எனது தெருவிலும்
ஓங்கி மேசையில் குத்திவிட்டு
ஓய்தலுற்றுப் போ!
அலைபாயும் என் ஊற்றே
ஆழத்தில் போய் நீ
அடங்கு! அடங்கு!
இல்லையெனில்,
தின்று
புணர்ந்து விட்டு
பேசாமல் திரிதல் அன்றி
எதையேனும் நான்
செய்துவிட நேர்ந்து விடும்!
என் கண்களே
என்னைக் காப்பாற்றுங்கள்!
என் கைகளே
என்னைக் காப்பாற்றுங்கள்!
எனது நாவே
என்னைக் காப்பாற்று!
இருக்கிறதே
எனது தெருவிலும்
மின் கம்பங்கள்!
---------------------------------------------------------------
எனது நகர்
கரும்பூதமாய் தெரிகிறது
கல்லடிப் பாலம்...
அப்பால், விரிந்த வெளியில்
துயர்போல் இருள் கவிந்துளது...
உறைந்த மௌனத்தினூடு
ஒளியிழந்த வாவியின்
அலைகள் கரையுரசும்
சிறு சிறு ஒலியும் தெளிவுறக் கேட்கும்...
இருள் சூழ்ந்த என் சிறு நகரை,
நேற்றைய நாள் நிகழ்வுகளின்
கீற்றுகள் நெஞ்சிற் கிளர
இங்கிருந்து துயருடன் பார்த்திருப்பேன்!
பௌர்ணமி இரவில்
தங்கச் செதில் முளைத்து
தகதகக்கும் மட்டுநகர்
வாவிக் கரையோரம்
காற்றில் நடக்கும் சுகத்தினை இழந்தேன்!
விளக்குகள் ஒளி சுடரும்
உன் தெருக்களில்
நான் உலவிய இரவுகள் போயின!
எழிலும் வளமும் நிறை
என்சிறு நகரே!
என் இதயத்தினின்றும்
உன் தொப்புள் கொடி அறுந்து போயிற்று
உன்பால் பசியுறுகிறேன் நான்
இன்று உன் வனப்புகளை
உயிர்ப்புடன் உணர்கிறேன்
பொன்னும் கனியும் விளையும்
உன் இளமையில் காதலுறுகிறேன்
உன் வாசத்தை
நுகரத் துடிக்கிறது
என் நாசி
உன் தெருக்களை
அளைய விழைகிறது
என் உடலம்
உன் தேனை உறிஞ்சி
பொலிந்து நிமிர்வுற
அவாவி நிற்கிறது என் இதயம்!
உன்னை பிரிவதற்கில்லை நான்!
---------------------------------------------------------------
கனி
கனி பறிக்கவே இருக்கிறேன்
என் கனி பறிக்க
என் வாழ்வின் கனி
அறிவேன்,
ஆயினும் வழிகள்தான் இல்லை...
எனது பாதை மூடப்பட்டுள்ளது
எனது மைதானமும்
குன்றும் குழியுமாய் சிதைக்கப்பட்டுள்ளது
எனது நிலா முற்றமோ
நாய்க்குரைப்பின் அச்சத்தில் உறைந்திருக்கிறது
எனது நிழல் வெளியும் கூட
பட்ட மரமும் வெய்யிலுமாய் உள்ளது
காலமோ நகர்கிறது
உடலுக்கும் வயது ஏறுகிறது
மனது மட்டும்
அடையும் வெறியில் மூச்சிரைத்தாலும்
துடித்து வியர்த்து துரு உதிர்த்தி
மினுங்குது மாறா இளமையுடன்
இளமையுடன்
வருவேன்
பசி தீர்த்து
சற்றே இளைப்பாறி இருப்பேன்
கனி பறிக்கவே இருக்கிறேன்
என் கனி பறிக்க
என் வாழ்வின் கனி
---------------------------------------------------------------
இறுதி நேரம்
மௌனத்தின் அடியில்
மானுட ஆளுமை விம்மலுற,
தன்னை சுடப்போகிற மனிதனை
சுடப்போகிற துப்பாக்கியை
பார்த்தபடி நின்றான்
ஊரின் கிறவல் தெருக்களும்
பசிய மரங்களும்
பழகிய முகங்களும்
புழுதியும் காற்றும்
போக விடை தரவில்லை
மீதமுள்ள வாழ்க்கை
சமுத்திரம் போல் விரிவு கொள்ள,
அவன் போகாத இடங்கள்...
சொல்லாத சேதிகள்...
அடையாத இலக்குகள்...
கொடுக்காத முத்தங்கள்
ஆயிற்று!
நெஞ்செதிரே நீண்டுவிட்ட துப்பாக்கிக்குழல் முன்
பிரமாண்டமாய் விரிந்த கணங்களில்
வாழ்வின் அர்த்தமும் அழைப்பும்
பொங்கி வழிய,
அவன் பேசி முடிப்பதற்குள்
தன்னை புரிய வைப்பதற்குள் ...
தீர்ந்தது வெடி!
செட்டையடித்துச்
சிதறிக் கரைந்தன
ஒரு நூறு காக்கைகள்.
---------------------------------------------------------------
நான் வருவேன்
கணமும் தளராது கனன்று கனன்று
என்னுள் ஒரு வேகம் எழுக
யுத்தம் நடந்த பூமியில்
மனமே சிதைந்து கிடக்கிறது
பசிகொண்ட விழிகளோடு
இந்த வெளிகளில் நானும் அலைகிறேன்
பொருளற்ற வெறும் பிண்டமாய்
அழகற்றுப் போனது உலகு
இந்த மலைவேம்பு மர நிழலில்...
காற்று வீசும் ஆற்றங்கரையில்
தனிமையில் அமரும் ஓரோர் பொழுதில்
அடி நெஞ்சில் அது நெளியும்...
அடக்கவென்று கையமர்த்தினாலோ
மீறும்...
சிவந்த கண்கொண்டு எழுந்து
சீறும்... மனமாம்
கூட்டின் அமைதியெலாம் குலையும்
வெறுமை பாய் விரிக்க
சோர்வு உடல் சரிக்க
குலைந்து உதிரும் குவிவு
கணமும் தளராது கனன்று கனன்று
என்னுள் ஒரு புது வேகம் எழுக
வேகம் எழுக!
---------------------------------------------------------------
மனிதனின் குரல்
புல்மேய்ந்து விட்டு
பொழுதுபட
வீடு திரும்பச் சொல்கிறாய் நீ
கேள்:
நான் மனிதன்
அறிவின் பசியில்
அலைபவன் நான்
காலியாய் உள்ள எனது கிண்ணம்
நிறைதல் வேண்டும்
அதுவரை நான் ஓய மாட்டேன்.
உயிர் ஒளி சுடர
வாழ்வின் ரசத்தை
நான் பருகுதல் வேண்டும்.
என் ஆளுமை நிறைவுற
செயல்களில் நான்
துலங்குதல் வேண்டும்
உன் வதைகளுக்கு
பணிந்திட மாட்டேன்
என்னை நொறுக்கி
ஒரு மூலையில் குவித்திடினும்
நான் இறக்க மாட்டேன்
உன் முன்
உன் ஒரே எதிரியாய்
மீண்டும்
மீண்டும்
நான் எழுவேன்
நானே எழுவேன்!
அறிக நீ:
நான் மனிதன்.
---------------------------------------------------------------
கடல்
பெருமூச்சாய் கரையொதுங்கும்
அலைகள் காலாறுமுன்
உள்வாங்கும் கடல்
---------------------------------------------------------------
மலர்வு
காதல் பொங்க,
தாய்ப்பாலுடன் என்னுள் கலந்த
விஷங்கள் நீங்கின
அறிவின் சுமை இறக்கி
உயிரை மலர்த்தும் வாழ்வின் கரத்தில்
ஓர் குழந்தையாய் வீழ்ந்தேன்
எனது வழி எனக்குத் தெரிகிறது!
கால் நூற்றாண்டுக்
குப்பைகளின் அடியிலிருந்து
இதோ எனது முகம்!
சம்பிரதாயங்களின் பலி பீடத்தில் நின்று
இறங்கி வருகிறேன் நான் -
முதல் முறையாக
என் உதடுகளில்
எனது பாடல்களோடு
நானும் வாழ்வும் புன்னகை செய்தனம்!
---------------------------------------------------------------
கண்டடைந்தது
இருவேறு கருப்பையில் ஆரம்பித்து
இது நாள் வரை
நீயும் நானும் அலைந்ததெல்லாம்
இந்தச் சந்திப்பிற்காகவே
இருக்க முடியுமென உணர்கிறேன்
ஆன்மாவின் கண் மலர்வில்
பொய்மையின் திரைகள் உரிய
அதுவா இதுவா என்ற
ஆசைக் குழப்பங்கள் அற்று வீழ
அத்தனை மலர்களும் சருகாய்த் தெரிய
எனது மலரை இதுவெனக் கண்டேன்
உன் பொருளும்
என் பொருளும்
வாழ்வின் பொருளும்
புரிந்து போயிற்று
ஐயமற உணர்கிறேன்:
நீ என்னுடையவள்
நான் உன்னுடையவன்
---------------------------------------------------------------
ஒரு பொழுது
மூசாப்பு வானம் முகம்கறுத் திருக்கும்
கூதற் காற்று மெல்லென வீசும்
எக்கி, அடிவயிற்றில் குரலெடுத்து
ஒரு பறவை கத்திச் செல்லும்...
தனிமையில் மனசில் துயரம் கிளரும்...
தவறிதே போனதெல்லாம்
தங்கி,
நெஞ்சுக்குள் விம்மிப்
பொங்கி யெழுந்து
புயலடிக்கும்
வீதியில் இறங்கவும் மனமில்லை
வீட்டினுள் முடங்கவும் மனமில்லை
படியிலேயே நிற்க வைக்கும்
கொட்டித் தீர்ந்து போகாத
தூறல் மழை
எங்கே
என்ன செய்து கொண்டிருப்பாளோ
அவள்
---------------------------------------------------------------
வெட்ட... வெட்ட...
மங்கல் கவிந்த
மூசாப்பு வானிடை
ஒளி
கசிந்து
பரவி
வெளித்திற்று
வதங்கி
தொங்கித் துவண்ட
செடியில்
உயிர் பாய்ந்து
இலைகள் சிலிர்த்து
தண்டு விறைத்து
தலை நிமிர்ந்திற்று
காய்ந்து வெடிப்புற்ற நிலமும்
என்றோ சென்ற வண்டியின் தடமும்
உக்கிய புற் கற்றைகளும்
சிதறிய குப்பைகளுமாய்
உலர்ந்த குளத்தில்
ஊற்றுக்கள் வெடித்தன
பொங்கித் ததும்பிப்
பெருகிற்று நீர்
அடிவயிற்றில்
நெளிந்து நெளிந்து மேலெழுந்து
நெஞ்சுவரை விஷம் கக்கி
நின்றாடிய பாம்பெல்லாம்
பஸ்பமாயிற்று...
பல நாளின் பின்னோர்
பசி யெடுத்தது
பிணங்கிச் சென்றவளோடு
இணங்கிக் கொண்டே னின்று.
---------------------------------------------------------------
குயில் கூவும் நேரங்கள்
மரங்களினூடிருந்து
குயில் கூவத் தொடங்கிற்று...
மனம் வைத்துக் கேட்டிருந்தேன்
எங்கோ இருக்கும்
இன்னொரு ஜீவனை
நோக்கிய கூவல்
தனிமையும் தாபமும்
ஏக்கமும் கவலையும்
அழைப்பும் விசாரிப்பும்
முறையீடும் வேண்டுதலும்
மனம் வைத்துக் கேட்டிருந்தேன்
நானும்....
கூதலில் அலைகயில்
நரம்புகளில்
குளிரேறி,
உடலுருகி
ஓர் தும்மல் வருவது போல்,
குயில் கூவக் கேட்டிருந்து
மனமுருகி
ஓர் விம்மல் வந்திற்று -
நெளிந்து கசியத்
தொடங்கிய தவள்
நினைவு!
---------------------------------------------------------------
வராத கடிதம்
நீ
அந்தக் கடிதத்தை
எழுதாமலேயே விட்டிருக்கலாம்
எழுதிய கடிதம்தான்
வாசித்தால் முடிந்துவிடும்
எழுதாமல் விட்டிருந்தால்
முடிக்காமல்
வாசித்துக் கொண்டே இருந்திருப்பேன்
வந்த கடிதத்தில்
இருப்பதுதான் இருக்கும்
வராமல் விட்டிருந்தால்
நினைப்பதெல்லாம் இருந்திருக்கும்
நீ
அந்தக் கடிதத்தை
எழுதாமலேயே விட்டிருக்கலாம்.
---------------------------------------------------------------
உறவு
செருப்பில்லாப் பாதங்களோடு
மழை இரவில் நடந்தேன்...
பாதை முழுவதும் மனசில்
---------------------------------------------------------------
ஒரு மாலையும் நானும்
வானம் இருளடைந்து
காற்று பலமாய் வீசும் இந்த மாலையில்
நான் பெருக்கெடுக்கிறேன்
நான் நிம்மதி இழக்கிறேன்
துயரில் நெஞ்சு கசிகிறது
காரணம் புரியாமல்
அடிவயிற்றில் கத்திகள் பாய்கிறது
மேகங்கள் பறவைகள்
மரங்கள் மனிதர்கள் எல்லாமும்
தீராத துயரில் அசைகின்றன
மௌனமாய் அழுகின்றன
உலகே ஓர் கீதம்!
துயர கீதம்
அழகான துயர கீதம்!
வாழ்க்கை ஒரு சுகமான துயரம்
மரண இருள் வானத்து மின்னல்!
என்னை அர்ப்பணிக்கிறேன்...
காலமே நீ பிசை
நீ பிசைகையில் உண்டாகும்
துயரோ இன்பமோ வலியோ பாடலோ
அதுதான் உண்மை
அதை நான் ஏற்கிறேன்
அதை நான் போற்றுகிறேன்
இந்த மாலையில் இப்படியானேன்...
சொல்ல எடுத்து
மறந்து போன ஏதோ ஒன்றாய்
வாழ்வின் துயரெனை
வருத்தும் படியாய்!
---------------------------------------------------------------
தெளிதல்
ஓர் ஒளி தோன்றியது
ஓர் சுகம் மேவியது
பாயும் மனம் அமைதி
ஆனது தான் தெளிந்து
காரிருளும் விலகி
காலை ஒளி பரவி
வெண் பனியில் உருகி
பூத்தது மல்லிகைப் பூ
மாறி வரும் உலகு
தேறி வரும் மனது
காத்திரு காலம் வரும்
பூ மனத் தேன் வளியும்
ஓய்தலுறும் பயணம்
ஓர் நிழலில் அமரும்
வார்த்தை இல்லை மௌனம்
வாழுவதே இன்பம்.
---------------------------------------------------------------
நாளாந்தம்
விருப்பத்திற்கு மாறாய்,
'ஷேட்'டை வெளியில் விடவும் தயங்கி
உள்ளே விட்டு உடுத்திக் கொள்கிறேன்...
காலையில் என் சைக்கிள் சவாரி...
உணர்வில் தோயாத காலை வணக்கங்கள்...
யாரோ சிலருக்காக
விரிவுரை வகுப்பில் இருக்கிறேன்...
பாடக் குறிப்பை மனனம் செய்த களைப்பில்
நுரை கக்கும் மனசு...
பன்னிரெண்டு மணிக்கு பசிவந்து போனபின்
இரண்டு மணிக்கு சாப்பிட வாய்த்தது...
படிகளில் ஏறி இறங்கினேன்...
இங்கு புறப்பட்டு
அங்கு போய்ச் சேர்ந்தேன்...
விடுதியின் மொட்டை மாடியில் அமர்ந்து
சூரியனை ரசிக்க எண்ணியிருந்த மாலையில்
ஒரு தெரு முனையில்
பொறுமையற்று சிலருக்கு காத்திருக்க நேர்ந்தது.
என் வாசலை மொய்த்திருக்கும்
இத்தனை தலைகளுக்கும் பின்னால்
என்னிடம் வர முடியாமல்
நுனிக் காலில் எட்டி எட்டி
எனக்குக் கையசைக்கும் -
நான்.
---------------------------------------------------------------
அவரவர் பாடு
யாருக்கும்
யாரும் இல்லை
உனக்கு நீதான்
எனக்கு நான்தான்
புன்னகையில்
அழுகையில்
விசாரிப்பில்
அக்கறையில்
ஏமாந்து போகாதே
அது அதற்கு
அதனதன் வலி
அது அதற்கு
அதனதன் வழி
உனக்கல்ல,
தாயின் முலை
தாய்க்குத்தான்
காதலியின் உதடு
காதலிக்குத்தான்
நம்பு
உன்னை
எதிர்ப்பதற்காகவே
உலகம் இருக்கிறது
உனக்கு நீதான்
எனக்கு நான்தான்
யாருக்கும்
யாரும் இல்லை.
---------------------------------------------------------------
அது
என்னை எதிர்பார்த்தபடி
எங்கேயோ அது இருக்கிறது
இந்த ஓயாத அலைச்சலினூடும்
மிக நிச்சயமாய்
அதை நோக்கியே நகர்த்தப்படுகிறேன்
எனது கனவுகள் அனைத்தும்
நிகழ்ந்து முடியும்
பூரணத்தில் நிறைந்து ஓய்ந்திருப்பேன்
உன்னிடமே வருகிறேன் நான்.
---------------------------------------------------------------
தேறல்
நின்றுவிட்டது மின்சாரம்
இப்போது நிகழ்ந்த தற்செயலில்
சற்று முன்வரை
இட்ட திட்டங்கள் சரிய
முகம் காட்டும் வாழ்க்கை
கும்மிருளுக்குள்
கனியும் மனம்!
---------------------------------------------------------------
வெளி
அன்று காலை சோர்வுற்றிருந்தேன்
'இன்று ஓய்வாய் இரு' எனக் கேட்டது நெஞ்சு
'இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை இல்லை
எழுந்து நடவும்' என்றனர் வீட்டார்.
எனது இயல்பின்
கழுத்தைத் திருகி எறிந்தேன்
பிறகு எழுந்து நடந்தேன்
கலன்டரின் டயரியின்
கடிகார முட்களின்
பலிபீடத்தினில் அவியுது உயிர்
விடு எனை வெளியில்
காற்றினில் முகத்தினை நிமிர்த்த
நான் சற்றே மூச்சு விட
---------------------------------------------------------------
வழி
வழியில் போகாதே
காட்டில் நட
வழியில்
எல்லாம் தெரியும் உனக்கு
எல்லாம் உண்டு உனக்காக
அமர்ந்து இறுகிய பாதை
சுமக்க வாகனம்
உறக்கம் வளர்ப்பாய் நீ
காட்டில்
என்ன தெரியும் உனக்கு
என்ன உண்டு உனக்காக
உன் கையில் நீ மட்டும்
உழைப்பும் விழிப்பும்
வரவேற்பில்
ஊன் திளைக்கும்
எதிர்ப்பில்
ஆன்மா வியர்க்கும்
வழியில் பலி
காட்டில் வாழ்வு
காட்டில் நட!
---------------------------------------------------------------
என்னுடைய அப்பங்கள்
இதை எழுதவும் முடியவில்லை
மனதை எழுத வழியும் தெரியவில்லை
நெகிழ்ந்து நெகிழ்ந்து பெருக்கெடுக்கும் வஸ்து...
ஓர்கணம் சிக்கும்; பெருமையில்
அந்த மாபெரும் கவிதையை எழுத அமர்ந்தால்
தூரத்தில் கையசைத்துக் காணாது போகும்
கரைந்து.
ஓடும், உறையும்
கூடும், குறையும்
வாடும், வளரும்
தேடும், திரும்பி வந்து
புரியாமல் முகம் நீட்டும் ...
பார்க்கத் தவமிருந்து கேட்டால்
காட்டும், நான் பார்த்து முடிக்குமுன்
நீட்டும் இன்னொரு நிறத்தை; புரியாமை
கூட்டும், துயர் பெருக்கி
வாட்டும், பின்
பாட்டும் அது பாடும் துள்ளி!
இதை எழுதவும் முடியவில்லை
மனதை எழுத வழியும் தெரியவில்லை
நெகிழ்ந்து நெகிழ்ந்து பெருக்கெடுக்கும் வஸ்த்து..
இந்தக் கணங்களில்
எந்தன் 'உள்'ளிலே
தேன்துளி சொட்டும்...
பூக்கள் மலரும்...
ஜுவாலையும் கனலும்...
கொடும் புயல் வீசும்...
கவிதையே! எனக்குக் கைகொடு
என் அப்பங்கள் எனக்கு வேண்டும்!
---------------------------------------------------------------
மிச்சம்
காலைப் பொழுதில்
கதவு திறந்தேன்...
மெல்லிய காற்றில்
மேனி சிலிர்த்தது
ஒளி ஈட்டிகள்
எய்து எய்து
உதிக்கும் சூரியன் -
இரத்தம் சிந்திய
புரட்சியின் முடிவில்
வெளியே தெரியவரும்
வெற்றியைப் போல!
பனியில் முகம் கழுவி
மலர்ச்சியில் சிரிக்கும்
மரங்கள்
காற்றுக்கு வாசம்
பூசி அனுப்பும்
பூக்கள்
பூவில் மொய்த்துப்
பூவில் மொய்த்துப்
பாடிக் கொண்டே
பறக்கும் வண்டுகள்
துயரங்கள் யாதுமின்றி
தூரத்துக் கிளையினிலே
குரல் தீட்டி... குரல் தீட்டி
கூவும் குயில்
சொந்த வானத்தில்
சுதந்திரமாய்
பூபாளம் இசைத்துப்
புறப்படும் பறவைகள்
இந்த
மோகனத்தி லெனையிழந்து
காலத்தை மறந்து
களித்திருக்கையில்...
வாகனமொன்று
இரைச்சல், புகை கக்கி
வந்து தொலைத்து
கலைந்து சிதைந்தேன்
கணப் பொழுதில்
காதுகளிரண்டும்
காயங்களாக
இதயத்தில் கொஞ்சம்
இரத்தம்
அது-
போய் மறைந்த
பாதையிடலே எங்கும்
புழுதியும்
தூய்மையான
என்னிலொரு
தும்மலும் மிச்சமாய்
---------------------------------------------------------------
கிளிகள்
பட்ட மரத்தின்
பழைய காலமோ
கிளிகள்?
---------------------------------------------------------------
மீன்
மீன்கள் இல்லா ஆறுகள் இல்லை
கையால் பிடிப்பதோ நடப்பதில்லை
சிக்குவதுண்டு
வலையில், கூட்டில், தூண்டில் முனையில்...
தானே துள்ளிக் கரையில் வீழும் மீன்களும் உண்டு
துடிக்கத் துடிக்க
வெறும் பளிங்கு நீரில்
உயிர் வாழா மீன்கள்
சேறு விழைந்த ஆழம்
பாசி படர்ந்த கற்கள்
செடிகள்
இரைகொள்ளச் சிறு மீன்கள்
நிறைந்த ஆற்றில் கொளிக்கும் மீன்கள்
இரைகள் விழைய
ஆற்றைக் கலக்கும் ஓர் சுழியும் வேண்டும்
கோடையில் ஆறுகள் நூலாகும்
நூலிலும் மீன்கள் உயிர்வாழும்
எப்போதும் உண்டாகும்
இன்னும் பிடிக்காத மீன்கள் ஆற்றில்
மீன்கள் இல்லா ஆறுகள் இல்லை
கவிதைகள் இல்லா மனசுகள் இல்லை
No comments:
Post a Comment