ஈழத்து மெல்லிசை வரலாற்றில் பரமேஷ் கோணேஷ் செய்த சாதனைகள்
திருகோணமலை இசைக் கழகம் 1964ம் ஆண்டு தொடக்கம் 1968ம் ஆண்டு வரை இயங்கியதன் பின் ஏதோ
காரணங்களினால் ஸ்தம்பித நிலை அடைந்த வேளையில் இக்குழுவில் பங்கேற்றிருந்த திரு.
இமானுவல் 1968ம் ஆண்டு ‘கோணேஸ்வரா இசைக்குழு’ என்ற பெயரில் இசைக்கழகம் ஒன்றை ஆரம்பித்தார்.
இதேபோல் துரை துரைலிங்கம் என்னும் பாடகர் துரை இசைக்குழு எனும் இசைக் கழகத்தை 1969ம்
ஆண்டு ஆரம்பித்தார்.
இக்குழுவில் ஜோன் பொஸ்கோ, அன்புவழிபுரத்தைச் சேர்ந்த லியோதாஷ் (பேஸ்கிற்றார்) தாஷன்
(கொங்கோரம்) சுந்தரலிங்கம் (ரம்செட்) மற்றும் பாடகர்களாக லியோ, பிறேமா, மேரியோ இணைந்து
இவ் இசைக் குழுவை நடாத்தி வந்தார்கள்.
திருகோணமலை கும்புறுபிட்டி, திரியாய், சம்பூர், யாழ்ப்பாணம், அச்சுவேலி, உடுப்பிட்டி,
நெல்லியடி போன்ற இடங்களுக்குச் சென்று பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடாத்தி புகழ்
பெற்றார்கள் இந்த இசைக் குழுவினர்.
பரமேஷ், கோணேஷ் இசைக்குழு
திருகோணமலை மெல்லிசை மன்னர்களான பரமேஷ் கோணேஷ் சகோதரர்களின் வருகை பாரிய திருப்பத்தை
ஈழத்திருநாட்டில் ஏற்படுத்தியது எனலாம்.
1968ம் ஆண்டு பரமேஷ் கோணேஷ் என்னும் சகோதரர்கள் இளைஞர்களான எஸ். கே. பஞ்சரட்ணம், ஜே. ஆர்.
அலெக்சாண்டர், கே. எஸ். பாலச்சந்திரன், எம். பாக்கியராஜா, எம். சி. மகேஸ், செல்லா
எமிலி, கிறவுதர் செல்வா, கமலா ராஜதுரை, பமலா, விமலா, ஈ. ஆர். பிரேமா, முகுந்தன்,
மோகன் கெங்காதரன், சிவானந்தன், ஜீவானந்தன் என்ற இந்த இளைஞர் குழாமால் ஸ்தாபிக்கப்பட்டது.
பரமேஷ் கோணேஷ் இசைத் தென்றல் என்னும் பெயர்கொண்ட மெல்லிசைக் குழு இக்குழுவின் பிரதான
வாத்தியக் கலைஞர்களாக பரமேஷ் அவர்களின் சகோதரர் கோணேஷ் மற்றும் எஸ். சி. மகேஸ் போன்றார்
திகழ்ந்தார்கள். இதில் பரமேஷ் பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும் இயக்குநராகவும் இருந்து
இவ்விசைக் கழகத்தை (1966 - 1977) இயக்கிய முன்னோடி.
பள்ளிப் பருவக் காலத்தில் ஒளிமயமான எதிர்காலம் என்னும் டி. எம். செளந்தரராஜனின் பாடலைப்
பாடி இசைத் துறைக்குள் நுழைந்த பரமேஷ் தன் வாழ்வில் பெருமையாக நினைப்பது யாதெனில்
‘திருகோணமலை எங்கள் நாடு’ என்று தான் எழுதிய பாடலை சுவாமி விபுலானந்தரின் முதல்
மாணவனும், பிள்ளைப் பாட்டுக் கவிஞரும், தமிழ் அறிஞரும், வித்தியாதிகாரியுமான தனது
தந்தையான தமிழறிஞர் மா. பீதாம்பரனார் வியந்து போய் தன்னைக் கட்டித் தழுவி பாராட்டியது
தனக்கு கிடைத்த முதல் விருதும் பாராட்டும் ஆகும். அந்த விருதே இன்று வரை தனக்கு
சிறப்பாக தோன்றும் விருது என்று பெருமைப்படுகிறார்.
ஈழத்து மெல்லிசை வரலாற்றில் பரமேஷ் கோணேஷ் செய்த சாதனைகள் முக்கிய மைல்கல்லாக
அமைகின்றது. இக்குழுவில் ஏனைய வாத்திய கலைஞர்களாக விளங்கியவர்கள்:
* முகுந்தன்
* மோகன்ராவ்
* ஜீவானந்தம்
* பாலச்சந்திரன்
* கங்காதரன்
* சிவானந்தம்
* பஞ்சரட்ணம்
பின்னணிப் பாடகர்களாக
* செல்வி எமிலி
* கிறவுத்தர்
* துரை துரைசிங்கம்
* கமலா ராஜதுரை
* கே. எஸ். பாலசந்திரன்
* பமலா, விமலா
* ஜே. ஆர். அலெஸ்சாண்டர்
* எம். பாக்கியராஜா
* மாலினி பரமேஸ்
* இ. ஆர். பிரேமா
போன்ற கலைஞர்களின் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்டதே (1968) பரமேஷ் கோணேஷ் இசைக்
குழுவாகும்.
ஈழத்து தமிழ் கலைஞர்களாலும் அற்புதமான இசை தரமுடியும் என்பதற்கு பிள்ளையார்
சுழிபோட்டு, திரைப் பாடல்கள் வானொலியிலும் மேடையிலும் மலிந்து கிடந்த காலத்தில்
ஈழத்தின் முதலாவது இசைத்தட்டை (45 rpm) (1970) உருவாக்கி மெல்லிசை உலகில் வரலாறு
படைத்தவர்கள் பரமேஷ் கோணேஷ் இசைக் குழுவினர்.
ஈழத்தில் உருவாக்கப்பட்ட இந்த முதலாவது இசைத் தட்டில்,
* உனக்குத் தெரியுமா நான் உன்னை அழைப்பது
* நீ வாழும் இடமெங்கே?
* நீயின்றி நிலவு என் வந்திங்கு
* போகாதே தூரப் போகாதே
ஆகிய நான்கு பாடல்கள் தானே எழுதி இசையமைத்து மெல்லிசைப் புரட்சியைச் செய்தவர்கள் இவர்கள்.
மட்டுப்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் நிலவிய அக்காலத்தில் இந்திய திரை இசைப் பாடல்களுக்கு
நிகராக இவர் உனக்குத் தெரியுமா நான் உன்னை அழைப்பது என்ற பாடல் இந்தியா, சிங்கப்பூர்,
மலேசியா ஆகிய சகல நாட்டு வானொலிகளிலும் ஒலிபரப்பப்பட்டு ஈழத்து மெல்லிசைக்கு மகுடம்
சூடவைத்தது.
இலங்கை வானொலியில் தமிழர்கள் மட்டுமன்றி சிங்களப் பிரியர்களும் வரவேற்கும் அளவுக்கு நேயர்
விருப்பம், பூவும் பொட்டும், மகளிர் கேட்டவை ஆசிய சேவை, இன்றைய நேயர் போன்ற
நிகழ்ச்சிகளில் அடிக்கடி ஒலி பரப்பப்பட்டு ஈழத்து மெல்லிசையை உலக தரத்துக்கு உயர்த்தியது
இவர்களது இந்தப் பாடல்கள்.
இப்பாடலின் புகழ்கண்ட சிங்களக் கலைஞர்கள் இப்பாடலை சிங்களத்தில் மொழிபெயர்த்து திகு நீல
அஸ்தெக்கல் எனப் பரமேஷ் பாடி சிங்கள இரசிகர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றதுடன்
இசைத் தட்டிலுள்ள ஏனைய பாடல்களும் சிங்களத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டது.
இவரது இந்த இசைத் தட்டு வருகையுடன் மெல்லிசைத் துறையில் புதியதொரு பரிணாமத்தை பரமேஷ்
கோணேஷ் உருவாக்கினார்கள்.
அது என்னவென்றால் பொப்பிசையென்னும் நவீன இசைவடிவமாகும். இதனை அன்றைய இலங்கை வானொலி
அறிவிப்பாளரும், உலகப் புகழ் பெற்ற மதுரக்குரலோன் பி. எச். அப்துல் ஹமீட் ஈழத்தின்
உருவாக்கியமைக்கு முன்னோடியாக அமைந்தது இந்தப் பாடல்களாகும்.
பரமேஸின் இப்பாடல் பெற்ற புகழாலும், வரவேற்பினாலும் இது வரைகாலமும் தென் இந்திய
திரைப்பாடல்களின் செல்வாக்கு மலிந்து கிடந்த காலத்தில் ஈழத்துப் பாடல்கள் என்ற புதிய
வடிவமொன்று இசைத் துறையில் உருவாக பரமேஸின் இசைத் தட்டே காரணமாகியது.
No comments:
Post a Comment