Friday, 13 August 2010

வ. அ. இராசரத்தினம்

சிறுகதைகளை இவர் சிருஷ்டிப்பதைப்போன்று மற்றவர்கள் செய்யவே முடியாது. ஈழநாட்டிற்குப் பெருமை தரக்கூடியவர் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை. ஈழத்துச் சிறுகதைத் தொகுதி ஒன்றை வெளியிடவிரும்பும் எவரும் இவருடைய "தோணி" யை விட்டு விட்டு ஒரு தொகுதியை வெளியிடமுடியாது. நிதர்சன இலக்கியம், வாழ்க்கையோடு ஒட்டிய இலக்கியம் என்று துடிப்பாய்த் துடிக்கும் முன்னேற்ற எழுத்தாளர்கூட அதியப்படும் படியானவை இவரது சிறுகதைகள்.

- - - இரசிகமணி கனக செந்திநாதன் - - -

வ.அ புனைகதைத் துறையில் ஈடுபாடு கொண்டு இன்றுவரை ஓர் அரை நூற்றாண்டு காலம் எழுதி வருபவர். எழுதாமல் இருப்பது என்பது அவரால் இயலாத காரியம். தமது சிறுகதைத் தொகுதிக்கு அன்றே சாஹித்திய மண்டலப் பரிசு பெற்றவர். மூதூர் மக்களின் வாழ்க்கை அனுபவங்களை எழுத்தில் கொணர்ந்த முன்னோடி.

இத்தனைக்கும் மேலாக நேர்மையும், உண்மையும், மனிதாபிமானமும் மிக்க ஒரு படைப்பாளி.
வ. அ. இராசரத்தினம் அவர்கள்புகழ் பெற்ற ஈழத்தின்சிறுகதை, நாவல் எழுத்தாளர். சுருக்கமாக வ. அ. என அறியப்படுபவர். ஈழநாகன், கீழக்கரை தேவநேயப் பாவாணர், வியாகேச தேசிகர் என்னும் பல புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்


மூதூரை பிறப்பிடமாக கொண்ட இவரின் பெற்றோர் வஸ்தியாம்பிள்ளை, அந்தோனியா. தாமரைவில் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் பின்னர் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலையிலும் கல்வி கற்றார். மேரி லில்லி திரேசா என்பாரைத் திருமணம் புரிந்தார்.
மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து ஆசிரியப் பயிற்சியைப் பெற்றார். அங்குதான் அவர் தனது மழையால் இழந்த காதல் என்ற சிறுகதையை எழுதினார். இவரது முதற் கவிதை திருகோணமலையில் இருந்து வெளிவந்த எரிமலை என்ற பத்திரிகையில் 1948 இல் வெளிவந்தது. இவர் தனது இலக்கியப் பயணத்தை சுய வரலாற்று நூலாக இலக்கிய நினைவுகள் என்ற பெயரில் எழுதியுள்ளார்.

வெளிவந்த நூல்கள்

  • துறைக்காரன் (நாவல்)
  • கொழுகொம்பு (நாவல்)
  • கிரௌஞ்சப் பறவைகள் (நாவல்)
  • ஒரு காவியம் நிறைவு பெறுகிறது (சிறுகதைத் தொகுதி)
  • ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கின்றது (நாவல்)
  • தோணி (சிறுகதைத் தொகுதி)
  • பூவரசம் பூ (மொழிபெயர்ப்புக் கவிதை)
  • மூதூர் புனித அந்தோனியார் கோயிலின் பூர்வீக வரலாறு (சரித்திரம்)
  • இலக்கிய நினைவுகள் (நினைவுக் கட்டுரைகள், அன்பர் வெளியீடு, திருக்கோணமலை, 1995)
வாழ்வாதாரத்துக்கென ஒரு ஆசிரியனாகவும், வாழ்வின் உன்னததுக்காய் எழுத்தாளனாகவும், வாழ்ந்த ஒரு கலைஞன் வ.அ.இராசரத்தினம். எழுத்தாளனின் படைப்புக்களை, அச்சில் வடிக்கும் அவஸ்த்தையின் தன்மைபுரிந்ததினால் அவரும் மனைவியும் இனைந்து, ஒரு பதிப்பகத்தையும் நடத்தினார்கள். இராசத்தினம் அவர்கள் எழுதிய நாவல்கள், சிறுகதைகள் பலவாக இருந்தபோதும், எனக்குத் தற்போது ஞாபகத்தில் இருப்பது, ஒருகாவியம் நிறைவேறுகிறது எனும் குறுநாவலும், தீர்த்தக்கரை எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ள தீர்த்தக்கரை என்ற சிறுகதை ஆகியன மட்டுமே. ஏனெனில் அவை இரண்டும் அற்புதமான வாழ்வியல் சித்திரங்கள்.

தீர்தக்கரை:-
ஆடிஅமாவாசைக்கு முந்தையதினம், மகாவலி நதி, திருமலைக்கடலில் கலக்கும் கங்கைத்துறையில், (இது உப்பாறுக்கும், மூதூருக்கும் இடையில் உள்ள கழிமுகம்) கொட்டியாரக்குடாவின் பல பகுதிகளிலும், இருந்து மக்கள் மாட்டுவண்டில்களில், குடும்பம் குடும்பமாக வந்து கூடுவார்கள். அன்று மாலை தம்பலகாமம் கோணேஸ்வரர் கோவிலில் இருந்து வரும் பூஜை விக்கிரகமும், கோவில் பணியாளர்களும் வந்து, வழிபாடுகளை ஆரம்பிப்பார்கள். வழிபாட்டின் தொடர்ச்சியாக திருக்கரைசேர் புராணம் விடிய விடியப் படிக்கப்படும். காலையில் விக்கிரகத்துடன் சென்று கடலும், கங்கையும், கலக்குமிடத்தில் ஆடிஅமாவாசைத்தீர்த்தம் ஆடுவார்கள். இதனால் அந்தக்கழிமுகத்துக்கு தீர்த்தகரை என்ற பெயரும் உண்டு.
தீர்த்தக்கரையின் மற்றொருபுறத்தில், கலைநிகழ்ச்சிகள் பலவும் விடிய விடிய நடைபெறும். இந்தத் தீர்த்தக் கரையில், தன் எழுத்துக்களை அச்சாக வெளியீடு செய்யும் ஒரு எழுத்தாளனின் அவஸ்த்தையை அற்புதமாகச் சொல்லும் கதைதான் தீர்த்தக்கரை. எழுத்தாளன், தன்மனைவியின் கைவளையல்களை அடகுவைத்து, எழுத்துக்களை அச்சாக்குவது முதல், அதை வெளியிடுவது, வெளியீட்டின் பின் கைவளையல்களை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கை, நடைமுறையில் அது பொய்துவிடுவது, ஏனையோரின் ஏளனம், என்பவற்றை சராசரிக் கதாபாத்pரங்களைக்கொண்டு, சாதாரண மனிதர்களின் உரையாடலில அற்புதமாக வடித்திருந்தார். இது அவரது வாழ்க்கையின் உண்மைநிகழ்வாகக் கூட இருக்கலாம். ஏனெனில் எழுத்தாளர்கள் பலரின் வாழ்க்கை யதார்த்தம் அதுதானே. இச்சிறுகதைத் தொகுதி கூட அவர்களது பதிப்பகவெளியீடு என்றே ஞாபகம்.

ஒரு காவியம் நிறைவேறுகிறது :-
இது ஒரு நெடுங்கதை அல்லது குறுநாவல். முதலில் வீரகேசரி பத்திரிகையிலும், பின்னர் வீரகேசரிப்பிரசுரமாகவும் வந்தது. இராசரத்தினத்தின் மனைவி ராணி மரணமடைந்தபோது நடைபெறும் நிகழ்வுகழும், அவரகளிருவரின் வாழ்வியல் சம்பவங்களும், மாறிமாறி கவிதைப்படிமங்கள் போல இயல்பாகத் தொகுக்கப்பட்ட அருமையான கதை. இல்லையில்லை உண்மையில் அது ஒரு காவியம்தான். கருத்தொருமித்த ஒரு கணவன் மனைவியின் வாழ்க்கையின் ரசனை மிக்கப் பதிவு அது. இதுவரையில், கணவன் மனையருக்கிடையிலான அப்படியொரு காதலின் வெளிப்பாட்டை எழுத்தில் காணவில்லை என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு உணர்ச்சிபூர்வமானது. காதல் நினைவான தாஜ்மஹாலைப் போன்ற மற்றுமொரு காதல் நினைவுதான் ஒரு காவியம் நிறைவேறுகிறது.

இத்தகைய உணர்வு பூர்வமான எழுத்துக்குச் சொந்தக்காறனான அந்தக் கலைஞனை மறந்திடலாமோ

No comments:

Post a Comment