Sunday, 15 August 2010

யாழ் நூல் அரங்கேற்றம்

சுவாமி அவர்களின் தமிழ்த் தொண்டால் தலை சிறந்து விளங்குவது அவருடைய யாழ் நூல் ஆராய்ச்சியாகும். சுவாமி அவர்கள் பதினைந்து ஆண்டு காலம் ஆராய்ந்து கண்டுணர்ந்த யாழ்நூலினைக் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் திருக்கொள்ளம் பூதூர்த் திருக்கோயிலில் நாளும் செந்தமிழ் இசைபரப்பிய ஞானசம்பந்தனின் சந்நிதானத்தில் இசை விற்பன்னர்கள் வியக்க, கற்றோரும், மற்றோரும் பாராட்ட தேவாரப்பண்களைத் தாமே அமைத்து 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்களில் அரங்கேற்றினார்.

முதல் நாள் விழாவில் இயற்றமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள் சூழ்ந்து வர சுவாமி அவர்களை தெற்குக் கோபுர வாயிலின் வழியாக திருக்கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். சுவாமி அவர்கள் தான் ஆராய்ந்து கண்டுபிடித்த வரைபடத்துடன் விளக்கிய பின்னர், தான் தயாரித்த முளரியாழ், சுருதி வீணை, பாரிசாத வீணை, சதுர்த்தண்டி வீணைகளைத் தாங்கி சிலர் சென்றார்கள். நாச்சியார் முன்னிலையில் சுவாமி இயற்றிய 'நாச்சியார் நான்மணிமாலை' வித்துவான் ஔவை துரைசாமிப்பிள்ளை அவர்களால் படிக்கப்பட்டு அரங்கேறியது. பாராட்டுரைகளுக்குப் பின்னர் சங்கீதபூஷணம் க.பெ. சிவானந்தம் பிள்ளை சுவாமிகளால் கண்டுணர்ந்த யாழ்களை மீட்டி இன்னிசை பொழிய முதல் நாள் விழா இனிதாக நிறைவேறியது.

இரண்டாம் நாள் விழாவில் நாவலர் சோமசுந்தர பாரதியார், 'குமரன்' ஆசிரியர் சொ. முருகப்பா, தமிழ்ப்பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழக சாம்பமூர்த்தி ஐயர், இசைப் பேராசிரியர் சுவாமிநாத பிள்ளை, கரந்தக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, அறிஞர் டி. எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார், சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை, சுவாமி சித்பவாநந்தர், மற்றும் பலர் ஆய்வுரை நிகழ்த்தினார்கள். பின்னர் சுவாமி விபுலாநந்தர் யாழ் பற்றிய அரிய தகவல்களை எடுத்துவிளக்கினார். வித்துவான் வெள்ளைவாரணர் யாழ்நூலின் பெருமைகளை எடுத்து விளக்கினார். பின்னர் யாழ்நூல் அரங்கேற்றப்பட்டது

No comments:

Post a Comment