பிரதேசத்திலே கோவில் உரிமை அதிகமாக குடிவழியாக கணிக்கப்படுகின்றது.  பல குடிகள் இருக்கின்றன, குடும்பம் என்றும் சில இடங்களிலே சொல்வார்கள். ஒரு தாயின் பிள்ளைகள் ஆண் என்றாலும் சரி பெண் என்றாலும் சரி அனைவரும் தாயின் குடியினராகவே கணிக்கப் படுவர்.

வடசேரி, தென்சேரி வாரம் கணிக்கப்படும்போது மாறாக தந்தையின் வாரமாகவே ஆண் பெண் பிள்ளைகள் அனைவரும் கருதப்படுவர். வாரம் என்பதனை வாரக் கட்டு என்றும் சொல்வதுண்டு.

No comments:

Post a Comment