முனைவர் சி.மௌனகுரு
பல்கலைக்கழகங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பட்டமளிப்பு விழாக்கள் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கிற்கு வரும் ஆளுநர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களைத் துணைவேந்தர்,பதிவாளர் உள்ளிட்ட உயர்பொறுப்பில் உள்ளவர்கள் இசைக்கருவிகள் முழங்க அழைத்து வருவார்கள்.அவ்வாறு அழைத்துவரும்பொழுது ஆங்கிலேயர் காலத்திலிருந்து "பேண்டு"இசைக்கருவிகள் முழங்குவதுதான் தமிழகத்தில் வழக்கில் உள்ளது.பிற பல்கலைக் கழகங்களிலும் அவ்வாறுதான் நடக்கின்றன.
இலங்கையில் உள்ள மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் அவ்வாறுதான் பட்டமளிப்பு விழாக்கள் நடந்தன.ஆனால் பல்கலைக்கழக ஆளவையின் இசைவுடன் தமிழர்களின் மரபுவழிப்பட்ட பெரும்பறை, சிறுபறை, தப்பட்டை, மேளம், உடுக்கு, மத்தளம், நாதசுரம், சொர்ணாளி, புல்லாங்குழல், சிறுதாளம், பெரும்தாளம், மிருதங்கம், சங்கு, எக்காளம், சிலம்பு, சேகண்டி, அம்மனைக்காய், சவணிக்கை, கூத்து, பரதம், கழிகம்பு உள்ளிட்ட இசைக்கருவிகள் முழங்கவும் தமிழர்களின் மரபுவழி உடையுடனும் இசைக் கலைஞர்கள் முன்னே வரப் பட்டமளிப்பு விழாவுக்கு வரும் விருந்தினர்களைப் பழங்கால அரசர்களைக் குடிமக்கள் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியுடன் அழைத்துவருவதுபோல் இன்று நடப்பது தமிழர்களாகிய நமக்குத் தேன்பாய்ந்த செய்தியாகும்.
ஆங்கிலேய மரபிலிருந்து காலத்திற்கு ஏற்ப நம் மரபைப் புதுப்பித்துக்கொள்வது தவறாகாது என்ற சிந்தனையை விதைத்தவர் ஈழத்தில் நாடகம், கூத்துக் கலைகளில் வல்ல பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் ஆவார்.ஈழத்தில் தமிழர்களின் பண்பாட்டுக் கலைகள் இன்றும் சிற்றூர்ப்புறங்களில் கலப்பில்லாமல் வழங்கப்படுகின்றன.மண்ணின் மணம் மாறாமல் அக் கலைகளை உயிர்ப்பிக்கும் பணிகளில் தம்மை ஒப்படைத்துக்கொண்டு பணிபுரிபவர் சி.மௌனகுரு.
இவர் ஆய்வாளராகவும் கூத்துக் கலைஞராகவும், பேராசிரியராகவும் கவிஞராகவும், ஆளுமைத்திறம் வாய்ந்த கல்வியாளராகவும் விளங்கி ஈழத்துக் கலை மரபுகளை மீட்டு மாணவர்களுக்குப் பயிற்றுவித்துத் தமிழர்களின் கலையுணர்வு அழியாமல் காத்த பெருமைக்உரியவர்.கூத்துகள்,நாடகங்கள்,நாட்டுப்புற இசைகள், இசைக்கருவிகள் யாவும் ஆவணப்படும் வகையில் பல நூறு குறுவட்டுகளில் ஆவணப்படுத்தி வைத்துள்ள அறிஞர்.ஆழிப்பேரலையில் தம் ஆய்வுச் செல்வங்களை இழந்த போதிலும் தப்பியவற்றைக் கொண்டு தமிழ்ப்பணியில் தொய்வின்றி இயங்குகிறார்.அவர்தம் வாழ்க்கையை எண்ணிப்பார்ப்போம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சீலாமுனை என்ற சிற்றூரில் வாழ்ந்த சின்னையா- முத்தம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாக 09.06.1943 இல் பிறந்தவர்.அமிர்தகழி மெதடிசு மிசன் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை பயின்றவர்(1948-53).ஐந்தாம் வகுப்பில் புலமைப் பரிசில் பெற்று வந்தாறுமூலையில் உள்ள நடுவண்(மத்திய)கல்லூரியில்பயின்றவர். ஆறாம் வகுப்பு முதல் பள்ளியிறுதி வகுப்புவரை அங்குப் பயின்றவர்.பள்ளியில் படிக்கும் காலத்திலேயே நாடகம் நடிப்பதில், பேச்சாற்றலில் வல்லவராக விளங்கினார். தலைமை தாங்கும் பண்பு கைவரப் பெற்றிருந்தார்.
தந்தையார் சிற்றூர்ப்புறக் கலைகளில் ஈடுபாடு கொண்டவராக விளங்கியதால் மௌனகுரு அவர்களுக்கும் இக்கலைகளில் ஈடுபாடு இயல்பாகவே இருந்தது.பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை(ஆனர்சு)(1961-65),முதுகலை(1970-73)பட்டம் பெற்றவர்.கொழும்பில் உள்ள இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல்(1975-76),யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம்(1980-84)பெற்றவர்.
1966-70 வரை ஆசிரியர் பணிபுரிந்த மௌனகுரு அவர்கள் 1971-75 வரை கொழும்பில் பாடநூல் எழுதும் பொறுப்பில் இருந்தார்.1976-81 வரை மீண்டும் ஆசிரியர் பணிபுரிந்தார். யாழ்ப்பாணம் பலாலியில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்த(1982-83) இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் துணை விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்(1984-88).பின்னர் முதுநிலை விரிவுரையாளராகப் பணி உயர்வு பெற்று 1989-91 வரை பணிபுரிந்தார்.
1991 ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். நுண்கலைத்துறையின் தலைவராகவும், கலைப்புல முதன்மையராகவும் திறம்படப் பணிபுரிந்துள்ளார்.1997 இல் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறுப்புத் துணைவேந்தராகவும் பணிபுரிந்தவர்.அதன் பிறகு கலைப்புலத் தலைவராகத் தொடர்ந்து பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.சுவாமி விபுலானந்தர் இசைக்கல்லூரியின் ஒருங்கிணைப்பாளராகவும் பெருமையுறப் பணிபுரிந்தவர்(2003-05).
யாழ்ப்பாணத்தில் பதினேழு ஆண்டுகளும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பதினேழு ஆண்டுகளும் பணிபுரிந்த சி.மௌனகுரு மிகப்பெரிய சாதனைகளைத் தாம் சார்ந்த துறையில் நிகழ்த்தியுள்ளார்.இலங்கையில் வாழும் தமிழர்கள் மொழியால் இனத்தால் ஒன்றுபட்டவர்களாக இருந்தாலும் கலை,பண்பாடுகளுக்கு இடையே வேறுபாடுகளைக் கொண்டவர்கள்.
மாவட்டத்துக்கு மாவட்டம் வழிபாடு,சடங்குமுறைகள்,பண்பாட்டில் வேறுபாடு உண்டு. அவரவர்களுக்கும் தனித்த அடையாளங்கள் உண்டு.இவற்றையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு தம் ஆய்வுகளை நிகழ்த்தியதுடன் இலங்கையின் பெரும்பான்மை இனமான சிங்கள மக்களிடம் உள்ள கூத்துகள்,நாடகங்கள் பற்றிய பேரறிவும் மௌனகுருவுக்கு உண்டு. அதுபோல் தமிழகத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் வழங்கப்படும் கூத்து,நாடக மரபுகளை அறிந்தவர். தமிழகத்தில் உள்ள தெருக்கூத்து பற்றி அறிந்தவர். நாடகத்துறை சார்ந்த அறிஞர்கள் பலரும் மௌனகுருவுக்கு நல்ல நண்பர்கள்.
தமிழகத்தில் வழங்கப்படும் தெருக்கூத்துகள் பலவற்றைக் காண்பொளியில் பதிவு செய்து பாதுகாத்த மௌனகுரு ஆழிப்பேரலையின் பொழுது இவற்றைப் பறிகொடுத்ததை மிகப்பெரிய இழப்பாகக் கருதுகிறார்.தமிழ்க்கூத்து மரபுகள் சிங்களத்தில் எந்த வடிவில் வழங்குகிறது என்பதையும் தமிழர் இசை,இசைக்கருவிகள் என்ன பெயரில் வழங்குகின்றன என்பதையும் சிறப்பாக விளக்கிக்காட்டும் ஆற்றல் பெற்றவர்.சிங்களக் கலைஞர்களுடன் இணைந்தும் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.இலங்கையில் தமிழ்க்கலைகளும் சிங்களக்கலைகளும் எந்த வகையில் உறவுடையன என்பதைக் கற்று வல்லவர்கள் ஒப்பும்படி மெய்பித்துக்காட்டியவர்.
மௌனகுரு இலங்கைத்தமிழர்கள் பயன்பெறும்படி பல கூத்துகளை நிகழ்த்திக் காட்டியுள்ளார். பல நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்.பல நாடகங்களை எழுதி வழங்கியுள்ளார்.நாடகம், கூத்துத் தொடர்பிலான பல நூல்களை எழுதியுள்ளார். தொன்மம்(புராண),பழங்கதை(இதிகாசம்),வரலாறு,சமுதாயம் சார்ந்த பல கதைகளை நாடகமாக,கூத்துகளாக அரங்கேற்றியுள்ளார். மௌனகுரு குழந்தைகளுக்காகப் பல நாடகங்களை உருவாக்கி நடித்தவர்.தப்பி வந்த தாடி ஆடு என்ற நாடகம் புகழ்பெற்ற நாடகமாகும்.இந்நாடகம் கல்வி நிறுவனங்களில் இவருக்கு நல்ல புகழை ஈட்டித் தந்ததுடன் பல உயர் பரிசில்கள் கிடைக்கவும் வழிவகுத்தது.
ஆதிச்சநல்லூரில் பேராசிரியர் மௌனகுரு
மௌனகுரு அவர்கள் செய்த பல நாடக,கலை,இலக்கிய முயற்சிகளுக்கு எதிர்ப்புகள் அவ்வப்பொழுது கிளம்பி அடங்கியுள்ளதையும் அறியமுடிகிறது.கிழக்குப் பகுதியில் இடம்பெறும் கண்ணகையம்மன் வழிபாட்டில் இடம்பெறும் குளிர்த்திப்பாடல்களுக்குப் பொதுவான ஓர் இசையை உருவாக்கிப் பயன்படுத்தியபொழுது புனிதமாக கருதப்பட்ட பாடலைச் சந்திக்கு இழுத்து வந்துவிட்டதாகவும்,இசையைக் கெடுத்துவிட்டதாகவும் கூறியவர்கள் உண்டு.அதுபோல் இன்னிய அணி உருவாக்கலின் பொழுது இவ்வணி எழுப்பிய இசையில் சிங்கள இசை,கருவிகளுக்கு முதன்மையுள்ளன எனச் சிலர் தவறான கருத்துப் பரப்பியதும் உண்டு. இவற்றுக்கெல்லாம் சலிப்பன்றித் தமிழ் மக்களின் மரபுசார்ந்த செய்திகளைக் காலத் தேவைக்கேற்ப மீட்பதில் கவனமாக இருந்தார்.
"புதியதொரு வீடு" ,"சங்காரம்","இராவணேசன்" உள்ளிட்ட நாடகங்கள் இவருக்கு நிலைத்த புகழ் தரும் நாடகங்களாகும்.மௌனகுரு அவர்கள் தான்மட்டும் நாடகம் கூத்துத்துறைகளில் வல்லவராக அமையாமல் தம் மாணவர்கள்,சார்ந்தவர்கள் என யாவரையும் இக்கலையில் பயிற்றுவித்து வளர்த்தவர்.
புத்துயிர்ப்பு,
மழை,
தப்பி வந்த தாடி ஆடு
,சரிபாதி,வேடனும் புறாக்களும்,
சக்தி பிறக்குது, நம்மைப் பிடித்த பிசாசுகள்,
ஒரு முயலின் கதை,
ஒரு உண்மை மனிதனின் கதை,
கலையில் உயிர்க்கும் மனிதன்,
புதியதொரு வீடு
பரதமும் கூத்தும்,
இலங்கைத் தமிழர் கூத்துகள்,
கண்ணகி குளிர்த்தி,
கிழக்கு ஆட்டங்கள்,
கிழக்கிசை,
வடமோடி,தென்மோடி ஆட்ட அறிமுகம்,
இலயம் என்னும் பெயரில் உருவாக்கியுள்ள இசை,கூத்து தொடர்பான படைப்புகள்
பேராசிரியரின் ஆழ்ந்த கலை உணர்வை வெளிப்படுத்தவல்லன.
இவற்றுள் புத்துயிர்ப்பு ,மழை ,தப்பி வந்த தாடி ஆடு,சரி பாதி,வேடரும் புறாக்களும் ,சக்தி பிறக்குது,நம்மைப் பிடித்த பிசாசுகள்,பரபாஸ்,ஒரு உண்மை மனிதனின் கதை, சங்காரம், இராவணேசன்,வனவாசத்தின் பின் என்பன அச்சுவடிவம் கண்டன.
மௌனகுரு கூத்து,நாடகம் இவற்றை வகுப்பறைகளுடன் நிறுத்திக்கொள்ளாமல் பல்வேறு பயிலரங்குகள் நடத்தி மாணவர்களுக்குப் பயிற்றுவித்துள்ளம்மை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
20ம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்(1984),
சடங்கிலிருந்து நாடகம் வரை (1985),
மௌனகுருவின் மூன்று நாடகங்கள்(1985),
தப்பி வந்த தாடி ஆடு(1987)
பழையதும் புதியதும்- நாடகம் அரங்கியல்(1992),
சுவாமி விபுலானந்தர் காலமும் கருத்தும்(1992),சங்காரம்- ஆற்றுகையும் தாக்கமும்- (நாடகம்)(1993),ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு(1993),கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன் -நீலாவணன்(1994),
கலை இலக்கியக் கட்டுரைகள்(1997),
சக்தி பிறக்குது - நாடகம் (1997),
பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திராவும் ஈழத்து நாடக மரபும்(1998),
இராவணேசன் -நாடகம்(1998),
மடக்களப்பு மரபுவழி நாடகங்கள்(1998),
அரங்கு ஓர் அறிமுகம் -இணை ஆசிரியர்(2000),
சுபத்திரன் கவிதைகள் (தொகுப்பாசிரியர்) (2001),
வனவாசத்தின் பின் நாடகம் (2002),
மட்டக்களப்பு தமிழகத்தில் இந்துப் பண்பாடு -பதிப்பாசிரியர் (2003),
அரங்கியல்(2003),
ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு (2வது திருத்திய பதிப்பு) (2004),
என்ற நூல்களின் ஆசிரியராகவும் விளங்குகிறார்.
மரபுவழி நாடகம் நூல்
மௌனகுரு அவர்களின் நாடகங்களுள் குறிப்பிடத்தக்கது இராவணேசன் நாடகம் ஆகும்
.மௌனகுரு அவர்களிடம் காணப்படும் கூத்து,இசை,பாடல்,தாளம் குறித்த பேரறிவை விளக்கும் நாடகமாக இது மிளிர்கிறது.இராவணனின் துன்ப வாழ்க்கையை அழுகைச்சுவை ததும்ப இவர் உருவாக்கியுள்ளது போற்றற்குரியது.இராவணன் வாழ்க்கையை நடுவணாகக் கொண்டு பல்வேறு உட்பொருள்களை, அதன் உள்ளே கலைக்கூறுகள் பொருந்த வைத்துள்ளமையை எண்ணி எண்ணி மகிழவேண்டியுள்ளது.பல கலைஞர்கள் அந்த அந்தக் கதைமாந்தர்களாகவே வாழ்ந்துள்ளனர்.
இலங்கையில் வழங்கும் பல்வேறு இசைக்கருவிகள், தென்மோடி,வடமோடிக் கூத்து மரபுகள் அமைக்கப்பட்டு அந்த நாடகத்தில் இலங்கையின் பல நிலை வாழ்க்கைக் கூறுகளைப் பதிவு செய்துள்ளார்.இராமன்,இராவணன் சண்டைக்காட்சியில் இடம்பெற்றுள்ள தாள அடைவுகள், உணர்ச்சியோட்டங்கள் காண்பவரை வியப்பில் ஆழ்த்துகின்றன.நாடகத் தமிழிற்கு ஈழத் தமிழர்களின் பங்களிப்பு எந்த அளவு உயர்வாக அமைந்துள்ளது என்பதைக் காட்ட இந்த ஒருநாடகம் இணைசொல்ல முடியாதபடி அமைந்துள்ளது.
மௌனகுரு அவர்கள் நெஞ்சாங்குலை அறுவைப் பண்டுவம் செய்துகொண்ட நிலையிலும் ஆடியும் பாடியும் துள்ள்ளிக் குதித்தும் மாணவர்களைப் பழக்கியுள்ள பாங்கறியும்பொழுது இவரின் கலைக்காதல் புலப்படும்.
பேராசிரியர் மௌனகுரு அவர்களின் துணைவியார் சித்திரலேகா மௌனகுரு அவர்களும் மட்டக்களப்புப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் பேராசிரியராகப் பணிபுரிபவர். இவர்களின் மகன் சித்தார்த்தன் அவர்களும் கலையுணர்வு நிரம்பப்பெற்றவர்.
பேராசிரியர் க.கைலாசபதி,கா.சிவத்தம்பி,சு.வித்தியானந்தன் ஆகிய மூவரின் சேர்ந்த கலை உருவாக மௌனகுரு நமக்குத் தெரிகிறார்.இவர் திறமை உணரும் எதிர்காலத் தமிழர்கள் பல நூற்றாண்டுகள் இவரை வாயாரப் பேசிக்கொண்டே இருப்பார்கள். மௌனகுரு அவர்கள் தமிழ் ஆங்கிலம் வல்லவர்.தமிழில் பலநூல்களை எழுதியுள்ளதுபோல ஆங்கிலத்திலும் பல மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளார்.இவை யாவும் நாடகத்திற்கு ஆக்கம் சேர்க்கும் நூல்களாகும்.
இவரிடம் பல மாணவர்கள் உருவாகியுள்ளனர்.அவர்களுள் யாழ்ப்பாணத்தில் சிதம்பரநாதன், பாலசுகுமார், கணேசன், செயசங்கர், காலம் சென்ற செல்வி, பா.அகிலன், கனகரத்தினம், (வளநாடன்) சோ.தேவராசா அவர் மனைவி கலாலட்சுமி, இளங்கோ போன்றோரையும் மட்டக்களப்பில் சீவரத்தினம், அன்பழகன், சதாகரன், இன்பமோகன், பிரியந்தினி, ரவிச்சந்திரன், தவராசா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.இவர்கள் அனைவரும் நாடகத் துறையில் இன்றும் ஏதோ ஒரு வகையில் இயங்கிக் கொண்டிருப்பவர்கள்.
மௌனகுரு சற்றொப்ப முப்பது நாடகங்களில் நடித்துள்ளார்.பத்து நாடகங்கள் எழுதியுள்ளார். இருபது நாடகங்கள் இயக்கியுள்ளார். மௌனகுரு அவர்களின் நாடகப்புலமை இவருக்குத் தேசிய அளவில் பரிசில்கள் பலவற்றை வாங்கித் தந்துள்ளது. குழந்தைகளுக்கான நாடகம் உருவாக்கியமைக்கும்,இலக்கிய ஆராய்ச்சிக்கும்,நாடக அரங்கப் பணிக்காகவும் எனப் பலமுறை பரிசு பெற்றுள்ளார்.
பல்வேறு பல்கலைக்கழகங்கள் அனுப்பும் முனைவர் பட்ட ஆய்வேடுகளை மதிப்பீடு செய்யும் அயல்நாட்டுத் தேர்வாளராகவும் பணிபுரிந்துள்ளார்.இலங்கைப் பல்கலைக்கழகங்கள் சார்ந்த பல்வேறு கல்விக்குழுக்களிலும் இணைந்து பணிபுரிந்துள்ளார்.தமிழ் நாடகம்,கூத்து வரலாற்றில் என்றும் நின்று நிலவும்பெயராக மௌனகுரு அவர்களின் பெயர் விளங்கும்
No comments:
Post a Comment