Sunday, 15 August 2010

நீலாவணன்'

கவிஞர் நீலாவணன் 30- 06- 1931ல் பெரிய நீலாவணையில் பிறந்தார். சித்தாயுள் வேத வைத்தியர் திரு. கேசகப்பிள்ளை, திருமதி. கே. தங்கம்மா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வன் இவர். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பல வருடங்கள் நற்சேவை புரிந்த இவர், தனது பிறந்த ஊர் மீது கொண்ட பற்றின் காரணமாகவே 'நீலாவணன்' என்னும் புனைபெயரை வரித்துக் கொண்டு கால்நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக எழுதி வந்தார். இவர் இயற்கை எய்தும் வரை முழுமூச்சோடு ஆக்க இலக்கியத்துக்கு - குறிப்பாக ஈழத்துத் தமிழ்க் கவிதைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.இவர் 1948ல் இருந்து எழுதத் தொடங்கினார். சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்து கவிதையும் சிறுகதையும் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது சுதந்திரன் ஆசிரியராக இருந்த திரு. எஸ். டி. சிவநாயகம் இதனைக் கண்ணுற்று "நீங்கள் நூற்றுக் கணக்கானவர்களுள் ஒருவராக இருப்பதிலும் பார்க்க, நாலைந்து பேர்களுள் ஒருவராகப் பிரகாசிக்கலாம். சிறுகதையை விட்டு விட்டுக் கவிதையையே எழுதுங்கள்" என்று அன்புக் கட்டளை இட்டார். அதனை ஏற்று நீலாவணன், ஏராளமான சிறந்த கவிதைகளையே எழுதிக் கொண்டிருந்தார். அக்காலத்தில் கவிதை எழுதுபவர்கள் சிறுகதை எழுதுபவர்களிலும் மிகக் குறைவாகவே இருந்தனர். ஆனால் தற்போது நிலைமை எதிர்மாறாக உள்ளது.1961ல், கல்முனைப் பகுதியில் உள்ள எழுத்தாளர்களை ஒன்று சேர்த்துக் கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தார். அதன் தலைவராகப் பல வருடங்கள் பொறுப்பேற்று இப்பகுதியின் இலக்கிய விழிப்புணர்ச்சிக்கு வித்திட்டார்.கவி அரங்குகள், விமர்சன அரங்குகள், நினைவு விழாக்கள், பாராட்டு விழாக்கள், நூல் அறிமுகங்கள், எழுதாளர் சந்திப்புக்கள் என்பன கல்முனை எழுத்தாளர் சங்கத்தால் இப்பகுதியில் முதன்முதலாகவும் மிகச் சிறப்பாகவும் நடைபெற நீலாவணன் காலாக இருந்தார்.அகில இலங்கை ரீதியாக, தினகரன் பத்திரிகை மூலம் (1962ல்) நடைபெற்ற இலங்கையர்கோன் சிறுகதைப் போட்டி, இலங்கையர்கோன் விழா, 'மழைக்கை' கவிதை நாடக அரங்கேற்றம் என்பன கல்முனை எழுத்தாளர் சங்கம் நடாத்திய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளாகவும், இலக்கிய நெஞ்சங்களில் நீங்காது நிலைத்துள்ள பசுமை நினைவுகளாகவும் மிளிர்கின்றன. இவை யாவற்றுக்கும் முக்கிய ஆலோசகராகவும் நீலாவணன் விளங்கியதோடு அதற்காக பைசிக்கிள் ஓடி ஆதரவு திரட்டல் போன்ற உடல் உழைப்பு நல்குவதிலும் மிகுந்த உசாராகவே விளங்கினார்.'மழைக்கை' கவிதை நாடகம் கிழக்கிலே (1963ல்) முதன் முதல் மேடை ஏறிய கவிதை நாடகமாகும். மகாபாரதத்தில் செஞ்சோற்றுக் கடன் தீர்த்த கர்ணனின் கடைசிகாலக் கதையைக் கருவாகக் கொண்ட இந்நாடகம் அறுசீர் விருத்தப் பாக்களினால் மிகவும் நயமான பேச்சோசைப் பண்பில் அமைக்கப் பெற்ற இலகு நடை மேடை நாடகம் ஆகும். இந் நாடகத்தில் மு. சடாட்சரம்- கர்ணன், நீலாவணன்- குந்திதேவி, மருதூர்க்கொத்தன்- கிருஷ்ணன், எம். ஏ. நுஃமான்- இந்திரப் பிராமணன், மருதூர்க்கனி- பிராமணன், கே. பீதாம்பரம்- இந்திரன் என்று பாத்திரமேற்று நடித்தமை குறிப்பிடத்தக்கது. 'மழைக்கை' 1964இல் வீரகேசரியிலும் வெளிவந்தது.1966ல் ஜனாப் உஸ்மான் மேர்சா காட்டிய அன்பினால், அவரின் கிழக்குப் பதிப்பகத்தில் 'பாடும் மீன்' இதழை -நீலாவணனை ஆசிரியராகக் கொண்டு- அச்சிட்டும் அது வெளிவராமலே போயிற்று.1967ல் கல்முனை தமிழ் இலக்கியக் கழகத்தை ஆரம்பித்து (தலைவர்- சண்முகம் சிவலிங்கம், செயலாளர்- மு. சடாட்சரன், கௌரவ ஆசிரியர்- நீலாவணன், காப்பாளர்- கே. ஆர். அருளையா B.A) 'பாடும் மீன்' என்னும் இலக்கிய இதழை நடாத்தினார். அது இரண்டு இதழ்களே வந்தாலும் அத்ற்கு இலக்கிய உலகில் தனி இடம் உண்டு.11- 01- 1975ல் இயற்கை எய்தினார்.1976ல் இவரது 'வழி' என்னும் முதலாவது கவிதை நூல் வெளிவந்தது. இது இலங்கை சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றுள்ளது.1982ல் நீலாவணனது 'வேளாண்மை'க் காவியம் நூலுருவாக வெளிவந்துள்ளது. 2001ல் 'ஒத்திகை' (கவிதைத் தொகுப்பு) வெளிவந்துள்ளது. இவரது கதைகள் அனைத்தும் 'ஒட்டுறவு' என்ற நூலாகவும் கவிதை நாடகங்கள் 'நீலாவணன் கவிதை நாடகங்கள்' என்ற நூலாகவும் வெளிவந்துள்ளன. கவிதை நாடக நூலுக்கு சாகித்திய மண்டலப் பரிசும், வடகிழக்கு மாகாண சபை இலக்கிய விருதும் கிடைத்துள்லன.இவரது துணைவியார் திருமதி அளகேஸ்வரி சின்னத்துரை பாண்டிருப்பு நாவலர் வித்தியாலத்தில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு எழில்வேந்தன், வினோதன் ஆகிய இரு புதல்வர்களும் எழிலரசி, ஊர்மிளா, கோசலா ஆகிய மூன்று புதல்விகளும் உள்ளனர்.

06.07.98 முதல் 12.07.98 வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்திய ஈழத்துக் கவிஞர் வாரம் நிகழ்வின் ஆறாம் நாள் செங்கதிரோன் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவிலிருந்து சில பகுதிகள்...

#1948இல் எழுதத் தொடங்கிய நீலாவணனை அவர் கே. சி. நீலாவணன் எனும் பெயரில் 'சுதந்திரன் பத்திரிகையில் எழுதிய 'பிராயச்சித்தம்' சிறுகதையே இலக்கிய உலகிற்கு எழுத்தாளனாக அறிமுகப்படுத்திற்று. இவரது முதற்கவிதை 1948ம் ஆண்டிலே தினகரன் பாலர் கழகத்தில் பிரசுரமாகி இருந்தாலும் கூட கே. சி. நீலாவணன் எனும் புனைபெயரில் 1953இல் சுதந்திரனில் வெளிவந்த 'ஓடி வருவதென்னேரமோ?' எனும் கவிதை மூலமே கவிஞராக அறிமுகம் ஆனார். இவரது இறுதிக் கவிதை 'பொய்மை பொசுங்கிற்று' என்பதாகும்.

#கே. சி. நீலாவணன், நீலாவண்ணன், நீலா சின்னத்துரை, மானாபரணன், இராமபாணம், எழில்காந்தன், சின்னான் கவிராயர், எறிகுண்டுக் கவிராயர், கொழுவு துறட்டி, அமாச்சி ஆறுமுகம், வேதாந்தன், சங்கு சக்கரன் எனும் புனைபெயர்களில் கவிதை, சிறுகதை, உருவகக் கதை, கவிதை நாடகம், காவியம், கட்டுரை, விருத்தாந்த சித்திரம் ஆகிய வடிவங்களில் ஆக்கங்களைப் படைத்தாரெனினும் கவிதைத் துறையே அவரைப் புகழ்பூக்க வைத்தது என்பதாலும், தனது ஊரான பெரிய நீலாவணை மீது கொண்ட பற்றினால் சூடிக் கொண்ட நீலாவணன் எனும் பெயரே நிலைத்துவிட்டது என்பதாலும் எழுத்துலகில் கவிஞர் நீலாவணன் என்றே தடம்பதித்தார்.

#1960களில் ஈழத்து இலக்கிய முகாமில் முற்போக்கு என்றும் பிற்போக்கு என்றும் சொற்போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் தனது இலக்கிய கொள்கை நற்போக்கு என்று நாடிய அணி சேராத் தனித்துவக் கவிஞன் நீலாவணன்.

#நீலாவணன் கவிதைகள் ஓசைநயம் துள்ளும் சந்தக் கவிதைகளாகும். செவிக்கு இன்பம் தரும் லயமும், தாளமும் அமைந்த சந்தக் கவிதைகளை அவர் ஆக்கினார். நளவெண்பா பாடிய புலவன் புகளேந்தியின் பெயர் தமிழுலகில் 'வெண்பாவிற்புகழேந்தி' என்று நிலைத்துவிட்டது போல் - ஈழத்து இலக்கிய உலகில் 'வெண்பாவிற் பெரியதம்பி' என புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை பேர் பெற்றது போல் ' சந்தக்கவிதைக்கு நீலாவணன்' என்ற சங்கதியும் எழுத்துலகில் நின்று நிலைக்கும்.

#வேகமும், தீவிரமும், முன்கோபமும் இவர் இயல்பான குணங்களெனினும் மனிதநேயப்பண்பும், நகைச்சுவை உணர்வும் நீலாவணனிடம் நிறைந்திருந்தன.

#மட்டக்களப்பில் வழங்கும் கிராமியச் சொற்களை நீலாவணன் தன் கவிதைகளில் நிறையக் கையாண்டுள்ளார். மட்டக்களப்பு மக்களின் வாழ்வுமுறை, சடங்குகள், பழக்கவழக்கங்களை நீலாவணன் தன் கவிதைகள் வாயிலாக பதிவு செய்து கொண்ட அளவுக்கு வேறு எந்தக் கவிஞரும் இதுவரை செய்யவில்லை. மட்டக்களப்பு வாழ்க்கை முறை, சடங்குகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய விழையும் சமூகவியலாளர்களுக்கு நீலாவணன் கவிதைகள் நிறையத் தகவல்களை வழங்கக் கூடியவை.

# மட்டக்களப்பின் கவிதைப் பாரம்பரியத்தின் ஊற்றுக் கண்களாகத் திகழ்பவை இம்மண்ணின் நாட்டார் பாடல்களே. இங்கு மட்டக்களப்பு பிரதேசம் எனக் கூறப்படுவது இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் வடக்கே வெருகல் ஆற்றையும் தெற்கே குமுக்கன் ஆற்றையும் கிழக்கே வங்காளவிரிகுடாக் கடலையும் மேற்கே ஊவாமலைக் குன்றுகளையும் எல்லைகளாகக் கொண்டு இலங்கிய நிலப்பரப்பாகும். இந்நிலப்பரப்பில் காலங்காலமாக எழுதா இலக்கியமாகத் திகழ்ந்த நாட்டார் பாடல்கள் (கிராமியக் கவிகள்) மட்டக்களப்பின் பேச்சுமொழியில் இம்மண்ணின் மண்வாசனை கமழும் வகையிலேயே புனையப்பட்டவை. இப்பாடல்களெல்லாம் பெரும்பாலும் தனிப்பாடல்களே. எனினும் செந்நெறி இலக்கியங்கள் என வரும் போது விபுலானந்த அடிகளார் மற்றும் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை ஆகியோரின் கவிதைப் பாரம்பரியத்தின் அடியொற்றி மட்டக்களப்பு மண் ஆனது பல கவிஞர்களை ஈன்றெடுத்துள்ள போதிலும் இவர்களில் எவருமே -கவிஞர் நீலாவணனைத் தவிர- ஈழத்தமிழ் பிரதேசங்களில் தனித்துவம் வாய்ந்ததான மட்டக்களப்பின் பாரம்பரியங்களையும், சடங்குகளையும் அம்மக்களின் வஞ்சகமில்லாத வாழ்க்கை முறைகளையும் வைத்துக் காவியம் ஒன்றினை வடித்துத் தரவில்லை. ஆனால் கவிஞர் நீலாவணன் மட்டக்களப்பு மண்ணின் வாழ்க்கையை இலக்கியமாக்க எத்தனித்தார். அதன் விளைவே அன்னாரின் 'வேளாண்மை'க் காவியம்.

#1960களில் கல்முனை எழுத்தாளர் சங்கத்தைச் ஸ்தாபித்து வழி நடாத்தியதின் மூலம் கல்முனைப் பிரதேசத்திலே எழுத்தாளர் பரம்பரையொன்றை நீலாவணன் உருவாக்கினார். மருதூர்க் கொத்தன், மருதூர்க்கனி, அன்பு முகையதீன், மு. சடாட்சரன், கல்முனைப் பூபால், மருதூர்வாணன், பாலமுனை பாறூக், எம். ஏ. நுஃமான், முல்லைவீரக்குட்டி, கனகசூரியம், சத்தியநாதன், நோ. மணிவாசகன், ஆனந்தன் என்று ஓர் இலக்கியப் பட்டாளமே அவரின் அரவணைப்பில் உருவானது. கல்முனையிலே, அவரின் இலக்கியச் சகாக்களாக சண்முகம் சிவலிங்லம், பாண்டியூரன், ஜீவா ஜீவரத்தினம், பஸீல் காரியப்பர், ஈழமேகம் பக்கீர்தம்பி ஆகியோர் விளங்கினர். இலங்கையின் எந்தவொரு தனிப்பிரதேசத்திலும் கல்முனைப் பிரதேசத்தைப் பால் அதிக எண்ணிக்கையான இலக்கியவாதிகள் இருந்ததில்லை. இவ்விலக்கியவாதிகள் அனைவரும் கவிஞர்கள் என்பது இன்னுமொரு சிறப்பு. இதற்குக் காரணம் கவிஞர் நீலாவணனே.

#நீலாவணனுடன் நெருக்கமாயிருந்த ஏனைய சமகால இலக்கிய நண்பர்களாக எஸ். பொன்னுத்துரை, இளம்பிறை எம். ஏ. றஃமான், அண்ணல், இலங்கையர்கோன், ராஜபாரதி, மண்டூர் சோமசுந்தரப்பிள்ளை, வ. அ. இராசரத்தினம், கனக செந்திநாதன், ஏ. ஜே. கனகரத்னா, மஹாகவி ஆகியோர் இருந்துள்ளனர். இவரது இலக்கிய முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுப்போராக கல்முனையிலே டாக்டர் எம். முருகேசபிள்ளை அவர்களும், கே. ஆர். அருளையா B. A. அவர்களும் திகழ்ந்துள்ளனர். இவரது படைப்புகளுக்குக் களம் கொடுத்த பத்திரிகையாளர்களில் சுதந்திரன் எஸ். டி. சிவநாயகம், தினகரன் ஆர். சிவகுருநாதன் என்போர் குறிப்பிடத்தக்கவர்கள். வித்துவான் எப். எக். ஸி. நடராசா, புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை, புலவர் ஆ. மு. ஷரிபுத்தீன் ஆகியோர் இவரது எழுத்துக்களையிட்டு பெருமிதம் கொண்ட மூத்த தலைமுறை அறிஞர்களாவர்

No comments:

Post a Comment