உங்களின் இலக்கியப் பணியின் ஆரம்பம் குறித்துச் சொல்லுங்களேன்.
நான் கிழக்கிலங்கையில் உள்ள மட்டக்களப்பில் எருவில் என்ற கிராமத்தில் பிறந்தவன். அந்தக் கிராமம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 17 மைல்களுக்கு அப்பால் உள்ளது. 5 ஆம் வகுப்பு வரை அங்கே படித்தேன். பின்னர் திருகோணமலை இந்துக்கல்லூரியில் கல்வி கற்கச் சென்றேன். அங்கு படித்துக்கொண்டிருக்கும் போது நான் அநேகமாகப் பத்திரிகைகளில் வரும் கதை, கவிதைகளைப் படிப்பது வழ்க்கம், அப்போது எனக்கும் எழுதவேண்டும் என்ற ஆரவம் தோன்றியது. சிறு சிறு பாடல்களையெல்லாம் எழுதினேன். ஆனால் அவையெல்லாம் சரியான பாடல்களா , இலக்கண முறைப்படி அமைந்தனவா என்பதில் எனக்குச் சந்தேகம் இருந்தது. ஆனபடியால் அவைகளை நான் பிரசுரிக்க அனுப்பவில்லை. நான் 8 ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது வீரகேசரியின் சிறுவர்களுக்கான பகுதியில் பூஞ்சோலை என்ற கட்டுரையை எழுதியனுப்பினேன். அது உடனே பிரசுரிக்கப்பட்டது. அதன் பின்னர் நான் 16 , 17 வயதிலே கவிதைகளை எழுதத் தொடங்கிவிட்டேன். நான் ஆங்கில மீடியத்தில் படித்திருந்தாலும் தமிழ் மீது நிறைய ஆர்வம் இருந்தது.
இலங்கை, இந்தியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளைப் படிப்பதில் ஆர்வமுடையவனாக இருந்தேன். எனது 18 ஆவது வயதில் எழுதுவினைஞராக உத்தியோகம் கிடைத்தது, கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்தேன். பின் 19 ஆவது வயதில் மட்டக்களப்பிற்கு மாற்றலானேன். என் 20 வயதில் பயிற்சிக்காகக் கொழும்பு சென்றிருந்தபோது கவிஞர் மஹாகவி அவர்களைச் சந்திக்கும் பெரும்பேறு கிடைத்தது. அவர் அப்போது "தேன்மொழி" என்ற பெயரில் கவிதை நூலொன்றை வெளியிட்டுக்கொண்டிருந்தார். அந்தக் கவிதை நூலில் நானும் ஒரு சந்தாதாரராகித் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். தேன்மொழியில் அழகான சிறப்பான கவிதைகள் வெளிவந்துகொண்டிருந்தன. வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத அளவிற்குச் சுவை கொண்ட கவித்துவம் நிறந்த கவிதைகள் அவை. முக்கியமாக நாவற்குழியூர் நடராசன், கவிஞர் மஹாகவி, சில்லையூர் செல்வராசன், மட்டக்களப்புப் பகுதியைச் சேர்ந்த திமிலைத் துமிலன், நீலாவணன் என்று எல்லோரும் எழுதினார்கள். இவர்களுடைய கவிதைகளைப் படிக்கும்போது நானும் எழுதுவேன், பின்னர் கிழித்தெறிந்துவிடுவேன்.
அதன் பிறகு என் 21 ஆவது வயதிலே மட்டக்களப்பில் நடந்த இனக்கலவரத்தில் என் இரண்டு கண்களும் பறிபோயின. அதாவது 1956 ஆம் ஆண்டு யூன் 5 ஆம் திகதி சிங்களம் மட்டும் என்ற சட்டம் இலங்கைப் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட்து. அதனை எதிர்த்து கொழும்பு காலிமுகத்திடலில் தமிழரசுக்கட்சி தந்தை செல்வா தலைமையிலே ஒரு சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றது. அதிலே பல அரசியல்வாதிகள் குறிப்பாக, வன்னியசிங்கம், அமிர்தலிங்கம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், சி.சுந்தரலிங்கம், போன்றோர் கலந்துகொண்டார்கள். அவர்களையெல்லாம் காடையர்கள் தடிகளால் அடித்தும் கற்களால் எறிந்தும் பல அட்டகாசங்களைச் செய்தார்கள். கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான அனர்த்தங்களும் ஏற்பட்டன.
இதன் காரணமாக இங்கே மட்டக்களப்பிற் கூட சத்தியாக்கிரகம் ஒன்று நடைபெற்றது. அப்பொழுது எம்.பி ஆக இருந்த திரு ராசதுரை தலைமையில் இது நடைபெற்றது. மட்டக்களப்பில் கடையடைப்புக்கள் போன்றனவும் நிகழ்ந்தன. அதனால் இங்கு ஒரு சதித் திட்டம் உருவாகியது அதாவது தமிழர்களை எப்படியாவது பயமுறுத்தவேண்டும் என்று பொலிஸ் அதிகாரிகள், மற்றும் இங்கிருந்த சிங்கள முதலாளிகள் சேர்ந்து ஒரு அனர்த்தத்தை 1956 யூன் 8 ஆம் திகதி ஏற்படுத்தினார்கள். இரவு 10.30 மணியிருக்கும் கராஜ் ஒன்றிற்கு நெருப்பைக் கொழுத்திருப்பதைக் கண்டு இளைஞர்கள் நாங்கள் சேர்ந்து அந்த நெருப்பை அணைத்துக் கொண்டிருந்த போது சிங்களவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். கராஜிற்கு எதிர்க்கடையில் வேலை பார்த்த தங்கராஜா, மற்றும் ராஜேந்திரன் (வயது 15) ஆகியோர் அங்கே கொல்லப்பட்டார்கள். 8 பேர் காயமடைந்தார்கள். 3 வயது பிள்ளை ஒன்றுக்கு சன்னம் பட்டு நல்லவேளையாகத் தப்பியது.
மற்றது நான், என் வலது கண்ணில் பாய்ந்த துப்பாக்கிச் சன்னம் இடது பக்கப் பின்புறமாக்ச் சென்று வலது கண்ணை முழுதாகச் சிதைத்துவிட்டது. இடது கண்ணையும் மூளையையும் தொடர்பு படுத்தும் பகுதி (Optic nerve) சிதைந்து விட்டது. எனக்கும் பார்வை போய் வேலையும் போய்விட்டது.
கொழும்புக்கு வைத்தியத்துக்காகக் கொண்டுசெல்லப்பட்டேன். அப்போதைய தொழிற்சங்கத்தலைவர் கே.சி.நித்தியானந்தம் அவர்களக் உதவி செய்தார். பின் கொழும்பிலிருந்து இந்தியா எக்மோர் hos pitalஇலும் வைத்தியம் பார்க்கப்பட்டது, பின்னர் இங்கிலாந்திலிருந்து திருகோணமலை வந்த கப்டன் Patric என்ற வைத்தியரையும் சந்தித்தேன். எதுவுமே செய்யமுடியவில்லை. எனது பார்வை நரம்புகள் செயலிழந்து பார்வை மீண்டும் கிடைக்காமல் போனது. ஆகவே நான் எனது குக்கிராமத்திலேயே தங்கியிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அப்படியிருக்கும் போது பத்திரிகைகள், சஞ்சிகைகளை எனது சகோதரர்களும் நண்பர்களுமாக வாசித்துக் காட்டுவார்கள். அதன் மூலமாக எனக்கு இலக்கிய ஆர்வம் நிறையவே வளர்ந்து கொண்டு வந்தது. அப்பொழுது நான் பாடல்களைப் புனையத் தொடங்கினேன். முதற்பாடல் 1958 ஆம் ஆண்டிலே நா.ஏரம்ப மூர்த்தி என்ற பெயரிலேயெ சுதந்திரன் பத்திரிகையில் வெளிவந்தது. தன் காதலிக்கு ஒரு வண்டைத் தூது விடுகிறேன் இப்படி:
போதவிழ்ந்த புது மலர்கள் தேடி நித்தம்
பித்தனைப் போல் சுற்றுகின்றாய் பேதை வண்டே
போடுகின்றேன் கேளுனக்கு நானோர் வார்த்தை
உத்தமியாள் என் சுசியைச் சென்று நீ பார்.
கோதையவள் கன்னமதில் ரோஜா காண்பாய்
குறு நகை செய் இதழ்களிலே முல்லை காண்பாய்
போதை பெறத் தேனெதற்குபோய்ப் பார்
எந்தன் பொற்கொடியாள் புன்னகையே போதுமென்பாய்.
சுதந்திரன் அப்பொழுது தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. தமிழர் உரிமைகளுக்காகப் போராடிய தமிழரசுக்கட்சியில் கொள்கைகளயும் பாடல்களைவும் அப்பத்திரிகை வெளியிட்டு வந்தது. அந்தப் பத்திரிகையில் நிறையப் பாடல்களை எழுதினேன். அனேகமாக அவை உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் பாடல்களாக அமைந்திருந்தன.
மெல்லிசைப்பாடல்களில் உங்கள் பங்களிப்புக் குறித்து?
72 ஆம் ஆண்டிலே மெல்லிசைப் பாடல்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப் பட்டு வந்தன.நாவற்குழியூர் நடராசன் அவர்கள் இலங்கை வானொலியின் பணிப்பாளராக இருந்தபோது தான் மெல்லிசைப் பாடல்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றைக் கேட்டு நானும் எழுதவேண்டும் என்ற ஆசை எனக்கும் ஏற்பட்டது. நான் எழுதி அனுப்பிய இரண்டு பாடல்களுமே ஒலிபரப்பப்பட்டன. அப்பொழுது வானொலி நிகழ்ச்சி அமைப்பளராக் இருந்த இரா.பதமநாதன் (பின்னாள் தினக்குரல் ஆசிரியர்) "மூர்த்தி நீர் எழுதிய பாடல்கள் அருமையாக இருக்கின்றன " என்று அந்தப் பாடல்கள் ஒலிபரப்ப முன்னரேயே கடிதம் எழுதினார். வி,முத்தழகு பாடிய பாடல்கள் அவை.
தித்திக்கும் செந்தமிழில் சித்தம் கசிந்துருகி
நித்தமும் உனைப் பாடுவேன் - முருகா
இருளின் மத்தியில் உனைத்தேடினேன்.
என்று தொடங்கும் ஒரு பாடல்.
இந்தப் பாடல் ஒலிபரப்பாகி அடுத்த மாதத்தில் புலவர்மணி பெரியதம்பி அவர்கள் பஸ் நிலையத்தில் கண்டபோது சொன்னார். "தம்பி! உமது பாடல்கள் நன்றாக இருக்கின்றன, இன்னும் எழுதுங்கள் " என்று. அதன் பிறகு நிறைய மெல்லிசைப் பாடல்களை எழுதினேன்.
உங்களது இலக்கியப் படைப்புகள் எதாகினும் நூல் வடிவில் வந்திருக்கின்றனவா?
இல்லை, வரவில்லை.
உங்களது இலக்கிய ஆசானாக வரித்துக்கொண்டவர்?
அப்படி ஒருவரும் இருக்கவில்லை, ஆனால் மஹாகவி அவர்கள் மட்டக்களப்பில் O.A ஆக இருந்த போது அடிக்கடி சந்திப்பார். அவரை நான் முன்னோடியாக ஏற்றுக்கொண்டவன். அதாவது துரோணர் ஏகலைவன் போல.
ஒலிப்பதிவைக் கேட்க
எருவில் மூர்த்தியின் இரண்டு மெல்லிசைப் பாடல்களைத் தருகின்றேன், இதோ கேட்டு ரசியுங்கள்.
இயற்கையின் சிறப்பைக் கவிஞர் தன் கவி வரிகளில் இப்படித் தருகின்றார்.
இயற்கை இறைவனின் கலைக்கூடம்
அதில் எத்தனை எத்தனை சுகம் பாரும்
மயக்கும் மதுரசம் அதிலூறும்
அதை வாங்கிடும் மனம் தினம் கவி கூறும்
இயற்கை இறைவனின்........
தாரகை சோலையில் வெண்ணிலவும் - ஒரு
தண்மலர்ச்சோலையில் பெண் நிலவும் (2)
பேரருள் கலைஞனின் கைத்திறமே - அவை
பேசவும் இனித்திடும் சித்திரமே..
இயற்கை இறைவனின்........
வான் என்னும் மேடையில் ஒரு பாதி - அவன்
வைத்தனன் பூமியில் அதன் மீதி
ஏன் என வாழ்ந்திட மனிதா நீ
அவன் செய்தவை யாவிலும் கலைவீடு
இயற்கை இறைவனின் கலைக்கூடம்
அதில் எத்தனை எத்தனை சுகம் பாரும்
மயக்கும் மதுரசம் அதிலூறும்
அதை வாங்கிடும் மனம் தினம் கவி கூறும்
பாடலைப் பாடியவர்கள்: முல்லைச் சகோதரிகள்
இசை: ஆர்.முத்துசாமி
பாடலைக் கேட்க
மழலையைக் கண்ட கவிஞர் மனம் இப்படிப் பாடுகின்றது.
வட்டக்கருவிழி வண்டுகளோ
உந்தன் வண்ண உடல் மலர் செண்டுகளோ
பட்டு இதழ்களில் கட்டவிழ் புன்னகை
மொட்டவிழ் முல்லையோ..... புத்தொழியோ
வட்டக்கருவிழி.........
கொஞ்சும் மழலைகள் அஞ்சுகமோ
தேவன் கோயில் உமதில நெஞ்சகமோ
பிஞ்சு உடலின் மிஞ்சி வரும்
மணம் கஞ்சமென் மாமலர் தந்ததுவோ
வட்டக்கருவிழி..........
நெற்றி சுடரொளி வான் பிறையோ -எந்தன்
நெஞ்சில் நீ பெய்வதும் தேன் மழையோ
தத்தி நடந்து எனை கட்டியணைத்து - நீ
முத்தம் தரும் செயல் தான் கலையோ
No comments:
Post a Comment